—ஸ்ருத கீர்த்தி தாஸரின் பேட்டியிலிருந்து
விருந்தாவனத்திற்கு ஸ்ரீல பிரபுபாதர் விஜயம் செய்தபோது, ஒருநாள் மாலை வேளையில், தமது வரவேற்பு அறையில் உபன்யாசம் வழங்கிக் கொண்டிருந்தார். அச்சமயம், குரங்கு ஒன்று அங்கு வைக்கப்பட்டிருந்த வாழைப்பழங்களை நோக்கி பாய்ந்தது. உடனே, விஷாகா தாஸி ஒரு துணியை வீசி பெரும்பாலான வாழைப்பழங்களை குரங்கிடமிருந்து மீட்டாள். இருப்பினும், குரங்கு சில பழங்களை எடுத்துச் சென்று விட்டது.
அங்கு நடந்ததை கவனித்துக் கொண்டிருந்த ஸ்ரீல பிரபுபாதர் கூறினார்: “இந்த குரங்கு எவ்வளவு சாமர்த்தியமாக செயல்படுகிறது என்பதைப் பாருங்கள்! எல்லா உயிர்வாழிகளும் அறிவுடையவை என்பதையே இந்நிகழ்ச்சி நமக்கு சுட்டிக் காட்டுகிறது. இந்த குரங்கு அறையினுள் சென்று பழத்தினை எடுத்துக் கொண்டு வெளியே வருவதற்கு எவ்வளவு நேரம் எடுத்திருக்கும்? உணவு விஷயத்தில் அது மிகவும் திறமையாகச் செயல்படுகிறது. சில வினாடிகளுக்குள் அது பழத்தை எடுத்துச் சென்று விட்டது. யாராலும் குரங்கைப் பார்க்கக்கூட இயலவில்லை. இதுவே பெளதிக உலகின் இயற்கை. தங்களது வட்டத்திற்குள் அனைவரும் திறமையாளர்களாகவே உள்ளனர். நாமோ திறமையான பக்தர்களாக இருக்க வேண்டும், நாம் குரங்குகளைப் போன்று (உணவிற்கான) திறமைசாலிகளாக இருக்க வேண்டியதில்லை.”
ஸ்ரீல பிரபுபாதர் உபன்யாசம் வழங்கிக் கொண்டிருந்தபோதிலும், நான்கு வினாடிகள் மட்டுமே நீடித்த இந்த நிகழ்வை கவனித்து விட்டார். அவர் எப்பொழுதும் தம்மைச் சுற்றி என்ன நிகழ்கிறது என்பதை அறிந்திருந்தார். ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட செயல்களைச் செய்வதில் அவர் வல்லுநராகத் திகழ்ந்தார்.
ஜய ஸ்ரீல பிரபுபாத!!!