நாரதரின் வரலாறு

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். வேத இலக்கியம் எனும் “மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரப்பூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கி பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: முதல் காண்டம், ஐந்தாம் அத்தியாயத்தின் இரண்டாம் பகுதியும் ஆறாம் அத்தியாயமும்

சென்ற இதழுடனான தொடர்பு

வேத புராணங்களைத் தொகுத்த வியாஸதேவர் தனது மனதில் இனம்புரியாத திருப்தியின்மையை உணர்ந்து தன்னிலையை ஆராய முற்பட்டபோது, நாரத முனிவர் அங்கு தோன்றி, பகவானின் பக்தித் தொண்டை நேரடியாக வலியுறுத்தாததே வியாஸரின் அதிருப்திக்கு காரணம் என விளக்கினார். பக்தர்களின் சங்கத்தினால் பெறப்படும் உயர்வை வலியுறுத்த விரும்பிய நாரதர், தனது முந்தைய வாழ்வைப் பற்றி வியாஸருக்கு எடுத்துரைப்பதையும், அவர்கள் இருவருக்கும் இடையிலான உரையாடலின் தொடர்ச்சியையும் இவ்விதழில் காண்போம்.

முனிவர்களுக்கு நாரதர் சேவை செய்தல்

நாரதர் தொடர்ந்தார்: பிரம்மாவின் முந்தைய நாளில், நான் ஒரு வேலைக்காரியின் சாதாரண மகனாகப் பிறந்திருந்தேன். ஒருமுறை, மழைக் காலத்தின் நான்கு மாதங்களின்போது, என் தாய் வசித்து வந்த பிராமணரின் பள்ளிக்கு பெரும் வைஷ்ணவர்கள் சிலர் வந்தனர். அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியில் என் தாய் ஈடுபட்டிருந்தபோது, அவர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு எனக்கும் கிட்டியது. இயல்பாகவே பாரபட்சமற்றவர்களான அந்த பக்திவேதாந்திகள், தங்களின் காரணம் கடந்த கருணையால் என்னை ஆசீர்வதித்தார்கள். ஏனெனில், சிறுவனாக இருந்தாலும் நான் சுயக்கட்டுபாட்டுடன் இருந்தேன்; தேவைக்கு அதிகமாக பேசாமல், குறும்புத்தனமின்றி, விளையாட்டில் ஆர்வமின்றி, அடக்கத்துடன் இருந்தேன்.

ஒருமுறை, அவர்களின் அனுமதியுடன் அவர்கள் உண்ட உணவின் மீதத்தை நான் சாப்பிட்டேன். இதன் விளைவாக, என் பாவங்கள் எல்லாம் உடனடியாக அழிக்கப்பட்டன. உணவின் மீதியை உண்டதாலும் அந்த மஹாத்மாக்களுக்கு நான் சேவை செய்ததாலும், பகவானுக்கான பக்தித் தொண்டு எனக்கு மிகவும் கவர்ச்சிகரமாக ஆனது. அவர்களின் ஸத்சங்கத்தில் பகவான் கிருஷ்ணரின் உன்னதமான லீலைகளின் விவரணங்களைக் கேட்டேன், எனது சுவை ஒவ்வோர் அடியிலும் அதிகரித்தது. இதன் உன்னத சுவை மிகவும் தீவிரமானபோது, முழுமுதற் கடவுளைப் பற்றிக் கேட்பதில் எனது கவனம் முழுமையாக நிலைபெற்றது.

இதன் விளைவாக, என் இதயத்திலிருந்து ரஜோ குணமும் தமோ குணமும் மறைந்தன. என் அறியாமையால் மட்டுமே, எனது ஸ்தூல உடலையும் சூட்சும உடலையும் நானாக ஏற்றுக் கொண்டிருந்தேன் என்பதை நான் உணர்ந்தேன். நான் அந்த முனிவர்களிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தேன், நடத்தையில் சாதுவாக இருந்தேன்.

ஆதரவற்ற ஆத்மாக்களிடம் மிகவும் அன்பு கொண்டிருந்த அந்த பக்திவேதாந்திகள் புறப்பட்டுச் செல்லும்போது முழுமுதற் கடவுளாலேயே விவரிக்கப்பட்டுள்ள மிகவும் இரகசியமான ஞானத்தை எனக்கு உபதேசித்தனர். “பரம புருஷ பகவான் தம் சொந்த வசிப்பிடத்தில் நித்தியமாக வசிக்கிறார், ஜடவுலகின் படைப்புக்கு முன்னும், ஜடவுலக அழிவுக்குப் பின்னும்கூட, அங்கே அவர் நித்தியமாக வசிக்கிறார். எனவே, அவர் படைக்கப்பட்ட ஜீவன்களில் ஒருவரல்ல, மாறாக உன்னதமானவர்”ஶீஇதுவே அந்த மிகவும் இரகசியமான ஞானம். இந்த இரகசிய அறிவினால், அனைத்தையும் படைத்து, காத்து, அழிப்பவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரது சக்தியின் ஆதிக்கத்தை என்னால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது. இதை அறிவதால் ஒருவர் அவரை நேருக்கு நேராக சந்திக்க முடியும்.

செயலாற்றும் கலை

செயல்களை பரம புருஷ பகவானுக்கு (ஸ்ரீ கிருஷ்ணருக்கு) அர்ப்பணிப்பதே எல்லா தொல்லைகளையும் துன்பங்களையும் அகற்றுவதற்கான மிகச்சிறந்த நோய்தீர்க்கும்முறை என்று கற்றவர்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது. வியாஸரே, மருத்துவ சிகிச்சைக்கேற்ப அளிக்கப்பட்ட ஒரு பொருள், அதே பொருளால் விளைவிக்கப்பட்ட நோய்க்கு மருந்தாக உள்ளது அல்லவா? அதே போல, மனிதனின் எல்லா செயல்களும் பகவானின் தொண்டிற்காக அர்ப்பணிக்கப்படும்போது, நிரந்தர பந்தத்தை விளைவித்த அதே செயல்கள், செயல் எனும் மரத்தை அழித்துவிடக்கூடியவையாக மாறுகின்றன.

பகவானின் திருப்திக்காக மேற்கொள்ளப்படும் எந்தவொரு செயலும், பகவானின் உன்னத அன்புத் தொண்டு அல்லது பக்தி யோகம் எனப்படுகிறது. மேலும், ஞானம் என்பது இந்த பக்தி யோகத்துடன் இணைபிரியாததாக ஆகிவிடுகின்றது. பக்தர் பரம புருஷ பகவானாகிய ஸ்ரீ கிருஷ்ணரின் உத்தரவுக்கேற்ப கடமைகளைச் செய்யும் வேளையில், பகவானையும் அவரது நாம குணங்களையும் இடைவிடாமல் நினைத்துக்கொண்டு இருக்கிறார்.

கிருஷ்ணரின் புகழை மட்டுமே பாடுங்கள்

வாஸுதேவர், மற்றும் அவரது பூரண விரிவங்கங்களான பிரத்யும்னர், அநிருத்தர், ஸங்கர்ஷணர் ஆகியோரின் புகழைப் பாடுவோமாக. தற்போதுள்ள நமது புலன்கள் அனைத்தும், பௌதிக மூலப் பொருட்களால் ஆனவை. ஆகவே, பகவான் கிருஷ்ணரின் தெய்வீக உருவை உணர்வதில், அவை குறையுள்ளவையாக இருக்கின்றன. ஆகவே, பகவான் நாம கீர்த்தனம் எனப்படும் உன்னதமான ஒலிவடிவில் வழிபடப்படுகிறார். வெகு தூரத்திலிருந்து செய்தி அனுப்புபவரை ஒலியின் வாயிலாக அறிவதைப் போன்றதே இந்த ஆன்மீக வழிமுறையாகும்.

அந்த ஆன்மீக ஒலியதிர்வின் மூலமாக, வேதங்களின் அந்தரங்கப் பகுதிகளில் கூறப்பட்டுள்ள பகவத் ஞானமானது பரம புருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணரால் எனக்கு புகட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆன்மீக ஐஸ்வர்யங்களும் நெருக்கமான அன்புத் தொண்டும் எனக்கு வழங்கப்பட்டது.

ஆகவே, வியாஸதேவரே, உமது பரந்த வேத அறிவினால் ஸர்வ வல்லமையுள்ள பகவானின் செயல்களைப் பற்றி விளக்குவீராக. ஏனெனில், அதுவே பேரறிஞர்களின் விருப்பங்களைத் திருப்திபடுத்தும், அதே சமயம் பாமர மக்களின் துன்பங்களையும் குறைத்துவிடும். உண்மையில், துன்பங்களிலிருந்து வெளியேறுவதற்கு வேறு வழியில்லை.

நாரதரின் இவ்விளக்கங்களுடன் ஐந்தாம் அத்தியாயம் முடிவுறுகிறது.

 

நாரதரிடம் வியாஸரின் கேள்விகள்

ஆறாம் அத்தியாயத்தின் தொடக்கத்தில் ஸ்ரீல வியாஸதேவர் நாரதரிடம், “குருநாதரே, அந்த மஹாத்மாக்கள் சென்ற பின்பு தாங்கள் என்ன செய்தீர்கள்? அவர்களிடம் தீக்ஷை பெற்றபின் எவ்வாறு வாழ்க்கையைக் கழித்தீர்கள்? காலப்போக்கில் பழைய உடலைக் கைவிட்டபின் தற்போதைய உடலை எவ்வாறு பெற்றீர்கள்? காலமானது அனைத்தையும் அழிக்கிறது. பிரம்மாவின் முந்தைய நாளில் நடந்த விஷயங்களைத் தாங்கள் எவ்வாறு நினைவில் கொண்டிருக்கிறீர்கள்?” என்று வினவினார்.

நாரதரின் விளக்கம்

நாரத முனிவர் பதிலளித்தார்: நான் எனது தாய்க்கு ஒரே மகன், ஐந்தே வயது நிரம்பியவனாக இருந்தேன். எனவே, என் தாய் என்னை தன் அன்பால் கட்டிவிட முயற்சி செய்தாள். எனது பராமரிப்பில் அவள் மிகவும் அக்கறை கொண்டிருந்தாலும், சுதந்திரமானவளாக இல்லாத காரணத்தால், எனக்காக அவளால் ஏதும் செய்ய இயலவில்லை.

ஒருநாள் மாலை வேளையில், பால்கறக்க வெளியே சென்றிருந்த என் தாயின் காலில் பாம்பு கடித்து இறந்து போனாள். பகவான் எப்போதும் தமது பக்தர்களின் நலனை விரும்புபவர் என்பதால், அதனை நான் அவரது தனிப்பெரும் கருணையாக ஏற்றுக் கொண்டேன். வெளியுலக அனுபவம் இல்லாவிடினும், உடனே நான் வீட்டைவிட்டு வடக்கு நோக்கிப் புறப்பட்டேன். எண்ணற்ற மாநகரங்கள், நகரங்கள், கிராமங்கள், பண்ணைகள், காடுகள், மலைகள், பள்ளத்தாக்குகள் போன்றவற்றைக் கடந்து ஓர் இருண்ட பயங்கரமான காட்டை அடைந்தேன். அது பாம்புகள், நரிகள் மற்றும் ஆந்தைகளின் விளையாட்டு மைதானமாக இருந்தது. நான் மிகவும் களைப்புடனும் பசி தாகத்துடனும் இருந்ததால், ஓர் ஏரியை அடைந்து, நீரைப் பருகி, புத்துணர்ச்சி பெறக் குளித்தேன்.

அதன் பின்னர், ஒரு பெரிய ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து, என் ஆன்மீக குருமார்கள் கற்றுத் தந்தபடி, இதயத்தினுள் உறைந்துள்ள பரமாத்மாவை தியானிக்கத் தொடங்கினேன். பகவானின் தாமரை பாதங்களில் என் மனதை ஒருமுகப்படுத்திய உடனேயே, உன்னத அன்பினால் ஒரு மாற்றம் நிகழத் துவங்கியது. என் கண்களில் கண்ணீர் பெருகி வழிந்தோடிய நிலையில், பகவான் கிருஷ்ணர் என் இதயத் தாமரையில் தோன்றினார். என் அன்பு பகவானைக் கண்டதும் நான் மகிழ்ச்சியில் திளைத்தேன். என் உடல் உறுப்புகள் அனைத்தும் உற்சாகமடைந்து சுதந்திரமான ஆன்மீகப் புத்துணர்வைப் பெற்றன. உண்மையான அந்த பரவசத்தில் மூழ்கிய நான் என்னையும் பகவானையும் காண இயலாதவனானேன்.

பகவானின் திவ்ய வடிவ தரிசனம் ஒருவருக்கு விவரிக்க இயலாத ஆழ்ந்த திருப்தியைத் தருகிறது. எனவே, என் பார்வையிலிருந்து பகவான் மறைந்ததும் பெரும் பதட்டத்துடன் நான் குதித்தெழுந்தேன், பகவானை மீண்டும் காண பேராவல் கொண்டேன். ஆனால் என் தியானத்திற்குள் அவரைக் கொண்டுவர எவ்வளவோ முயன்றும், என்னால் இயலவில்லை. இதனால் பெரும் ஏமாற்றமடைந்து மனச் சோர்வும் ஆழ்ந்த துக்கமும் அடைந்தேன்.

கிருஷ்ணரின் புகழைப் பாடிய வண்ணம் உலகமெங்கும் பவனிவரும் ஸ்ரீ நாரதர்.

பகவானின் அறிவுரை

அத்தனிமையான இடத்தில் என் நேர்மையான முயற்சிகளைக் கண்ட பகவான், எனது பார்வைக்குத் தென்படாமல் என் சோகத்தைத் தீர்க்கும் வண்ணம் மிக கம்பீரமான ஆழமான குரலில் இனிமையாக என்னுடன் பேசினார்: “நாரதனே, இந்த ஜென்மத்தில் நீ என்னை மீண்டும் காண இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். ஏனெனில், பௌதிக களங்கங்களிலிருந்து முற்றிலும் விடுபடாமல் என்னை அணுக இயலாது. என்னிடம் வருவதற்கான உன் விருப்பத்தை அதிகரிக்கச் செய்வதற்காக, தனிப்பட்ட ஒரு சலுகை யாகவே நான் உனக்கு தரிசனம் தந்தேன். எனது தொடர் பிற்காக நீ எவ்வளவு அதிகமாக ஏங்குகிறாயோ, அவ்வளவு சீக்கிரமாக எல்லா ஜடக் களங்கங்களிலிருந்தும் நீ விடுபடுவாய். எனது கருணையால், கிருஷ்ண உணர்வில் நீ தொடர்ந்த முன்னேற்றத்தை அடைவாய். உனது நினைவாற்றலானது படைப்பு காலத்திலும் அழிவு காலத்திலும்கூட குறையாமல் நிலைத்திருக்கும். இஃது என் உறுதி. இந்த துக்ககரமான ஜடவுடலைக் கைவிட்டபின் ஆன்மீக உலகில் என் நித்திய தொடர்பைப் பெறுவாய்.”

பகவான் தன்னிடம் பேசிய வார்த்தைகளை வியாஸரிடம் உரைத்த நாரதர் தொடர்ந்து கூறினார்: பகவான் பேசுவதை நிறுத்தினார். அவர்பால் எனக்கு அளவற்ற ஆழ்ந்த நன்றியுணர்வு ஏற்பட்டது, சிரம்தாழ்த்தி அவரை வணங்கினேன். அதன்பின் முழு திருப்தியுற்றவனாக, அடக்கத்துடன், பொறாமையின்றி புவியெங்கும் சுற்றித் திரிந்தேன். எல்லாவித சமூக வழக்கங் களையும் அலட்சியப்படுத்தி முழுமுதற் கடவுளின் புனித நாமத்தையும் புகழையும் தொடர்ந்து உச்சரித்து வந்தேன். இவ்வாறு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நினைவில் முழுவதும் மூழ்கியவாறு, காலப்போக்கில் ஜடப் பற்றுதலின் களங்கங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டபின் மரணத்தைச் சந்தித்தேன். மின்னலும் வெளிச்சமும் ஒரே சமயத்தில் நிகழ்வதைப் போல், மரணமடைந்த நொடியிலேயே பகவானுடன் தொடர்பு கொள்ளத்தக்க ஓர் உன்னத ஆன்மீக உடலைப் பெற்றேன்.

நாரதரின் பரிபூரணத்துவம்

பிரம்மாவின் அந்தநாள் முடிவில் பிரளய நீரில் நாராயணர் பள்ளிக் கொண்டிருந்தபோது, அவரது மூச்சுக் காற்றில் பிரம்மாவுடனும் படைக்கப்பட்ட மூலகங்களுடனும் நுழைந்தேன், பிரம்மதேவர் தன் இரவில் கர்போதகஷாயி விஷ்ணுவின் உடலுக்குள் ஓய்வெடுத்தார். அதன்பின், பிரம்மாவின் மகன் களாகப் பிறந்த இதர ரிஷிகளோடு இணைந்து நானும் தோன்றினேன். பகவான் விஷ்ணுவின் கருணையால், அன்றிலிருந்து ஆன்மீக உலகிலும் பௌதிக உலகிலும் தங்கு தடையின்றி பயணித்த வண்ணம் இருக்கிறேன். அத்துடன் பகவான் கிருஷ்ணர் எனக்களித்த தெய்வீக வீணையில் இசை மீட்டியவாறு, தொடர்ந்து அவரது புகழைப் பாடிக் கொண்டுள்ளேன். அவரது புகழைப் பாடத் துவங்கியதும் அழைக்கப்பட்டவரைப் போல், என் இதய சிம்மாசனத்தில் பகவான் எழுந்தருள்கிறார்.

எனதன்பு வியாஸரே, இவ்வாறாக அறியாமைக் கடலில் துன்புறும் கட்டுண்ட ஆத்மாக்கள் கரைசேருவதற்கு முழுமுதற் கடவுளின் திருநாமத்தையும் லீலைகளையும் தொடர்ந்து பாடுதல் என்னும் படகே சிறந்த வழி என்பதை நான் நேரடியாக உணர்ந்தேன். யோகப் பயற்சியால் புலன்களைக் கட்டுப்படுத்துவதால் ஒருவர் ஜடத் துன்பத்திலிருந்து தற்காலிக விடுதலையைப் பெறலாம். ஆனால் பகவானுக்குச் செய்யும் பக்தித் தொண்டினால் மட்டுமே உண்மையான ஆத்ம திருப்தியை பூரணமாகப் பெற முடியும்.

 

ஐந்தாம் அத்தியாயத்தின் பகுதிகள்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

(1) முனிவர்களுக்கு நாரதர் சேவை செய்தல் (23-31)

  • முனிவர்களின் குணங்கள்
  • நாரதரின் தகுதி
  • பாவங்களைப் போக்க வழி
  • கேட்பதால் கிருஷ்ணர் மீது கவர்ச்சி
  • மிக இரகசியமான அறிவு

(2) செயலாற்றும் கலை (32-36)

  • நோய் தீர்க்கும் முறை
  • கர்ம விளைவுகளை அழித்தல்
  • பக்தி யோகம்

(3) கிருஷ்ணரின் புகழை மட்டுமே பாடுங்கள் (37-40)

  • கிருஷ்ணரின் ஒலி வடிவம்
  • நாரதரின் தீர்வு

ஆறாம் அத்தியாயத்தின்நான்கு பகுதிகள்

(1) நாரதரிடம் வியாஸரின் கேள்விகள் (1-4)

  • முனிவர்கள் விடைபெற்றுச் சென்றபின் தாங்கள் என்ன செய்தீர்கள்?
  • தங்களது ஞாபக சக்தியின் இரகசியம் என்ன?

(2) நாரதரின் விளக்கம் (5-19)

  • தாயாரின் மரணம்
  • நாரதரின் பயணம்
  • பகவானின் தரிசனம்

(3) பகவானின் அறிவுரை (20-29)

  • பௌதிக ஆசைகளிலிருந்து விடுபடும் வழி
  • பக்தித் தொண்டின் பலன்
  • தெய்வீக மரணம்

(4) நாரதரின் பரிபூரணத்துவம் (28-38)

  • ஆன்மீக உடலைப் பெறுதல்
  • தடையற்ற பயணம்
  • வியாஸருக்கு முடிவான அறிவுரை
[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives