வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
ப்ரத்யக்ஷாவகமம் தர்ம்யம் ஸு–ஸுகம் கர்தும் அவ்யயம் “இந்த அறிவு, கல்வியின் அரசனும், எல்லா இரகசியங்களிலும் மிக இரகசியமானதும், மிகத் தூய்மையானதுமாகும். தன்னுணர்வின் அனுபவத்தை நேரடியாக அளிப்பதால், இதுவே தர்மத்தின் பக்குவநிலையாகும். இஃது அழிவற்றதும் பேரின்பத்துடன் செயலாற்றப்படுவதும் ஆகும்.” (பகவத் கீதை 9.2)
மகிழ்ச்சியான கிருஷ்ண பக்தி
கிருஷ்ண பக்தியின் வழிமுறை, ஸுஸுகம், அதாவது, பயில்வதற்கு மிகவும் இன்பமானது, எளிதானது என்று கிருஷ்ணர் இங்கே தெளிவாகக் கூறியிருக்கிறார். உண்மையில் பக்தி முறை மிகவும் இன்பமானதாகும். இசைக் கருவிகளுடன் நாங்கள் இனிமையாகப்பாட, பிறர் அதனைக் கேட்டு சேர்ந்து பாடுகிறார்கள். இந்த இசையானது பரம புருஷரான பகவானுடன் தொடர்புடையதாகவும் அவரைப் புகழ்வதாகவுமே இருக்க வேண்டும். பகவத் கீதையைக் கேட்பதும் பக்தித் தொண்டின் ஓர் அங்கமே. கேட்பதோடு மட்டுமின்றி இதனைத் தன் வாழ்வில் கடைப்பிடிக்கவும் ஒருவன் ஆவலுடையவனாக இருக்க வேண்டும். கிருஷ்ண உணர்வு ஒரு விஞ்ஞானமாகும். எனவே, கண்மூடித்தனமாக இஃது ஏற்றுக் கொள்ளப்படக் கூடாது. (கேட்டல், பாடுதல், நினைத்தல், வழிபடுதல், வேண்டுதல், தொண்டு செய்தல், நட்புறவு கொள்ளுதல், சேவகனாக நடத்தல், எல்லாவற்றையும் இறைவனுக்கே சமர்ப்பித்தல் என) ஒன்பது விதமான பக்தித் தொண்டுகள் சிபாரிசு செய்யப்படுகின்றன. இவையெல்லாமே பயில்வதற்கு எளிதானவையும் இன்பமாகச் செய்யப்பட வேண்டியவையுமே ஆகும்.
பகவத் கீதையும் ஹரே கிருஷ்ண மந்திரமும் இந்து மதத்தின் ஒரு பிரிவு என்றும் இவ்வழிமுறையை ஏற்கக் கூடாது என்றும் எண்ணுபவர்கள், கிருஸ்துவ மத தேவாலயங்களுக்கு சென்று அங்கேயும் பாடலாம். இம்முறைக்கும் அம்முறைக்கும் எந்த வேறுபாடுமில்லை. எந்த முறையைப் பின்பற்றினாலும் கடவுள் உணர்வுடையவனாக ஒருவன் ஆக வேண்டும் என்பதே நோக்கம். கடவுள் முஸ்லிம் அல்ல, கிருஸ்துவர் அல்ல, இந்துவும் அல்ல; அவர் கடவுள். நாமும் இந்து, முஸ்லிம், கிருஸ்துவர் என்று கருதப்பட வேண்டியவரல்லர். இவையெல்லாம் உடல் சார்ந்த அடையாளங்களே. கடவுளின் அங்க உறுப்புகளான நாமெல்லோரும் தூய ஆத்மாக்களே. கடவுள் தூய்மையானவர் (பவித்ரம்) என்பதால், நாமும் தூய்மையானவர்களே. எவ்வாறோ இந்த ஜட சமுத்திரத்தில் விழுந்துவிட்ட நாம், அலைகள் மோதும்போது துன்பமடைகிறோம். உண்மையில் அடிக்கும் ஜட அலைகளுக்கும் நமக்கும் எந்த தொடர்பும் இல்லை. “கிருஷ்ணரே, தயவுசெய்து என்னை மீட்பீராக,” என்று நாம் வேண்டினால் போதும். ஆனால் நாம் கிருஷ்ணரை மறக்கும்போது, மாயையின் பெருங்கடல் உடனடியாக நம்மைச் சூழ்ந்து கொள்கிறது.
கேட்டல் பார்த்தலை விட குறைந்தது அல்ல
இக்கடலிலிருந்து தப்பிக்க ஹரே கிருஷ்ண உச்சாடனம் மிகவும் இன்றியமையாததாகும். ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் சப்தம் கிருஷ்ணரிலிருந்து வேறுபடாததாகும். சப்த கிருஷ்ணரும் மூல கிருஷ்ணரும் ஒருவரே. ஹரே கிருஷ்ண கீர்த்தனம் செய்து நாம் நடனமாடுகையில் கிருஷ்ணரும் நம்முடன் நடனமாடுகிறார். “நான் அவரைக் காணவில்லையே,” என்று நாம் கூறலாம். ஆனால், நாம் ஏன் காண்பதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? கேட்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாதா? பார்த்தல், கேட்டல், சுவைத்தல், முகர்தல், தொடுதல் என இவையெல்லாமே அனுபவத்தையும் அறிவையும் பெறுவதற்கான கருவிகள். அவ்வாறு இருக்கையில், பார்ப்பதற்கு மட்டும் ஏன் நாம் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? பக்தன் கிருஷ்ணரைக் காண வேண்டுமென்று விரும்புவதில்லை; அவன் அவரைப் பற்றிக் கேட்பதிலேயே திருப்தியடைகிறான். பார்த்தல் என்பதும் நாளடைவில் ஏற்படலாம்; இருப்பினும், கேட்டல் என்பதை குறைத்து மதிப்பிடக் கூடாது. பலவற்றை நம்மால் பார்க்க முடியவில்லை, ஆனால் கேட்கிறோம்–வீசும் காற்று நமது காதுகளில் ஒலித்துக் கொண்டு செல்லலாம். அதனை நம்மால் கேட்க முடியும், ஆனால் காற்றைக் காண்பது சாத்தியமல்ல. கேட்பதால் ஏற்படும் அறிவு காண்பதால் ஏற்படுவதைக் காட்டிலும் எவ்விதத்திலும் குறைந்தது அல்ல என்பதால், கிருஷ்ணரை நாம் கேட்க முடியும், ஒலி மூலமாக அவரது இருப்பை உணர முடியும். “நான் எனது இருப்பிடத்தில் இல்லை, தியானம் செய்யும் யோகியின் இதயத்திலும் இல்லை. ஆனால் எங்கே எனது தூய பக்தர்கள் பாடுகிறார்களோ அங்கே நான் இருக்கின்றேன்,” என்று ஸ்ரீ கிருஷ்ணரே கூறுகிறார். நம்மில் உண்மையான முன்னேற்றம் ஏற்படும்போது, நம்மால் கிருஷ்ணரின் இருப்பை உணர முடியும்.
கிருஷ்ணருக்குக் கொடுப்போம்
ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு, அவருக்கு எதையும் சமர்ப்பிக்காமலிருப்பது சரியல்ல. ஒவ்வொருவரும் இறைவனிடமிருந்து எதையேனும் பெறுகின்றனர். ஏன் ஏதாவது கொடுக்கக் கூடாது? ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து ஒளி, காற்று, உணவு, நீர் என பற்பலவற்றை நாம் பெறுகிறோம். ஸ்ரீ கிருஷ்ணரால் இத்தேவைகள் தரப்படாவிடில் யாராலும் வாழ முடியாது. மீண்டும்மீண்டும், பெற்றுக் கொண்டேயிருந்து, பதிலுக்கு எதையும் கொடுக்காமல் இருப்பது அன்பா? அன்பு என்றால் கொடுப்பது, வாங்குவது என இரண்டும் வேண்டும். ஒருவரிடமிருந்து வாங்கிக் கொண்டே இருந்து பதிலுக்கு எதுவுமே கொடுக்காமலிருப்பது அன்பல்ல. அதற்குச் சுரண்டல் என்று பெயர். ஸ்ரீ கிருஷ்ணருக்கு எதையும் சமர்ப்பிக்காமல், நாம் மட்டுமே உண்டு கொண்டு இருப்பது சரியல்ல.
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி
தத் அஹம் பக்த்யுபஹ்ருதம் அஷ்னாமி ப்ரயதாத்மன:
யத் கரோஷி யத் அஷ்னாஸி யஜ் ஜுஹோஷி ததாஸி யத்
யத் தபஸ்யஸி கௌந்தேய தத் குருஷ்வ மத்–அர்பணம்
“அன்புடனும் பக்தியுடனும் ஒருவன் எனக்கு இலையோ, பூவோ, பழமோ, நீரோ அளித்தால் அதனை நான் ஏற்கின்றேன். குந்தியின் மகனே, எதையெல்லாம் நீ செய்கின்றாயோ, எதையெல்லாம் நீ உண்கின்றாயோ, எதையெல்லாம் நீ படைக்கின்றாயோ, எதையெல்லாம் நீ கொடுக்கின்றாயோ, எந்த தவங்களையெல்லாம் நீ செய்கின்றாயோ, அதனை எனக்கு அர்ப்பணமாகச் செய்வாயாக.”
நமது பிரச்சனைகளை கிருஷ்ணரிடம் ஒப்படைப்போம்
பெறுதல், அளித்தல் போன்றவற்றிற்கு மேலாக, பக்தித் தொண்டாற்றுகையில் ஒருவன் தனக்குள்ள அந்தரங்கமான பிரச்சனைகளையும் துன்பங்களையும் ஸ்ரீ கிருஷ்ணரிடம் ஒப்படைக்க வேண்டும். “கிருஷ்ணரே, நான் இவ்விதமாகக் கஷ்டப்படுகின்றேன். அலைமோதும் இந்த ஜட மயக்கக் கடலில் நான் விழுந்து விட்டேன். அன்புடன் என்னைக் காப்பீராக. இந்த ஜடவுலகுடன் எனக்கு எந்த தொடர்புமில்லை என்பதை இப்போது அறிந்து கொண்டேன். அட்லாண்டிக் பெருங்கடலில் எறியப்பட்டதுபோல நான் இங்கே சிக்கிக் கொண்டுள்ளேன். இந்த அட்லாண்டிக் கடலுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்றபோதிலும், இப்பெருங்கடலின் அலைமோதலுக்கு நான் உட்பட்டிருக்கிறேன். உண்மையில் நான் தங்களின் சின்னஞ்சிறு அங்கமான ஆன்மீகப் பொறியே,” என்று அவன் கூற வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, நாம் நம்மை இந்த கடலுடன் அடையாளப்படுத்துவதால், அலைகளின் மோதலை நிறுத்த விரும்புகின்றோம். ஆனால் அலைகளை நிறுத்த நாம் முயலக் கூடாது, அது சாத்தியமல்ல. இயற்கையின் நியதி அதுவே என்பதால், அலைகளின் மோதல் இருந்து கொண்டேயிருக்கும். முட்டாள்கள் மட்டுமே அவற்றினை சரி செய்ய முயற்சி செய்வர்; இதிலிருந்து எவ்வாறு வெளியேறுவது என்பதே முக்கிய பிரச்சனை. இவ்வுலகினை சரி செய்ய முயற்சி செய்து, ஸ்ரீ கிருஷ்ணரிடம் திரும்பாதவர்கள், பிறப்பு இறப்புக் கடலின் மறுபிறவிகளுக்கு தொடர்ந்து உட்பட வேண்டியவர்களாகின்றனர்.
அஷ்ரத்ததானா: புருஷா தர்மஸ்யாஸ்ய பரந்தப
அப்ராப்ய மாம் நிவர்தந்தே ம்ருத்யு–ஸம்ஸார–வர்த்மனி
“எதிரிகளை வெல்வோனே, இந்த பக்தித் தொண்டில் நம்பிக்கையற்றவர்கள் என்னை அடைய முடியாது. எனவே, அவர்கள் இந்த பௌதிக உலகின் பிறப்பு இறப்பு பாதைக்கே திரும்பி வருகின்றனர். (பகவத் கீதை 9.3)
மதத்தை மனிதனால் உருவாக்க முடியாது
மதம் என்பதற்கான அடிப்படை விளக்கம், இறைவனுடன் நம்மை இணைத்தல் என்பதேயாகும். அதனால் நம்மை இறைவனுடன் இணைக்க இயலாவிடில், அது மதமல்ல. மதம் என்றால் இறைவனைத் தேடுதல், இறைவனை அறிதல், மற்றும் அவருடன் நமது உறவை நிலைநாட்டுதல். இதுவே மதம். பக்தித் தொண்டில் ஈடுபடுபவர்கள் ஸ்ரீ கிருஷ்ணர் அல்லது கடவுளுக்காகச் செயலாற்றுவதால், அவர்கள் கடவுளுடன் தொடர்பு கொள்கின்றனர். இதனால் கிருஷ்ண உணர்வும் ஒரு மதமாகிறது.
மதத்தை யாரும் தயாரிக்க முடியாது. உண்மையான மதம் அதிகாரம் பொருந்திய மூலத்திடமிருந்து வர வேண்டும். இறைவன், அல்லது அவரது பிரதிநிதியே அந்த மூலமாக இருக்க முடியும். மதம் என்பது கடவுளின் சட்டம் என்று அழைக்கப்படுகின்றது. தனிமனிதனால் நாட்டின் சட்டங்களை உருவாக்க முடியாது. சட்டம் என்பது ஏற்கனவே உள்ளது, அஃது அரசாங்கத்தால் அளிக்கப்பட்டது. ஒருவன் தன்னுடைய சொந்த நிறுவனத்திற்காக சில சட்டதிட்டங்களை உருவாக்கலாம்; ஆயினும், அச்சட்டங்கள் நாட்டின் சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அதுபோலவே, மதக் கொள்கைகள் சிலவற்றை நாம் உண்டாக்க விரும்பினாலும், அவை வேதங்களினால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
பகவத் கீதையும் மதமே. இராமானுஜாசாரியர், மத்வாசாரியர், விஷ்ணு ஸ்வாமி, பகவான் சைதன்யர், சங்கராசாரியர் மற்றும் பற்பல பெரும் அதிகாரிகள் பகவத் கீதையை மதத்தின் மிகவுயர்ந்த கொள்கையாகவும் ஸ்ரீ கிருஷ்ணரை புருஷோத்தமரான முழுமுதற் கடவுளாகவும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதில் ஐயமேதுமில்லை. மேற்கத்திய நாடுகளிலும்கூட பகவத் கீதை சிறந்த தத்துவஞானப் புத்தகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பற்பல பேரறிஞர்களும் தத்துவஞானிகளும் இதைப் படித்து கருத்துரைகள் தந்துள்ளனர். அறிஞர்களாலும் ஆச்சாரியர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தும்கூட பகவத் கீதையை ஏற்காதவர்களும் இருக்கின்றனர், அவர்களிடம் நம்பிக்கை இல்லை. கீதையை பூரண அதிகாரம் கொண்ட நூலாக அவர்கள் ஏற்பதில்லை; ஏனெனில், கிருஷ்ணர் என்று அறியப்படும் ஒரு மனிதனால் மிகைப்படுத்தப்பட்ட ஓர் உணர்ச்சி வெளிப்பாடுதான் பகவத் கீதை என அவர்கள் எண்ணுகின்றனர்.
கிருஷ்ணரை மறுப்போர் பிறப்பு இறப்பில் தொடர்வர்
இவ்வாறாக, மேற்குறிப்பிட்ட ஸ்லோகத்தில் பகவத் கீதையின் (9.3) அதிகார நிலையை மறுப்போர் தம்முடன் எவ்விதத் தொடர்பும் கொள்ள இயலார் என்றும், அவருடன் உறவில்லாத காரணத்தினால் அவர்கள் பிறப்பு இறப்புச் சுழலிலேயே தங்கிவிடுவர் என்றும் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகின்றார். அப்ராப்ய மாம் நிவர்தந்தே ம்ருத்யு–ஸம்ஸார–வர்த்மனி. ஸம்ஸாரம் எனும் பிறப்பு இறப்புச் சுழலுக்கு உட்பட்டவன், மறு பிறவியில் பகவத் கீதையைப் புரிந்துகொள்வதற்கான மறுவாய்ப்பைப் பெறுவான் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. அடுத்த பிறவியில் அவன் மீண்டும் மனிதனாக பிறப்பான் என்பதற்கு உத்திரவாதம் இல்லை, அமெரிக்காவில் பிறப்பானா, இந்தியாவில் பிறப்பானா, ஏன் இந்த கிரகத்திலே கூட பிறப்பானா என்பதற்கு எந்தவொரு நிச்சயமும் இல்லை. அது நம் ஒவ்வொருவரின் செயல்களைப் பொறுத்ததாகும். நாம் ஒவ்வொருவரும் பிறக்கின்றோம், சில காலம் இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றோம், பின் இவ்வுடலை நீத்து மீண்டும் தாயின் வயிற்றில் புகுகின்றோம், மனிதனாகவோ மிருகமாகவோ வெளிவருவதற்காக உகந்த ஓர் உடலை தயார் செய்து கொண்டு மீண்டும் நமது செயல்களைத் துவங்குகிறோம்–இதுவே பிறப்பு இறப்புச் சுழற்சி எனப்படுகிறது. இதையே இங்கே ம்ருத்யு ஸம்ஸார வர்த்மனி என்று கிருஷ்ணர் கூறுகிறார். இந்த சுழற்சியை விட்டு விடுதலை பெற ஒருவன் விரும்பினால், அவன் கிருஷ்ண உணர்வை ஏற்க வேண்டும்.
நம்மை மரணத்திற்கு தயார் செய்வோம்
“உலகிலேயே மிக வினோதமானது என்ன?” என யுதிஷ்டிர மகாராஜரிடம் கேட்கப்பட்டபோது, “ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் மக்கள் இறந்து கொண்டுள்ளபோதிலும், தனக்கு மரணம் வராது என ஒவ்வொருவனும் எண்ணுவதே உலகில் மிகவும் வினோதமானதாகும்,” என்று அவர் பதிலளித்தார். ஒவ்வொரு நிமிடமும் உயிர்வாழிகள் மரணதேவனின் இடத்திற்குச் செல்வதை நாம் காண்கிறோம். மனிதர்கள், பிராணிகள், புழுக்கள், மிருகங்கள், பறவைகள் என ஒவ்வொருவரும் செல்கின்றனர். எனவே, இவ்வுலகம் ம்ருத்யுலோகம் அல்லது மரண கிரகம் என்றழைக்கப்படுகின்றது. ஒவ்வொரு நாளும் மரணங்கள் நிகழ்கின்றன. சுடுகாட்டிற்கோ இடுகாட்டிற்கோ சென்றால் நாம் இதனைக் கண்கூடாகக் காணலாம். இருப்பினும், “நான் எவ்வாறேனும் வாழ்வேன்,” என்று ஒவ்வொருவரும் எண்ணிக் கொண்டுள்ளனர். மரணச் சட்டங்களுக்கு ஒவ்வொருவரும் உட்பட்டுள்ளபோதிலும், யாருமே இதைப் பற்றிக் கவனமாக யோசித்துப் பார்ப்பதில்லை. இதுவே மாயை. என்றும் வாழ்வோம் எனும் எண்ணத்தில், விரும்பியவற்றையெல்லாம் செய்துகொண்டே போகும் நாம், இவற்றிற்கெல்லாம் பொறுப்பாளியாக வேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணிக் கொண்டுள்ளோம். இத்தகைய வாழ்க்கை மிகவும் அபாயகரமானதாகும், மயக்கத்தின் ஆழமான பகுதி இதுவே.
எனவே, நாம் மிகவும் தீவிரமானவர்களாக ஆகி, மரணம் நமக்காக காத்துக் கொண்டிருக்கின்றது என்பதை உணர வேண்டும். “மரணம் போல நிச்சயமானது” எனும் பழமொழியை நாம் கேட்டிருக்கிறோம். இவ்வுலகில் மிகவும் நிச்சயமானது மரணமே என்பது இதன் பொருள், இதனை யாராலும் புறக்கணிக்க முடியாது. மரணம் வரும்போது தலைக்கனமிக்க நமது தத்துவங்களும் மேற்படிப்புப் பட்டங்களும் நமக்கு உதவாது. வாட்ட சாட்டமான உடல், எதற்கும் கவலைப்படாத நமது அறிவு என எல்லாமே அழிக்கப்படுகின்றன. அச்சமயத்தில் சின்னஞ்சிறு அங்கமான ஜீவாத்மா, ஜட இயற்கையின் ஆளுகைக்குக் கீழே வருகிறான், அந்த பிரக்ருதி (இயற்கை)யானது அவனது தகுதிக்கேற்ற மறுவுடலை வழங்குகிறது. பிறப்பு, இறப்பு என்னும் தொடர் அபாயத்தை நீங்கள் ஏற்க விரும்பினால், கிருஷ்ணரைப் புறக்கணிக்கலாம். அதனை ஏற்க நாம் விரும்பாவிடில், கிருஷ்ணரே நமக்கு உதவ வருவார்.