பிருது மன்னரின் அறிவுரைகள்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: நான்காம் ஸ்கந்தம், அத்தியாயம் 21

சென்ற இதழில், பிருதுவின் யாக சாலையில் பகவான் விஷ்ணு தோன்றியதையும் மன்னருக்கும் விஷ்ணுவிற்கும் இடையிலான உரையாடல்களையும் கண்டோம். இந்த இதழில், பிருது தம் நாட்டு மக்களுக்கு வழங்கிய அறிவுரைகளையும் முனிவர்களிடமிருந்து ஆசி பெற்றதையும் காணலாம்.

அற்புத வரவேற்பு

மாமன்னர் பிருது தமது நகரத்திற்குத் திரும்பியபொழுது, அந்நகரம் முத்துக்களாலும் மலர்களாலும் பொன்னாலும் அழகிய துணிமணிகளாலும், வாழை மரம், பாக்கு மரம் முதலிய மங்கல பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்டு, தூப தீபங்களின் நறுமணம் கமழ, காண்போர் கண்களைக் கவரும் வண்ணம் இனிமையாகத் திகழ்ந்தது. குடிமக்கள் அனைவரும் தீபம், மலர், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தானியங்கள், குங்குமம் முதலிய மங்கல பொருட்களை கைகளில் ஏந்தி, நன்கு அலங்கரிக்கப்பட்ட இளம் சிறுமிகள் முன்னே நிற்க, வாத்தியங்களும் வேத மந்திரங்களும் முழங்க தமது மன்னரை இதயபூர்வமாக வரவேற்றனர்.

(குறிப்பு: மன்னருக்கு இத்தனை ஆடம்பரமான வரவேற்பு கொடுக்கப்பட்டால்கூட, அதனால் அவர் துளியும் கர்வம் கொள்ளவில்லை. அடக்கமுடைய மேன்மக்கள் தங்கள் செல்வத்தினாலோ அதிகாரத் தினாலோ ஒருபோதும் கர்வமடைவதில்லை.)

பிருது மன்னர் கங்கை, யமுனை ஆகிய புனித நதிகளுக்கு இடையிலான நிலப்பகுதியில் வாழ்ந்தார். அவர் பூமியின் ஏழு கண்டங்களையும் நன்கு ஆட்சி செய்த ஈடு இணையற்ற அரசராவார். அவரது ஆட்சிக் காலத்தில் மக்கள் அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழ்ந்தனர்.

பிருதுவின் வேள்வி

ஒரு சமயம் மாமன்னர் பிருது மிகப்பெரிய வேள்வி ஒன்றை நிறைவேற்றினார். அதில் பல்வேறு உலகைச் சார்ந்த தேவர்கள், மாமுனிவர்கள், ராஜ ரிஷிகள் என பலரும் கலந்து கொண்டனர், வந்திருந்த அனைவரையும் அவர் உரியமுறையில் மரியாதை செலுத்தி வணங்கினார்.

வேள்வியைச் செய்வதற்கான தீக்ஷையைப் பெற்றவுடன் அவர் தம் உயர்ந்த ஆடை அணிகலன்களை மாற்றி, கறுப்பு மான்தோலின் மீது அமர்ந்து, விரல்களில் தர்ப்பை புல்லாலான பவித்திரத்தை அணிந்து கொண்டார். இயற்கை யிலேயே ஸர்வ லட்சணங்களும் பொருந்திய அவரைப் பார்த்த அனைவரும் மகிழ்ந்தனர். வேள்விக்கு முன்பாக செய்ய வேண்டிய விதிமுறைகள் அனைத்தையும் முறையாக நிறைவேற்றிய பின், அவர் தமது கம்பீரமான குரலில் கூடியிருந்தவர் முன் இனிமையாகப் பேசத் தொடங்கினார்.

மாமன்னர் பிருது நகரத்திற்குத் திரும்பியபோது மக்கள் அவரை விமரிசையாக வரவேற்றல்

பிருதுவின் அறிவுரைகள்

முதலில் பிருது மன்னர் மன்னனின் கடமைகளையும் மக்களின் கடமைகளையும் பின்வருமாறு கூறினார்: மகாத்மாக்களே, எனது பிரார்த்தனையை அருள்கூர்ந்து கேட்பீராக! பரம புருஷ பகவானது கருணையினால் நான் இந்த பூ மண்டலத்தின் அரசனாக்கப்பட்டு அதற்குரிய செங்கோலை ஏற்றுள்ளேன். வேத இலக்கியங்களில் ஒரு மன்னன் தனது கடமைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதுபோன்ற ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. ஒரு மன்னரோ ஆளுநரோ தமது கடமைகளைச் செய்யத் தவறும் பட்சத்தில் அப்பதவியில் இருக்கக் கூடாது.

மக்களாகிய உங்களைப் பொறுத்தவரை, எப்போதும் மனதில் முழுமுதற் கடவுளை நிலை நிறுத்தி, உங்களுடைய குணங்களுக்கும் தொழிலுக்கும் ஏற்ப விதிக்கப்பட்டுள்ள கடமைகளை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்வதால் நீங்கள் பெரும் நன்மையை அடைவீர்கள். ஒரு செயலின் பலனானது அதைச் செய்தவன், செய்யத் தூண்டியவன், அதற்கு ஆதரவு அளித்தவன் ஆகியவர்களால் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளப்படுகிறது. எனவே, நீங்கள் கிருஷ்ண உணர்வு எனும் ஸர்வ மங்கலமான காரியத்தில் எப்போதும் ஈடுபட்டு எனக்கு ஆதரவு தர வேண்டும் என வேண்டுகிறேன்.

எல்லாருக்கும் மேலாக உயர்ந்த அதிகாரம் உடையவர் ஒருவர் நிச்சயம் உள்ளார் என்பதையும் அவரே நமது செயலுக்கு தகுந்த பலன்களை அளிக்கிறார் என்பதையும் உணருங்கள். இது வேதங்களாலும், மகாத்மாக்களான மனு, உத்தானபாதர், துருவர், பிரியவிரதர், எனது பாட்டனார் அங்கர், பிரகலாதர், பலி முதலிய பலராலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அறம், பொருள், இன்பம், வீடு போன்ற ஆசிகளை அருள்பவரும் அவரே.”

பக்தித் தொண்டு

மன்னர் பிருது பக்தித் தொண்டின் நெறிகளை பின்வருமாறு விளக்கினார்: முழுமுதற் கடவுளுக்கு பக்தித் தொண்டு செய்வதால், எண்ணிலடங்காத பிறவிகளில் ஒருவர் சேர்த்த கர்ம வினைகள் தூய்மைப்படுத்தப்பட்டு, அவர் கிருஷ்ண உணர்வில் படிப்படியாக முன்னேறுகிறார். பக்தித் தொண்டு செய்பவர் தவறான கருத்துகள் மற்றும் மன யூகங்களிலிருந்து விடுபட்டு, பகவானிடம் சரணடைந்தால், மீண்டும் ஜடவுலகிற்கு திரும்பி வரமாட்டார், ஆன்மீக உலகில் நித்தியமாக வாழ்வர்.

உங்கள் உடல், மனம், வாக்கு முதலியவற்றையும் உங்கள் செயற்புலன்களையும் ஒளிவு மறைவின்றி, உங்கள் திறமைக்கும் கடமைக்கும் ஏற்ப எவ்வித எதிர்பார்ப்புமின்றி முழு நம்பிக்கையுடன் இறைவனது தாமரை திருவடிகளுக்கு பக்தித் தொண்டு செய்வதற்கே நூறு சதவீதம் பயன்படுத்துவீராக. இதனால் நீங்கள் வாழ்வின் இறுதி இலட்சியத்தை நிச்சயம் அடைவீர்கள். பந்தப்பட்ட ஆத்மாக்களின் நன்மைக்காக, பகவான் பல்வேறு வேள்விகள், சடங்குகள், மந்திரங்கள் முதலியவற்றை மறுக்காமல் ஏற்றுக்கொள்கிறார். முழுமுதற் கடவுளான அவர் எல்லாவற்றிலும் வியாபித்துள்ளார். அவரே வேள்விகளின் நாயகர் மற்றும் அனுபவிப்பாளர். அவரே உயர்ந்த ஆன்மீக குரு ஆவார்.

ஓர் ஆட்சியில் குடிமக்களும் தலைவரும் முழுமுதற் கடவுளுக்கு தொண்டு செய்வதன் வாயிலாக ஒருவருக்கொருவர் உதவுகின்றனர். இதனால் இருவருமே சமமாகப் பயனடைகின்றனர்.”

வைஷ்ணவ சேவை

பக்தியை எடுத்துரைத்த மன்னர் அதனைத் தொடர்ந்து வைஷ்ணவ சேவை குறித்து விளக்கினார்: அந்தணர்களும் வைஷ்ணவர்களும் பொறுமை, தவம், ஞானம், கல்வி முதலியவற்றின் தனிப்பட்ட பெருமை படைத்தவர்கள். இவ்வரிய ஆன்மீகச் சொத்துக்களைப் பெற்றிருப்பதால், அவர்கள் அரச குடும்பத்தைக் காட்டிலும் உயர்ந்தவர்கள். ஆகையினால், அரச குலத்தினர் இவ்விரு தரப்பினரிடமும் தமது பௌதிக வலிமையைக் காட்டவோ தவறிழைக்கவோ கூடாது. வைஷ்ணவர்களுக்கு எவ்வித ஒளிவு மறைவுமின்றி தொண்டு செய்வோரிடத்து பகவானும் பெருமகிழ்ச்சி அடைகிறார்.

அந்தணர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் தொடர்ந்து ஒருவன் தொண்டு செய்வதால், அவனது மனதிலுள்ள மாசு நீங்குகிறது. அதனால் அவன் இப்பௌதிக பந்தங்களிலிருந்து விடுதலை பெற்று உயர்ந்த அமைதியும் திருப்தியும் அடைகிறான். இத்தகைய வைஷ்ணவ சேவையைவிட உயர்ந்த பலன்தரும் செயல் இவ்வுலகில் எதுவுமில்லை. பகவானும் தமது பக்தர்களுடைய வாயின்

மூலமாக வரும் அர்ப்பணிப்புகளை ஏற்பதில்தான் அதிக மகிழ்ச்சியடைகிறார். அதாவது, வேள்விகளில் அக்னியின் மூலம் தமக்கு அர்ப்பணிக்கப்படும் நிவேதனத்தைவிட வைஷ்ணவர்களுக்கு உணவளிக்கப்பட்டு அவர்கள் திருப்தியடையும்போது, பகவான் அதிக திருப்தியடைகிறார்.

எனது வாழ்வின் இறுதி வரை அந்தணர் மற்றும் வைஷ்ணவர்களுடைய திருவடித் தாமரையின் தூசியினை எனது மணிமுடியின் மீது நான் சுமக்க வேண்டும் என்பதற்கு உங்களது மேலான ஆசிகளை யாசிக்கிறேன். என்மீது கருணை கொண்டு பகவானும் அவரது பக்தர்களும் அந்தணர்களும் திருப்தியடைய வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.”

முனிவர்களின் ஆசி

பிருது மன்னரின் மனங்கவரும் பேச்சைக் கேட்டு, கூடியிருந்த தேவர்கள், பித்ருலோகவாசிகள், அந்தணர்கள், தெய்வீக சாதுக்கள் என அனைவரும் அவரைப் பாராட்டி தங்கள் நல்லெண்ணத்தைத் தெரிவித்தனர். அவர்கள் அவரிடம் பின்வருமாறு பேசினர்: வீரர்களில் சிறந்தவரே, பூமியின் தந்தையே, இப்பிரபஞ்சத்தின் நாயகரும் குற்றமற்றவருமான முழுமுதற் கடவுளிடம் சிறந்த பக்தி வைத்துள்ளவரான நீங்கள் நீண்ட ஆயுளைப் பெறுவீராக! பகவானின் நற்கீர்த்தியினை நாள்தோறும் பிறருக்கு எடுத்துரைப்பதால் உமது புகழ் சிறப்புடனும் தூய்மையுடனும் விளங்குகிறது.

உமது தந்தை வேனன் உங்களால் இருண்ட நரக வாழ்விலிருந்து மீண்டு ஒளிமிக்க தேவலோகத்தை அடைந்துவிட்டார். பாவகரமான ஹிரண்யகசிபு, தன் மகன் பிரகலாதரின் அருளால் நரகத்திலிருந்து விடுதலை பெற்று முழுமுதற் கடவுளை அடைந்ததுபோலவே இதுவும் நிகழ்ந்துள்ளது.”

குடிமக்கள் கூறினர்: எமது மன்னரே, நீர் கருணையும், குடிமக்களின் நலனில் மிக்க அன்பும் அக்கறையும் கொண்டவர். நீர் தூய்மையான ஸத்வ நிலையில் இருப்பதால் முழுமுதற் கடவுளின் நிறைவான பிரதிநிதியாக விளங்குகிறீர். நீர் எமக்குத் தலைவராக வாய்க்கப் பெற்றது எமது நல்லதிர்ஷ்டம். பகவானின் நேரடியான பிரதிநிதியின் கீழ் வாழ்வதாக உணர்கிறோம்.

இன்று நீர் எங்கள் அகக் கண்களைத் திறந்துள்ளீர். இருளான உலகின் மறுகரையைஶீநித்திய ஆன்மீக உலகை அடையும் வழியைஶீஎமக்குக் காட்டி அருளினீர். இத்தகைய உன்னத பாதுகாப்பைத் தந்து இப்பிரபஞ்சத்தையே இரட்சிக்கிறீர். நீர் வாழ்க! உமது புகழ் என்றென்றும் ஓங்குக!”

இவ்வாறு பிருது மன்னரின் உயர்ந்த குணாதிசயத்தால் எல்லா லோகங்களும் எல்லா உயிர்வாழிகளும் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைந்தனர்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives