பிருது மஹாராஜர் வைகுண்டம் திரும்புதல்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: நான்காம் ஸ்கந்தம், அத்தியாயம் 23

சென்ற இதழில், மன்னர் பிருது நான்கு குமாரர்களை உபசரித்து அவர்களிடமிருந்து உபதேசம் பெற்றதைக் கண்டோம். இந்த இதழில் அவர் வானபிரஸ்தம் ஏற்று அதன் பின்னர் வைகுண்டத்திற்குத் திரும்பிச் செல்வதைக் காணலாம்.

மன்னர் பிருது வனத்திற்குச் செல்லுதல்

பிருது மஹாராஜர் தம் வாழ்வின் இறுதிக் காலத்தில், எல்லாருக்கும் ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்தார். தம் மைந்தர்கள் ஐவரையும், தம் மகளாக பாவித்த இப்பூமிக்கு அர்ப்பணித்தார். அவர் தமது கடமைகளைச் சரிவர நிறைவேற்றிய பிறகு, தவம் செய்வதற்காக மனைவியுடன் வனத்திற்குச் சென்றார். வனத்தில் வானபிரஸ்த வாழ்விற்குரிய விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றி, மிகுந்த கவனத்துடன் தவ வாழ்வை மேற்கொண்டார். அவர் ஆரம்பத்தில் கிழங்குகளையும் கனிகளையும் உட்கொண்டார், வாரக்கணக்கில் தண்ணீர் மட்டுமே அருந்தி வாழ்ந்தார், இறுதியாக காற்றை மட்டுமே சுவாசித்து வாழ்ந்தார்.

அவர் கோடை காலத்தில், தலைக்கு மேலே சூரிய ஒளி படுமாறு நின்று கொண்டு தன்னைச் சுற்றி நான்கு புறமும் நெருப்பை மூட்டி. பஞ்ச-தபா எனப்படும் தவத்தை மேற்கொண்டார். மழை காலத்தில் கனமழையின் தாக்கத்திற்கு தன் உடலை உட்படுத்தினார், குளிர் காலத்தில் கழுத்துவரை நீரில் நின்றார், எப்போதும் வெறும் தரையில் படுத்து தவ வாழ்வை மேற்கொண்டார்.

இவற்றையெல்லாம் அவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருப்திக்காகவே செய்தார், வேறு எந்த நோக்கத்திற்காகவும் அல்ல. இவ்வாறு பலன்தரும் செயல்களின் மீதுள்ள மோகங்களிலிருந்து முற்றிலும் விடுதலை பெற்றார். ஸனத் குமாரரின் அறிவுரையின்படி பிருது மஹாராஜர் கிருஷ்ணரை வழிபட்டார். இருபத்துநான்கு மணிநேரமும் விதிமுறைகளைப் பின்பற்றி பக்தித் தொண்டில் முழுவதுமாக ஈடுபட்டிருந்தார். உன்னத நிலையில் அவர் பகவானின் பாத கமலங்களை தியானம் செய்ததால், வீண் கர்வம் மற்றும் பௌதிக கருத்துகளை உடைய வாழ்விலிருந்து விடுபட்டார்.

கிருஷ்ணரின் அருளால் தனது மரணம் நெருங்கிவிட்டதை உணர்ந்த பிருது மஹாராஜர் மிக்க மகிழ்வுடன் பிரம்ம பூத நிலையில் இருந்தவாறே தம் உடலைவிட்டு நீங்குவதற்கான யோகப் பயிற்சிகளை மேற்கொண்டார். அவர் தமக்கு இயற்கையாக மரணம் வரும் வரை காத்திருக்க விரும்பவில்லை; ஏற்கனவே கற்றிருந்த யோகப் பயிற்சியைப் பயன்படுத்தி, தம் விருப்பத்திற்கு இணங்க முழு கிருஷ்ண உணர்வுடன் உடலைவிட்டு ஆன்மீக உலகை உடனடியாக அடைந்தார்.

பதிவிரதையின் மகிழ்ச்சி

அவருடனே காட்டிற்கு வந்திருந்த அவரது மனைவி அரசி அர்ச்சி, மிகவும் மென்மையான உடலைப் பெற்றிருந்தாள். தரையில் படுத்தல், இலை, பூ, காய், மற்றும் கனிகளை மட்டுமே உண்டு வாழ்தல் முதலிய கட்டுப்பாடான தவ வாழ்வை அவள் தன் கணவனுடன் மகிழ்ச்சியாக மேற்கொண்டாள். தவத்தினால் உடல் மெலிந்து காணப்பட்டாள், கணவருக்கு பணிவிடை செய்யும் பாக்கியத்தை எண்ணி அந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்த காரணத்தால் இத்துன்பங்கள் அவளை பாதிக்கவில்லை.

தன் அன்பு கணவர் உடல் நீத்தவுடன் சற்று கலங்கிய அவள், சிறிது நேரத்தில் தன்னைத் தேற்றிக் கொண்டு கணவரின் அந்திம சடங்குகளை மேற்கொண்டாள். தேவ தேவதைகளை வணங்கி, கணவரின் சிதையை மும்முறை வலம் வந்து நெருப்பில் புகுந்து தன் உடலையும் நீத்தாள், கணவர் சென்ற வைகுண்ட லோகத்தை அவளும் அடைந்தாள்.

மன்னர் பிருது தமது மனைவியான அர்ச்சியுடன் தவ வாழ்க்கையில் ஈடுபடுதல்

தேவர்களின் புகழுரை

அரசி அர்ச்சியின் செயலைக் கண்டு தேவர்களும் அவர்களது மனைவியரும் மலர்மாரி பொழிந்து அவளைப் பின்வருமாறு போற்றிப் புகழ்ந்தனர்: மஹாராணி அர்ச்சி தனது கணவருக்கு மனம், உடல், வாக்கு முதலியவற்றினால் செய்த சேவைகள் லக்ஷ்மி தேவி, பகவான் விஷ்ணுவுக்கு செய்யும் அன்புத் தொண்டினைப் போல இருந்தது. பூவுலக மன்னர் தம் பக்தித் தொண்டாலும், அவரது மனைவி கற்பு நெறியாலும், பௌதிக உலகைக் கடந்து ஆன்மீக விமானங்களில் ஆன்மீக உலகை அடைகின்றனர்! என்னே அற்புதம்!

பௌதிக வாழ்வை முடித்துக் கொண்டு மிகவுயர்ந்த இலக்கான வைகுண்ட வாழ்வை எளிதில் அடைவதற்கு பக்தித் தொண்டு உதவுகிறது. இத்தகைய மேன்மைமிக்க பக்தித் தொண்டை புரியும் வாய்ப்பினைத் தவறவிடும் மனிதர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர். பிருது மஹாராஜர் மற்றும் அவரது மனைவியின் வாழ்விலிருந்து நாம் அனைவரும் இப்பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.”

 

மன்னர் பிருதுவும் அவரது மனைவி அர்ச்சியும் வைகுண்டத்திற்குப் புறப்படுதல்

இக்கதையைக் கேட்பதன் பலன்

ஒருவன் நம்பிக்கையும் உறுதியும் கொண்டு  பிருது மஹாராஜரின் உயர்ந்த குணநலன்கள் மற்றும் செயல்பாடுகளைப் பற்றிய விளக்கங்களைப் படித்தாலோ கேட்டாலோ பிறர் கேட்பதற்கு உதவினாலோ, அவன் பிருது மஹாராஜர் அடைந்த உலகை அடைவான். மேலும், இவ்வுலகில் நன்மக்கட்பேறு, செல்வம், புகழ், மங்கல வாழ்வு முதலிய பௌதிகத் தேவைகளும் தாமாகவே நிறைவேறும். ஏனெனில், பிருது மஹாராஜரின் வாழ்க்கை சரிதத்தைக் கேட்பதாலும் படிப்பதாலும் இயற்கையாகவே ஒருவன் பக்தனாக மாறுகிறான், கிருஷ்ண உணர்வில் விரைவாக முன்னேற்றம் அடைந்து பிருது மஹாராஜரைப் போன்றே வைகுண்ட லோகத்தை அடைவான்.

எனவே, புனிதமான இச்சரிதத்தைக் கேட்டல், படித்தல், படிக்க வைத்தல் முதலியவற்றை ஒருவன் நிறைவேற்றுதல் அவசியம். இவ்வாறாக

மூவுலகங்களிலும் உள்ள அனைவரும் பயனடைய முடியும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives