பண்டரிபுரம்

Must read

இலட்சக்கணக்கான பக்தர்களின் அன்பிற்கு பிரியமான விட்டலரின் பூமிக்கு ஒரு பயணம்

வழங்கியவர்: தவத்திரு. லோகநாத ஸ்வாமி

பாரத பூமியெங்கும் முழுமுதற் கடவுள் பல்வேறு ரூபங்களில் வெவ்வேறு கோயில்களில் வழிபடப்படுகிறார். அவற்றில் சில கோயில்களும் விக்ரஹங்களும் மிகவும் பிரசித்தி பெற்றவை. ஸ்ரீரங்கத்தில் அரங்கநாதர், திருப்பதியில் பாலாஜி, குருவாயூரில் குருவாயூரப்பன், உடுப்பியில் கிருஷ்ணர், துவாரகையில் துவாரகாதீஷர் என்று இருப்பதைப் போல, மஹாராஷ்டிராவின் பண்டரிபுரத்தில் பகவான் கிருஷ்ணர் ஸ்ரீ விட்டலராக வீற்றுள்ளார். அவர் தமது பக்தர்களால் பாண்டுரங்கர் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.

பண்டரிபுரம் மும்பைக்கு தென்கிழக்கில் சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சிலரால் பூ-வைகுண்டம் (பூலோகத்தில் உள்ள வைகுண்டம்) என்றும், சிலரால் தக்ஷிண துவாரகை (தென்னிந்தியாவின் துவாரகை) என்றும் அழைக்கப்படும் இத்திருத்தலம் பீமா நதியின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது. இந்த நதி பண்டரிபுரத்தை அடையும்போது பிறைநிலை போன்று தோற்றமளிப்பதால், இங்கே சந்திரபாகா என்று அழைக்கப்படுகிறது. விட்டலரின் பக்தர்களுக்கு இந்நதி கங்கையைப் போன்று புனிதமானதாகும்.

நதிக்கரையில் பதினான்கு படித்துறைகள் உள்ளன, அவற்றுள் மஹா துவார படித்துறை முக்கியமானதாகும். இப்படித்துறையையும் விட்டலரது கோயிலின் கிழக்கு வாசலையும் இணைக்கக்கூடிய வீதியில் துளசி, பூமாலைகள், தேங்காய், பழம், ஊதுவத்தி, இனிப்புகள் என பகவானுக்கு அர்ப்பணிப்பதற்காக பல்வேறு பொருட்களை விற்கும் கடைகள் உள்ளன.

பாண்டுரங்கர் கோயிலினுள் செல்வதற்கான நுழைவாயில்.

கோயிலும் விக்ரஹ வழிபாடும்

கருங்கல்லினால் கட்டப்பட்டதும் சுமார் ஐயாயிரம் வருடங்கள் பழமையானதுமான இத்திருக்கோயிலில் பகவான் விட்டலர் ஸ்வயம்பு மூர்த்தியாக வீற்றுள்ளார். முற்றத்திலிருந்து சில படிகள் ஏறினால் தரிசன மண்டபத்தை அடையலாம். சுவர் ஓரமாக அமைக்கப்பட்டுள்ள வரிசையில் நின்றபடி தரிசனத்திற்கு சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். விக்ரஹ அறையின் நுழைவாயிலில் வைகுண்டத்தின் வாயிற் காப்பாளர்களான ஜயர், விஜயர் ஆகிய இருவருக்கும் பெரிய மூர்த்திகள் வைக்கப்பட்டுள்ளன.

மெல்லிய புன்சிரிப்புடன் கருமை நிறத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ விட்டலரின் விக்ரஹம் மூன்றரை அடி உயரத்தில் உள்ளார். அவர் ஒரு செங்கல்லில் நின்று கொண்டுள்ளார், தனது கரங்களை இடுப்பில் வைத்தபடி கம்பீரமாக தோற்றமளிக்கின்றார். இந்த தோற்றம் பண்டரிபுரத்தில் நிகழ்ந்த அவரது லீலையைக் காட்டுகிறது.

பகவான் ஏன் பண்டரிபுரத்திற்குச் சென்றார் என்பதையும் இந்த ரூபத்தில் அவர் நிற்பதற்கான காரணத்தையும் பத்ம புராணமும் ஸ்கந்த புராணமும் விளக்குகின்றன.

ஒருமுறை ஸ்ரீமதி ராதாராணி கிருஷ்ணரைச் சந்திப்பதற்காக துவாரகைக்கு வந்தாள். அச்சமயத்தில் கிருஷ்ணர் தன்னை விட ராதையின் மீது அதிக கவனம் செலுத்துவதை ருக்மிணி தேவி கவனித்தாள். அதனால் மனமுடைந்து பண்டரிபுரத்திற்கு அருகிலிருந்த திண்டிரவனத்திற்கு அவள் வந்து சேர்ந்தாள். ருக்மிணியிடம் மன்னிப்பை வேண்டி கிருஷ்ணர் வந்தபோதிலும், அவளது கோபம் தணியவில்லை. அச்சமயத்தில் தனது பக்தரான புண்டரிகரை சந்திப்பதற்காக பகவான் பண்டரிபுரத்திற்கு வந்தார்.

புண்டரிகரின் ஆஸ்ரமத்தை பகவான் அடைந்தபோது, அவர் தனது வயதான வைஷ்ணவ தாய் தந்தையருக்கு சேவை செய்து வந்தார். அதனால், பகவானுக்கு ஒரு செங்கல்லினைக் கொடுத்து அதில் நின்றபடி காத்திருக்கக் கோரினார். பகவானும் அப்படியே செய்தார். தனது தாமரைக் கரங்களை இடுப்பில் வைத்தபடி புண்டரிகரின் வருகைக்காக காத்திருந்தார்.

அவர் அங்கு காத்திருந்தபோது, தனது கோபத்தைக் கைவிட்ட ருக்மிணி தேவியும் திண்டிரவனத்திலிருந்து வந்து அவருடன் சேர்ந்து கொண்டாள். இருவரும் விக்ரஹ ரூபத்தில் அப்படியே பண்டரிபுரத்தில் தங்கிவிட்டனர். பகவான் இன்றும் அந்த செங்கல்லில் நின்றபடி, புண்டரிகருக்காக அன்றி எல்லா பக்தர்களின் வருகைக்காக காத்திருக்கின்றார்.

அவ்வாறு காத்திருக்கும்போது, அவர் தமது பக்தர்களிடம் கூறுகிறார், “கவலைப்பட வேண்டாம். என்னிடம் சரணடைந்தவர்களுக்கு, இந்த பௌதிக உலகத்தின் கடல் போன்ற துன்பத்தினை நாம் பெருமளவில் குறைத்துவிடுகிறேன். பாருங்கள் இதன் ஆழத்தை!” கடலின் ஆழம் இடுப்பளவில் மாறி விட்டதைக் காட்டும் பொருட்டு, அவர் இடுப்பில் கைவைத்தபடி நிற்கின்றார்.

மஞ்சள் மற்றும் இதர நிற உடைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள விட்டலர் வைஜெயந்தி மாலையையும் துளசியையும் கழுத்தில் அணிந்து தரிசனமளிக்கின்றார். வலது கரத்தில் தாமரையும் இடது கரத்தில் சங்கும் வைத்துள்ளார். அவரது மார்பில் பிருகு முனிவரின் திருப்பாதங்கள் பதிந்துள்ளன. அவரது காதுகள் மகர குண்டலத்தினாலும் நெற்றி திலகத்தினாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மிக அருகில் செல்லும் யாத்திரிகர்கள் அவரது புன்சிரிப்பினால் கவரப்பட்டு அதனை வாழ்வின் பக்குவமாக கருதுகின்றனர்.

விட்டலரின் வழிபாடு அதிகாலை நான்கு மணிக்கு மங்கள ஆரத்தியுடன் தொடங்குகின்றது. ஆரத்திக்குப் பின்னர், பால், தயிர், நெய், தேன், சக்கரை நீர் ஆகியவற்றினால் அவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. சில சமயங்களில் அபிஷேகத்திற்கு மத்தியில் அவருக்கு வெண்ணெய் ஊட்டுவதும் வழக்கம். அபிஷேகத்திற்குப் பின்னர், அவர் நன்கு உடை உடுத்தப்பட்டு அலங்கரிக்கப்படுகிறார். தனது கருணை வாய்ந்த தன்மையை வெளிப்படுத்தும் விதமாக, அவர் தனது அபிஷேக நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு அனைவருக்கும் அனுமதியளிக்கின்றார்.

தினமும் ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் தரிசனத்திற்காக பண்டரிபுரம் வருகின்றனர். பண்டரிபுரத்தின் தன்னிகரற்ற வழக்கம் என்னவெனில், ஒவ்வொரு யாத்திரிகரும் விக்ரஹத்தின் திருப்பாதங்களை தொடுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர், சிலர் அந்த திருப்பாதங்களில் தங்களது தலையைக்கூட வைத்து வணங்குகின்றனர். ஆயினும், கூட்டத்தின் காரணத்தினால் அனைவரும் விரைந்து செல்ல வேண்டியது அவசியமாகிறது.

விட்டலரின் சன்னதிக்கு அருகில், பகவானின் அழகிய திருமகளான ஸ்ரீமதி ருக்மிணி தேவியின் சன்னதி உள்ளது. தரிசனம், ஆரத்தி, நைவேத்யம் என்று நாள் முழுவதும் விட்டலர் கருணையை வழங்குகிறார், மதிய நேரத்தில் சிறிய ஓய்வு வழங்கப்படுகிறது. இரவு பதினோரு மணிக்கு கடைசி ஆரத்தி காட்டப்பட்டு, பின்னர் அவருக்கு ஓய்வு வழங்கப்படுகிறது.

பண்டரிபுரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ பாண்டுரங்கரும் ருக்மிணி தேவியும்

விட்டலரின் பக்தர்கள்

விட்டலரின் சில பிரசித்தி பெற்ற பக்தர்கள் மஹாராஷ்டிரா முழுவதும் பயணம் செய்து அவரது மகிமையைப் பரப்பியுள்ளனர். அவர்களது பிரச்சாரமும் பக்தி பாவமும் மக்களிடையே நிலையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். அவர்களது முடிவான உபதேசம் என்னவெனில், “தொடர்ந்து பாடுங்கள், தொடர்ந்து ஆடுங்கள், அவரது திருவடிகளின் அருகில் செல்லும்போது கருணைக்காக வேண்டுங்கள்.” எனவே, நாம ஸங்கீர்த்தனம் மஹாராஷ்டிரா முழுவதும் பிரபலமான ஒன்றாகும்.

ஜுலை 30, 1977 அன்று ஸ்ரீல பிரபுபாதர் பின்வருமாறு என்னை ஊக்குவித்தார்: “இந்திய மக்கள் அனைவரும், குறிப்பாக மஹாராஷ்டிராவில் உள்ளவர்கள் கிருஷ்ணரின் மீது மிகவும் பற்றுதல் கொண்டுள்ளனர். தற்போது நீங்கள் அவர்களது கிருஷ்ண உணர்வை புதுப்பிக்க வேண்டும். இது துகாராமின் நிலம், தற்போது இது தீய அரசியல்வாதிகளின் நிலமாக மாறி வருகிறது. ஸங்கீர்த்தன இயக்கத்தின் மூலமாக அதனை புதுப்பிக்க வேண்டும்.”

துகாராமர் மஹாராஷ்டிராவின் சாதுக்களில் மிகவும் பிரபலமானவர். பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அவர், இன்றுவரை மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அபாங்கங்கள் என்று அழைக்கப்படும் அவரது 4,500 பாடல்கள் மஹாராஷ்டிர மக்களின் இதயத்தில் குடிகொண்டிருப்பவை.

துகாராமர் தனது வாழ்நாள் முழுவதும் பிரச்சாரம் செய்தார், நாட்டு மக்களை பக்தியின் பாதைக்கு கொண்டு வந்தார். அவரது மொழி மிகவும் எளிமையானதாக இருந்ததால், அனைத்து கிராமத்தினரும் அவரது பாடல்களை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. பண்டரிபுரத்தின் முக்கிய திருவிழாக்களில் நிகழும் கீர்த்தனைகளுக்கும் பஜனைகளுக்கும் அவரே முக்கிய மூலமாவார்.

தனது சுயசரிதையில், ராகவ சைதன்யர் கேசவ சைதன்யர் என்பவரால் தான் கனவில் தீக்ஷையளிக்கப்பட்டதாக துகாராமர் கூறியுள்ளார். அனைவரும் ஏற்காதபோதிலும், இஸ்கான் உட்பட  கௌடீய வைஷ்ணவர்கள், அது ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவைக் குறிப்பாக அறிகின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர் சைதன்ய சரிதாம்ருதத்தின் விளக்கவுரையில் (மத்திய லீலை 9.282) பின்வருமாறு எழுதுகிறார்: “துகாராமரின் ஸங்கீர்த்தன குழு இன்றும் மும்பையில் மிகவும் பிரபலமானதாகும். அது ஏறக்குறைய கௌடீய வைஷ்ணவர்களின் கீர்த்தன குழுவினை ஒத்துள்ளது, அவர்களும் பகவானின் திருநாமத்தினை மிருதங்கம் மற்றும் கரத்தாளங்களுடன் இணைந்து பாடுகின்றனர்.” அவர்களும் கௌடீய பழக்கத்திற்கு ஏற்றாற் போல, கழுத்தில் துளசி மாலையும் திலகமும் அணிகின்றனர்.

துகாராமர் சில நேரங்களில் பொறாமை கொண்ட நபர்களால் அவமரியாதை செய்யப்பட்டார், ஆயினும் அவர் புல்லை விடப் பணிவாக அவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டார், அதனால் அவரது எதிரிகளின் இதயமும் மாறியது. அவர் நாம ஸங்கீர்த்தனத்தில் ஈடுபட்டபடியே தனது அதே உடலுடன் பலரும் பார்க்கும்படி ஆன்மீக உலகத்தை அடைந்தார்.

ஞானேஸ்வரர், நாமதேவர் ஆகியோரும் பண்டரிபுரத்தின் பிரபலமான சாதுக்களாவர்.

விட்டலரின் பக்தர்களில் பெரிதும் போற்றப்படும் துகாராமர்.

திண்டி யாத்திரை

விட்டலரின் மீதான மஹாராஷ்டிர மக்களின் பக்தியை தெளிவாக வெளிப்படுத்துவது, சுமார் பத்து இலட்சம் மக்கள் திரளும் திண்டி யாத்திரை. கடந்து எழுநூறு ஆண்டுகளாக வருடந்தோறும் நடைபெறும் இந்த யாத்திரையில் சுமார் இரண்டு இலட்சம் மக்கள் 150 கிலோமீட்டரிலிருந்து 300 கிலோமீட்டர் வரை பாதயாத்திரையாக பண்டரிபுரத்திற்கு வருகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை ஏகாதசியன்று பண்டரிபுரத்தில் மக்கள் குவிகின்றனர். இருப்பினும், ஜுலை மாதத்தில் வரும் ஆஷாதி ஏகாதசி திருவிழா (அல்லது திண்டி யாத்திரை திருவிழா) இலட்சக்கணக்கான மக்களைக் கவருகின்றது. இங்கு நடைபெறும் திருவிழாக்களில் கலந்து கொள்ள மஹாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, குஜராத் என பல பகுதிகளிலிருந்தும் மக்கள் குவிகின்றனர்.

வெயில், மழை என எதையும் பாராமல் பகவானின் திருநாமங்களைப் பாடியபடி குழு குழுவாக வரும் மக்களைக் காண்பதே பேரழகு. ஒவ்வொரு குழுவும் நன்கு நிர்வகிக்கப்படுகிறது, யாரும் பசியினால் வாடுவதில்லை, அரசாங்கம் குடிநீர் மற்றும் குளியலறைகளை அமைத்து தருகிறது. ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் ஏதேனும் ஓர் ஊரில் தங்கி, கீர்த்தனம், நாடகம், நாட்டியம் என பகவானை நினைவு கூர்கின்றனர். ஆஷாதி ஏகாதசியன்று விட்டலரை தரிசிக்க அனைவரும் முயல்வதால், பெரும் திரளான கூட்டத்தைக் காண முடியும், ஒவ்வொருவரும் சில நொடித் துளிகளே விட்டலரை தரிசிக்க இயலும்.

திண்டி யாத்திரையின்போது பண்டரிபுரத்திற்கு வரும் யாத்திரிகர்களின் ஒரு பகுதி

பண்டரிபுரத்தில் இஸ்கான்

சந்திரபாகா நதியின் மறுகரையில், அமைதியான இடத்தில் இஸ்கான் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள பக்தர்கள் தங்களது இதர பணிகளுடன் இணைந்து, பசு பராமரிப்பு, ஏகாதசியின்போது யாத்திகர்களுக்கு சேவை செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். சைதன்ய மஹாபிரபுவின் பண்டரிபுர விஜயத்தை குறிப்பிடும் வண்ணம், ஒரு பெரிய அரச மரத்தின் அடியில் அவரது பாதச்சுவடுகள் பதிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ சைதன்யரின் விஜயம்

பகவான் சைதன்யர் தனது தென்னிந்திய யாத்திரையின் போது பண்டரிபுரத்திற்கு விஜயம் செய்துள்ளார். தனது சகோதரரும் சந்நியாசியுமான ஸங்கராரண்யரை தேடி வருவதாக காரணம் காட்டி ஸ்ரீ சைதன்யர் தனது தென்னிந்திய யாத்திரையை மேற்கொண்டிருந்தார்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளைக் கடந்த பின்னர், மஹாபிரபு மஹாராஷ்டிராவினுள் நுழைந்தார். இங்கு அவர் பகவான் விட்டலரின் விக்ரஹத்தைக் கண்டு ஆடிப் பாடி மகிழ்ந்தார்.

பகவான் சைதன்யர் பண்டரிபுரத்தில் தனது ஆன்மீக குருவான ஈஷ்வர புரியின் ஆன்மீக சகோதரரான ஸ்ரீ ரங்க புரியைச் சந்தித்தார். அவர்கள் இருவரும் கிருஷ்ணரைப் பற்றி ஐந்திலிருந்து ஏழு நாள்கள் விவாதித்தனர்.

ஸ்ரீ ரங்க புரி தான் ஒருமுறை நவத்வீபத்திற்குச் சென்றதையும் அங்கே ஜகந்நாத மிஸ்ரர் என்பவரின் இல்லத்தில் தங்கி உணவருந்தியதையும் நினைவு கூர்ந்தார். மேலும், அவர்களது மகன் இங்கே பண்டரிபுரத்தில் உடலை மாய்த்தார் என்பதையும் சைதன்யரிடம் தெரிவித்தார்.

அதன் பின்னர், ஜகந்நாத மிஸ்ரரே தனது பூர்வ ஆஸ்ரம தந்தை என்றும், மடிந்த சந்நியாசி தனது சகோதரர் என்றும் பகவான் சைதன்யர் விளக்கினார்.

ஸ்ரீ ரங்க புரி பண்டரிபுரத்திலிருந்து புறப்பட்ட பின்னரும், மஹாபிரபு இங்கே மேலும் நான்கு நாள்கள் தங்கியிருந்தார். மஹாபிரபு தனது யாத்திரையில் எங்கும் தங்காமல் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருந்தார். இருப்பினும், இங்கே அவர் பதினோரு நாள்கள் தங்கியிருந்தார் என்பதால், கௌடீய வைஷ்ணவர்களும் பண்டரிபுரத்தை முக்கியமாக  கருதுகின்றனர்.

தவத்திரு. லோகநாத ஸ்வாமி அவர்கள், பண்டரிபுரத்திற்கு அருகில் வளர்ந்தவர். ஸ்ரீல பிரபுபாதரின் நேரடி சீடர், பாத யாத்திரை குழுவை நிர்மானிப்பதிலும் அருமையான கீர்த்தனைகளை பாடுவதிலும் பிரசித்தி பெற்றவர்.

பண்டரிபுரம்–ஒரு தம்பதியரின் அனுபவங்கள்

தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு இஸ்கான் பக்தர்களுடன் 2012ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மஹாராஷ்டிராவில் சைதன்ய மஹாபிரபுவின் பாதங்கள் பட்ட இடங்களுக்கெல்லாம் யாத்திரை சென்றோம். அந்த அனைத்து தலங்களிலும், அவற்றின் முக்கியத்துவம், புராணங்கள் போன்றவற்றை விளக்கும் விதமாக அமைந்த உபன்யாஸங்கள் பேருதவியாக இருந்தது.

அந்த உபன்யாசங்களில் கூறிய ஒரு தகவலை பண்டரிபுரத்தில் உளமாற உணர்ந்தோம். “பகவானை நாம் பார்க்க வேண்டும் என நினைப்பதை விட பகவான் நம்மை பார்க்கும்படி பக்தர்கள் நடந்துகொள்ள வேண்டும்,” என்னும் கருத்து நூற்றுக்கு நூறு உண்மையென எங்கள் அனுபவத்தில் உணர்ந்தோம்.

ஆம். பண்டரிநாதரை பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனது மனதில் ஆழமாக இருந்தபோதிலும், எங்களால் அந்த யாத்திரையில் கலந்து கொள்ள இயலாமல் இருந்தது. தீடீரென்று ஒருநாள் எதிர்பாராத விதமாக, எங்களுக்கு பண்டரிபுர யாத்திரையில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை.

எங்களுடன் இருந்த இதர பக்தர்களும் பகவானே உங்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் என்றனர். இதையே நாங்கள் உபன்யாசத்தில் கேட்டபோது, மெய் சிலிர்த்துப் போயிற்று. காலையில் பண்டரிபுரம் சென்று பாண்டுரங்கனைப் பார்த்தவுடன் எனக்கு என்ன நேர்ந்தது என்றே தெரியவில்லை. அதிக நாள்கள் பழகிய ஒரு நண்பர் என்னுடன் நேருக்கு நேர் நின்று அழகிய சிரித்த முகத்துடன் கனிவுடன் என்னை வரவேற்பதுபோல தோன்றியது. கற்பனை இல்லை, உண்மை. சிறிது நேரம் அவரைப் பார்த்துக் கொண்டே என்னை மறந்து நானும் மகிழ்ச்சியுடன் சிரித்தவாறு நின்று விட்டேன். பின்னாலிருந்த பக்தர் நகரும்படி தள்ளியபோதுதான், நான் பண்டரிபுரத்தில் பாண்டுரங்கன் சன்னதியில் நின்று கொண்டு இருக்கிறேன் என்ற உணர்வு ஏற்பட்டது. உண்மையில் அந்த அனுபவத்தை எழுத எனக்கு வார்த்தைகளே இல்லை. அப்போது ஏற்பட்ட பரவச அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது.

நாங்கள் 120 பேர் தமிழகத்திலிருந்து யாத்திரை சென்றிருந்தோம். மாலையில் அனைவரும் பண்டரிபுரத்தின் வீதிகளில் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் நாம ஸங்கீர்த்தனத்தில் ஈடுபட்டோம். கீர்த்தனத்தின் இனிமையையும் தெய்வீகத் தன்மையும் கேட்டு, அந்த ஊர் மக்களும் குழந்தைகளும் எங்களுடன் சேர்ந்து கைதட்டி எங்களை உற்சாகப்படுத்தினர்.

நாங்கள் கீர்த்தனம் பாடிக் கொண்டு சென்றபோது, மாலையில் இருப்பிடம் நோக்கிச் சென்ற சிட்டுக் குருவிகள் கூட்டம் கூட்டமாக, கீர்த்தனம் பாடிச் சென்ற பக்தர்களையே வட்டமிட்டு சுற்றிச் சுற்றி வந்தன. தங்களின் சிறிய சிறகுகளை அடித்துக் கொண்டு வட்டமிட்டு சென்றதைக் கண்டபோது, அவையும் எங்களுடன் கீர்த்தனத்தில் பங்கு கொண்டு கைதட்டி நடனமாடியது போல இருந்தது.

சந்திரபாகா நதியின் ஒரு கரையில் விட்டல் ருக்மிணியின் கோயில்; மறுகரையிலோ ஸ்ரீ ஸ்ரீ ராதா பண்டரிநாதர் வீற்றிருக்கும் இஸ்கான் திருக்கோயில். நாங்கள் இஸ்கானின் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்ததால், நதியின் அழகு, பாண்டுரங்கர் கோயில், பக்தர்களின் புனித நீராடல், படகு போக்குவரத்து, பண்டரிபுரத்திற்கு அருகிலுள்ள கோபாலபுரம் ஆகியவற்றை பரவசத்தோடு ரசித்து அனுபவிக்க முடிந்தது. இரவில் சந்திரபாகா நதியைப் பார்த்துக் கொண்டு அங்கேயே தங்கி விடலாம் போலிருந்தது. ஆயினும், மறுநாள் காலை இவையனைத்தையும் பிரிய மனமில்லாமல் பிரிய நேர்ந்தது. தங்கியிருந்த இரண்டு நாள்களும் பண்டரிபுர் இஸ்கான் பக்தர்களின் உபசரிப்பும் பிரசாதமும் மிக நேர்த்தியாகவும் நிறைவாகவும் இருந்தன.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives