ஸ்ரீல ஹரிதாஸ தாகூர்
வழங்கியவர்: திருமதி. கீதா கோவிந்த தாஸி
நாமாசாரியர் என்னும் சமஸ்கிருத சொல், நாம, ஆசாரியர் என்னும் இரு சொற்களின் கூட்டுச் சொல்லாகும். நாம என்பது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருநாமத்தைக் குறிக்கும். ஆசாரியர் என்றால் தன்னுடைய நன்னடத்தையின் மூலம் மற்றவர்களுக்கு போதிப்பவர் என்று பொருள். ஸ்ரீ கிருஷ்ணரின் திருநாமத்தை தானும் உச்சரித்து மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுப்பவரை நாமாசாரியர் என்று அழைக்கலாம். பகவான் சைதன்யர் தனது முக்கியமான சீடர்களில் ஒருவரான ஹரிதாஸ தாகூருக்கு இப்பட்டத்தைச் சூட்டி கௌரவித்தார்.
ஹரிதாஸ தாகூர் தற்போதைய சத்-கிரா மாவட்டத்திலுள்ள (முற்காலத்தில் குல்னா பகுதியின் கிளையாக இருந்த) புடான் என்னும் கிராமத்தில் ஓர் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தார். சைதன்ய மஹாபிரபுவைவிட 35 வருடங்கள் மூத்தவரான இவர், வங்காளதேசத்தில் தனது கிராமத்தில் சிலகாலம் வசித்த பின்னர், சாந்தி பூருக்கு அருகிலுள்ள புலியா என்னும் குக்கிராமத்தில் வசிக்கத் தொடங்கினார். அங்கு சிறு வயதிலேயே அத்வைத ஆச்சாரியரின் சங்கம் கிடைத்ததால் பெருமகிழ்ச்சி அடைந்தார், அவரது கருணையால் இஸ்லாமிய மதத்தையும் சமூகத்தையும் பெற்றோரையும் துறந்தார், தலையை மொட்டையடித்து எளிமையான உடையுடுத்தி முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணருடனான தனது நித்திய உறவைப் புதுப்பிக்கும் செயல்களில் ஈடுபடத் தொடங்கினார்.
அவரது புனிதமான பக்தித் தொண்டினை சாதாரண மக்கள் மதமாற்றம் என்ற தவறான கண்ணோட்டத்துடன் பார்த்தனர். பௌதிகமான மதச் செயல்களுக்கும், பகவானுக்குச் செய்யும் ஆன்மீகமான பக்தித் தொண்டிற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. ஹரிதாஸ தாகூர் இஸ்லாமியர்களின் சங்கத்தை விடுத்து பிராமண வாழ்க்கை முறையை மேற்கொண்டபோதிலும், பிராமணக் கொள்கைகளின் மீது அவர் அதிகமாகப் பற்று வைக்கவில்லை. உண்மையில், பல பிராமணர்கள் அவரை வெறுத்தனர். ஹரிதாஸர் சாஸ்திர விதிகளைக் கடைப்பிடிப்பதில்லை என்றும், தத்துவங்களின் வாத விவாதங்களில் கலந்து கொள்வதில்லை என்றும், வெறுமனே குகைகளில் தனியே அமர்ந்து சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார் என்றும், தீண்டத்தகாதவரின் குடும்பத்தில் பிறந்தவர் என்றும், ஜாதியின் அடிப்படையில் தங்களை பிராமணர்களாகக் கூறிக்கொள்பவர்கள் குற்றம் சாட்டினர்.
ஆனால் ஹரிதாஸரோ எந்தவொரு வேற்றுமையும் பார்க்காமல், வழியில் காணும் அனைவருடனும் பழகுவார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எல்லோர் இதயத்திலும் பரமாத்மாவாக இருப்பதை உணர்ந்து, பகவத் கீதையில் (5.18) கூறப்பட்டிருப்பதுபோல, ஒரு பிராமணரையும் நாயையும் சமமாகப் பார்க்கும் உயர்ந்த நிலையில் அவர் இருந்தார்.
