தூய்மையும் சுதந்திரமும்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

தூய்மையும் சுதந்திரமும்

ஆன்மீக வாழ்விற்கு அகத்தூய்மை அவசியமா புறத்தூய்மை அவசியமா, ஆன்மீக வாழ்க்கை என்பது சுதந்திரத்தை இழப்பதாகுமா என்பன குறித்து ஸ்ரீல பிரபுபாதருக்கும் தன்னேர் என்ற பாதிரியாருக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடல்.

பாதிரியார் தன்னேர்: ஆன்மீக வாழ்க்கை என்பது அகத்தூய்மையைச் சார்ந்தது, புறத்தூய்மையை அல்லவே.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், அகத்தூய்மையைச் சார்ந்தது. ஆயினும், முறையான பயிற்சிகளை வெளிப்புறமாகச் செய்வதன் மூலமாக அகத்தூய்மையும் அடையப்படுகிறது. அத்தகு பயிற்சிக்காகவே நாங்கள் தினமும் கிருஷ்ண உணர்வு சார்ந்த வகுப்புகளை நிகழ்த்துகிறோம். அதன் மூலமாக ஒருவன் உள்ளும் புறமும் தூய்மையாக இருக்க முடியும்.

ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யாப்யந்தர: ஷுசி:, தாமரைக் கண்களை உடைய பரம புருஷரை இடைவிடாது நினைப்பதன் மூலம் ஒருவன் உள்ளும் புறமும் தூய்மை பெறுகிறான்.

பகவானை நினைப்பதற்கான மிகச்சிறந்த வழி நாம ஜபமாகும். கிருஷ்ணர் என்று நாம் கூறும்போது, கிருஷ்ணர் எனும் பெயரும் அப்பெயரைக் குறிக்கும் நபரும் ஒருவரே என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், பகவானுக்கும் அவரது நாமத்திற்கும் இடையில் எந்த வேற்றுமையும் இல்லை.

பௌதிக உலகில், பெயரும் பெயரைக் குறிக்கும் பொருளும் வேறுபட்டவை. உங்களுக்கு தாகம் எடுக்கும்போது, தண்ணீர், தண்ணீர்” என்று கூறுவதால், தாகம் தீராது. தாகத்தைத் தணிப்பதற்கு தண்ணீர் எனும் பெயரைக் கொண்ட நீர்மம் தேவைப்படுகிறது. ஆனால், ஆன்மீக உலகிலோ பகவானும் அவரது நாமமும் ஒன்றே என்பதால், நீங்கள் பகவானின் திருநாமத்தைஶீகிருஷ்ணர் என்றோ வேறு பெயர்களையோஶீஉச்சரிக்கும்போது, அவருடன் நேரடியாக தொடர்புகொள்கிறீர்கள்.

கிருஷ்ணர் தூய்மையானவர் என்பதால் அவருடன் தொடர்பு கொள்ளும்போது, நீங்களும் தூய்மையடைகிறீர்கள். நெருப்பின் அருகில் செல்லும்போது வெப்பத்தை உணர்வதைப் போல, பகவானுடன் தொடர்புகொள்ளும்போது, நாமும் தூய்மையடைகிறோம். ஆகவே, நாங்கள் எப்போதும் பகவான் கிருஷ்ணரின் நாமத்தை உச்சரிக்கின்றோம், கிருஷ்ணரைப் பற்றிய புத்தகங்களைப் படிக்கின்றோம், கிருஷ்ணரைப் பற்றி உரையாடுகின்றோம். இவ்வாறாக எங்களது அனைத்து செயல்களிலும் நாங்கள் கிருஷ்ணரது சங்கத்தில் இருக்கின்றோம். எமது கோயிலில் கிருஷ்ணருடன் தொடர்புடைய ஏதாவதொரு செயலில் எனது சீடர்கள் ஈடுபட்டிருப்பதை நீங்கள் காணலாம். அதைத் தவிர்த்து அவர்கள் வேறு எதிலும் ஈடுபடுவதில்லை. நிர்பந்த: க்ருஷ்ண ஸம்பந்தே. கடவுள் தெய்வீகமானவர், அவருடன் தொடர்புடைய அனைத்தும் தெய்வீகமானவை.

பாதிரியார்: வெளிப்புறமாகச் செய்யப்படும் ஆன்மீக செயல்கள் ஒருவனது உள்ளத்தை தூய்மை செய்யும் என்று எனக்குத் தோன்றவில்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: ஏன் தூய்மையாகாது? கிருஷ்ண உணர்வின் மூலமாக ஒருவன் உள்ளும் புறமும் தூய்மை பெறுகிறான். இதற்கு எனது சீடர்களே சாட்சி. அவர்கள் அடைந்துள்ள மாற்றத்தைப் பாருங்கள்.

பாதிரியார்: அவ்வாறெனில், ஞாயிறுதோறும் தேவாலயத்திற்குச் செல்பவன் தன்னை தூய்மையானவன் என்று…

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை. எங்களது நிகழ்ச்சி வாரத்திற்கு ஒரு முறை நடைபெறுவதல்ல. நாங்கள் இருபத்துநான்கு மணி நேரமும் கிருஷ்ணரது சேவையில் ஈடுபடுகிறோம். கோயிலின் தரையை தூய்மை செய்வது வெளிப்புறமானதல்ல; ஏனெனில், அவ்வாறு தூய்மை செய்யும்போது, அவர் கிருஷ்ணரை நினைக்கின்றார். உங்களது உணர்வு முழுவதும் கடவுளிடம் இருக்கும்போது, நீங்கள் நிச்சயம் உன்னத நிலையில்தான் இருப்பீர்கள். இதில் சந்தேகமில்லை. நீங்கள் உங்களது வாழ்வின் செயல்களை பௌதிக விஷயங்கள் என்றும் கடவுளுக்குரிய விஷயங்கள் என்றும் பிரித்தால், அப்போது நீங்கள் நிச்சயம் களங்கத்துடனே வாழ்வீர். மாறாக, உங்களது எல்லா செயல்களையும் இறைவனது சேவையை நோக்கி திருப்பும்போது, நீங்கள் செய்பவை அனைத்தும் ஆன்மீகமாகின்றது.

பாதிரியார்: பக்தனால் கிருஷ்ணரை வெறுக்க இயலும் என்று எண்ணுகிறீர்களா?

ஸ்ரீல பிரபுபாதர்:  கிருஷ்ணரை வெறுப்பதா? இல்லை. பக்தனால் கிருஷ்ணரை வெறுக்க இயலாது. அவ்வாறு வெறுத்தால் எவ்வாறு அவனால் சேவை செய்ய இயலும்?

பாதிரியார்: தனது சுதந்திரத்தைக் கைவிட்டு, கிருஷ்ணரைக் காண்பதற்கான உறுதியுடன் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கும் ஒருவன் அவரை வெறுப்பதற்கு வாய்ப்புள்ளதல்லவா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஒருவன் தனது சுதந்திரத்தை தியாகம் செய்தலே ஆன்மீகம் எனப்படுகிறது. இங்கே சுதந்திரத்திற்கு இடமில்லை. நீங்கள் கடவுளின் சேவையில் மட்டும் ஈடுபடுகிறீர். இதுவே ஆன்மீக வாழ்க்கை.

பாதிரியார்: பிறகு எதற்காக நாம் சுதந்திரத்துடன் படைக்கப்பட்டுள்ளோம்?

ஸ்ரீல பிரபுபாதர்: சுதந்திரம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், ஆனால் நீங்கள் சுதந்திரமானவர் அல்லர், இயற்கையின் கடுமையான விதிகளுக்கு நீங்கள் கட்டுப்பட்டுள்ளீர்.

பூரண சுதந்திரத்தை உடைய பகவானின் சிறிய அம்சங்களே நாம் என்பதால், நமக்கு வரையறைக்கு உட்பட்ட சுதந்திரம் உள்ளது. அதை உபயோகித்து நீங்கள் பகவானுக்கு சேவை செய்யலாம் அல்லது செய்யாமல் இருக்கலாம்; அஃது உங்களது சுதந்திரம். நீங்கள் பகவானுக்கு சேவை செய்தால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள், சேவை செய்யாவிடில் துன்புறுவீர்கள்.

பாதிரியார்: கடவுளுக்கு சேவை செய்வதன் மூலம் நான் எனது சிறு சுதந்திரத்தை இழந்துவிடுவேனா?

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை. பகவானுக்கு சேவை செய்வதே உண்மையான சுதந்திரம். எடுத்துக்காட்டாக, விரலானது எனது உடலின் அங்கம். அது நன்றாக இருக்கும்வரை உடலுக்கு சேவை செய்கின்றது. ஆனால் அது நலமின்றி வலியுடன் இருப்பின் அதனால் சேவை செய்ய இயலாது. அதுபோலவே, கடவுளுக்கு சேவை செய்யாத ஓர் உயிர்வாழியின் நிலையானது நோயுற்ற நிலையாகும். உயிர்வாழி கடவுளின் ஓர் அங்கம் என்பதால், அவருக்கு சேவை செய்யும்பொழுது, அது தனது இயற்கை தன்மையில் ஆரோக்கியமான நிலையில் இருக்கின்றது.

பாதிரியார்: கடவுளுடனான தொடர்பை நாம் எப்போது இழந்தோம்?

ஸ்ரீல பிரபுபாதர்: உங்களது சிறு சுதந்திரத்தை நீங்கள் தவறாக பயன்படுத்தியபோது, கடவுளுடனான தொடர்பை இழந்தீர்கள். எடுத்துக்காட்டாக, தந்தையிடமிருந்து பிரிந்து செல்ல விரும்பும் குழந்தை, வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் திரிகின்றது. சரியான உணவின்றியும் சுகாதாரமின்றியும், அக்குழந்தை விரைவில் நோயுறுகிறது, ஆரோக்கியமாக இருப்பதில்லை. ஆகவே, நாம் பகவானை சார்ந்து இருக்க வேண்டும்.

உங்களது பைபிளில்கூட, இறைவனே, எங்களுடைய ரொட்டியைத் தாருங்கள்,” என்று பிரார்த்தனை செய்கிறீர்கள். இவ்வாறாக, நீங்கள் கடவுளைச் சார்ந்துள்ளதை ஒப்புக்கொள்கிறீர்கள். ஆகவே, நமது சிறு சுதந்திரத்தைத் தவறாக உபயோகிப்பதைக் காட்டிலும், கடவுளைச் சார்ந்திருத்தல் சிறந்தது. கடவுளைச் சார்ந்திருத்தலே நமது ஆரோக்கியமான நிலையாகும். கடவுளிடமிருந்து சுதந்திரமானவன் என்று நாம் கூறும்பொழுது, நோயுற்ற நிலையில் இருக்கின்றோம். இதுவே எமது தத்துவம். உமது தத்துவமும் அதுவே.

பாதிரியார்: ஆம், இதை நான் ஏற்கிறேன். ஆனால், இந்த உலகில் கடவுளைச் சார்ந்துள்ளதை மறுத்து ஒருவனால் ஆரோக்கியமாக வாழ இயலாதா?

ஸ்ரீல பிரபுபாதர்: கடவுள் உணர்வில் இருப்பதே ஆரோக்கியமான நிலை என்று நாங்கள் கூறுகிறோம். ஒருவன் பலசாலியாக இருக்கிறான் என்பதற்காக அவன் ஆரோக்கியமாக இருக்கின்றான் என்று நீங்கள் கூறுவீர்களா?

பாதிரியார்: என்னால் ஆரோக்கியமாக இருக்கவியலும் என்று நான் கூறுகிறேன்.

ஸ்ரீல பிரபுபாதர்: அது தற்காலிகமானது, அனைவரும் இறப்பிற்கு உட்பட்டவர்களே. நீங்கள் பலமுடனும் ஆரோக்கியமுடனும் இருக்கலாம், ஆனால் உங்களால் இறப்பை தடுக்கவியலாது.

பாதிரியார்: ஆமாம்.

ஸ்ரீல பிரபுபாதர்: பெயரளவு ஆரோக்கியத்துடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நீங்கள் இறக்கப்போவது உறுதி. அதுவே உண்மை. ஆகவே, நாங்கள் இந்த வகையான ஆரோக்கியத்தை விரும்பவில்லை. இறைவனது திருநாட்டிற்குத் திரும்பிச் சென்று, அங்கே அவருடன் நித்தியமாக ஆனந்தமாக வாழ்வதே எங்களது திட்டம். அதுவே எங்களது ஆரோக்கியமான வாழ்க்கை.

தண்ணீர் என்று சொன்னால் தாகம் தீராது, அதைக் குடித்தால் மட்டுமே தீரும். ஆனால், ஆன்மீகத்தில் பகவானும் பகவானின் நாமமும் ஒன்றே.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives