வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு என்பவர் யார்? இவரை பெரும்பாலானோர் உயர்ந்த பக்தராகவும் ஒரு சந்நியாசியாகவும் காண்கின்றனர். ஆனால் இவரை நெருக்கமாக அறிந்த உயர்ந்த பக்தர்களோ, சாக்ஷாத் முழுமுதற் கடவுள் கிருஷ்ணராக இவரை அறிகின்றனர். அதுமட்டுமின்றி, ஸ்ரீமதி ராதாராணியின் மனோபாவத்துடன் பக்த ரூபத்தில் தோன்றியவராகவும் அறிகின்றனர்.
சிலர் இதில் ஐயம் கொள்கின்றனர், ஏற்க மறுக்கின்றனர், பல்வேறு வினாக்களை எழுப்புகின்றனர். அவர்களுக்கான பதிலே இக்கட்டுரை.
சாஸ்திரத்தில் உள்ளதா?
ஸ்ரீ சைதன்யர் சாக்ஷாத் பகவான் என்று கூறுவதற்கான சான்று என்ன?
எல்லா சாஸ்திரங்களிலும் தலைசிறந்த ஸ்ரீமத் பாகவதத்தின் பதினொன்றாவது ஸ்கந்தத்தில் கலி யுகத்திற்கான தர்மத்தைப் பற்றிய விரிவான விளக்கம் காணப்படுகிறது. கலி யுகத்திற்கான தர்மம் ஹரி நாம ஸங்கீர்த்தனம் என்பதைத் தெளிவாக நிலைநாட்டிய பின்னர், ஸ்ரீமத் பாகவதத்தில் கலி யுகத்திற்கான அவதாரம்குறித்து பின்வருமாறு வர்ணிக்கப்பட்டுள்ளது:
க்ருஷ்ண-வர்ணம் த்விஷாக்ருஷ்ணம்
ஸாங்கோபாங்காஸ்த்ர-பார்ஷதம்
யஜ்ஞை: ஸங்கீர்தன-ப்ராயைர்
யஜந்தி ஹி ஸு-மேதஸ:
கலி யுகத்தில், கிருஷ்ணரின் நாமங்களை இடைவிடாமல் கீர்த்தனம் செய்யும் முழுமுதற் கடவுளின் அவதாரத்தை புத்திசாலி நபர்கள் ஸங்கீர்த்தனம் செய்து வழிபடுவர். அவரது மேனி கருமையாக இல்லாவிடினும் அவர் கிருஷ்ணரே. அவர் தமது சகாக்கள், சேவகர்கள், ஆயுதங்கள், மற்றும் இரகசிய துணைவர்களால் சூழப்பட்டவர்.”(ஸ்ரீமத் பாகவதம் 11.5.32)
மேலும், பகவான் கிருஷ்ணர் ஒவ்வொரு யுகத்திலும் வெவ்வேறு நிறத்தில் தோன்றுகிறார் என்றும், கலி யுகத்தில் அவர் பொன்னிறத்தில் தோன்றுகிறார் என்றும் ஸ்ரீமத் பாகவதம் (10.8.13) கூறுகிறது.
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு கிருஷ்ணரின் திருநாமங்களை இடைவிடாமல் உச்சரித்தார் என்பதும் எப்போதும் தமது சகாக்களால் சூழப்பட்டிருந்தார் என்பதும் அவரது மேனி கருமையாக இல்லாமல் பொன்னிறத்தில் இருந்தது என்பதும் அனைவரும் அறிந்த உண்மை. எனவே, இந்த ஸ்லோகங்கள் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவையே சுட்டிக் காட்டுகின்றன என்பதில் துளியும் ஐயமில்லை.
நேரடியாகக் கூறப்படவில்லையே?
மேலே கூறிய ஸ்லோகங்களில், கிருஷ்ணரின் அந்த ஸங்கீர்த்தன அவதாரம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவே என்று நேரடியாகக் கூறப்படவில்லை. அவ்வாறு இருக்கையில், நீங்கள்தான் அதற்கு இந்த விளக்கத்தைக் கொடுக்கிறீர்கள் என்று சிலர் வினவலாம்.
ஆம். நேரடியாக இல்லை என்றும் கூறலாம். ஏனெனில், மஹாபிரபுவின் அவதாரம் வெளிப்படையான ஒன்றல்ல, அவர் மறைக்கப்பட்ட அவதாரம் என்று கூறப்படுகிறார். ஸ்ரீமத் பாகவதத்தில் (7.9.38) பல்வேறு ரூபங்களில் தோன்றும் பகவானைப் பற்றிய விளக்கத்தை வழங்குகையில், பிரகலாதர் கூறுகிறார்: சன்ன: கலௌ யத் அபவஸ் த்ரி-யுக ஸ த்வம், கலி யுகத்தில் நீங்கள் சில சமயங்களில் மறைக்கப்பட்ட அவதாரமாகத் தோன்றுகிறீர். அதனால் த்ரி-யுக (மூன்று யுகங்களில் அவதரிப்பவர்) என்று அறியப்படுகின்றீர்.”
சன்ன: கலௌ என்னும் சொல், கலி யுகத்தில் பகவான் மறைக்கப்பட்ட அவதாரமாகத் தோன்றுவார் என்பதைத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது. இவ்வாறிருக்க, அவரைப் பற்றிய நேரடித் தகவல் இல்லை என்று குற்றம் சாட்ட முடியாது.
யாரை வேண்டுமானாலும் சொல்லிவிடலாமே?
நேரடியாகக் கொடுக்கப்படவில்லை என்றால், யாரை வேண்டுமானாலும் பகவானின் அவதாரமாகக் கூறி விட முடியுமே?
உண்மையே. இவ்வுலகில் மனசாட்சியற்ற பல்வேறு நபர்கள் அவ்வாறே தங்களைக் கடவுள் என்றும் கலி யுக அவதாரம் என்றும் அழைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றுகின்றனர். ஆனால், அவர்களை ஸ்ரீ சைதன்யருடன் எள் அளவும் ஒப்பிட இயலாது.
திறந்த மனதுடன் ஸ்ரீ சைதன்யரின் செயல்களையும் சாஸ்திரக் கூற்றுகளையும் அணுகினால் மட்டுமே இதற்கு விடை காண முடியும். ஸ்ரீ சைதன்யரின் செயல்கள் அவரை பரம புருஷ பகவானாகத் தெளிவாக நிலைநாட்டுகின்றன. எந்தவொரு மனிதனாலும் செய்யவியலாத பல அற்புதங்களை அவர் தம் வாழ்வில் நிகழ்த்தியுள்ளார். இறந்த மனிதனை உயிர்ப்பித்தல், விஸ்வரூப தரிசனம், யாராலும் கற்பனை செய்யவியலாத பாண்டித்துவம், அவ்வப்போது பல அதிசயங்கள் என அவரது வாழ்வில் பல அற்புதங்கள் நிறைந்துள்ளன.
அற்புதங்கள் ஒருபுறம் இருந்தாலும், யாராலும் சாஸ்திரக் கூற்றிற்கு மறுப்பு சொல்ல முடியாது. சாஸ்திரங்கள் கலி யுகத்தில் பகவான் மறைமுகமாகத் தோன்றுகிறார் என்றும் ஸங்கீர்த்தனம் புரிகிறார் என்றும் தெளிவாகக் கூறுகின்றன. இந்தக் கூற்றுகளும் இவை சார்ந்த இதர பல ஸ்லோகங்களும் சைதன்யருக்கு முற்றிலுமாகப் பொருந்துகின்றன.
இவை சைதன்யரைக் குறிக்கவில்லை என்று யாரேனும் கூறினால், வேறு யாரைக் குறிக்கின்றன என்பதையும் அவர் தெளிவுபடுத்த வேண்டும். நிச்சயம் இக்கூற்றுகள் வேறு எவருக்கும் பொருந்தாதவை. சில துளிகள் வேண்டுமானால் வெவ்வேறு நபர்களுக்குப் பொருத்தமானதாக இருக்கலாம். ஆனால் அனைத்து அறிகுறிகளும் பொருந்தியவர் மஹாபிரபுவைத் தவிர வேறு எவரும் இலர். மேலும், அந்த அறிகுறிகள் எந்த அளவு ஆழமாக மஹாபிரபுவிடம் வெளிப்பட்டன என்பதைப் பார்த்தால், அவருக்கு அருகில் எவராலும் துளியளவுகூட வரவியலாது.
இவை மட்டுமின்றி, மஹாபிரபுவின் பரவச உணர்ச்சிகள் வரலாற்றில் வேறு எங்கும் கேட்கப்படாதவை. அந்த உணர்ச்சிகளை சாதாரண மன உணர்ச்சிகளாக எடுத்துக்கொள்ளவியலாது. சைதன்ய மஹாபிரபுவின் காலத்தில் வட இந்தியாவில் வாழ்ந்த எல்லா பண்டிதர்களும் அவரால் வசீகரிக்கப்பட்டனர் என்பதையும் அவரை முழுமுதற் கடவுளாக ஏற்றனர் என்பதையும் நாம் காண்கிறோம். அந்த ஆச்சாரியர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல, பாண்டித்துவத்தில் மாமேதைகளாகத் திகழ்ந்தவர்கள் அவர்கள்.
எனவே, யாரை வேண்டுமானாலும் சொல்லலாம் என்பதில் அர்த்தமில்லை.
கலி யுகத்திற்கு அவதாரம் கிடையாதே?
ஸ்ரீமத் பாகவதத்தின் கூற்றிற்கு விளக்கமளிக்க முடியாத பட்சத்தில், ஒரு சிலர், சன்ன: கலௌ யத் அபவஸ் த்ரி-யுக ஸ த்வம், என்று யாம் மேற்கோள் காட்டிய ஸ்லோகத்தில் இருக்கும் த்ரி-யுக என்னும் சொல்லைக் கொண்டு, கலி யுகத்தில் பகவான் அவதரிக்கவே மாட்டார்” என்று கருத்துரைக்கின்றனர். த்ரி-யுக என்றால், மூன்று யுகங்களில் தோன்றுபவர்” என்று பொருள். உண்மையே. ஆயினும், கலி யுகத்தில் மறைக்கப்பட்ட ரூபத்தில் தோன்றுவதாலேயே அவர் அவ்வாறு அழைக்கப்படுகிறார். சன்ன: கலௌ என்னும் வரிகள் இதனைத் தெளிவாகத் தெரிவிக்கின்றன.
மேலும், கீதையில் கிருஷ்ணர், தர்ம-ஸம்ஸ்தாபனார்தாய ஸம்பவாமி யுகே யுகே என்று கூறுகிறார். கலி யுகத்தில் அவதாரம் கிடையாது என்றால், கீதையில் கிருஷ்ணர் தாம் யுகந்தோறும் தோன்றுவதாகக் கூறுவது பொய்யாகி விடுமே? தர்மத்தை நிலைநாட்டுதல் என்றால் என்ன? கலி யுக தர்மம் நாம ஸங்கீர்த்தனம் என்று சாஸ்திரங்கள் எல்லா இடங்களிலும் சுட்டிக் காட்டுகின்றன. ஒவ்வொரு யுகத்திலும் அந்த யுகத்திற்கான தர்மத்தை நிலைநாட்ட பகவான் வருகிறார் என்பதை நாம் கீதையிலும் பாகவதத்திலும் இதர சாஸ்திரங்களிலும் காண்கிறோம். எனவே, கலி யுக தர்மமான ஹரி நாம ஸங்கீர்த்தனத்தை நிலைநாட்ட அவதரித்தவர் ஸ்ரீ சைதன்யர் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
வேறு சாஸ்திரங்களில் இல்லையே?
வேறு சாஸ்திரங்களில் இல்லை என்று சிலர் கூறுகின்றனர்.
எதை வைத்து இல்லை” என்று சொல்ல முடியும்? ஸ்ரீமத் பாகவதமே எல்லா சாஸ்திரங்களிலும் முக்கிய பிரமாணம் என்பதால், கௌடீய வைஷ்ணவர்கள் இந்த பிரமாணத்தை பிரதானமாக வைக்கின்றனர். இருப்பினும், மஹாபிரபுவைப் பற்றிய தகவல்கள் பல்வேறு சாஸ்திரங்களில் மறைமுகமாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
ஸ்வர்ண வர்ண ஹேமாங்கோ வராங்கஸ் சந்தனாங்கதி, அழகான பொன்னிற திருமேனியில் பகவான் தோன்றுகிறார்,” என்று மஹாபாரதம் (13.135.92) ஸ்ரீ சைதன்யரை விளக்குகிறது. மேலும், ஸன்யாஸ க்ருச்சம: ஸாந்தோ நிஷ்ட ஷாந்தி-பராயண:, அவர் சந்நியாசம் ஏற்று சாந்தமாக, ஸ்திரமாக, பக்தரல்லாதவர்களை அமைதியாக்குபவராக விளங்குவார்,” என்றும் மஹாபாரதம் (13.135.75) கூறுகிறது. நாரத பஞ்சராத்ரத்தின் பால-கிருஷ்ண ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்திலும் (106, 107, 145) மஹாபிரபுவைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
மேலும், பத்ம புராணம், வாயு புராணம், கர்க ஸம்ஹிதை, வராஹ புராணம், நரசிம்ம புராணம், மார்கண்டேய புராணம், கருட புராணம், பவிஷ்ய புராணம், அக்னி புராணம் முதலிய பல்வேறு புராணங்களில் சைதன்யரைப் பற்றிய குறிப்புகளைக் காண்கிறோம்.
இருப்பினும், முன்னரே கூறியபடி, ஸ்ரீமத் பாகவதத்தின் கூற்றினையே கௌடீய வைஷ்ணவர்கள் முக்கிய பிரமாணமாக முன்வைக்கின்றனர்.
ஆச்சாரியர்கள் கூறவில்லையே?
சிலர், சைதன்ய மஹாபிரபுவைப் பற்றிய பூர்விக ஆச்சாரியர்கள் கூறவில்லை என்றும், அதனால் அவரை ஏற்க முடியாது என்றும் கூறுகின்றனர்.
சைதன்ய மஹாபிரபுவின் அவதாரம் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. இராமானுஜாசாரியர், மத்வாசாரியர், நிம்பார்கர், விஷ்ணு ஸ்வாமி முதலிய மாபெரும் ஸம்பிரதாய ஆச்சாரியர்கள் அனைவரும் அவருக்கு முன்பாகத் தோன்றியவர்கள். ஸ்ரீ வைஷ்ணவ ஸம்பிரதாயத்தில் இராமானுஜருக்குப் பிற்காலத்தில் தோன்றிய தேசிகர், மணவாள மாமுனிகள் ஆகியோரும்கூட சைதன்யருக்கு முன்னரே தோன்றியவர்கள். அவ்வாறிருக்க, அந்த ஆச்சாரியர்கள் கூறவில்லையே என்று சொல்வதில் அர்த்தமில்லை.
இருப்பினும், ஒரு விதத்தில் பார்த்தால், இந்த மாபெரும் ஆச்சாரியர்களுக்கு பகவானுடைய அவதார வரவு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஆயினும், அதே நேரத்தில் ஸ்ரீ சைதன்யரின் அவதார நோக்கம் ஒரு பக்தராக வாழ்ந்து பக்தியைக் கற்றுக் கொடுத்தல்” என்பதாலும் அவர் மறைக்கப்பட்ட அவதாரமாகவே தோன்றுவார் என்பதாலும், இந்த மாபெரும் ஆச்சாரியர்களுக்கு பகவானின் வருகையைப் பற்றிய தகவல் தெரிந்திருந்தால்கூட, பகவானின் விருப்பத்திற்கு இணக்கமாக இருத்தல் என்னும் காரணத்திற்காக, அவர்கள் இதனை வெளிப்படையாகத் தெரிவிக்காமல் இருந்திருக்கலாம்.
இணைந்த அவதாரம் என்றால் என்ன?
ஸ்ரீ சைதன்யரை ராதையும் கிருஷ்ணரும் இணைந்த அவதாரம் என்று கூறுகிறோம். இணைந்த அவதாரம்” என்றால் என்ன?
ஸ்ரீ சைதன்யர் சாக்ஷாத் கிருஷ்ணர், அதே சமயத்தில் அவர் ராதையின் மனோபாவத்துடன் தோன்றினார். இதனால் அவர் ராதையும் கிருஷ்ணரும் இணைந்த அவதாரம் என்று அறியப்படுகிறார். ராதை பகவானின் சக்தியாவாள். அந்த சக்திக்கும் சக்தியின் எஜமானருக்கும் பெரிய வேற்றுமை கிடையாது. இருப்பினும், அந்த சக்தியின் எஜமானரும் சக்தியும் நிரந்தரமாக தனித்து வாழ்கின்றனர். இவ்வாறிருக்க, ஸ்ரீ சைதன்யரின் அவதாரத்தில், சக்தியின் எஜமானரான அவர் தமது சக்தியின் மனோபாவத்தைத் தாங்கி அவதரித்தார்.
வேறு விதமாகக் கூறினால், எப்போதும் சேவையைப் பெறக்கூடிய தளத்திலேயே செயல்படும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அந்த சேவையைப் புரிபவர்கள் அடையக்கூடிய இன்பம் என்ன என்பதை அறிவதற்காக ஸ்ரீ சைதன்யராக வந்தார். கிருஷ்ணருக்கு சேவை புரிபவர்களில் தலைசிறந்து விளங்குபவள் ராதை என்பதால், அந்த ராதையின் மனோபாவத்துடன் ஸ்ரீ சைதன்யர் தோன்றினார்.
எவ்வாறு அறிவது?
ஸ்ரீ சைதன்யரைப் பற்றிய தெளிவான விளக்கங்களை வழங்கினால்கூட, அவரை அறிதல் அவ்வளவு எளிதல்ல. எவருக்கு ஸ்ரீ சைதன்யரின் கருணை வழங்கப்பட்டுள்ளதோ அந்த நபரால் மட்டுமே அவரைப் புரிந்துகொள்ள முடியும். ஏட்டுக் கல்வி, வேத பாண்டித்துவம், வார்த்தை ஜாலங்கள் என எந்த வழிமுறையும் அவரது கருணை இல்லாவிடில் பயன் தராது.
யாரெல்லாம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை புருஷோத்தமரான முழுமுதற் கடவுளாக ஏற்று, அவரது திருநாமத்தை ஸ்ரீ-க்ருஷ்ண-சைதன்ய ப்ரபு-நித்யானந்த ஸ்ரீ-அத்வைத கதாதர ஸ்ரீவாஸாதி-கௌர-பக்த-வ்ருந்த, என்று அவரது சகாக்களுடன் இணைத்து உச்சரித்து, அதனுடன் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை (ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே) உச்சரிக்கின்றார்களோ, அவர்கள் பகவான் சைதன்யரின் கருணையைப் பெற்று இறைவனிடம் திரும்பிச் செல்வதற்கான தங்களது பாதையில் விரைவாக முன்னேறுவர்.
பகவான் சைதன்யரின் கருணை எனும் வெள்ளம் இப்பிரபஞ்சத்தின் ஒவ்வொரு நகரம், கிராமம், வீடு மற்றும் இதயத்தை மூழ்கடிக்கட்டும்! கருணை வழங்குவதில் தலைசிறந்த பகவான் கௌராங்கரின் புகழ் திக்கெட்டும் பரவட்டும்! உலக மக்கள் அவரது தெய்வீக நாமத்தை உச்சரித்து மகிழ்ச்சியடையட்டும்! மஹாபிரபுவின் பெருமைகள் அவர் தோன்றிய காலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது, ஆனால் தற்போது அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு, அப்பெருமைகள் புவியெங்கும் பரப்பப்பட வேண்டும். கிருஷ்ணர் எவ்வாறு உலகமெங்கும் நன்கு அறியப்பட்டுள்ளாரோ, அதுபோலவே அவரது மிக கருணை வாய்ந்த அவதாரமான ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் அனைவராலும் அறியப்பட்டு பூஜிக்கப்பட வேண்டும்.
(ஸ்ரீ சைதன்யரை எவ்வாறு பரம புருஷ பகவானாக அறிவது என்பதுகுறித்த மேலும் விவரங்களை அறிய, ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம், ஆதி லீலையின் அத்தியாயம் 2, 3, 4 ஆகியவற்றைப் படிக்கவும்.)