அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரபூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்குத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த இதழில்: மூன்றாம் காண்டம், பதினேழு மற்றும் பதினெட்டாம் அத்தியாயங்கள்
சென்ற இதழில் ஜெய விஜயரின் வீழ்ச்சியைப் பற்றி அறிந்தோம். இவ்விதழில் அதன் விளைவுகளைப் பற்றி காணலாம்.
திதி தன் கர்ப்பத்தில் புகுந்த இரட்டை அசுரர்களை நூறு வருடங்கள் சுமந்து பின் ஈன்றெடுத்தாள். அவர்களின் பிறப்பினால் மேலுலகம், பூவுலகம், மற்றும் இவ்விரண்டு உலகங்களுக்கிடையிலும் பயம் தரக்கூடிய தீய அறிகுறிகள் பல தோன்றின.
நிலநடுக்கம், எங்கு பார்த்தாலும் தீ பரவியது போன்ற தோற்றம், சனி போன்ற கோள்கள், வால் நட்சத்திரங்கள், இடி, மின்னல் போன்றவை தோன்றின. ஊழிக்காற்று வீசி பெரும் மரங்களை வேரோடு சாய்த்தது. எல்லா இடங்களிலும் இருள் பரவியது. நீர்நிலைகள் கலங்கின, தாமரை மலர்கள் வாடின, சமுத்திரம் பெரிய பெரிய அலைகளுடன் உரக்க ஓலமிட்டது. சூரிய சந்திர கிரகங்கள் மாறிமாறி தோன்றின, பெண் ஓநாய்கள் ஊளையிட்டன, நாய்களும் கழுதைகளும் தறிகெட்டு ஓடின, கால்நடைகள் பயத்தால் சிறுநீர் கழித்து சாணமிட்டன, பறவைகள் கூட்டைவிட்டு கதறிய வண்ணம் பறந்தோடின, விக்ரஹங்கள் கண்ணீர் வடித்தன, மங்களகரமான கோள்கள் ஒளிமங்கி அமங்களமான கோள்கள் சுடர்விட்டு ஒளிவீசின.
அசுர இரட்டையர் ஸ்வர்கத்தைக் கைப்பற்றுதல்
அசுர சகோதரர்கள் இருவரும் விரைவில் அசாதாரணமான இரும்பு போன்ற உடலமைப்பைப் பெற்றிருந்தனர். வானுயர ஓங்கி வளர்ந்து பூமி குலுங்கும்படி நடந்தனர். மூத்தவன் ஹிரண்யகசிபு என்றும், இளையவன் ஹிரண்யாக்ஷன் என்றும் அறியப்பட்டான்.
ஹிரண்யகசிபு பிரம்மதேவரிடம் பெற்ற வரத்தின் வலிமையால் மரணத்திற்கு அஞ்சாதவனாக, கர்வமும் செருக்கும் கொண்டவனாக, மூவுலகையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தான்.
ஹிரண்யாக்ஷன் தன் மூத்த சகோதரனை திருப்தி செய்ய எப்பொழுதும் போர் உணர்ச்சியுடன் அண்டம் முழுவதும் பிரயாணம் செய்தான். அவனது உடல் பலமும் மனோவலிமையும் அவனை பெரும் கர்வம் கொள்ளச் செய்தது. அவனைக் கண்ட உடனேயே தேவர்கள் பெரும் அச்சத்துடன் தங்களை மறைத்துக் கொண்டனர். சக்தி வாய்ந்த தேவர்களும் தன்னைக் கண்டு அஞ்சி ஓடுவதைக் கண்ட ஹிரண்யாக்ஷன் சத்தமாக கர்ஜித்தான்.
வருணனை போருக்கு அழைத்தல்
ஹிரண்யாக்ஷன் வானவரை நிலைகுலையச் செய்தபின், நீர்வாழ் உயிரினங்கள் அதிர்ச்சியுடனும் அச்சத்துடனும் வெகுதூரம் ஓடின. கடலின் பெரும் அலைகளை தன் இரும்பு கதையால் தாக்கிக்கொண்டே அவன் வருணனின் தலைநகரான விபாவரீயை அடைந்தான். நீர்வாழ் உயிரினங்களின் தெய்வமான வருணனிடம் அடிபணிந்து, “நீங்கள் எல்லாக் கோளங்களின் பாதுகாவலர், மிக்க புகழ் கொண்ட அரசன். செருக்கும் இறுமாப்பும் நிறைந்த வீரர்களான தானவர்களையும் தைத்யர்களையும் வென்றுவிட்டு ஒரு சமயம் பகவானுக்கு ராஜசுய யாகம் நடத்தினீர்கள். இப்போது நீங்கள் என்னுடன் போர் செய்யலாமே” என கேலியுடன் கேட்டான்.
இதைக் கேட்ட வருணதேவன் உள்ளத்தில் எழுந்த சினத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “அன்பானவனே, வயது முதிர்ந்து சண்டையிட இயலாமல் உள்ள யாம் போரிலிருந்து ஒதுங்கியிருக்கிறோம். உன் போன்றவர்களுடன் சண்டையிட உகந்தவர் பகவான் விஷ்ணுவே. நல்லவர்களுக்கு அருள் வழங்கி, உன்போன்ற கொடியவர்களை அழிப்பதற்காக, அவர் வராஹர் போன்ற பல அவதாரங்களை மேற்கொள்கிறார். நீ அவரை அணுகுவாயாக” என்று பதிலுரைத்தார்.
(இத்துடன் பதினேழாம் அத்தியாயம் முடிவுற்று பதினெட்டாம் அத்தியாயம் தொடங்குகிறது.)
ஹிரண்யாக்ஷனின் சவால்
நாரதரிடமிருந்து பகவான் விஷ்ணுவின் இருப்பிடத்தை அறிந்துகொண்ட ஹிரண்யாக்ஷன் உடனே அங்கு விரைந்தான். அங்கே தன் கொம்புகளின் நுனியில் பூமியை தாங்கிக் கொண்டு, ஒளிபொருந்திய சிவந்த கண்களுடன் கூடிய பரம புருஷ பகவானை, அவருடைய வராஹ அவதாரத்தில் கண்டான். பின் அசுரன் சிரித்துக்கொண்டே பகவானை ஒரு விலங்கு என பரிகாசம் செய்தான்.
அந்த அசுரன் பகவானை நோக்கி ஏளனமாக பின்வருமாறு பேசினான்: “தேவர்களில் சிறந்தவரே, காட்டுப்பன்றியின் உருவத்தில் இருப்பவரே, நான் கூறுவதைக் கேளுங்கள். கீழுலகில் வாழ்பவர்களும் இந்த பூமியும் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நீங்கள் இப்பூமியை என் முன்னிலையில் கைப்பற்ற இயலாது. வீணாக என்னால் காயம் அடையாதீர்கள். உங்கள் சக்தி எல்லாம் வெறும் மாயம். உங்களைக் கொல்வதன் மூலமாக என் உறவினர்களுக்கு வாழ்வளிக்க நான் முடிவு செய்துள்ளேன். நீங்கள் விழும்போது, பக்தியினால் உமக்கு வேள்வியும் நைவேத்யமும் செய்யக்கூடிய தேவர்களும் முனிவர்களும் வேரற்ற மரங்கள் போல் தாமாகவே வீழ்ச்சியடைவர்.”
வராஹர் பூமியை தூக்கிச்செல்லுதல்
பகவானின் சவால்
அசுரனின் அம்பு போன்ற தீய சொற்கள் பகவானை வேதனை செய்தபோதிலும் பொறுத்துக் கொண்டு, அச்சத்திலிருந்த பூமியை தூக்கி வந்து நீரின் மேற்பரப்பில் அதனை மிதக்க விட்டார். எதிரி கோபத்துடன் அவரைப் பார்த்துக் கொண்டிருக்க, பிரம்மதேவர் அவரைப் போற்றிப் புகழ்ந்தார். இதர தேவர்கள் அவர்மீது பூமாரி பொழிந்தனர்.
தற்போது பகவான் தன்னுடைய கோபத்தை வெளிக்காட்டியபடி அசுரனிடம் பின்வருமாறு கூறலானார்: “உண்மையில் நான் காட்டில் வாழும் உயிரினமே, உன் போன்றவர்களை வேட்டையாடவே தேடுகிறோம். உனக்கு மரணம் நெருங்கிவிட்டது. நான் உனது பலம் பொருந்திய கதையினால் தாக்கப்பட்டாலும் நிச்சயம் ஓடி ஒளியமாட்டேன். வீரர்கள் தம் வீரத்தை பேச்சில் மட்டும் காட்டுவதில்லை. உன் முட்டாள்தனமான பேச்சை நிறுத்தி விட்டு யுத்தம் செய்வாயாக.”
யுத்தம்
பகவானால் அழைப்பு விடப்பட்ட அசுரன் அடிபட்ட நாகம்போல் சீறினான். விரைந்து அவர்மேல் பாய்ந்து தன் சக்திமிக்க கதையினால் அவரைத் தாக்கினான்.
பகவான் சாமர்த்தியமாக அத்தாக்குதலிலிருந்து தப்பி, தம் திவ்ய கதையை சுழற்றிசுழற்றி அசுரனைத் தாக்கினார். அதை அசுரன் தன் கதையால் தடுத்து அடிபடாமல் தப்பினான். இவ்வாறு உலகமே வியக்கும் வண்ணம் கதாயுத்தம் மிகக் கடுமையான போட்டியாக அமைந்தது.
பிரம்மாவின் வேண்டுகோள்
மிக ஆச்சரியமான இந்த யுத்தத்தை ஆவலுடன் கண்டு கொண்டிருந்த பிரம்மதேவரும் இதர தேவர்களும் பகவானிடம் பின்வருமாறு பிரார்த்தித்தனர்:”எங்களது அன்பு பகவானே, பிராமணர்களுக்கும் பசுக்களுக்கும் அப்பழுக்கற்ற பக்தர்களுக்கும் எப்பொழுதும் தொல்லைதரும் இந்த கயவன், என்னிடம் பெற்ற வரம் காரணமாக தன்னுடன் போரிடத் தகுந்தவரை தேடி அண்டம் முழுவதும் அலைந்து கொண்டிருந்தான். மாய வித்தையில் தேர்ந்தவனும் மிகக் கொடியவனுமான இந்த அசுரனுடன் இனியும் விளையாட வேண்டாம். அவன் தனக்கு சாதகமான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டுள்ளான். இருள் சூழ்வதற்கு முன்பு, அபிஜித் எனப்படும் இந்த நல்ல நேரத்திலேயே இந்த கொடிய பகைவனைக் கொன்று, தேவர்களுக்கு அருள்புரியுங்கள். இவனது மரணம் உங்களால் நிகழும் என்று விதிக்கப்பட்டுள்ளது.”