வழங்கியவர்: இந்திர கிருஷ்ண தாஸ்
செய்தித்தாள்களை சற்று புரட்டிப் பார்த்தேன். ஒரு சிறுவன் தனது சிறிய கரங்களை பிச்சையெடுப்பதற்காக நீட்டிக் கொண்டுள்ளான், அவனுக்கு அருகில் அவனுடைய இளைய சகோதரன் வலியினால் அழுகின்றான், அவர்கள் இருவருக்கும் அருகே தாய் தனது முகத்தினை மறைத்தபடி நிற்கின்றாள். மிகவும் மதிக்கத்தக்க இடமாக இருந்த ஒரு பகுதி தற்பொழுது அணுகுண்டு வீசப்பட்டு சிதறிக் கிடக்கின்றது. மற்றொரு பக்கத்தில் ஒரு பெண் தனது கணவனின் சடலத்திற்கு அருகே கதறி அழுகின்றாள்.
இவ்வாறாக, செய்திகளைப் பார்க்கும்போது நாம் காண்பவை சண்டைகள், போராட்டங்கள், இரத்தக்களறி போன்றவையே. அரேபிய நாடுகளில் அரசாங்கத்தை எதிர்த்து பல்வேறு நபர்கள் போராட்டங்களை நடத்தினர். அத்தகு போராட்டங்கள் வெளிநாட்டு சக்திகளால் ஊக்குவிக்கப்பட்டிருந்தன. அதனால் போர் மூண்டு பலர் கொல்லப்பட்டனர். இவையனைத்தும் சகஜம். அரேபிய நாட்டைச் சார்ந்தவர்கள் சிறந்த அரசாங்கத்தை எதிர்நோக்கி எப்போதும் காத்துக் கொண்டுள்ளனர். பல்வேறு ஆட்சியாளர்கள் வருகிறார்கள், போகிறார்கள். மக்களுக்கு நன்மை செய்வதாக கூறுகிறார்கள், ஆனால் சூழ்நிலையோ மேன்மேலும் மோசமாகிக் கொண்டுதான் இருக்கின்றது.
ஸநாதன தர்மத்தின் மூலாதாரமாக இருக்கக்கூடிய இந்திய திருநாட்டில் அதனுடைய வரலாற்றை தீர்மானிக்கக்கூடிய தேர்தல் தற்போது வரவிருக்கிறது, மிகச்சிறந்த பண்பாடு, மிகவுயர்ந்த குறிக்கோள் என இருந்துவந்த பாரதத்தில், இன்று அவற்றின் நிழல் மட்டுமே காணப்படுகிறது. சொல்லவியலா வளத்தையும் புகழத்தக்க பண்பாட்டையும் ஆன்மீக சகிப்புத் தன்மையையும் கொண்டிருந்த பாரத திருநாடு, இன்று ஊழல், தவறான நிர்வாகம், மற்றும் இதர பிரச்சனைகளால் சிக்கித் தவிக்கின்றது. ஏழ்மை, கல்வியறிவின்மை, பாதுகாப்பின்மை, அரசாங்கத்தின் திறமையின்மை போன்றவற்றை இந்தியர்கள் கண்டு வருகின்றனர்; எதிர்தரப்பினரோ, நல்ல அரசாங்கம், சுயமரியாதை, வளர்ச்சி போன்ற பிரச்சனைகளை முக்கிய பிரச்சனைகளாக எழுப்பியுள்ள இத்தருணத்தில், எல்லோருடைய கண்களும் இந்த முக்கியமான தேர்தலை எதிர்பார்த்தபடி காத்துக் கொண்டிருக்கின்றது.
ஆப்பிரிக்காவில், ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுக்குள் இருக்கக்கூடிய சச்சரவுகளால் ஒருவரையொருவர் சண்டையிட்டுக் கொண்டு மடிகின்றனர். தெருநாய்கள் எலும்புத் துண்டிற்காக சண்டையிடுவதைப் போல மக்கள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். மேலை நாட்டு அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் அவர்களுடைய சக்தியினை சுரண்டி வருகின்றன. ஆப்பிரிக்க கண்டமானது உலகிலேயே இயற்கை வளங்கள் மிகவும் அதிகமாக இருக்கக்கூடிய பகுதியாகும். இருப்பினும், அங்கே உலகிலேயே மிகவும் ஏழ்மையான, கல்வியறிவற்ற, நாகரிகமற்ற மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவ யாரும் இல்லை. நாகரிக மனிதர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் அவர்களை தினம்தினம் சுரண்டி வருகின்றனர். யாரேனும் அத்தகைய பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முயற்சி செய்தால், அவர்கள் கருணையின்றி நடத்தப்படுகின்றனர். ஆப்பிரிக்கனின் உயிருக்கு மதிப்பு இல்லை என்ற நிலை நிலவி வருகிறது.
அரசியல் வஞ்சகத்தினால் சொகுசாக வாழக்கூடிய முதல்நிலை மக்களுடன் இவர்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அந்த முதல்நிலை மக்கள் ஸ்வர்கத்தில் வாழ்வதுபோலத் தோன்றலாம். தங்களுடைய சொந்த நாடுகளில் மக்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் நிறைவேற்றுவதாகக் கூறும் அரசாங்கங்கள், மற்ற இடங்களில் தவறான திட்டங்களையும், மக்களை வஞ்சிக்கக்கூடிய பொருளாதார அமைப்பினையும், இரகசிய நிறுவனங்களையும், ஆயுத உதவியையும் கொடுத்து அம்மக்களை வஞ்சித்து வருகின்றனர். தங்களுடைய சக்தியை பாதுகாப்பதற்காகவும் தங்களுடைய நாட்டு மக்களிடம் வளர்ச்சி என்பதை சுட்டிக் காட்டுவதற்காகவும், அவர்கள் மற்றவர்களை வஞ்சிக்க வேண்டியது அவசியமாகிவிட்டது. எப்போது ஒரு நாட்டு அரசாங்கம், அந்நாட்டு மக்களுடைய காமம், கோபம் போன்றவற்றை திருப்தி செய்து, மற்ற நாட்டினர்களை சுரண்டுவதற்கு ஏற்பாடு செய்கிறதோ, அப்போது அந்த நாடு சக்தியுடைய நாடு என கருதப்படுகிறது. கர்ம விதிகளைப் பற்றி அவர்களுக்கு தெரியாது. அப்படியே தெரிந்தாலும், அது தங்களுக்கு உரியதல்ல என்று ஒதுக்கிவிடுகின்றனர்.
இவ்வாறாக உலகம் முழுவதும் ஊழல் என்பது வேரூன்றியுள்ளது, அது வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு ரூபத்தை ஏற்றுள்ளது. அரசாங்கங்கள் நீதிப்படி மக்களை ஆட்சி செய்வதில்லை. அரசாங்க அலுவலர்கள் தங்களை மக்களிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் தனிமைப்படுத்திக் கொண்டு வசதியாக சொகுசாக வாழ்கின்றனர். ஆனால் மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாக்க வேண்டிய நிலைக்கு உட்படுத்தப்படுகின்றனர். தங்களுடைய பதவியை தக்கவைப்பதற்காக ஆட்சியாளர்கள் மற்றவர்களை அடக்கி ஆளுதல் என்னும் முறையை பின்பற்றுகின்றனர். அவ்வாறு அடக்கி ஆள்வதும் தவறான தகவல்களைக் கொடுத்து திசைத்திருப்புவதும் உண்மையான குறிக்கோளிலிருந்து வழி தவறச் செய்து ஏமாற்றுவதும் சகஜமாகி வருகிறது.
இத்தகைய பிரச்சனைகளைப் பார்க்கும்போது, நம்மைப் போன்ற பக்தர்கள், அதாவது, இவற்றினால் நேரடியாக பாதிக்கப்படாத நபர்கள், “ஊழல் என்பது சாதாரணமாகிவிட்டது” என்று கூறி அவற்றைக் கண்டுகொள்வதில்லை. கையளவு மக்கள் இவற்றிற்கு ஒரு தீர்வு காண முயற்சி செய்கின்றனர். பக்தர்களில் பெரும்பாலானவர்களுக்கு இத்தகைய பிரச்சனைகள் பிரச்சனைகளே அல்ல. ஒவ்வொருவரும் அவரவருடைய கர்மத்தின்படி சந்திக்க வேண்டியவற்றை சந்திக்கின்றனர் என்று கூறி விட்டு நாம் சென்றுவிடலாம். மேலும், இவையனைத்தும் கலி யுகத்தின் அறிகுறிகள், இவற்றிற்காக கவலைப்பட வேண்டாம் என்றும் கூறி ஒதுக்கிவிடலாம். அல்லது, இவையனைத்தும் மாயை, இவற்றை மறந்துவிட வேண்டும் என்றும் சொல்லிவிடலாம். வேறு சிலரோ, நம்முடைய சொந்த வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டு செல்லலாம், நம்முடைய பிரச்சனைகளே தலைக்குமேல் உள்ளது என்று கூறி ஒதுங்கிவிடலாம்.
ஆனால், சில சமயங்களில் நான் எனக்குள் கேட்பதுண்டு: “உலகின் தற்போதைய மோசமான சூழ்நிலைகளுக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு நம்மிடம் உண்மையில் உள்ளதா? துன்பப்படுபவர்களுக்கு அஃது எவ்வளவு பெரிய வலியை கொடுக்கின்றது! இதற்கான தீர்வில் நாம் ஈடுபட வேண்டுமா?”
ஸ்ரீல பிரபுபாதரும் இதர ஆச்சாரியர்களும் இதுபோன்ற சூழ்நிலைகளை எவ்வாறு கையாண்டனர்?
மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, வல்லபாய் பட்டேல், லால்பகதூர் சாஸ்திரி போன்ற தலைவர்களுக்கு ஸ்ரீல பிரபுபாதர் கடிதம் எழுதினார். அக்கடிதத்தின் மூலமாக கிருஷ்ண உணர்வு சமுதாயத்தை நிலைநாட்டுவதன் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணர்த்தினார். ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் வங்காளத்தின் ஆங்கிலேய கவர்னரை மாயாபுருக்கு அழைத்தார். பக்தி வினோத தாகூர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேய அரசிடம் ஓர் அலுவலராக பணியாற்றியபோது ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் கிருஷ்ண உணர்வு இயக்கத்திற்கு புத்துணர்வு காட்டுவதற்கு பெரும் முயற்சி மேற்கொண்டார்.
கிருஷ்ணரும் அரசாங்க செயல்களில் ஈடுபட்டுள்ளார்
அவர் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையிலான பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண முயற்சி மேற்கொண்டார், குருக்ஷேத்திரப் போரில் சத்திரியனான அர்ஜுனனுக்கு பகவத் கீதையை உபதேசித்தார்.
ஒரு சமுதாயம் எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும் என்பதை ஸ்ரீல பிரபுபாதர் பகவத் கீதையை மேற்கோள் காட்டி வெளிப்படுத்துகிறார். நான்கு வர்ணங்கள் (தொழிற் பிரிவுகள்), மற்றும் நான்கு ஆஷ்ரமங்களால் (ஆன்மீக பிரிவுகள்) சமுதாயம் வடிவமைக்கப்பட வேண்டும் என்று அவர் கூறுகிறார். வர்ணங்கள் என்பது பிறப்பினால் அல்ல, தகுதியினாலும் செயல்களினாலுமே. “பொது மக்களை படிப்படியாக பகவானின் பக்தித் தொண்டிற்கு வரவழைக்கும் பொருட்டு அவர்களுக்கு உதவுவதற்காக வர்ணாஷ்ரம வழிமுறையை சமுதாயத்தில் நிலைநாட்ட வேண்டியது ஹரே கிருஷ்ண இயக்கத்தின் குறிக்கோள்,” என்று ஸ்ரீல பிரபுபாதர் கூறியுள்ளார். அவர் தனது சிஷ்யர்களில் சிலரை அரசியல் அலுவலகம் வைத்து நடத்துமாறு ஊக்குவித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ஜார்ஜ் புஷ் அவர்கள் 1990 செப்டம்பரில் புதிய உலகம் பற்றிய பிரபலமான உரையை நிகழ்த்தினார். அச்சமயத்தில் பேக் டு காட்ஹெட் (Back to Godhead) பத்திரிகையின் தலைமை ஆசிரியராக இருந்த ஜெயாத்வைத ஸ்வாமி அவர்கள், அறிவொளி பெற்ற புதிய உலகம் என்ற தலைப்பில்1991இல் ஒரு கட்டுரை எழுதினார்: “புதிய உலகத்திற்கான சிறந்த அமைப்பினை பகவான் கிருஷ்ணர் ஏற்கனவே நம்மிடம் கொடுத்துள்ளார், அதன்படி நாம் உண்மையான சத்திரியரைக் காண்பதில் ஆர்வம் கொண்டுள்ளோம். வலிமையான கண்ணியமான சத்திரியாரால் இந்த உலகம் வழிநடத்தப்படும்போது உலகம் அதனுடைய உண்மையான நிலையில் வைக்கப்படும்.”
சத்திரியர்கள் வெறுமனே கதாநாயகராகவும் வலிமை வாய்ந்தவர்களாகவும் இருப்பவர்கள் அல்ல; அவர்கள் ஆன்மீக ரீதியாகவும் பண்பாடு ரீதியாகவும் அறிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும். மேலே கூறிய அதே கட்டுரையில் மேலும் கூறப்படுவது யாதெனில்:
மக்களுடைய அவசியத் தேவை என்பது பெட்ரோலியம் அல்ல, உணவே என்பதை ஓர் உண்மையான சத்திரியன் அறிவான். மனிதர்களுக்கான உணவு என்பது கடவுளுடைய கருணையினால் நிலத்தை உழுவதாலும் பசுக்களைப் பராமரிப்பதாலும் மிக அதிகமாகவே கிடைக்கின்றது.
திரு. புஷ் அவர்கள் புதிய உலகம் பற்றி பேசியுள்ளார், ஆனால் அந்த புதிய உலகம் எவ்வாறு இருக்கும் என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை. அதனால், அந்த புதிய உலகத்தில் என்னென்ன இருக்கவேண்டும் என்பதற்கு நாங்கள் இங்கு சில அறிவுரைகளை கொடுக்கின்றோம். (1) அந்த புதிய உலகம் தன்னுடைய வளத்தினை பூமியை உழுவதாலும், பசுக்களையும் காளைகளையும் பராமரிப்பதாலும் அடைய வேண்டும். பூமியின் வளங்களை சுரண்டுவதாலும் பூமியின் படைப்புகளை கொல்வதாலும் அடையப்படக் கூடாது. (2) அந்த புதிய உலகத்தின் ஜனாதிபதிகள், பிரதமர்கள், மன்னர்கள் ஆகியோர் ஆன்மீக அறிவிலும் பண்பாட்டிலும் பயிற்சி அளிக்கப்பட்ட வலுவான ஆண்களாக இருக்க வேண்டும். (3) அந்த தலைவர்களின் ஆலோசனையாளர்கள் தன்னை உணர்ந்த ஆத்மாக்களாக இருக்க வேண்டும். அவர்கள் இவ்வுலகிலுள்ளவர்கள் கடவுளிடம் மீண்டும் செல்வதற்கு உகந்த வழிமுறையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
பொதுமக்கள் வழிதவறி நடத்தப்படுகின்றனர்
உலகத் தலைவர்கள் தங்களுடைய பாக்கெட்டுகளை நிரப்புவதில் மும்முரமாக இருக்கும்பட்சத்தில், பொதுமக்கள் அவற்றை கண்டுகொள்ளாமல் வாழ்கின்றனர். ஓரளவு வருமானமுள்ள நடுத்தர மக்கள் சிறந்த வீடுகளையும், கார்களையும், தொலைக்காட்சிகளையும், மொபைல் போன்களையும் இதர பொருட்களையும் வாங்குவதில் திருப்தி அடைகின்றனர். இளைஞர்களும் யுவதிகளும் தினமும் பன்னிரண்டு முதல் பதினாறு மணிநேரம் வேலை செய்வதிலும் சில நேரங்களில் தங்களுடைய மடிக்கணிணியை வைத்து சில விஷயங்களை பார்ப்பதிலும் திருப்தியடைகின்றனர். அதனால் தங்களுடைய வாழ்க்கையில் ஒரு சுதந்திரத்தை உணர்வதாக அவர்கள் நினைத்து கொள்கின்றனர். பணம் என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்வின் உயர்ந்த விஷயங்களையும் நீதிகளையும் புறக்கணித்துவிட்டனர்.
மக்கள் புரிந்துகொள்ளாமலிருப்பது என்னவெனில், எவ்வளவுதான் பௌதிக முன்னேற்றங்கள் இந்த உலகில் ஏற்பட்டாலும், இந்த உலகம் நாம் வாழ்வதற்கு உகந்த இடமல்ல. ஒரு குறிப்பிட்ட மக்களுடைய வளம் என்பது மற்றொரு தரப்பினரின் ஏழ்மையை அடிப்படையாக வைத்ததே. இன்றைய பிரச்சனைகள் ஒரு குறிப்பிட்ட நாட்டினை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல, பிரச்சனைகள் உலகெங்கிலும் உணரப்படுகின்றன. மற்றவர்களை வஞ்சிப்பதால் ஒரு குறிப்பிட்ட நாட்டில் அடையப்படும் முன்னேற்றத்தை அவர்கள் கொண்டாடுதல் சரியானதல்ல. மற்ற நாடுகளை ஏய்த்துப் பிழைப்பதால் வரக்கூடிய நன்மையானது நீடித்திருக்க இயலாது. அவ்வாறு உருவாகிய நாகரிகங்கள் அனைத்தும் காலப்போக்கில் ஒதுக்கி வைக்கப்பட்டுவிட்டன என்பதை வரலாறுகள் நமக்குக் காட்டுகின்றன.
ஐரோப்பாவைச் சார்ந்த சக்திவாய்ந்த நாடுகள் பெரிய பெரிய பேரரசாக விளங்கின, ஆனால் தற்போது அவையாவும் தங்களுடைய சொந்த எல்லைக்குள் அடக்கப்பட்டுவிட்டன. தற்போது பொருளாதாரத்தில் பெரிய நபர்களாக வலம்வந்து வல்லரசாக திகழ்பவர்கள் அனைவரும் தங்களுடைய பதவியையும் நிலையையும் தக்கவைத்துக் கொள்வதில் பெரும் முயற்சி செய்து வருகின்றனர்.
கிருஷ்ண உணர்வு என்பது விரும்பினால் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஏதோ ஒரு வழியல்ல; இஃது ஓர் அவசியத் தேவை. தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரால் நாற்பத்தி எட்டு வருடங்களுக்கு முன்னர் இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் நிறுவப்பட்டது. தற்போது இவ்வியக்கம் உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான கோயில்களின் மூலமாக நன்கு நிறுவப்பட்டுள்ளது, பலரும் இதனை நேர்மையான ஆன்மீக இயக்கமாக ஏற்று மதித்து வருகின்றனர். பல்வேறு தளத்தில் வாழும் மக்களை இவ்வியக்கம் கொண்டுள்ளது.
கிருஷ்ண உணர்வினால் உலகின் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்க முடியும். இவ்வுலகம் முழுவதும் துன்பத்தில் உள்ளது. நாம் மிகப்பெரிய ஆன்மீக இயக்கமாக உருவெடுத்துள்ளபோதிலும், பொதுமக்களின் அன்றாட வாழ்வினை மாற்ற இயலாமல் உள்ளோம். கிருஷ்ண பக்தி இயக்கத்தின் தத்துவத்தைக் கேட்கும் சிலர், நம்மை மிகவும் நல்லவர்களாக கருதுகின்றனர், ஆனால் அவர்களால் பின்பற்ற முடியாத நிலையில் நாம் இருப்பதாக எண்ணுகின்றனர். சிலர் நம்மை ஆச்சரியமாக பார்க்கின்றனர், சிலர் வேடிக்கையாக பார்க்கின்றனர்.
கிருஷ்ண பக்தர்களின் பிரச்சாரம் பல்வேறு மக்களிடையே வெற்றியைப் பெற்று வருகிறது. இருப்பினும், உலக மக்கட்தொகையில் பக்தர்கள் மிகக் குறைந்தவர்களே என்பதால், பிரச்சாரம் செய்வதைக் காட்டிலும் அவர்கள் அதிகமாகச் செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது. அவர்கள் அரசாங்கத்தினுள் நுழைந்து இச்சமுதாயம் வெகுவிரைவாக சீரழிவதை தடுத்து நிறுத்த வேண்டும். வணிகமயமாக்கம் பரவலாக வளர்ந்து வருகிறது, பொதுமக்கள் இறையுணர்விலிருந்து விலகிச் செல்கின்றனர். இந்நிலை ஒவ்வொரு நாளும் மோசமாகிக் கொண்டே போகிறது.
கிருஷ்ண பக்தர்கள் அரசாங்கத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்னும் கருத்து, அசாத்தியமான ஒரு விருப்பமாக அல்லது தேவையற்ற ஒரு முயற்சியாக கருதப்படலாம். ஆயினும், அதற்கு முயற்சி செய்தல் சிறந்ததே. கிருஷ்ண உணர்வு இல்லாவிடில் இந்த உலகம் விரைவிலேயே மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக மாறிவிடும். நமது பிரச்சனைகளின் மூலத்தை நாம் அணுக வேண்டியது அவசியம். எந்த பிரச்சனையையும் அதன் மூலத்திற்குச் சென்று ஆராயக்கூடிய திறன் அல்லது சக்தியானது அரசாங்கத்திற்கு உண்டு. மேலும், கிருஷ்ண பக்தியை பிரச்சாரம் செய்வதற்கும் அரசியல் தளம் என்பது மிகச்சிறந்த வாய்ப்பாக அமையும். கிறிஸ்துவ மதமானது ரோமன் பேரரசினால் பரப்பப்பட்டது, புத்த மதமானது அசோகப் பேரரசரால் பிரபலமடைந்தது, இஸ்லாம் மதமும் சக்திவாய்ந்த படையினரால் நிறுவப்பட்டது.
கிருஷ்ண உணர்வு அரசாங்கத்தினால் எவ்வாறு பூமியை பாதுகாக்க முடியும்?
கிருஷ்ண உணர்வு அரசாங்கங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு மூன்று முக்கிய விஷயங்களை இங்கு எடுத்துரைக்கின்றேன்.
(1) கல்வி: மனித சமுயாத்தின் அடிப்படையாக விளங்குவது கல்வியே. நமது கல்வியில் ஆன்மீக மற்றும் நீதிக் கருத்துகள் இல்லையெனில், மனிதர்கள் மிருகங்களைப் போல நடந்து கொள்வர். மிகவுயர்ந்த நீதியையும் உண்மையையும் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்ட பிராமணர்கள் கல்விக்குப் பொறுப்பாளிகளாக இருக்க வேண்டும். விஞ்ஞானம், மருத்துவம், வானவியல், தொழில்நுட்பவியல், சமூகவியல் உட்பட அனைத்து பிரிவைச் சார்ந்த அறிவுகளும் நமது சாஸ்திரங்களில் உள்ளன என்பதை மக்கள் அறிய வேண்டும்.
எளிய வாழ்வும் உயர்ந்த சிந்தனையும் என்பது மக்களுடைய வாழ்வை வழிநடத்தக்கூடிய அடிப்படைக் கொள்கையாக இருக்க வேண்டும். புலன்கட்டுப்பாட்டின் அவசியம், கருக்கலைப்பின் தவறுகள், கர்ம விதிகள், மறுபிறவியின் தன்மைகள் போன்றவை கற்றுத் தரப்பட வேண்டும்.
நவீன கல்வியானது மக்களிடையே போட்டியையும் பொறாமையையும் வளர்க்கின்றது. ஆனால் ஆன்மீக கல்வியானது ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் வளர்க்கும். மனித வாழ்க்கை, அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸ, முழுமுதற் கடவுளின் திருநாட்டிற்குத் திரும்பிச் செல்வதற்காக நாம் பெற்றுள்ள இந்த அரிய வாய்ப்பாகும், இதனை வெறுமனே புலனின்பத்தில் ஈடுபட்டு வீணடித்து விடக் கூடாது. புலனின்பம் என்பது கீழ்நிலை உயிரினங்களுக்கும் கிடைக்கக் கூடியதாகும். மற்றவர்களுடன் போட்டியிடுவதை நிறுத்திவிட்டு நாம் ஒவ்வொருவரும் வாழ்வின் உண்மையான பிரச்சனைகளை வெற்றி கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகியவையே வாழ்வின் உண்மையான துயரங்கள். இவ்வுலகில் வாழ்வதற்கான உரிமை எல்லா உயிரினங்களுக்கும் உண்டு, வலிமை வாய்ந்த உயிரினங்கள் மட்டுமே வாழ முடியும் என்பதல்ல. அனைவரது தேவைகளையும் கிருஷ்ணரே பூர்த்தி செய்வதால், எல்லா உயிரினங்களும் இவ்வுலகில் வாழ இயலும்.
(2) சுற்றுச்சூழல்: கிருஷ்ண உணர்வு அரசாங்கத்தின் மற்றுமொரு செயல் சுற்றுச்சூழலைப் பராமரித்தல். நமது சுற்றுச்சூழலே நமது வளத்தின் ஆதாரம் என்பதால் அதனை கவனத்துடனும் பொறுப்புடனும் பாதுகாத்தல் அவசியமாகும். தொழிற்சாலைகளை அடிப்படையாகக் கொண்ட நகர வாழ்க்கையானது இன்றைய சுற்றுச்சூழல் பிரச்சனைகள் அனைத்திற்கும் அடிப்படையாக அமைகிறது. நிலம், நீர், காற்று மட்டும் களங்கமடையவில்லை, மக்களின் உணர்வுகளும் களங்கமடைந்துள்ளது.
மக்கள் தங்களுடைய ஆசைகளை கட்டுப்படுத்தவில்லை யென்றால், உலகின் சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு நம்மால் தீர்வு கொடுக்க முடியாது. மக்கள் எவ்வாறு தங்களுடைய ஆசைகளைக் கட்டுப்படுத்த முடியும்? உயர்ந்த மகிழ்ச்சியையும் திருப்தியையும் உணரும்போது மட்டுமே அது சாத்தியமாகும். அந்த உயர்ந்த மகிழ்ச்சியினை கிருஷ்ண பக்தி இயக்கம் பக்தி யோக பயிற்சியினாலும் ஹரே கிருஷ்ண மந்திர தியான பயிற்சியினாலும் கற்றுத் தருகின்றது.
சமூகத்தை நாம் பாதுகாக்கவில்லையெனில், வெகுவிரைவில் குடிப்பதற்கு நீர் இருக்காது, சுவாசிப்பதற்கு உகந்த காற்று இருக்காது. இதில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமெனில், சுற்றுச்சூழலை பராமரிப்பதன் அவசியத்தை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும், அதற்கு தகுதி வாய்ந்த அரசாங்கம் நமக்குத் தேவை. குடிப்பதற்கு போதிய நீரும் உண்பதற்கு போதிய உணவும் இல்லாதபட்சத்தில், வெகு விரைவான கார்கள், விமானங்கள், மற்றும் கணிப்பொறியினால் என்ன பயன் என்பதை அரசாங்கம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
நம்முடைய குழந்தைகளின் உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் தினம்தினம் குன்றி வருவதை கவனத்தில் கொள்ள வேண்டும். மரணத்தைக் கொடுக்கக்கூடிய கொடிய நோய்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருவதால், நம்முடைய மருத்துவச் செலவு அதிகமாகிக் கொண்டே வருகிறது. கட்டுப்பாடற்ற புலனின்பத்தை அனுபவிப்பதற்காக நமது சுற்றுச்சூழலை நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதே இதற்கு காரணமாகும்.
(3) பசு வதைக்குத் தடை: பசுக்களை கொல்வது மிகவும் மோசமான பொருளாதார நிலைக்கு வழிகாட்டுகின்றது. பசு நமக்கு பால் கொடுக்கிறது, பால் மூளையின் நுண்ணிய திசுக்களை வளர்ப்பதற்கு உதவுகின்றது, பல்வேறு பால் பதார்த்தங்கள் மக்களுக்கு உணவளிக்கின்றன. பசு புல்லை அடிப்படையாகக் கொண்டு வாழ்கின்றது. மனிதர்களின் உணவுடன் அது போட்டியிடுவதில்லை. பசுஞ்சாணத்தை கொண்டு சாண எரிவாயுவை தயாரிக்க முடியும். ஒரு பசுவினால் ஒரு வருடத்தில் கொடுக்கப்படும் சாணத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் மீத்தேன் வாயுவானது 225 லிட்டர் பெட்ரோலுக்கு சமமானது என்பதை உத்திரபிரதேசத்தில் அமைந்துள்ள சாண எரிவாயு ஆராய்ச்சி நிலையம் (Gober Gas Research Station) உறுதி செய்துள்ளது. பசுஞ்சாணம் தூய்மையானது. பால் கொடுக்க இயலாத வயதான பசுக்களும் சாணத்தின் மூலமாக தங்களைத் தாங்களே பராமரித்துக் கொள்ள இயலும். மேலும், யாரொருவர் பசு மாமிசத்தை ஏற்கின்றனரோ, அவர்கள் பசுவின் உடலில் எத்தனை முடிகள் உள்ளனவோ அதற்கு சமமான ஜன்மங்கள் நரகத்தில் துன்பப்பட வேண்டும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
பால் கொடுக்கக்கூடிய காரணத்தினால் பசு நமக்குத் தாய். நம்மை அடக்க வந்த ஆங்கிலேயர்கள், இந்தியாவின் பலம் பசுவை அடிப்படையாகக் கொண்ட விவசாயத்தில் உள்ளது என்பதை அறிந்தனர். மேலும், மிகச்சிறந்த கிருமிநாசினியாகிய கோமியம், மிகச்சிறந்த உரமாகிய பசுஞ்சாணம் ஆகிய இரண்டும் ஆங்கிலேயர்களின் பொருளாதார முயற்சிக்கு தடையாக இருந்த காரணத்தினால் அவர்கள் பசுக்களைக் கொல்வதற்கு முயற்சி செய்தனர். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் பல்வேறு தலைவர்கள் பசுவதைக்கு எதிராக பேசினர், ஆனால் அதற்கு எதிராக செய்யப்பட்டவையோ மிகக் குறைவு. மறுபக்கம் பார்த்தால் கசாப்புக்களங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன, பசுக்களும் கத்தியினை சந்தித்த வண்ணம் உள்ளன. தாயைக் கொலை செய்து நாக்கை திருப்திப்படுத்துவதில் ஈடுபட்டுள்ள சமுதாயம் என்றுமே வளர்ச்சி பெற இயலாது.
நமது நன்மை தீமைகள்
நன்மைகள்: (1) நாம் மிகவும் ஒழுக்கமான குழுவைச் சார்ந்தவர்கள். நம்முடைய பக்தர்களும் சேவகர்களும் இந்தியாவிலும் உலகின் எல்லா பகுதிகளிலும் பரந்து விரிந்துள்ளனர். (2) நம்முடைய தத்துவத்தையும் கொள்கைகளையும் எளிதாக நடைமுறைபடுத்த முடியும். இதனை யுதிஷ்டிர மஹாராஜர், பரீக்ஷித் மஹாராஜர் போன்றோர் பழங்கால இந்தியாவில் நடைமுறைப்படுத்தி காட்டியுள்ளனர். (3) நவீன சமுதாயத்தின் பிரச்சனைகளுக்கு நம்மால் விடை கொடுக்க முடியும். (4) மக்களிடையே ஊடுருவிச் சென்று அவர்களின் பேராதரவினைப் பெற இயலும். (5) நம்முடைய தத்துவங்களை இளைஞர்களிடம் எளிதில் கொண்டு செல்ல முடியும், அவர்களால் பல்வேறு பணிகளைச் செய்ய முடியும்.
தீமைகள்: (1) பதவியானது இயக்கத்தைக் கெடுத்து விடலாம். (2) தற்போது நாம் உலகிலிருந்து விலகி உள்ளோம். ஆயினும், உலக விஷயங்களில் நேரடியாக ஈடுபடுவது என்பது மற்ற இடங்களிலிருந்து பிரச்சனைகளைக் கொண்டு வரலாம். (3) உள்நோக்கம் கொண்டவர்களால் இஸ்கான் பக்தர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
நம்மால் என்ன செய்ய இயலும்
தெளிந்த பார்வை, உயரிய நோக்கம், மற்றும் உண்மையான நற்குணங்களைக் கொண்ட வலுவான தலைவர்கள் இவ்வுலகிற்கு அவசியம். எந்த நிறுவனத்தினால் அத்தகு தலைவர்களை உருவாக்க இயலும்? நமது தற்போதைய அரசியல் தலைவர்கள் அத்தகைய தலைமையை கொடுப்பதற்குத் தகுதியற்றவர்களாக உள்ளனர். பக்தர்கள் பௌதிக மயக்கத்திலிருந்து விடுபட்டவர்கள். அவர்கள் பெயர், புகழ், பணம் போன்ற ஆசைகளிலிருந்து விடுபட்டவர்கள். அதனால் பக்தர்களால் மட்டுமே இவ்வுலகில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
இவ்வுலகம் நம்முடைய அழகிய கோயில்கள், திருவிழாக்கள், மற்றும் நிகழ்ச்சிகளைக் கண்டுள்ளது. இஸ்கான் பக்தர்கள் சமுதாயத்திற்கு நன்மை பயக்கக்கூடிய பல்வேறு இதர காரியங்களை செய்யத் தொடங்கி உள்ளனர். உதாரணமாக, கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட சமுதாயங்கள், வர்ணாஷ்ரம சமுதாயங்கள், பசு பராமரிப்பிற்கான நிகழ்ச்சிகள், பிரசாத விநியோகம், ஆன்மீகக் கல்வி வழங்குதல், நதிகளையும் சுற்றுச்சூழலையும் பராமரித்தல் என பலவற்றிலும் இஸ்கான் பக்தர்களின் பங்களிப்பு உள்ளது. இந்த முயற்சிகளை பெருமளவில் எடுத்துச் செல்ல வேண்டுமெனில், அதற்கு அரசியல் ஆதரவும் அவசியம்.
பக்தர்கள் அரசியல் தளத்தில் மேலும் தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும் என்னும் என்னுடைய விருப்பத்துடன் நீங்கள் ஒத்துவருவதாக இருந்தால் நாம் இதுகுறித்து மேலும் விவாதிக்கலாம். (indrakrishnadas.jps@gmail.com) பக்தர்கள் ஒன்றாக இணைந்து பல்வேறு நாடுகளில் அரசியல் கட்சிகளைத் தொடங்க வேண்டும், அல்லது நமது கொள்கைகளுக்கு ஒத்துவரக்கூடிய கட்சிகளுடன் உறவு கொள்ள வேண்டும். அதன் மூலமாக, அரசாங்கத்தில் நம்முடைய பங்களிப்பு என்பது இருக்கும். வெற்றி என்பது உடனடியாக வந்துவிடாது. ஆம். ஆனால் நாம் தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர், நம்மால் அந்த மாற்றத்தைக் கொடுக்க இயலும்.
பக்தர்களாகிய நாம் இந்த பூமியையும் இதில் வசிப்பவர்களையும் காப்பாற்ற விரும்புகிறோம். ஒன்றாக இணைந்து பொதுவான குறிக்கோளை நோக்கி வேலை செய்ய முயல்பவர்களுக்கு இஃது ஒரு வாய்ப்பாகும். கருணை உள்ளம் கொண்டு பொறுப்பு உள்ளம் கொண்டு அரசியலை நாம் அணுகலாம். அத்தகைய அரசியல், பிரித்தாளக் கூடிய அரசியலுக்கும், தவறான தகவல்களை கொடுத்து ஆட்சி செய்யும் அரசியலுக்கும், என்னுடைய வழியே சிறந்த வழி என்று செயல்படும் அரசியலுக்கும் ஒரு மாற்றாக அமையும்.
நாம் அரசியலை கிருஷ்ண உணர்வை அடிப்படையாகக் கொண்டு அணுகலாம். மேலும், அந்த உணர்வின் அடிப்படையில் உறவுகள் ஏற்படுத்தப்படலாம். அந்த உறவுகள் ஒவ்வொரு குறிப்பிட்ட நபர்களுக்கு மத்தியிலும், மக்களின் மத்தியிலும், இந்த பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கு மத்தியிலும் ஏற்படுத்தப்பட முடியும். இறுதியாக, அந்த உறவினை கடவுளுக்கும் மக்களுக்குமிடையில் ஏற்படுத்த முடியும்.
இந்திர கிருஷ்ண தாஸ் அவர்கள், ஐஐடி காரக்பூரில் பட்டம் பெற்று ஐஐடி டில்லியில் மேற்பட்டம் பெற்றவர். அவர் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்த்த அனுபவம் கொண்டவர்.