நாட்டின் வளமும் நாட்டின் தலைவனும்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

பூமி தனது வளங்களை எந்த அளவிற்கு மக்களுக்கு வழங்குகிறது என்பது அதனை ஆள்பவரின் ஆன்மீகப் பண்புகளைப் பொறுத்தே உள்ளது என்பதை ஸ்ரீல பிரபுபாதர் விளக்குகிறார்.

நிஷம்ய பீஷ்மோக்தம் அதாச்யுதோக்தம்

ப்ரவ்ருத்த-விஜ்ஞான-விதூத-விப்ரம:

ஷஷாஸ காம் இந்த்ர இவாஜிதாஷ்ரய:

பரித்யுபான்தாம் அனுஜானுவர்தித:

காமம் வவர்ஷ பர்ஜன்ய:

ஸர்வ-காம-துகா மஹீ

ஸிஷிசு: ஸ்ம வ்ரஜான் காவ:

பயஸோதஸ்வதீர் முதா

“பீஷ்மதேவரும் அச்சுதரான ஸ்ரீ கிருஷ்ணரும் கூறியதைக் கேட்டு புத்தொளி பெற்ற மாமன்னர் யுதிஷ்டிரர் தமது ஐயங்களை அகற்றி, பக்குவமான ஞானத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். இவ்வாறு பூமியையும் கடலையும் அவர் ஆட்சி செய்ய அவரது சகோதரர்களும் அவரைப் பின்தொடர்ந்தனர். மாமன்னர் யுதிஷ்டிரரின் ஆட்சியில் மேகங்கள் மக்களுக்கு தேவையான மழையைப் பொழிந்தன; பூமி மக்களுக்கு தேவையான அனைத்தையும் பெருமளவில் உற்பத்தி செய்தது; மிகுதியான ஆனந்தத்தினாலும் பால் நிறைந்த மடியினாலும் பசுக்கள் தமது மேய்ச்சல் நிலங்களை பாலினால் நனைத்தன.” (ஸ்ரீமத் பாகவதம் 1.10.3–4)

குருக்ஷேத்திரப் போருக்குப் பின்னர் யுதிஷ்டிர மஹாராஜருக்கு அரியணை ஏற விருப்பமே இல்லை. “எனக்காக எத்தனை மக்கள் போர்க்களத்தில் கொல்லப்பட்டனர், நான் பெரும் பாவம் செய்தவன். அரியணைக்குத் தகுதியற்றவன்,” என்று அவர் எண்ணினார். ஆயினும், சிறந்த மஹாபுருஷர்களான பீஷ்மதேவர், பகவான் கிருஷ்ணர், மற்றும் வியாஸதேவரும் அவரிடம் கூறினர், “இல்லை. உங்களின் மீது பிழையில்லை, போர் நிகழ்ந்தது சரியே! நீங்கள் ஆட்சியை ஏற்றுக்கொள்ளுங்கள்.” அந்த மஹாபுருஷர்கள் யுதிஷ்டிரரின் மீது தவறில்லை என்று கருதியதாலேயே யுதிஷ்டிரர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

பூமியை ஆண்ட யுதிஷ்டிரர்

ஷஷாஸ காம்- இந்த்ர இவாஜிதாஷ்ரய:, “இந்திரன் ஸ்வர்க லோகத்தை ஆண்டதைப் போலவே இவ்வுலகை யுதிஷ்டிரர் அற்புதமாக ஆண்டார்.” யுதிஷ்டிரரால் எவ்வாறு இதைச் செய்ய முடிந்தது? அஜிதாஷ்ரய, அவர் முழுமையான ஒரு பக்தனாகவே ஆட்சி செய்தார். கிருஷ்ணரிடம் சரணடைந்த மன்னனே நாட்டை அல்லது உலகை ஆள முடியும். அஜிதாஷ்ரய என்றால் கிருஷ்ண உணர்வுடன் (பக்தியுடன்) என்று பொருள். கிருஷ்ண உணர்வு கொண்டவன் சாஸ்திரங்களுடைய வழிகாட்டுதலின்படி செயல்பட்டு—முழு உலகையோ உலகின் ஒரு பகுதியையோ—இந்திரன் ஸ்வர்க லோகத்தை ஆள்வதைப் போல சிறப்பாக ஆள முடியும்.
மாமன்னர் யுதிஷ்டிரரின் தம்பிகள் அவரது அமைச்சர்களாகவும் படைத்தலைவர்களாகவும் செயல்பட்டனர். பண்பில் சிறந்து விளங்கிய தம்பிகளுக்கும் அவருக்கும் இடையே முழுமையான ஒத்துழைப்பு இருந்தது. இந்திரன் ஸ்வர்கத்தை ஆண்டதுபோல, யுதிஷ்டிரர் கிருஷ்ணரின் பிரதிநிதி என்னும் முறையில், ஒரு சிறந்த மன்னனாக உலகையே ஆளும் தகுதியைப் பெற்றிருந்தார். தேவர்களான இந்திரன், சந்திரன், சூரியன், வருணன், வாயு முதலியோர் பல்வேறு மண்டலங்களுக்கான பிரதிநிதி மன்னர்கள். அவர்களைப் போன்றே மாமன்னர் யுதிஷ்டிரர் பூமியை ஆண்டார்.

அவர் நவீன மக்களாட்சியின் அரசியல் தலைவர்களைப் போன்று ஞான ஒளியின்றி இருக்கவில்லை, பீஷ்மதேவராலும் குறைபாடுகளுக்கு அப்பாற்பட்ட பகவானாலும் அறிவுறுத்தப்பட்டு பூரண ஞானத்தைப் பெற்றிருந்தார்.
நவீன உலகில் வாக்குகளின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகத் தலைவர்களோ பொம்மையைப் போன்றவர்கள், அரச உரிமை எதுவும் அவர்களிடம் இருப்பதில்லை. இதன் காரணத்தால் இவ்வுலகில் பல நாடுகள் தங்களது கொள்கை வேறுபாடு காரணமாகவும் சுயநல சிந்தனையாலும் தங்களுக்குள் சண்டையிடுகின்றன. ஆனால் மாமன்னர் யுதிஷ்டிரரைப் போன்றவருக்கு “சொந்த கொள்கை” என்று எதுவும் கிடையாது. அச்சுதரான பகவானும் அவரது பிரதிநிதியான பீஷ்மதேவரும் வழங்கிய வழிமுறைகளையே அவர் பின்பற்றினார்.

ஒருவன் சுயநல குறிக்கோள்களையும் கொள்கைகளையும் கைவிட்டு, ஆச்சாரியரையும் குற்றமற்ற பகவானையும் பின்பற்ற வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவ்வாறு செயல்பட்டதால், உலகம் முழுவதையும்—கடல்கள் உட்பட அனைத்தையும்—யுதிஷ்டிரரால் ஆள முடிந்தது. அவர் பின்பற்றிய கொள்கைகள் பிழையற்றதாகவும் அனைவராலும் ஏற்கத்தக்கவையாகவும் இருந்தன.
உலகம் முழுவதும் ஒரே நாடு என்னும் கொள்கை நிறைவேற வேண்டுமெனில், பிழையற்ற அதிகாரியைப் பின்பற்றுதல் அவசியம். ஒழுங்கற்ற மனிதனால் அனைவராலும் ஏற்கத்தக்க கொள்கையை உருவாக்க முடியாது. குற்றமற்ற நபரால் மட்டுமே அனைவராலும் ஏற்கத்தக்க பின்பற்றத்தக்க ஒரு வழிமுறையை உருவாக்க முடியும். அரசாங்கம் மனிதனால் ஆளப்படுகிறது, மனிதனின்றி அரசாங்கம் செயல்படாது. மனிதன் ஒழுங்குடன் இருந்தால் அரசாங்கம் ஒழுங்காக இருக்கும். மனிதன் முட்டாளாக இருந்தால், அரசாங்கம் முட்டாள்களின் ஸ்வர்கமாகி விடும். இதுவே இயற்கையின் நியதி.

ஒழுங்கற்ற மன்னர்களைப் பற்றிய பல கதைகள் உள்ளன. ஆட்சியில் இருப்பவர் மாமன்னர் யுதிஷ்டிரரைப் போல பயிற்சி பெற்றிருக்க வேண்டும். உலகை ஆளும் முழு பொறுப்பும் அவரிடம் ஏகபோகமாக இருக்க வேண்டும். உலகம் முழுவதும் ஒரே நாடு என்ற கொள்கையின்படி ஆட்சி செய்வது மாமன்னர் யுதிஷ்டிரரைப் போன்ற மன்னர்களாலேயே சாத்தியப்படும். உலகை ஆள யுதிஷ்டிரரைப் போன்ற மன்னர்கள் இருந்ததால், அந்நாட்களில் உலகில் மகிழ்ச்சி நிலவியது.

அத்தனையும் பூமியிலிருந்து!

மன்னர்கள் யுதிஷ்டிர மஹாராஜரைப் பின்பற்ற வேண்டும். மன்னராட்சியினால் எவ்வாறு சீரிய நாட்டை உருவாக்க முடியும் என்பதை எடுத்துக்காட்ட வேண்டும். சாஸ்திரங்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுபவனால் இதைச் செய்ய முடியும். அவன் ஆளுமை கிடைக்கப் பெறுவான். யுதிஷ்டிர மாமன்னர் சிறந்த மன்னராகவும் கிருஷ்ணரின் பிரதிநிதியாகவும் இருந்ததால், காமம் வவர்ஷ பர்ஜன்ய: என்று அவரது ஆட்சியைப் பற்றி கூறப்படுகிறது. மாமன்னர் யுதிஷ்டிரரின் ஆட்சியில் போதிய அளவு மழை பெய்தது. மழையே வாழ்வின் அனைத்து தேவைகளுக்கும் ஆதாரம். இதையே கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார்:

அன்னாத் பவன்தி பூதானி
பர்ஜன்யாத் அன்ன-ஸம்பவ:
யஜ்ஞாத் பவதி பர்ஜன்யோ
யஜ்ஞ கர்ம-ஸமுத்பவ:

“மழையால் தோற்றுவிக்கப்படும் தானியங்களால் எல்லா ஜீவன்களின் உடல்களும் வாழ்கின்றன. மழை யாகத்தாலும், யாகம் விதிக்கப்பட்ட கடமைகளாலும் உண்டாக்கப்படுகின்றன.”

நாட்டு மக்களையும் விலங்குகளையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது அந்நாட்டு தலைவனுடைய பொறுப்பாகும். ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் சில பாதகர்கள் சில சமயங்களில் மனிதனுக்கு நன்மை செய்வதுபோல வேடமிடும்போதிலும், விலங்குகளின் நன்மைக்காக எதுவும் செய்வதில்லை. ஏன் இந்தப் பாகுபாடு? விலங்குகளும் இந்த பூமியில்தானே வாழ்கின்றன? அவையும் உயிர்வாழிகள்தானே? அவை மனிதனைப் போல ஆறு அறிவு படைத்தவை அல்ல என்பதால், அவற்றைக் கொல்வதற்காக கூடங்களை

நிறுவி அவற்றைக் கொல்ல வேண்டுமா? இதுவா நியாயம்?

மேலும், தன் நாட்டுக்கு வரும் அனைவருக்கும் மன்னன் புகலிடம் வழங்க வேண்டும். அவன் ஏன் பாகுபாடு பார்க்க வேண்டும்? “உங்கள் நாட்டில் வாழ எனக்கு விருப்பம்,” என்று வருவோர் எவருக்கும் மன்னன் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும். “இல்லை, இல்லை. நீங்கள் இங்கு வர முடியாது. நீங்கள் அமெரிக்கர்கள், நீங்கள் இந்தியர்கள், நீங்கள் அவர்கள், நீங்கள் இவர்கள்,” என்று ஏன் சொல்ல வேண்டும்? ஒரு மன்னன் வேத சட்டங்களின்படி ஆள்பவனாக இருந்தால், அவன் சீர்மை நிறைந்தவனாக இருப்பான், நல்ல தலைவனாக இருப்பான், இயற்கையும் அவனுக்கு உதவி செய்யும். அதனால்தான், மாமன்னர் யுதிஷ்டிரரின் காலத்தில் ஸர்வ-காம-துகா மஹீ, “பூமி மனிதனுக்கு வேண்டியவற்றை அபரிமிதமாக உருவாக்கித் தருகிறது,”என்று கூறப்பட்டது.

மஹீ என்றால் பூமி. “நமக்குத் தேவையான அனைத்தும் பூமியிலிருந்தே கிடைக்கின்றன. உங்களின் தேவைகள் மழையின் வடிவில் வானத்திலிருந்து வருகின்றன. பொருட்கள் எவ்வாறு பூமியிலிருந்து உருவாக்கப்படுகின்றன என்னும் விஞ்ஞானத்தை மக்கள் அறிவதில்லை. விண்வெளியில் ஏற்படும் சில மாற்றங்களும் மழையும் பல்வேறு பொருட்களை உருவாக்குகின்றன. விலைமதிப்புள்ள கற்கள், முத்துக்கள் போன்றவை எவ்வாறு உருவாகின்றன என்பதை மக்கள் அறிவதில்லை.
மன்னன் தெய்வ பக்தி கொண்டவனாக இருந்தால், இயற்கை அவனுக்கு உதவும். மன்னனோ அரசாங்கமோ தெய்வ சிந்தனையின்றி செயல்பட்டால், இயற்கை தனது ஒத்துழைப்பை நிறுத்தி விடும். பாகவதத்தின் நான்காவது ஸ்கந்தத்தில் இது கூறப்பட்டுள்ளது. பூமி தனது வளத்தை நிறுத்தியபோது, மாமன்னர் பிருது அவளை தண்டிக்க முனைந்தார். அவளோ, “இதுவே என் கடமை. மக்கள் அசுரர்களாக இருக்கும்போது, என்னால் வழங்கப்படும் பொருட்களை நான் குறைத்தே ஆக வேண்டும்,” என்றாள்.
பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றிவிட்டால் அனைத்தும் சரியாகி விடும் என்று தலைவர்கள் எண்ணுகின்றனர். அவர்கள் பாதகர்களாக இருந்தாலும் மக்கள் சந்தோஷமாக இருப்பர் என்பது அவர்களின் எண்ணம். ஆனால் அத்தகைய தலைவர்களால் உலகிற்கு மகிழ்ச்சியளிக்க இயலாது. அவர்களது நடத்தை மேன்மேலும் சீர்குலைந்து கொண்டே போகும்.

பகவான் கிருஷ்ணர், பீஷ்மதேவர், வியாஸதேவர் போன்ற மஹாபுருஷர்களின் அறிவுரையின் பேரில் யுதிஷ்டிரர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.

ஒரே யாகம்

“தொழிற்சாலைகள் மக்களை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் ஆக்கும்,” என்று கிருஷ்ணர் சொல்லவில்லை. ஆனால் அரசு சம்மந்தப்பட்டவர்கள் தொழிற்சாலைகளைப் பெருக்கிக் கொண்டே போகின்றனர். இவ்வாறு, உக்ர கர்மாவை, அதாவது, கெடுதல் நிறைந்த செயல்களைச் செய்வதன் மூலம் மக்கள் துன்பமே அடைவர், திருப்தியற்ற பாதகர்களாகவே இருப்பர். “தொழிற்சாலைகளை ஆரம்பித்து பொருளாதாரத்தை வளருங்கள்,” என்று கிருஷ்ணர் எங்கே சொல்லி இருக்கிறார்? எங்குமே இல்லை.
தவறாமல் மழை பொழியுமானால் பொருளாதார முன்னேற்றம் சீரிய முறையில் இருக்கும் என்பதே இங்கு சொல்லப்படுகிறது. காமம் வவர்ஷ பர்ஜன்ய:, “தேவைகளை வழங்குவது மழையே.” அது பொய்க்காமல் சீர்மையாக எப்படி இருக்க முடியும்? யஜ்ஞாத் பவதி பர்ஜன்யோ. “யாகத்தால்!”

யாகம் எங்கு காணப்படும்? சண்டையும் சச்சரவுகளும் நிரம்பிய கலி யுகத்தில் யாகம் செய்வது மிகவும் கடினம். இங்கு போதிய பணம் இல்லை, தகுதி வாய்ந்த பிராமணர்கள் இல்லை. யஜ்ஞை: ஸங்கீர்தன-ப்ராயைர் யஜந்தி ஹி ஸுமேதஸ: என்று சாஸ்திரம் சொல்கிறது. கலி யுகத்தில் அறிவாளிகள் ஸங்கீர்த்தன யாகமே செய்வார்கள். யாருடைய தலையில் களி மண் இல்லாமல், மூளை இருக்கிறதோ, அவன் இந்த வழியைக் கடைபிடிப்பான்.

ஒவ்வொரு வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் “ஹரே கிருஷ்ண” என்று உச்சரிக்க வேண்டும். மக்களிடம் என்ன இருக்கிறதோ இல்லையோ அவர்கள் உச்சாடனத்தைத் தொடங்கட்டும். அதனால் என்ன நிகழ்கிறது என்பதை மட்டும் பாருங்கள். நாம் நாம உச்சாடனத்தை அனைவருக்கும் வழங்க விழைகிறோம், பாதகர்கள் இதைப் பெற மறுக்கின்றனர். உலகம் முழுவதும் “ஹரே கிருஷ்ண” என்று ஜபிக்கப்படுவதால், யாருக்கும் எந்த இழப்பும் இல்லை. என்ன இழப்பு? இருப்பினும், இவர்கள் உச்சரிக்க மாட்டார்கள். நாம ஜபத்தால் அனைத்தையும் அடையலாம். ஸர்வ-காம-துகா மஹீ. பூமியே அன்னை, அவளிடமிருந்தே அனைத்தும் கிடைக்கும்படி கிருஷ்ணர் ஏற்பாடு செய்துள்ளார். அவளிடமிருந்தே அனைத்தும் வருகின்றன. ரோஜா மலர் வருகிறது, சுரங்கங்கள் வருகின்றன, தங்கம் வருகிறது, நிலக்கரி வருகிறது, எரிவாயு எண்ணெய் வருகிறது. அனைத்தும் பூமிக்குள் இருக்கிறது. பருவ மழை சரியாகப் பொழியுமானால், அனைத்தும் கிடைக்கும். யாகம் செய்தலே மழையை வருவிக்கும். ஆயினும், [தீ மூட்டி] யாகம் செய்தல் இந்த யுகத்திற்கு சாத்தியம் இல்லாதது. எனவே, இக்கலி யுகத்தில் வாழ்க்கையின் குறிக்கோளை அடைய ஒரே வழி பகவானின் தெய்வீக நாமங்களை உச்சரிப்பதே.

ஹரேர் நாம ஹரேர் நாம
ஹரேர் நாமைவ கேவலம்
கலௌ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ
நாஸ்த்யேவ கதிர் அன்யதா

ஹரே கிருஷ்ண உச்சாடனத்தை அறிமுகப்படுத்துங்கள். இதனால், மக்களுக்கு என்ன இழப்பு? வீட்டுக்கு வீடு, அலுவலகத்திற்கு அலுவலகம், தொழிற்சாலைக்கு தொழிற்சாலை, என எங்கும் நாம உச்சாடனம் நிகழட்டும். தொழிற்சாலைகள் இருக்கலாம், ஆனால் அங்கு வேலை செய்பவர்கள் ஹரே கிருஷ்ண உச்சாடனத்தில் ஈடுபட வேண்டும். அவர்களுக்கு பிரசாதம் வழங்குங்கள், அதன் பின்னர் அங்கே வேலைநிறுத்தம் இருக்காது, பொதுவுடைமை இயக்கங்கள் இருக்காது. பூமியில் அனைத்தும் இருப்பதால், அனைத்தும் சீராக வளர்ச்சியுறும்.

கிருஷ்ண பக்தி இயக்கம் ஏதோ உணர்ச்சிபூர்வமான ஒரு வெறி அல்ல, இது வெறும் சமயக் கொள்கையும் அல்ல. இது சமுதாயத்திற்குப் பயன்படும் விஞ்ஞானபூர்வமான இயக்கமாகும். நமது நன்னடத்தையின் மூலமாக, மக்களிடம் இதனைக் கொண்டு சென்று, அவர்கள் இதனை உணருவதற்கு வழிவகுக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் இதனை ஏற்றுக்கொள்வர்.
இந்த இயக்கம் சமய சம்பந்தப்பட்ட ஓர் இயக்கம் என்பதே தற்போது அவர்களுடைய எண்ணமாகும். சமயம் என்றால் வெறியுடன் இருப்பவர்கள் என்றும் அவர்கள் நினைக்கின்றனர். ஆனால், கிருஷ்ண பக்தி அதுவல்ல. மற்றொரு சமயத்துடன் போட்டியிடுவது இந்த இயக்கத்தின் கொள்கையல்ல. ஆங்கிலேயர்கள் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே சண்டையை ஏற்படுத்தினர். அதற்கு முன்பாக, சமயச் சண்டைகள் இந்தியாவில் இருந்ததில்லை. குருக்ஷேத்திர போர் அரசியல் சம்பந்தப்பட்டது, சமயம் சம்பந்தப்பட்டதல்ல. “நீ ஒரு முஸ்லிம், நான் ஓர் இந்து. எனவே, நாம் போரிடுவோம்,” என்பதல்ல அதன் நோக்கம். இந்திய வரலாற்றில் அப்படி ஒரு போர் ஏற்பட்டதே இல்லை.
பௌதிகத் தளத்தில் இருக்கும்போது, உன்னுடைய விருப்பமும் என்னுடைய விருப்பமும் வேறுபடலாம், அதனால் சச்சரவு ஏற்படலாம். ஆனால் இறையுணர்வில் சண்டை எவ்வாறு ஏற்படும்? ஒவ்வொருவரும் இறையுணர்வுடன் இருந்தால், அங்கு சண்டை என்ற பேச்சுக்கு இடம் ஏது?

பூமி தனது வளத்தை நிறுத்தியபோது, மாமன்னர் பிருது அவளை தண்டிக்க முனைதல்

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives