வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்
இந்த இதழில்: மூன்றாம் காண்டம், மூன்றாம் அத்தியாயம்
சென்ற இதழில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பெருமைகளையும் அவரது விருந்தாவன லீலைகளையும் உத்தவர் விதுரரிடம் சுருக்கமாக விவரித்ததைக் கண்டோம். இவ்விதழில் மதுரா மற்றும் துவாரகாபுரியில் நிகழ்ந்த அவரது லீலைகளைக் காண்போம்.
ஸ்ரீ கிருஷ்ணரின் திருமண வைபவங்கள்
உத்தவர் தொடர்ந்து விதுரரிடம் பேசலானார்: பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ பலதேவருடன் விருந்தாவனத்திலிருந்து மதுராவிற்கு சென்றார். அங்கு தம் பெற்றோரான தேவகி மற்றும் வசுதேவருக்கு பெருந்துன்பம் விளைவித்து வந்த கொடிய அரக்கனான, தம் தாய்மாமன் கம்சனை வதம் செய்தனர். பின்பு தம் பெற்றோரின் விருப்பத்திற்கிணங்க சாந்தீபனி முனிவரிடம் எல்லா வேதங்களையும் ஒரே முறை கேட்டதாலேயே கற்றறிந்தனர். மேலும் அவரது மகனை எமலோகத்திலிருந்து மீட்டுவந்து குரு தட்சிணையாக பரிசளித்தனர்.”
சிசுபாலனைப் போன்ற இளவரசர்களை வென்று, ருக்மிணிதேவியின் அன்பு வேண்டுகோளுக்கிணங்கி அவளைக் கடத்தி வந்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவளை மணந்தார்.
மூக்கணாங்கயிறு பூட்டப்படாத ஏழு முரட்டுக் காளைகளை அடக்கிய பகவான் கிருஷ்ணர் நாக்னஜிதி இளவரசியை மணந்தார். அச்சமயத்தில் அதைப் பொறுக்க இயலாத மற்ற இளவரசர்களை போரில் படுதோல்வி அடையச் செய்தார்.
பிரிய மனைவியான சத்யபாமாவின் தூய பக்திக்கு பரிசாக, ஸ்வர்க லோக பாரிஜாத மரத்தை இந்திரனை வென்று கொண்டு வந்து தந்தார்.
தீய சகவாசத்தால் அசுர குணங்களில் சிக்கிய நரகாசுரன் 16,100 இளவரசிகளை சிறைப்படுத்தியிருந்தான். தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி அவனைக் கொன்ற பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அந்த இளவரசிகள் ஒவ்வொருவருக்கும் பொருத்தமாக தமது உடலை வெவ்வேறாக விரிவடையச் செய்து கொண்டார். தமது அந்தரங்க சக்தியின் மூலமாக முழுமையான வேத சடங்குகளுடன் அவர்களை மணம் செய்து கொண்டார்.
அசுரவதம்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தாமே அசுரர்களைக் கொல்வதோடு சில சமயங்களில் தம் பிரிய பக்தர்கள் மூலம் அசுரர்களை வதம் செய்கிறார். இதனால் தம் பக்தர்களின் புகழினை அதிகரிக்க செய்கிறார். உதாரணமாக, முசுகுந்தனைக் வைத்து காலயவனனை அழித்தார். பீமசேனரைக் வைத்து ஜராசந்தனைக் கொன்றார். பாண்டவர்கள் மூலம் குருக்ஷேத்திர போரில் ஆயிரக்கணக்கான அசுரர்களைக் கொன்று குவித்தார். பிரத்யும்னரை வைத்து சம்பராசுரனைக் கொன்றார். துவிதன், பல்வலன், பிரலம்பன் போன்ற அசுரர்களை பலராமர் மூலமாக கொன்றார்.
யுதிஷ்டரரின் ஆட்சி
எல்லா அசுரர்களையும் அழித்துவிட்டு தர்மபுத்திரரான யுதிஷ்டிரரிடம் கிருஷ்ணர் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தார். பகவானின் திருப்திக்காக யுதிஷ்டிர மகாராஜர் மூன்று அஸ்வமேத யாகங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சிக் காலத்தில் மக்கள் எல்லா நலன்களையும் வளங்களையும் பெற்று மகிழ்ச்சியுடனும் அமைதியுடனும் வாழ்ந்தனர். அனைத்து கிராமங்களும் நகரங்களும் எல்லா வகைகளிலும் செழிப்புடன் விளங்கின. ஏனெனில், தானியங்களும் மூலிகைகளும் ஏராளமாக விளைந்தன. மரங்களில் பூக்களும் பழங்களும் நிறைந்திருந்தன. நதிகள் தூய நீருடன் அழுகுற ஓடின. மலைகளில் கனிமங்களும் கடல்களில் செல்வங்களும் நிரம்பியிருந்தன. பகவான் கிருஷ்ணரின் கருணையால் இவை எளிதில் சாத்தியமாகியிருந்தன.
துரோணரின் மகனான அஸ்வத்தாமன் அபிமன்யுவின் மனைவி உத்தரையின் கர்ப்பத்திலிருந்த பரீட்சித்து மகாராஜனைக் கொல்வதற்காக பிரம்மாஸ்திரம் ஏவினான்; அதிலிருந்து அக்குழந்தையை பகவான் காப்பாற்றினார்.
துவாரகையில் கிருஷ்ணர்
யுதிஷ்டிர மகாராஜர், பூவுலகின் சக்ரவர்த்தியாக விளங்கிய அதேசமயம் துவாரகாபுரியின் அரசராக திகழ்ந்த பகவான் கிருஷ்ணர் துவாரகாதீசர் என புகழப்பட்டார். வேதக் கொள்கைகள் மனித வாழ்விற்கு வழிகாட்டியாக விளங்குவதால் பகவான் பூமியில் வாழ்ந்த காலத்தில் அவற்றை மீறியதேயில்லை. அவர் வேதமுறைப்படி இல்வாழ்வில் இன்பம் துய்த்தார். பகவானின் உன்னத உடல் அதிர்ஷ்ட தேவதையான லக்ஷ்மியின் வசிப்பிடமாகும். அவர் தம் வழக்கமான இனிய புன்னகை பூத்த முகத்துடனும் அமுத மொழிகளுடனும் குறையற்ற குணத்துடனும் விளங்கினார்.
பகவான் தம் தூய பக்தர்களான யாதவர்களோடு இவ்வுலகில் இன்பம் அனுபவித்தார். அவருடைய அந்தரங்க சக்திகளான துவாரகா இராணிகளுடன் மாதுர்ய அன்பை அனுபவித்தார். ஜகத் குருவான அவர் இல்லற வாழ்வை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதை பிறருக்கு போதிப்பதற்காக பற்பல ஆண்டுகள் ஓர் இல்லறவாசியாக வாழ்ந்தார். அதுபோலவே இல்லற வாழ்வில் ஒருவன் தொடர்ந்து பற்றுக் கொண்டிருக்கக் கூடாது என்பதை உபதேசிக்க பகவான் துறவை வெளிப்படுத்தினார். தூய பக்தர்களால் மட்டுமே பகவானின் லீலைகளின் உன்னத தன்மையைப் புரிந்துகொள்ள முடியும். பக்தியற்றவர்களால் பகவானைப் புரிந்துகொள்வது இயலாததாகும்.
பிரபாஸ க்ஷேத்திரத்தில் யதுக்கள்
தம் லீலைகளுக்கு உதவி செய்வதற்காக யது மற்றும் போஜ வம்சத்தில் தோன்றியிருந்த தேவர்களை அவரவர் இருப்பிடத்திற்கு திரும்பியனுப்ப பகவான் திருவுள்ளம் கொண்டார். அதன்படி யது வம்ச அரச குமாரர்களின் விளையாட்டுத்தனமான செயல்களால் கோபமுற்ற முனிவர்கள் அவர்களை சபித்தனர். பகவானின் நித்ய பக்தர்கள் துவாரகையிலேயே தங்கியிருக்க மற்றவர்கள் பிரபாஸ க்ஷேத்திரத்திற்கு சென்றனர்.
அவ்விடத்தை அடைந்த அவர்கள், புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, மூதாதையர்களுக்கும் தேவர்களுக்கும் பெரும் முனிவர்களுக்கும் தர்ப்பணம் செய்தும், சிறந்த பசுக்களை பிராமணர்களுக்கு தானம் செய்தும் திருப்திப்படுத்தினர்.
மேலும், பிராமணர்களுக்கும் வாழ்க்கைக்கு தேவையான தங்கம், தங்கக்காசுகள், படுக்கை, உடை, மிருகத்தோல் ஆசனங்கள், போர்வைகள், குதிரைகள், யானைகள், பெண்கள், போதுமான நிலம் ஆகியவையும் அளிக்கப்பட்டன. அதன் பிறகு, பகவானுக்கு முதலில் அர்ப்பணம் செய்யப்பட்ட அறுசுவை உணவு வகைகளை பிராமணர்களுக்கு அளித்த அவர்கள் தங்கள் சிரங்கள் தரையில் தொடும்படி பணிவுடன் அவர்களுக்கு வணக்கம் செலுத்தினர். பசுக்களையும் பிராமணர்களையும் பராமரித்து பக்குவமாக அவர்கள் வாழ்ந்து வந்தனர்.
இவ்வாறாக விதுரரிடம் விவரித்தபின் உத்தவர், முனிவர்களின் சாபத்தின் விளைவுகளைப் பற்றி மேலும் பேசுவதை அடுத்த இதழில் காணலாம்.
மூன்றாம் அத்தியாயத்தின் பகுதிகள்
- கிருஷ்ணரின் திருமண வைபவங்கள் (1-9)
குரு தட்சிணை
வீரமும் காதலும்
- அசுரவதம் (10-14)
பக்தர்களின் புகழ்
- யுதிஷ்டிரரின் ஆட்சி (15-18)
நல்லாட்சியின் அடையாளம்
பகவானின் கருணை
- துவாரகையில் கிருஷ்ணர் (19-23)
இல்லறமும் துறவறமும்
- பிரபாஸ க்ஷேத்திரத்தில் யதுக்கள் (24-28)
பகவானின் திருவுள்ளம்
தர்ம காரியங்கள்