வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
தற்போதைய உலகில் ஆன்மீகம் அழிந்து வருகிறது; இருப்பினும், உண்மையான ஆன்மீகத்தை வழங்கி மனித சமுதாயத்தைக் காப்பாற்றுவதே கிருஷ்ண பக்தி இயக்கத்தின் மிக முக்கிய குறிக்கோளாகும். மனித சமுதாயம் ஆன்மீக அறிவற்ற தலைவர்களால் தவறாக வழிநடத்தப்பட்டு வருகிறது. தன்னையறிவதும் தனக்கும் முழுமுதற் கடவுளுக்கும் இடையிலான உறவை வளர்த்துக் கொள்வதுமே மனித வாழ்வின் குறிக்கோள் என்பதை இத்தலைவர்கள் அறிவதில்லை. அக்குறிக்கோள் பற்றிய விழிப்புணர்வை வழங்குவதற்கு எமது கிருஷ்ண பக்தி இயக்கம் முயன்று வருகிறது.
சேவை செய்தல்
வேத அறிவின் அஸ்திவாரமாக அனைத்து ஆன்மீகவாதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள பகவத் கீதையிலிருந்து, மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து உயிர்வாழிகளுமே கடவுளின் அம்சங்கள் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். கைகள், கால்கள், காதுகள் போன்ற உறுப்புகள் அதனுடன் தொடர்புடைய முழு உடலுக்கு சேவை செய்வதைப் போல, கடவுளின் அம்சங்களாகிய நாம் (உயிர்வாழிகள்) அவருக்கு சேவை செய்ய கடமைப்பட்டுள்ளோம்.
உண்மையில், நாம் ஒவ்வொருவரும் யாராவது ஒருவருக்கு (குடும்பத்திற்கு, தேசத்திற்கு அல்லது சமுதாயத்திற்கு) எப்பொழுதும் சேவை செய்து கொண்டுள்ளோம். எவரும் இல்லாவிடில், நாய், பூனை போன்ற வளர்ப்பு மிருகங்களுக்கு சேவை செய்கிறோம். நமது உண்மையான நிலை சேவை செய்வதே என்பதை இவை நமக்கு உணர்த்துகின்றன. நம்மால் முடிந்த வரை நன்றாக சேவை செய்தாலும் நாம் திருப்தியடைவதில்லை, நமது சேவையை ஏற்றவர்களும் திருப்தியடைவதில்லை; அனை வரும் விரக்தியுடனே இருக்கின்றனர். செய்யப்படும் சேவையானது சரியான வழியில் செல்லாததே இதற்கு காரணம். உதாரணமாக, மரத்திற்கு சேவை செய்ய விரும்பினால், இலைகளுக்கும் கிளைகளுக்கும் கொம்புகளுக்கும் நீரூற்றுவதால் முழுபலன் கிடைக்காது; வேருக்கு நீரூற்ற வேண்டும். அதுபோல, முழுமுதற் கடவுளுக்கு சேவை செய்வதால் அனைவரும் திருப்தியடைவர்; பொதுநலத் தொண்டுகள், சமூகம், குடும்பம், மற்றும் தேசத்திற்கான தொண்டுகள் என அனைத்துமே முழுமுதற் கடவுளுக்கு சேவை செய்வதன் மூலம் அடையப்படுகிறது.
நமக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு
நமக்கும் இறைவனுக்கும் இடையிலான உறவு மட்டுமே உண்மையான உறவு என்பதைப் புரிந்து கொண்டு அதன்படி நடப்பதே நமது கடமை; அவ்வாறு நாம் செயல்பட்டால் நமது வாழ்க்கை வெற்றியடையும். ஆனால் சில சமயங்களில், கடவுள் இல்லை”, நானே கடவுள்”, கடவுளைப் பற்றி எனக்குக் கவலையில்லை” என்று சிலர் சவால் விடுவதும் உண்டு. இவ்வாறு சவால் விடுவதால் யாரும் காப்பாற்றப்படப் போவதில்லை. கடவுள் இருப்பதை ஒவ்வொரு கணமும் நம்மால் காண முடியும். வாழும்பொழுது கடவுளை ஏற்க மறுத்தால், கொடூரமான மரணத்தின் வடிவில் அவர் நம்முன் தோன்றுவார். நாம் அவரை ஒரு குறிப்பிட்ட உருவத்தில் காண விரும்பாவிடில், வேறோர் உருவத்தில் அவரை நாம் காண வேண்டிவரும். விஸ்வரூபத்தின் மூல காரணமாகத் திகழும் முழுமுதற் கடவுளுக்குப் பல்வேறு ரூபங்கள் உள்ளன. வேறுவிதமாகக் கூறினால், அவரிடமிருந்து யாரும் தப்பிக்க முடியாது.
இந்த அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் கண்மூடித்தனமான மதவெறியோ புரட்சிகரமான புதிய அமைப்போ அல்ல. மாறாக, உன்னத அனுபவிப்பாளரான முழுமுதற் கடவுளுடனான நமது நித்திய உறவை அறிய உதவும் விஞ்ஞானபூர்வமான முயற்சியாகும். இறைவனுடனான நமது நித்திய உறவைப் பற்றியும் அவருக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றியும் இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் விளக்குகின்றது. இப்பிறவியிலேயே உயர்ந்த பூரணத்துவத்தை அடைய கிருஷ்ண உணர்வு உதவுகின்றது.
பல்வேறு உடல்களைக் கடந்த பின்னர், பரிணாம வளர்ச்சியில் ஆத்மா மனித உடலை அடைந்துள்ளது என்பதை நாம் எப்போதும் நினைவிற்கொள்ள வேண்டும். விலங்குகளைக் காட்டிலும் மனித உடலில் இருக்கும்போது, பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு எளிதாகத் தீர்வு காண முடியும். நாய்கள், பன்றிகள், ஒட்டகங்கள், கழுதைகள் என மற்ற விலங்குகளுக்கும் நம்மைப் போலவே பொருளாதாரப் பிரச்சனைகள் உண்டு. ஆனால் அவற்றின் பொருளாதாரத் தேவைகள் அடிப்படையானவை; மாறாக, மனிதர்களுக்கோ மிகவும் வசதியாக வாழ்வதற்கேற்ற வாய்ப்புகள் இயற்கையின் நியதிப்படி கொடுக்கப்பட்டுள்ளன.
மனிதர்களின் கடமை
பன்றிகள் அல்லது மற்ற மிருகங்களைக் காட்டிலும் சிறப்பான வசதிகள் மனிதர்களுக்கு ஏன் கொடுக்கப் பட்டுள்ளன? சாதாரண குமாஸ்தாவைக் காட்டிலும் பெரிய பதவியிலுள்ள அரசாங்க ஊழியருக்கு சிறந்த வசதிகள் ஏன் கொடுக்கப்பட்டுள்ளன? இதற்கான விடை மிகவும் எளிமையானதாகும்: சாதாரண குமாஸ்தாவைக் காட்டிலும் ஓர் உயரதிகாரி மிகுந்த பொறுப்புள்ள கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார். அதுபோலவே எப்போதும் தனது வயிற்றுப்பசியைத் தீர்ப்பதற்காக சுறுசுறுப்புடன் இயங்கும் விலங்குகளைவிட மனிதர்களுக்குப் பொறுப்பான கடமைகள் உள்ளன. ஆனால் மிருகத்தனமான நவீன நாகரிகம், வயிற்றை நிரப்பும் பிரச்சனையை அதிகமாக்கிவிட்டது. மிருகங்களைப் போல வாழும் மனிதர்களிடம் ஆன்மீக வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று அணுகினால், கடவுளைப் பற்றி அறிய வேண்டிய அவசியம் இல்லையென்றும் வயிற்றுக்காக மட்டுமே உழைக்க விரும்புவதாகவும் பதிலுரைக்கின்றனர். உழைப்பதற்கு அவர்கள் ஆவலுடன் உள்ளபோதிலும், வேலையில்லாத் திண்டாட்டமும் இயற்கையின் நியதிகளால் ஏற்படும் இதர இன்னல்களும் மறையவில்லை. இன்னல்களுக்கு மத்தியிலும் கடவுளைப் பற்றிய உண்மைகளை ஒப்புக் கொள்ளாமல் பகிரங்கமாக கண்டனம் தெரிவிக்கின்றனர்.
இந்த மனித உடல் வாழ்வின் பூரணத்துவத்தை அடைவதற்காகவே நமக்கு அளிக்கப்பட்டுள்ளது; நாய்களையும் பன்றிகளையும் போன்று கடினமாக உழைப்பதற்காக அல்ல. பூரணத்துவத்தை அடைவதில் விருப்பமின்றி இருப்போர், இயற்கையின் பலவந்தத்தின்படி கடினமாக உழைக்க வேண்டிவரும். கலி யுகத்தின் இறுதி நாள்களில் மக்கள் ஒருபிடி உணவிற்காக கழுதையைப் போல உழைப்பர் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலை இப்போதே ஆரம்பமாகிவிட்டது. குறைந்த கூலிக்கு அதிக நேரம் உழைக்க வேண்டியநிலை வருடந்தோறும் மோசமாகிக் கொண்டே போகும்; இருப்பினும், கழுதையைப் போல கடினமாக உழைக்க வேண்டிய அவசியம் மனிதனுக்கு இல்லை. மனிதன் அவனுக்குரிய கடமைகளைச் செய்யாவிடில், இயற்கையின் சட்டத்தால் கீழ்நிலை உயிரினங்களுக்குத் தள்ளப்படுகிறான்.
மனித உடல் என்னும் படகு
நித்தியமான வாழ்வை அடைவதற்கு மனித உடல் ஒரு சிறந்த சாதனமாகும். இது பௌதிக வாழ்க்கை என்னும் அறியாமைக் கடலைக் கடந்து செல்ல உதவும் கிடைத்தற்கரிய படகாகும். இப்படகு ஆன்மீக குரு என்னும் மிகச்சிறந்த படகோட்டியால் இயக்கப்படுகிறது, தெய்வீக அருள் என்னும் சாதகமான காற்றினால் நீரில் முன்னோக்கிச் செல்கின்றது. இத்தகு மங்களகரமான சூழ்நிலையில் அறியாமைக் கடலைக் கடப்பதற்கான வாய்ப்பினை யார் நழுவ விடுவர்? இந்த நல்வாய்ப்பினைத் தவறவிடுபவன், தற்கொலை செய்துகொள்பவனாக அறியப்பட வேண்டும்.
ரயிலின் முதல் வகுப்புப் பெட்டியில் அதிக வசதிகள் இருப்பது உண்மையே; இருப்பினும் சேர வேண்டிய இடத்தை நோக்கி ரயில் செல்லவில்லையெனில், குளிர்சாதன வசதியினால் என்ன இலாபம்? தற்போதைய நாகரிகம் வசதியான வாழ்விற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது, முழுமுதற் கடவுளிடம் திரும்பிச் செல்வதே வாழ்வின் உண்மையான குறிக்கோள் என்பதைக் கண்டு கொள்வதில்லை. வசதியான பெட்டியில் வெறுமனே அமர்ந்திராமல், ரயில் அதன் இலக்கை நோக்கி நகர்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். ஆன்மீக வாழ்வை மீண்டும் அடைவதே வாழ்வின் முக்கியத் தேவை என்பதை மறந்து, பௌதிக வாழ்வை வசதியாக்கிக் கொள்வதில் எந்தப் பலனும் இல்லை. மனித உடல் என்னும் படகு, ஆன்மீக இலக்கை நோக்கி முன்னேறுவதற்குத் தகுந்தாற்போல அமைக்கப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக பௌதிக உணர்வு என்னும் நங்கூரத்துடன் ஐந்து கயிறுகளால் இவ்வுடல் கட்டப்பட்டுள்ளது. அவை: (1) ஜடவுடலின் மீதான பற்றுதல் (2) உறவினர்களின் மீதான பற்றுதல்
(3) பிறந்த மண்ணின் மீதும் பௌதிக உடைமைகளான வீடு, நிலம், வியாபாரம் போன்றவற்றின் மீதான பற்றுதல் (4) பௌதிக விஞ்ஞானத்தின் மீதான பற்றுதல் (5) முழுமுதற் கடவுளைப் பற்றியும் அவரது தூய பக்தர்களைப் பற்றியும் அறிந்துகொள்ளாமல் மதச் சடங்குகளின் மீது வைக்கப்படும் பற்றுதல்.
மனித உடல் என்னும் படகை பந்தப்படுத்தியுள்ள இந்த பற்றுதல்களைப் பற்றி பகவத் கீதையின் பதினைந்தாம் அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளது. ஆழமாக வேரூன்றிய வண்ணம் பூமியில் தனது பிடியை எப்போதும் அதிகரித்துக் கொண்டிருக்கும் ஆலமரத்திற்கு இஃது ஒப்பிடப்படுகிறது. அத்தகு ஆலமரத்தை வேரோடு எடுப்பது மிகவும் கடினமான காரியம், ஆனால் பகவானின் பரிந்துரை என்னவெனில், இம்மரத்தின் உண்மை உருவம் இவ்வுலகில் காணப்படக்கூடியதல்ல. இஃது எங்கே முடிகின்றது, எங்கே தொடங்குகின்றது, அல்லது இதன் அஸ்திவாரம் எங்கே இருக்கின்றது என்பதை யாராலும் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் பலமாக வேரூன்றியுள்ள இந்த மரத்தை பற்றின்மை எனும் ஆயுதத்தால் உறுதியுடன் வெட்டிச் சாய்க்க வேண்டும். அதன் பின்னர், எங்கே செல்வதால் மீண்டும் திரும்பி வருவதில்லையோ, அந்த இடத்தை நாடி, அங்கே, யாரிடமிருந்து அனைத்தும் தொடங்குகின்றதோ, யாரிடமிருந்து எல்லாம் விரிவடைகின்றதோ, அந்த பரம புருஷ பகவானிடம் சரணடைய வேண்டும்,” (பகவத் கீதை 15.3-4)
ஆன்மீக உலகை அடைதல்
தனது படைப்புகளைப் பற்றி பூரணமாக அறிந்துள்ள முழுமுதற் கடவுள், துன்பமயமான வாழ்வை விட்டு வெளியேறுவதற்கான விருப்பமே நமது சிறந்த விருப்பம் என்று கூறுகிறார். பௌதிகப் பொருள்களிலிருந்து நாம் நம்மை முற்றிலும் விலக்கிக் கொள்ள வேண்டும், மோசமான நமது நிலையை சாதகமாக மாற்றிக் கொள்ள நூறு சதவிகிதம் ஆன்மீகத்தில் ஈடுபட வேண்டும். இரும்பும் நெருப்பும் ஒன்றல்ல; ஆனால், இரும்பு நெருப்புடன் தொடர்ந்து இருந்தால் அதுவும் நெருப்பாக மாறுகிறது. அதுபோலவே, பௌதிகச் செயல்களிலிருந்து விடுபடுதல் என்பது ஆன்மீகச் செயல்களில் ஈடுபடுவதால் மட்டுமே சாத்தியமாகும், செயலற்ற தன்மையால் அல்ல. செயலற்ற தன்மை என்பது பௌதிகச் செயல்பாட்டின் எதிர்நிலையாகும். ஆன்மீகமாகச் செயல்படுவது என்பது பௌதிகமாகச் செயல்படாமலிருப்பதோடு மட்டுமின்றி நமது உண்மையான இயற்கையைத் தட்டி எழுப்புவதுமாகும். ஆன்மீக உலகை அடைவதிலும் நித்தியமான வாழ்வைத் தேடுவதிலும் நாம் ஆவலுடன் இருக்க வேண்டும். நித்தியமான ஆன்மீக உலகங்களுக்குச் செல்பவர்கள் திரும்பி வருவதில்லை என பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது. அந்த ஆன்மீக உலகங்களே பகவானின் இருப்பிடமாகும்.
நமது பௌதிக வாழ்க்கை எப்போது தோன்றியது என்பதை நம்மால் அறிய முடியாது, பந்தப்பட்ட நமது பௌதிக நிலையை அறிந்துகொள்ள முயல்வதும் அவசியமற்றதாகும். நினைவிற்கெட்டாத காலத்திலிருந்து தொடர்ந்து வரும் இந்த பௌதிக வாழ்க்கையை உணர்ந்து காரணங்களுக்கெல்லாம் காரணமான பகவானிடம் சரணடைவதே நமது கடமை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பரம புருஷ பகவானிடம் சரணடைவதற்குத் தேவையான அடிப்படை குணங்களைப் பற்றி பகவத் கீதையில் (15.5) பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: பொய் கௌரவம், மயக்கம் மற்றும் தவறான சங்கத்திலிருந்து விடுபட்டு, நித்தியத்தைப் புரிந்து கொண்டு, பௌதிக காமத்தை நிறுத்திவிட்டு, இன்ப துன்பம் என்னும் இருமையை ஒழித்து, மயக்கமின்றி இருப்பவர்கள், பரம புருஷரிடம் சரணடைவது எவ்வாறு என்பதையறிந்து, அந்த நித்திய இருப்பிடத்தை அடைகின்றனர்.” எவரொருவர் தனது பௌதிக இயற்கையிலிருந்து விடுபட்டு, ஆன்மீக இயற்கையில் நம்பிக்கை கொண்டு, மயக்கத்திலிருந்து விடுபட்டு, முக்குணங்களுக்கு அப்பாற்பட்டு, தெய்வீக ஞானத்தைப் புரிந்துகொள்வதில் ஈடுபட்டு, புலனின்பத்தை முற்றிலும் துறந்துள்ளாரோ, அவர் பரம புருஷ பகவானிடம் செல்ல முடியும். அவரை
அமூடா என்பர். மூடா என்றால் முட்டாள் என்று பொருள்; அமூடா என்பவர் இருமைகளிலிருந்து விடுபட்டவர். பகவானுடைய இருப்பிடத்தின் தன்மைகள் யாவை? எனது அந்த பரம வாசஸ்தலம் சூரியனாலோ சந்திரனாலோ நெருப்பினாலோ மின் சாரத்தாலோ ஒளியூட்டப்படுவது இல்லை. அதனை அடைபவர்கள் ஒருபோதும் இந்த ஜடவுலகிற்குத் திரும்புவதில்லை.” (பகவத் கீதை 15.6)
ஒளிமயமான உலகம்
எல்லாவற்றிற்கும் உரிமையாளர் இறைவனே என்பதால், படைப்பு முழுவதும் அவரது இருப்பிடமே; இருப்பினும், அவரது சொந்த இருப்பிடம் நாம் வசிக்கும் இவ்வுலகைவிட முற்றிலும் வேறுபட்டதாகும். அஃது ஓர் உன்னத இருப்பிடம். நமது பூமியில்கூட வாழ்க்கைத்தரம் உயர்ந்த நாடுகள், வாழ்க்கைத்தரம் குறைந்த நாடுகள் என்று உள்ளன. பூமியைத் தவிர பல்வேறு கிரகங்கள் இப்பிரபஞ்சத்தில் பரவிக் கிடக்கின்றன. அவற்றில் சில உயர்ந்த கிரகங்கள் என்றும், சில தாழ்ந்தவை என்றும் அறியப்படுகின்றன. பகவானின் வெளிப்புற சக்தியான இந்த ஜடவுலகம், ஓர் இருள் நிறைந்த பிரதேசம் என்பதால், உயிரினங்கள் வாழ சூரியன் அல்லது நெருப்பின் ஒளி தேவைப்படுகிறது. பௌதிக உலகங்களுக்கு அப்பால் இருக்கும் ஆன்மீக உலகம், முழுமுதற் கடவுளின் உயர்சக்தியால் இயங்குகிறது. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மின்சாரம், நெருப்பு போன்ற ஒளிரும் பொருள்களின் அவசியம் அங்கு இல்லை, ஆன்மீக உலகங்கள் ஆன்மீக ஒளியின் பிரதிபலிப்பால் ஒளியூட்டப்படுகின்றன. ஆன்மீக இயற்கை சுய பிரகாசமுடையதால் அடர்ந்த இரவிலும் பிரகாசமான ஒளியைக் காணலாம்,” என்று ஆன்மீக உலகங்களைப் பற்றி உபநிஷத்துகள் விவரிக்கின்றன.
பௌதிக, ஆன்மீக உலகங்கள் பிரம்மஜோதியின் பிரகாசத்தினால் ஒளியூட்டப்படுகின்றன. இருப்பினும், பரதனே, அந்த பிரம்மஜோதியானது எனது உடலின் பிரகாசமே என்பதை அறிவாயாக,” என்று ஆன்மீக இயற்கையைப் பற்றி ஹரி வம்சத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. பிரம்ம சம்ஹிதையும் இதனை உறுதி செய்கிறது. பௌதிக விண்கலன்களின் உதவியால் ஆன்மீக லோகங்களை அடையலாம் என்று எண்ண வேண்டாம். கிருஷ்ண லோகத்தை அடைந்தவர் தடையில்லாத ஆன்மீக ஆனந்தத்தை அடைவது உறுதி. தவறிழைக்கக்கூடிய உயிரினங்களாகிய நாம் இரண்டு நிலைகளில் வாழலாம்: ஒன்று, பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் போன்ற துயரங்கள் நிறைந்த பௌதிக இயற்கை; மற்றொன்று, அறிவும் ஆனந்தமும் நிறைந்த நித்தியமான தடையற்ற வாழ்வை வழங்கும் ஆன்மீக இயற்கை. பௌதிக இயற்கையில் இருக்கும்போது, ஜடவுடலாலும் மனதாலும் நாம் ஆளப்படுகிறோம். ஆனால், ஆன்மீக இயற்கையில் பரம புருஷருடனான திவ்யமான உறவில் நாம் எப்பொழுதும் ஆனந்தமாக வசிக்கலாம், அங்கு பரம புருஷர் நம்மைவிட்டுப் பிரிவதே இல்லை.
முழு கவனம் செலுத்துவோம்
ஆன்மீக இயற்கையை மக்கள் மத்தியில் கொண்டுவர இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் முயற்சி செய்து வருகிறது. பௌதிக உணர்வில் இருக்கும் நாம் புலனின்பத்தை அடிப்படையாகக் கொண்ட பௌதிக வாழ்வில் கவரப்படுகிறோம். அத்தகு பௌதிக எண்ணம், கிருஷ்ண உணர்வில் (பக்தித் தொண்டில்) ஈடுபடும்போது உடனடியாக நீக்கப்படுகிறது. பக்தித் தொண்டின் நியமங்களை ஏற்றுக்கொள்பவர், பௌதிக வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும், ஸத்வ, ரஜோ, தமோ குணங்களிலிருந்து விடுதலை பெற்று, திவ்யமான தளத்தினை உடனடியாக அடைகின்றனர். பௌதிக வாழ்வில் ஈடுபட்டுள்ளோர் கிருஷ்ண பக்தி இயக்கத்தின் புத்தகங்களிலிருந்தும் பகவத் தரிசனத்தின் பக்கங்களிலிருந்தும் அபரிமிதமான பலனைப் பெறலாம். இந்த இலக்கியங்கள் பௌதிக வாழ்வு என்னும் வேரூன்றிய ஆலமரத்தினைத் தகர்க்க உதவுகின்றன. பௌதிகத்துடன் இணைந்த வாழ்வைத் துறந்து ஆன்மீக அமிர்தத்தை சுவைப்பதற்கு அவை நமக்குப் பயிற்சியளிக்கின்றன. பக்தித் தொண்டால் மட்டுமே இவை சாத்தியமாகும். பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளவர், வாழ்ந்து கொண்டிருக்கும்போதே முக்தி பெற்றவராவார். பெரும்பாலான ஆன்மீக முயற்சிகளில் பௌதிக வாசனை கலந்துள்ளது. ஆனால், தூய பக்தித் தொண்டு பௌதிகக் களங்கங்களுக்கு அப்பாற்பட்ட திவ்யமான ஒன்றாகும். முழுமுதற் கடவுளிடம் செல்ல விரும்புவோர் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நியமங்களைக் கடைபிடித்து ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகளில் முழு கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.