ஸர்வ-பூதேஷு சாத்மானம் ததோ ந விஜுகுப்ஷதே “எவனொருவன் தான் காணும் அனைத்தையும் இறைவனுடன் தொடர்புபடுத்திப் பார்க்கிறானோ, எல்லா உயிர்வாழிகளையும் அவருடைய அம்சமாகப் பார்க்கிறானோ, பகவானை எல்லாவற்றினுள்ளும் பார்க்கிறானோ, அவன் எந்தப் பொருளையும் எந்த உயிர்வாழியையும் வெறுப்பதில்லை.” (ஸ்ரீ ஈஷோபநிஷத், மந்திரம் 6)
முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரின் மீது ஹரிதாஸருக்கு இயல்பாகவே இருந்த அன்பினால், தனது உறவுகளைத் துறந்து வாழ்ந்தார்–வெறும் மத மாற்றத்தினால் அல்ல. ஜட ஆசைகளை நிறைவேற்ற ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றி, பின்னர் அதே ஆசைகளுக்காக மற்றொரு மதத்திற்கு மாற்றம் பெறுபவர்களிடமிருந்து இவர் முற்றிலும் வேறுபட்டவர். நெருப்பிலிருந்து எவ்வாறு ஒளியைப் பிரிக்க முடியாதோ, அவ்வாறே பகவானுக்குச் செய்யப்படும் அன்புத் தொண்டை ஜீவன்களிடமிருந்து யாராலும் அழிக்க முடியாது. சநாதன தர்மம் எனப்படும் அந்த அன்புத் தொண்டில் ஹரிதாஸர் ஈடுபட்டார்.
கௌடிய வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஹரிதாஸர், பிரம்மா மற்றும் மஹதபரின் (ருசிக்க முனிவரின் மகன்) இணைந்த அவதாரமாகக் கருதப்படுகிறார். ஒருமுறை மஹதபர் துளசி இலையை கழுவாமல் பகவானுக்கு அர்ப்பணித்தார், அதனால் கோபம் கொண்ட அவரது தந்தை ருசிக்க முனிவர் அவரை மறு பிறவியில் மிலேச்சராகப் (தாழ்ந்த குலத்தவராகப்) பிறக்கும்படி சபித்ததாக கௌர-கணோத் தேஷ தீபிகா (93–95) கூறுகிறது.
பக்திவினோத தாகூர் எழுதியுள்ள நவதீப தாம மஹாத்மியத்தில் பிரம்மா எவ்வாறு ஹரிதாஸ தாகூராக மாறினார் என விளக்கப்பட்டுள்ளது. துவாபர யுகத்தில் கிருஷ்ணர் தனது கோபால நண்பர் களுடன் விளையாடியதைக் கண்ட பிரம்மா, அவரை சோதிக்க நினைத்து கோபர் களையும் கன்றுகளையும் சுமேரு மலையில் ஒளித்து வைத்தார். ஒரு வருடம் கழிந்த பின்பு, பகவான் எப்போதும் போல கோபாலர்களுடனும் கன்றுகளுடனும் இருப்பதைப் பார்த்து தான் செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார். கிருஷ்ணர் கலி யுகத்தில் கௌரங்கராக வருவார் என்பதை அறிந்த பிரம்மா, மீண்டும் தவறிழைத்து விடுவோமோ என்ற பயத்தில், அந்தர்-த்வீபம், அதாவது நவத்வீபத்தின் மத்திய தீவில் சென்று தவம் செய்ய ஆரம்பித்தார். அவரைப் புரிந்து கொண்ட பகவான், தனது கௌர லீலையில் மிலேச்சனாகப் பிறந்து, திருநாமத்தின் பெருமையை பிரச்சாரம் செய்து, அனைத்து உயிர்வாழிகளுக்கும் மங்களம் உண்டாக்குவாய் என கூறினார். இவற்றிலிருந்து, படைக்கும் கடவுளான பிரம்மதேவனின் அவதாரமே ஹரிதாஸ தாகூர் என தெரிகிறது.
ஹரிதாஸ தாகூர் இளம் வயதிலேயே அத்வைத ஆச்சாரியரின் சீடரானார், அவருக்கு ஹரிதாஸர் (கடவுளின் சேவகர்) என்று பெயர் சூட்டி கிருஷ்ணரின் நாமத்தை ஜபித்தால் கருணை கிடைக்கும் என்று அத்வைதர் உபதேசித்தார். அதன்படியே ஹரிதாஸரும் ஹரி நாமத்தை தினமும் மூன்று இலட்சம் முறை ஜபித்து வந்தார். (ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஒருமுறை உச்சரித்தால், அதில் 16 திருநாமங்கள் உள்ளன. 108 முறை ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபித்தால், அஃது ஒரு சுற்று என்று அறியப்படுகிறது. அவ்வாறு 64 சுற்றுகள் ஜபிக்கும்போது, அஃது ஏறக்குறைய ஒரு இலட்சம் நாமங்கள் என்று எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதன்படி ஹரிதாஸர் தினமும் (64×3) 192 சுற்றுகள் ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரித்து வந்தார்.)
ஹரிதாஸருக்கும் அத்வைதருக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பைப் பற்றியும் அத்வைதரின் வீட்டில் ஹரி தாஸர் உண்பது பற்றியும் ஊரெங்கும் பேசப்பட்டது. பிராமண சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் (அத்வைதர்) தாழ்ந்த குல இஸ்லாமியரை (ஹரிதாஸரை) தூர ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற சமுதாயக் கொள்கையை அத்வைதர் கடைப்பிடிக்காமல் இருந்ததால் குழப்பம் உண்டாகியது. உயர்ந்த பிராமண சமுதாயத்திலிருந்து வந்த அத்வைத ஆச்சாரியர், இளம் ஹரிதாஸ தாகூரின் தூய்மையான பக்தியைப் பாராட்டிய காரணத்தினால், அவர் எந்த ஜாதியிலிருந்து வந்தார் என்பதை சிறிதும் பொருட்படுத்தாமல் அவருடன் பழகி வந்தார். ஒருவன் எத்தகைய குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அவன் வைஷ்ணவனாக மாறிவிட்டால், அவனது எல்லா பாவங்களும் உடனடியாக விலக்கப்பட்டு அவன் மிகவும் உயர்ந்த நிலையை அடைகிறான் என்று அத்வைத ஆச்சாரியர் பலமுறை எடுத்துரைத்தார்.
ஹரிதாஸரின் புகழ் எங்கும் பரவியது, அவரின் தரிசனத்திற்காக பல்வேறு பக்தர்கள் வந்தனர். ஆனால் பொறாமை கொண்ட ஜாதி பிராமணர்களோ அப்பகுதியை ஆண்டு வந்த காஜியிடம் புகார் கூற, காஜி ஆளுநரிடம் புகார் கொடுத்தான். இஸ்லாமிய மதத்தில் பிறந்து இந்து மதத்தவனாக செயல்படுவதை கண்டிக்க வேண்டும் என்று நினைத்த ஆளுநர், உடனடியாக ஹரிதாஸரைக் கைது செய்ய உத்தரவிட்டான். ஹரிதாஸரைப் பின்பற்றிய நன்மக்கள் அவரது நிலையைக் கண்டு மிகவும் பயந்தனர், ஆனால் மரண பயம் சற்றும் இல்லாத ஹரிதாஸரோ சிப்பாய்களோடு அமைதியாக சிறைக்குச் சென்றார். சிறையில் ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்த பல்வேறு இந்துக்கள், ஹரிதாஸரைக் கண்ட மகிழ்ச்சியில், அவருடன் இணைந்து பஜனை செய்தனர். அவர்களிடம் ஹரிதாஸர், “எப்போதும் இப்படியே இருங்கள்,” என வாழ்த்தினார். அவர்கள் சற்று குழம்பியதைப் பார்த்தபோது, “இப்போது நீங்கள் பக்தியில் ஈடுபட்டுள்ளீர். சிறையை விட்டு வெளியில் வந்தால், உலக விஷயங்களில் ஈடுபட்டு பகவானை மறந்துவிடுவீர்கள். நீங்கள் எப்போதும் கிருஷ்ணரின் நினைவில் இருக்க வேண்டும். வாழ்வில் எது நடந்தாலும் பகவானின் திருநாமத்தை ஜபம் செய்து கொண்டு அவரை மறக்காமல் இருக்க வேண்டும்,” என்று விளக்கினார்.
ஹரிதாஸர் ஆளுநரின் முன்பு நிறுத்தப்பட்டபோது, அவருடைய தெய்வீக அழகைப் பார்த்து வியந்த ஆளுநர் மிகுந்த மரியாதை கொடுத்து, “என் அன்பு சகோதரனே, கடவுளின் கிருபையால் உயர்ந்த இஸ்லாமிய குலத்தில் பிறந்த நீ ஏன் இப்படி நடக்கிறாய்? கடவுளிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு மீண்டும் இஸ்லாமிய மதத்திற்கு வந்து விடு,” என்று கூறினான். இதைக் கேட்டு பலமாக சிரித்த ஹரிதாஸர், “நீங்கள் பௌதிக விஷயங்களால் மதிமயங்கிய நபரைப் போல பேசுகிறீர்கள். இஸ்லாமியருக்கும் பிராமணர்களுக்கும் பெயரில் மட்டுமே வித்தியாசம் உள்ளது. கடவுள் இத்தகைய பிரிவுகளுக்கு அப்பாற்பட்டவர். அனைத்து மத நூல்களிலும் கடவுளிடத்தில் தூய அன்பை வளர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மதங்களுக்கு அப்பாற்பட்டவனாக, கடவுளின் அன்பை அடைவதே வாழ்வின் மிகவுயர்ந்த குறிக்கோள் என்ற கருத்திற்கு ஏற்ப நான் செயல்பட்டு வருகிறேன். என்னுடைய இந்த நடத்தையில் ஏதேனும் தவறு இருந்தால், எல்லா வழிகளிலும் என்னை தண்டிப்பதற்கு உங்களுக்கு பூரண அதிகாரம் உள்ளது,” என்று கூறினார்.
அங்கு குழுமியிருந்த அனைவரும் ஹரிதாஸரின் இனிமையான பதிலைக் கேட்டு மகிழ்ந்தனர். ஆனால் அசுர குணம் படைத்த ஒருவன், “நம்முடைய புனிதமான மதத்திற்கு களங்கம் வருவதற்குள் இந்த துர்குணம் படைத் தவனை தண்டியுங்கள்,” என்று கூறினான். பக்தர்கள் எவ்வளவு கெஞ்சியும் அவர்கள் ஹரிதாஸரை விடவில்லை. 22 சந்தைகளில் அவரை சாட்டையால் அடித்தனர். ஆனால் எந்த வலியையும் உணராமல், அவர் தொடர்ந்து நாம ஜெபம் செய்து கொண்டிருந்தார். எவ்வளவு அடித்தும் இவர் மரணமடையவில்லையே என்று சிப்பாய்கள் சலித்துக் கொண்டபோது, அவர்களுக்கு கஷ்டம் கொடுக்க வேண்டாம் என எண்ணிய ஹரிதாஸர், மெய்மறந்த நிலைக்குச் சென்றார். அவர் இறந்துவிட்டதாக நினைத்த சிப்பாய்கள் அவரை கங்கையில் வீசினர். புனித கங்கையில் விழுந்த அவர், சற்று தூரம் பயணம் செய்த பின்னர், மயங்கிய நிலையிலிருந்து வெளி வந்தார். பக்தர்கள் அவரைச் சூழ்ந்து நாம சங்கீர்த்தனம் செய்து ஆடத் துவங்கினர். பகவானின் பக்தர்கள் துன்பத்தையும் மரணத்தையும் கண்டு அஞ்சுவதில்லை. ஆனால் பக்தர்களுக்கு இழைக்கப்படும் துன்பங்களை பகவான் பொறுப்பதில்லை. ஹரிதாஸருக்கு ஓர் அடிகூட விழாமல் அனைத்தையும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தாங்கினார். இத்தகவலை மஹாபிரபு ஹரிதாஸரிடம் கூறியபோது, தன்னால் பகவானுக்கு கஷ்டம் ஏற்பட்டதை நினைத்து ஹரிதாஸர் மயங்கி விழுந்தார். தன் பக்தனுக்காக எதையும் தாங்குவேன் என புன்னகை பூத்த முகத்துடன் பதிலளித்தார் பகவான் சைதன்யர்.
ஹரிதாஸருக்கு நித்யானந்தரின் சங்கம் கிடைத்தபோது, அவர்கள் இருவரும் ஹரி நாமத்தை பிரச்சாரம் செய்வதில் ஈடுபட்டனர். பிராமண குடும்பத்தில் பிறந்திருந்தபோதிலும், அனைத்து தீயப் பழக்கங்களுடன் வாழ்ந்து வந்த ஜகாய், மதாய் என்ற இரு துஷ்டர்களை இவர்கள் பக்தர்களாக மாற்றியது குறிப்பிடத்தக்கதாகும். ஒருமுறை ஹரிதாஸரின் குகையில் மிகவும் கொடிய பாம்பு ஒன்று நுழைந்தபோதிலும், அதனால் சிறிதும் பாதிக்கப்படாமல், அது இருப்பதைக்கூட அறியாமல் அவர் தொடர்ந்து ஜபம் செய்தார்.
ஹரிதாஸரை மயக்குவதற்காக ஜாதி பிராமணர்களும் இஸ்லாமிய அதிகாரிகளும் இணைந்து ஒரு விலைமாதுவை அவருடைய இடத்திற்கு அனுப்பினர். இல்லத்திற்கு வந்த விலைமாதுவிடம் ஜபம் செய்து விட்டு வருவதாக ஹரிதாஸர் கூறினார். ஹரிதாஸரோ இரவு, பகல் என்று நாள் முழுவதும் ஜபம் செய்பவராயிற்றே! இவ்வாறாக, ஜபத்திலேயே மூன்று நாள்கள் கழிந்தது. ஹரிதாஸரின் தூய்மையான சங்கத்தினால் விலைமாதுவும் தூய பக்தையானாள். தன்னுடைய சொத்துகளை தானம் செய்துவிட்டு, ஆன்மீகப் பாதைக்கு வந்தாள். ஹரிதாஸர் அவளை துளசிக்கு முன்பாக ஜபம் செய்யச் சொல்லி விட்டுச் சென்றார்.
ஹரிதாஸ தாகூர் தனது இறுதி நாள்களில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் சங்கத்தில் பூரியில் வசித்தார். இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்ததால் பூரியிலுள்ள ஜகந்நாதரின் கோவிலுக்குள் அவர் அனுமதிக்கப்படவில்லை; கோபுரத்தில் இருக்கும் சக்கரத்தை வெளியில் இருந்தபடியே தரிசித்து, நாம ஜபத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இருப்பினும், சாக்ஷாத் ஜகந்நாதரான ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு ஹரிதாஸரைச் சந்திக்க தினமும் அவரது இருப்பிடத்திற்கே வருவார், தினமும் அவருக்கு பிரசாதம் கிடைப்பதற்கும் ஏற்பாடு செய்தார்.
வயதாகிவிட்ட காரணத்தினால் ஹரி நாமத்தை தினமும் மூன்று இலட்சம் முறை சொல்வது ஹரிதாஸருக்கு கடினமானதாயிற்று. மேலும், ஸ்ரீ சைதன்யர் இவ்வுலகில் நீண்டநாள் இருக்கப் போவதில்லை என்பதையும் உணர்ந்த ஹரிதாஸர் இவ்வுலகை விட்டுச் செல்வதற்கு அனுமதி கோரினார். “தாங்கள் மிகவுயர்ந்த நபர். நீங்கள் இங்கிருந்து புறப்பட்டால், அஃது இவ்வுலகிற்கு பெரும் நஷ்டத்தை விளைவிக்கும்,” என்று சைதன்யர் வாதாடினார். ஹரிதாஸரோ, நான் முக்கியத்துவமற்றவன், “ஓர் எறும்பு இறந்தால், யாருக்கு என்ன நஷ்டம்? நான் செல்வதால், எந்த நஷ்டமும் இல்லை,” என்று பதிலளித்தார்.
மறுநாள் நிகழ்ந்த நாம சங்கீர்த்தனத்தின்போது, மஹாபிரபுவின் திருவடிகளை இதயத்தில் பதித்து, அவரது திருமுகத்தை உற்று நோக்கியபடி, “ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய” என கூவிக் கொண்டே ஹரிதாஸர் மறைந்தார். அவரின் திவ்ய உடலினை மஹாபிரபு தமது கரங்களாலேயே அடக்கம் செய்தார்.
ஒரு வைஷ்ணவன் மரணமடைகிறான் என்று கூறுபவன் முட்டாள்; நாம சங்கீர்த்தன ஒலியில் அவன் என்றும் வாழ்கிறான்; வைஷ்ணவன் வாழ்வதற்காக மடிகிறான்; வாழும்போது திருநாமத்தை உலகமெங்கும் பரப்புகிறான்” என்று ஹரிதாஸ தாகூரின் சமாதியில் ஸ்ரீல பக்திவினோத தாகூர் எழுதியுள்ளார். ஜகந்நாத பூரியில் ஹரிதாஸ தாகூரின் சமாதியையும், அவர் ஜபம் செய்து வந்த சித்த-பகுள் என்ற இடத்தையும் இன்றும் தரிசிக்கலாம்.
ஹரிதாஸ தாகூர் நாமாசாரியர் என்னும் பெயருக்கேற்ப வாழ்ந்து காட்டினார். அவரைப் பின்பற்றி இவ்வுலகின் மதபேதங்களை நாமும் துறக்க வேண்டும். பகவான் கிருஷ்ணர் தன்னை இந்து, கிறிஸ்துவன், அல்லது முஸ்லீம் என்று கூறவில்லை, அவர் மத பேதங்களுக்கு அப்பாற்பட்டவர். அவர் நம்மிடமிருந்து தூய்மையான பக்தித் தொண்டை எதிர்பார்க்கிறார், பக்திக்கு லௌகீகத் தகுதிகள் ஏதும் தேவையில்லை. ஹரிதாஸ தாகூரை எளிமையாகப் பின்பற்றி நடந்தால் மிகவும் உன்னதமான கிருஷ்ண பிரேமையை நம்மில் யார் வேண்டுமானாலும் அடையலாம் என்பது உறுதி.