வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்
அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரபூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 ஸ்கந்தங்களாக விரிந்துள்ளன.
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்குத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த இதழில்: மூன்றாம் ஸ்கந்தம், முப்பதாம் அத்தியாயம்
சென்ற இதழில் பக்தித் தொண்டைப் பற்றி விரிவாக பார்த்தோம். இந்த இதழில் செயல் மற்றும் அதன் விளைவுகளைப் பற்றிய கபிலரின் உபதேசங்களைப் பார்க்கலாம்.
ஜட வாழ்வின் அவலங்கள்
அன்னை தேவஹூதியிடம் பகவான் கபிலர் தனது உபதேசங்களை பின்வருமாறு தொடர்ந்தார்: தங்களது உண்மையான நிலையை மறந்துள்ள தேகாபிமானத்தில் மூழ்கியுள்ள மக்களின் செயல்கள் சக்திவாய்ந்த காலத்தால் பாதிக்கப்படுகின்றன. மேகங்கள் பலமான காற்றால் அடித்துச் செல்லப்படுவதுடன் இஃது ஒப்பிடப்படுகிறது. இதனால் இன்பத்தை அடைவதற்கான அவர்களின் பெருமுயற்சியும் திட்டங்களும் காலத்தால் அழிக்கப்படும்போது அவர்களால் புலம்ப மட்டுமே முடிகிறது.
உடல், வீடு, நிலம், செல்வம் ஆகிய நிலையற்ற பொருட்களை நிலையானவை என எண்ணி மக்கள் அறியாமையில் உள்ளனர். எந்த உயிரினத்தில் பிறந்தாலும் அந்த உயிரினத்தில் அதற்கென்று நியமிக்கப்பட்ட இன்பத்தை ஒருவர் அடைகிறார். அவர் அந்நிலை அடைந்ததற்காக ஒருபோதும் வருந்துவதில்லை. உதாரணமாக, பன்றி மலத்தை உண்டு அருவருக்கத்தக்க இடங்களில் வாழ்ந்தாலும், அந்த உயிரினத்திற்கான மகிழ்ச்சியில் அது திருப்தியடைகிறது.
இதற்கு காரணம், பகவானின் மாயா சக்தி கட்டுண்ட ஆத்மாவின் அறிவை மயக்குவதேயாகும். இதனால் ஒருவர் நரகத்தையும் இன்பமாக ஏற்கிறார். ஒருவரது வாழ்க்கைத் தரத்துடன் அடையும் அந்த திருப்தியானது உடல், மனைவி, வீடு, குழந்தைகள், விலங்குகள், செல்வம் மற்றும் நண்பர்களுடனான ஆழ்ந்த வேரோடிய பற்றின் காரணமாக ஏற்படுவதாகும். அந்தத் தொடர்பில் கட்டுண்ட ஆத்மா தான் சரியாக இருப்பதாக நினைக்கிறான். எனவே, தன் குடும்பம், சமுதாயம் என பலவற்றைக் காக்கும் பொருட்டு எல்லாவித பாவச் செயல்களையும் செய்கிறான்.
கட்டுண்ட ஆத்மா ஒரு பெண்ணின் அழகாலும் அவளது தனிமை மிகுந்த அணைப்பாலும், மழலை மொழி பேசும் குழந்தைகளின் இனிய சொற்களாலும் பிணைக்கப்படுகிறான்.
சூழ்ச்சித் திறமும் அரசியலும் நிறைந்த குடும்ப வாழ்விலிருந்து ஓய்வு பெறாமல் புலனுகர்ச்சி செயல்களால் கட்டுப்படுத்தப்பட்டு துன்பத்தை வெல்வதற்கான செயல்களில் ஈடுபடுகிறான். இந்த உலகில் மகிழ்ச்சியாக இருக்க நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லாம் மாயையால் தரப்படும் மயக்கங்களாகும்.
குறுக்கு வழிகளில் பலவாறு பொருள் ஈட்டினாலும் சிறு பகுதியை மட்டுமே அனுபவிக்க முடியும். ஒருவன் யாருக்காக ஒழுங்கற்ற முறைகளில் செயல்படுகிறானோ அவர்களை ஒருபோதும் திருப்திப்படுத்த முடியாததோடு, அவன் தன் குற்றங்களுக்காக நரகம் செல்லவும் நேரிடுகிறது.
முதுமையும் மரணமும்
வயோதிகத்தால் ஒருவன் தன் சொந்தத் தேவைகளை நிறைவேற்ற இயலாமல் போகும்பொழுது, பிறரிடமிருந்து பணத்தை ஏற்றுக்கொள்கிறான். தன்னையும் தன் குடும்ப அங்கத்தினர்களையும் காப்பதில் தோல்வியுற்று மிகவும் ஆழமான வருத்தத்தில் மூழ்குகிறான்.
அச்சந்தர்ப்பத்தில் குடும்ப உறுப்பினர்கள் அவனுக்கு முறையான மதிப்பு தருவதில்லை. இந்நிலையிலும்கூட அவனால் குடும்பப் பற்றை துறக்க இயல்வதில்லை. அவனது உடலில் அஜீரணக் கோளாறு, சளித்தொல்லை முதலியவை அதிகரித்து, தொண்டையில் ’கர கர எனும் ஒலியை எழுப்பிக்கொண்டு உண்ண முடியாமல் பல்வேறு அவஸ்தைகளுக்கு உள்ளாகிறான்.
இந்த விதத்தில் அவன் மரணத்தின் பிடியில் அகப்படுகிறான். ஒப்புக்காக புலம்புகின்ற நண்பர்களாலும் உறவினர்களாலும் சூழப்பட்டு படுத்திருக்கிறான். ஆயினும், அவன் அவர்களிடம் பேச விரும்புகிறான். ஆனால் அவனது சுரப்பிகளும் தொண்டையும் சளியால் அடைத்துக்கொள்வதால் பேச முடிவதில்லை, இவ்வாறாக, சுற்றி இருப்போரால் மேலும் துன்பப்படுகிறான்.
அவன் தன் உறவினர்கள் அழுவதைப் பார்த்துக் கொண்டே மிகுந்த வருத்தத்தில், மிகவும் பரிதாபமாக, தாங்கவியலா வலியுடன் உணர்விழந்து இறக்கிறான்.
முப்பதாம் அத்தியாயத்தின் பகுதிகள்
(1) பௌதிக வாழ்வின் அவலங்கள் (1-10)
அறியாமை, மயக்கும் மாயா சக்தி
(2) முதுமையும் மரணமும் (11-18)
இயலாமை, தாங்கவியலா வலி
(3) எம தூதர்களின் தண்டனை (19-34)
நரக வேதனை
கீழ்நிலைப் பிறவிகள்
எம தூதர்கள் வழங்கும் தண்டனை
அவன் தன் மரணத்தின் போது, கோபமான சிவந்த கண்களை உடைய எம தூதர்களைக் கண்டு பயந்து மல மூத்திரங்களைக் கழிக்கிறான். காவலாளிகள் குற்றவாளிகளைத் தண்டித்து சிறைப்படுத்துவதுபோல, மனித வாழ்வை சரியாகப் பயன்படுத்தாது புலனுகர்வில் வீணடித்த ஆத்மாக்களை எம தூதர்கள் கீழ்கண்டவாறு தண்டிக்கின்றனர்.
அவனது சூட்சும உடல் பாசக் கயிற்றினால் வலுவாகக் கட்டப்பட்டு எம லோகம் வரை நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்படுகிறான். அவ்வாறு செல்லும்போது, அவன் நாய்களால் கடிக்கப்பட்டு தொல்லைக்குள்ளாகி தனது பாவச் செயல்களை நினைத்துநினைத்து வருந்துகிறான்.
அவன் கொளுத்தும் சூரியனின் கீழ், இருபுறமும் காட்டுத் தீயுடன் கூடிய சூடான மணற்பாங்கான வழியில் நடந்து செல்ல வேண்டும். அவனால் நடக்க இயலாதபோது முதுகில் அடிக்கப்படுகிறான், பசி தாகத்தால் துன்புறுகிறான். உணவோ நீரோ சிறிது இளைப்பாறுவதற்கு இடமோ இருப்பதில்லை.
எம ராஜரின் இருப்பிடம் செல்ல, தெருவைக் கடக்கும்போது களைப்பால் மூர்ச்சையாகி விழுகிறான். மூர்ச்சை தெளிந்ததும் எழுந்து நடக்கிறான். இவ்வாறாக, விரைவில் எம ராஜரின் முன்பு கொண்டு வரப்படுகிறான். அங்கு அவன் தன் பாவங்களுக்கு ஏற்ப அனுபவிக்கும் தண்டனைகள் பின்வருமாறு வர்ணிக்கப்பட்டுள்ளன:
எரியும் மரத்துண்டுகளுக்கு இடையில் வைக்கப்பட்டு உறுப்புகள் நெருப்பின் மேல் இடப்படுகின்றன. சில சமயம் அவன் தனது சதையைத் தானே உண்ணுமாறும் அல்லது பிறர் உண்ணுமாறும் செய்யப்படுகிறான்.
அவனது குடல்கள் நரகத்தின் வேட்டை நாய்களாலும் வல்லூறுகளாலும் வெளியில் இழுக்கப்படுகின்றன. அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் பாம்புகள், தேள்கள், சிறிய கொசுக்கள் மற்றும் பிற உயிரினங்களால் அவன் கடிக்கப்படுகிறான்.
அவனது உடல் உறுப்புகள் துண்டு துண்டாக வெட்டப்படுகின்றன. யானைகளைக் கொண்டு மலையுச்சியிலிருந்து கீழே தள்ளப்படுகிறான், தண்ணீரில் மூழ்கடிக்கப்படுகிறான், குகையில் அடைத்து வைக்கப்படுகிறான்.
முறையற்ற ஆண்-பெண் சேர்க்கையில் ஈடுபடுவோர், தாமிஸ்ர, அந்த தாமிஸ்ர, ரௌரவ ஆகிய நரகங்களுக்குள் தள்ளப்பட்டு, அங்கு தாமிரத்தாலான பழுக்கக் காய்ச்சிய ஆண், பெண் உருவங்களைத் தழுவும்படி செய்யப்படுகின்றனர்.
நரகம், ஸ்வர்கம் போன்றவற்றை சில நேரங்களில் இந்த பூலோகத்தில்கூட அனுபவிக்க நேரிடுகிறது. (மேகப்புண், மேகவெட்டை ஆகிய பால்வினை நோய்கள், எய்ட்ஸ், புற்றுநோய் மற்றும் பல நோய்களின் மூலமும் இன்னபிற அவலமான சூழ்நிலைகளின் வடிவிலும் நரக தண்டனைகள் சிலசமயம் இந்த பூமியிலும் வெளிப்படுகின்றன).
தெரிந்தோ தெரியாமலோ ஒருவன் தான் செய்த பாவச் செயல்களுக்காக உடலைவிட்ட பின் நரக வாழ்வை அனுபவிக்க வேண்டியுள்ளது. அவனைப் பின்பற்றுவோரும் நரக வாழ்வைப் பெற வேண்டியுள்ளது. மேலும், (நாய், பன்றி முதலிய) கீழான மிருக பிறவிகளைப் பெறுவதற்காக எம ராஜரின் மண்டலத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
துன்பகரமான எல்லா நரகச் சூழ்நிலைகள், கீழ்நிலைப் பிறவிகள் ஆகியவற்றைக் கடந்து பாவங்கள் தூய்மை ஆக்கப்பட்ட பின் மனிதப் பிறவியை மீண்டும் பெறுவதற்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.
இதைப் பற்றிய கபிலரின் விளக்கங்களை அடுத்த இதழில் காணலாம்..