அறிவை வழங்கும் சமயக் கல்வி

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

The Star என்ற பத்திரிகையின் பெண் நிருபரான கேத்தி கெர், ஸ்ரீல பிரபுபாதரை பேட்டியெடுக்க, பிரபுபாதர் கிருஷ்ண பக்தி இயக்கம் மக்களிடையே அறிவுபூர்வமான சமயக் கோட்பாடுகளை எவ்வாறு போதித்து வருகின்றது என்பதை விளக்குகிறார்.

கேத்தி கெர்: உங்களது இயக்கம் இந்து சமயத்தின் விரிவாக்கமா? அல்லது இந்து சமயத்தின் கொள்கைகளை உள்ளடக்கிய ஒன்றா?

ஸ்ரீல பிரபுபாதர்: வேத இலக்கியங்களில் இந்து சமயம் எனும் வார்த்தையே கிடையாது. சமயம் என்பது ஒருவகையான நம்பிக்கையல்ல. தர்மம் (அல்லது சமயம்) என்பது உயிர்வாழியின் நித்திய இயற்கை. இதனை இரசாயனக் கலவையுடன் ஒப்பிடலாம். சர்க்கரை இனிப்பானதுஶீஅதுவே அதன் இயற்கைத் தன்மை, தர்மம். சர்க்கரை என்பது இனிப்பாகத்தான் இருக்க வேண்டும், காரமாக இருக்கவியலாது. மிளகாய் காரமாகவே இருக்க வேண்டும், இனிப்பானதாக இருந்தால் அதனை நிராகரித்து விடுவோம். சர்க்கரை காரத்தன்மையுடன் இருந்தால், அதனை நிராகரித்து விடுவோம். அதுபோலவே, அனைத்து உயிர்வாழிகளின் நித்தியமான இயற்கை பரம புருஷருக்கு சேவை செய்வதே. வாழ்வின் இந்த உயர்ந்த நிலையை அடைவதற்கு மனித சமுதாயத்திற்குப் பயிற்சி அளிப்பதே வேத கலாசாரமாகும். இது ஸநாதன தர்மம் என்று அழைக்கப்படுகிறது. பக்குவமான மனிதனாக வாழ்வதற்கும், வாழ்வின் நோக்கத்தை அடைவதற்கும் இது படிப்படியாக பயிற்சி அளிக்கிறது.

கேத்தி கெர்: மக்கள் தங்களது வாழ்வின் குறிக்கோளை அடைவதற்கு தாங்கள் எவ்வாறு பயிற்சி அளிக்கிறீர்கள்?

ஸ்ரீல பிரபுபாதர்: முதலில் நமது ஆன்மீக அடையாளத்தைஶீநாம் இந்த உடலல்ல என்பதைஶீஉணர வேண்டும். ஆனால் இன்று மொத்த உலகமும் உடல்சார்ந்த வாழ்வில்தான் இருக்கின்றனர். இந்த தவறான அடையாளம் நவீன நாகரிகத்தின் குறைபாடாகும். அவர்கள் உடலில் அக்கறை செலுத்துகின்றனர். ஆனால் உடலினுள் இருக்கும் ஆத்மாவைப் பற்றிய தகவல் அவர்களிடம் இல்லை. மனித சமுதாயம் முழுவதும் அறியாமையில் சென்று கொண்டுள்ளது. நாம் அவர்களுக்கு அறிவை வழங்குகிறோம். எங்களது புத்தகங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது, நாங்கள் இலட்சக்கணக்கில் புத்தகங்களை அச்சடித்து விநியோகிக்கின்றோம். இதுவே மனித சமுதாயத்திற்கான எங்களது சேவை. கிருஷ்ண உணர்வானது ஒரு விஞ்ஞானம். இஃது இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள் மட்டுமின்றி அனைவருக்குமானது. நாங்கள் இந்து சமயத்தை பிரச்சாரம் செய்வதற்காக இங்கு வரவில்லை. கிறிஸ்துவர்களை இந்துக்களாக மாற்றுவதால் என்ன பயன்? ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கும் அறிவை வழங்குவதற்கு நாங்கள் விரும்புகிறோம்.

கேத்தி கெர்: பக்குவமடைய பலவகையான வழிமுறைகள் இருப்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஒரே ஒரு வழிமுறைதான். நமது ஆன்மீக அடையாளத்தை உணர்வது மட்டுமே ஒரே வழி. வெளிப்புற தோல் கறுப்பாகவோ சிவப்பாகவோ இருக்கலாம், ஆனால் அனைத்து உடல்களிலும் இருக்கும் ஆத்மா ஒரே மாதிரியானதே. அந்த ஆத்மாவைப் பற்றி அறிவதற்கு ஒரு குறிப்பிட்ட வழிமுறை உள்ளது. இது மிகவும் எளிமையானது. நீங்கள் முதலில் குழந்தையாக இருந்தீர்கள், தற்போது அந்த உடல் எங்கே சென்றது? உங்களது உடல் மாற்றமடைந்து இருக்கலாம், ஆனால் நீங்கள் அதே நபர்தான். இந்த எளிய உண்மையை ஏன் மக்களால் புரிந்துகொள்ள இயலவில்லை?

கேத்தி கெர்: இஃது இயற்கை.

ஸ்ரீல பிரபுபாதர்: இயற்கை… நீங்கள் உங்களது தாயின் வயிற்றில் இருந்தபொழுது, உங்களது உடல் மிகவும் சிறியதாக இருந்தது. தற்போது நீங்கள் ஒரு யுவதியாக உள்ளீர்கள். தற்போது அந்த சிறிய உடல் எங்கே? அந்த சிறிய உடல் தற்போது இல்லை. அதாவது, நீங்கள் அந்த உடலை மாற்றியுள்ளீர்கள். ஆனால், உங்களை தன் மகளே என்று உங்களது தாய் அறிவாள். வளர்ச்சியின் காரணமாக குழந்தையின் உடல் மாற்றமடைந்துள்ளதை தாயானவள் அறிவாள். ஆகவே, எனது குழந்தையைக் காணவில்லை” என்று அழமாட்டாள். எனது குழந்தை இங்குதான் இருக்கிறாள், அவளது உடலானது வளர்ச்சியின் காரணமாக மாற்றமடைந்துள்ளது” என்பதை அவள் அறிவாள். இந்த எளிய உண்மையை மக்கள் ஏன் அறிய மறுக்கின்றனர்?

தற்போது நீங்கள் ஒரு உடையில் இங்கு வந்துள்ளீர், சற்று நேரத்தில் வேறு உடையில் வரலாம். உங்களை எனக்குத் தெரியும் பட்சத்தில், நீங்கள் வேறு உடையில் வரும்போதும் என்னால் உங்களை அடையாளம் காணவியலும். அதுபோலவே, ’குழந்தை எனும் உடையிலிருந்து ’சிறுவன் எனும் உடைக்கும், ’சிறுவன் எனும் உடையிலிருந்து ’இளைஞன் எனும் உடைக்கும், ’இளைஞன் எனும் உடையிலிருந்து ’முதியவன் எனும் உடைக்கும் நாம் மாற்றமடைகிறோம். மாற்றமானது ஒவ்வொரு நிமிடமும் நிகழ்கின்றது. இதை நவீன விஞ்ஞானமும் ஒப்புக்கொள்கிறது.

கேத்தி கெர்: உடலிற்கான சௌகரியங்களை மறுப்பீர்களா? உடலை நிராகரிக்கிறீர்களா?

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை. உடலை எதற்காக நிராகரிக்க வேண்டும்? நீங்கள் அணிந்திருக்கும் ஆடை முக்கியத்துவமற்றது என்று பொருளல்ல. ஆனால் அந்த ஆடையைவிட அதனை அணிந்துள்ள நபர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர். அத்தகைய நபரான ஆத்மாவைப் பற்றிய கல்வி எங்கே போதிக்கப்படுகிறது? அனைவரும் உடல் தளத்திலேயே மூழ்கியுள்ளனர். இந்த மனோநிலை மிருகங்களான நாய்களிடமும் பூனைகளிடமும்கூட காணப்படுகின்றன. மிருகங்களும் தங்களை உடலாகவே கருதுகின்றன. ஆகவே, மனிதனானவன், தான் இந்த உடலல்ல, ஆன்மீக ஆத்மா என்பதை அறியவில்லை எனில், அவன் பூனைகளையும் நாய்களையும்விட மேலானவன் அல்ல. மனித சமுதாயத்தை நாங்கள் மிருகங்களின் நிலையில் வைத்திருக்க விரும்பவில்லை.  அவர்கள் தன்னை உணரும் நிலையை அடையச் செய்வதே எங்களின் நோக்கம்.

கேத்தி கெர்: உங்களை அதிகம் பேர் பின்பற்றுகின்றனரா?

ஸ்ரீல பிரபுபாதர்: அனைவரும் நான் இந்த உடல்” எனும் எண்ணத்தில் மூழ்கியுள்ள காரணத்தினால், எங்களைப் பின்பற்றுவோர்  அதிகளவில் இல்லை. அவர்களை உடலின் எண்ணத்திலிருந்து விடுவிப்பது எளிதான காரியமல்ல. ஆகவே, இலட்சக்கணக்கான மக்களை இங்கே எவ்வாறு எதிர்பார்க்க இயலும்? அதிர்ஷ்டம் வாய்ந்த மக்களே இதனை அறிந்துகொள்வர். அனைவரும் அறியக்கூடிய எளிமையான விஷயமாக இருப்பினும், நவீன கல்வியானது மக்களின் மூளையை மழுங்கச் செய்துவிட்டது. ஆகவே, அவர்களால் இதனைப் புரிந்துகொள்ள இயலவில்லை.

கேத்தி கெர்: உங்களது இயக்கம் சமயத்தைப் போதிப்பதை விட அறிவை வழங்குகின்றது என்று கூறுகிறீர்களா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். இது கல்வி, இது சமயமும் கூட. ஆனால் இது மனிதனால் உருவாக்கப்பட்ட சமயமல்ல. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சர்க்கரை ஒரே மாதிரியாக இருப்பதைப் போலவே, ஆத்மா அனைத்து இடங்களிலும் ஒன்றாகவே இருக்கின்றது. பௌதிக உடலின் காரணமாக ஆத்மா துன்புறுகின்றது. பௌதிக உடலிலிருந்து விடுபட்டு ஆன்மீக உடலில் நிலைபெறுவது எவ்வாறு என்பதை நாங்கள் மக்களுக்கு போதிக்கின்றோம்.

கேத்தி கெர்:  படித்தவர்களை நீங்கள் தொடர்புகொள்ள முயற்சி செய்கிறீர்களா…

ஸ்ரீல பிரபுபாதர்: படித்தவர்களும் வருகை தருகின்றனர். இந்த ஆன்மீக விஷயத்தை அறிந்து கொள்வதற்கு சற்று அறிவு தேவைப்படுகிறது. பெயரளவு படித்தவர்களால் இதனை அறிந்துகொள்ள இயலாது. ஆகவே, அவர்களது மூளையை மேலும் செம்மையாக்க நாங்கள் நான்கு விஷயங்களைத் தவிர்க்கச் சொல்கிறோம்ஶீதவறான பாலுறவு, மாமிசம் உண்ணுதல், போதை வஸ்துக்கள், சூதாட்டம். ஒருவன் இந்த நான்கு விஷயங்களிலிருந்து விலகியிருக்கும்போது, அவனால் அறிவை மேம்படுத்திக்கொள்ள இயலும், ஆன்மீக விஷயங்களை அறிந்துகொள்ள இயலும்.

கேத்தி கெர்: நாம ஜபத்தின் நோக்கம் என்ன?

ஸ்ரீல பிரபுபாதர்: சேதோ தர்பண மார்ஜனம். இதயத்தை தூய்மை செய்வதே இதன் நோக்கம். நம்மிடம் பல்வேறு களங்கங்கள் உள்ளன. ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபித்து விதிமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் இதயமானது தூய்மை பெறுகிறது. முழுவதும் அழுக்கடைந்த கண்ணாடியை தூய்மை செய்த பின்னர் உங்களது முகத்தை அதில் நன்றாகக் காணலாம். அதுபோலவே, இதயமானது தூய்மைபடுத்தப்பட்டவுடன், நான் இந்த உடலல்ல, ஆத்மா” என்பதை உணர்வீர்கள். இதுவே விரும்பத்தக்கது. ஆகவேதான் நாங்கள் ஸங்கீர்த்தனத்தில் பாடி, ஆடி, பிரசாதம் ஏற்பதற்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

கேத்தி கெர்: உங்களது இயக்கத்திற்கு ஏன் பெரும் வரவேற்பு உள்ளது? இளம் வயதினர் அதிகம் கவரப்படுகின்றனரே?

ஸ்ரீல பிரபுபாதர்: ஏனெனில், நாங்கள் உண்மையான ஆன்மீகத்தை போதிக்கின்றோம்; போலியானதை வழங்கவில்லை. தியானம் செய்து கடவுளாகுங்கள்” என்று நாங்கள் எதையும் பிதற்றுவதில்லை. நாங்கள் அறிவை வழங்குகிறோம். கிருஷ்ண உணர்வு எனும் விஞ்ஞானமானது கடவுளை அறிதல், நம்மை அறிதல், நமக்கும் கடவுளுக்குமான உறவை புதுப்பித்தல் ஆகியவையாகும். இளம் வயதினர் எங்களது இயக்கத்தினை வரவேற்கின்றனர். மற்றொருபுறம் இந்த மேற்கத்திய கலாச்சாரத்தில் அவர்களது பெற்றோர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதையும் அவர்கள் கண்டுள்ளனர். ஆகவே, உண்மையான மகிழ்ச்சியை அடைவதற்கான வழியை அவர்கள் தேடுகின்றனர். இந்தியாவிலிருந்து வந்த பல்வேறு யோகா ஆசிரியர்களையும், ஆன்மீகவாதிகளையும் அவர்கள் நாடினர். அவர்களிடமும் அவர்கள் விரக்தியுற்றனர். ஆனால் இங்கு அவர்கள் உண்மையான சாரத்தைக் கண்டுள்ளனர். இதுகுறித்து நீங்கள் என் சீடர்களிடமே கேட்கலாம். அவர்களே விளக்கமாக எடுத்துரைப்பர். மிக்க நன்றி.

(தமிழாக்கம்: வேங்கடேஷ்)

மக்கள் அறியாமையில் இருப்பதால், அவர்களுக்கு அறிவை வழங்கும் பொருட்டு, நாங்கள் புத்தகங்களை இலட்சக்கணக்கில் அச்சடித்து விநியோகிக்கின்றோம். இதுவே மனித சமுதாயத்திற்கான சேவை.

சர்க்கரையின் தன்மை எவ்வாறு எல்லா நாடுகளிலும் ஒன்றாக இருக்கிறதோ அதே போல ஆத்மாவானது எல்லா இடங்களிலும் ஒன்றாகவே இருக்கிறது.

ஹரே கிருஷ்ண மந்திரம் இதயத்தைத் தூய்மைப் படுத்துவதால், ஸங்கீர்த்தனத்தில் பாடி, ஆடி, பிரசாதம் ஏற்க அனைவரையும் அழைக்கிறோம்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives