மழை வெள்ளம், அறிய வேண்டிய பாடங்கள்

Must read

Jivana Gaurahari Dasa
திரு. ஜீவன கௌர ஹரி தாஸ் அவர்கள், சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வண்ணம் கிருஷ்ண பக்தியை பயிற்சி செய்து வருகிறார்.

வழங்கியவர்: ஜீவன கௌர ஹரி தாஸ்

சென்னையிலும் தமிழகத்தின் பிறபகுதிகளிலும் சமீபத்தில் வரலாறு காணாத கனமழை பெய்தது. கன மழை படிப்படியாக வெள்ளக்காடாக மாறியபோது பொருள் சேதத்தையும், உயிர் சேதத்தையும் கண்முன் கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்தனர். குடியிருப்புகள் ஆழமான நீச்சல்குளம் போல் திடீரென உருவானதை கண்ட மக்கள் மனபிரம்மைக்கு உள்ளாகி செய்வதறியாது தவித்தனர். இயற்கை சீற்றத்தின் கோர தாண்டவத்தால் அத்தியாவசியப் பொருட்களுக்கே பரிதவித்தனர்.

மழை வெள்ளம் மக்களின் வாழ்க்கையைப் புரட்டி போட்டதால் கடும் விரக்தி மற்றும் மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டனர். தங்கள் நிலையை எண்ணி நொந்து போன மக்கள் ஒரு கட்டத்தில் கொந்தளிக்க ஆரம்பித்து விட்டனர். ஆரம்பத்தில் கூக்கூரலிட்ட மக்கள் இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என உணர்ந்த பிறகு மௌனமாயினர்.

சமூகப் பொறுப்பு

இம்மாதிரியான எதிர்பாராத சூழ்நிலையில் மக்களுக்கு உடனடியாக தேவைப்படுவது பாதுகாப்பு, உணவு, உடை, மற்றும் இருப்பிடம். மக்களின் துயர் போக்குவதற்கு பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இயக்கங்களும் சமூக ஆர்வலர்களும் உடனடியாக களத்தில் இறங்கினர். மக்களின் உடனடித் துயரை போக்குவதற்கு இஸ்கான் இயக்கமும் களத்தில் இறங்கியது. இஸ்கான் சென்னை கோயிலுடன் இஸ்கான் ராஜமுந்திரி நிர்வாகம் ஒன்றிணைந்து தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு பிரசாதம் விநியோகிக்கும் சேவையில் ஈடுபட்டது. தங்களின் வாழ்வு தொலைந்து விட்டதை போல உணர்ந்த பாதிக்கப்பட்ட மக்களின் முகத்தில் கிருஷ்ண பிரசாதம் சிறு பிரகாசத்தை ஏற்படுத்தியது.

இயற்கையை எதிர்கொள்வது

மக்கள் விஞ்ஞானம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தினால் இயற்கையின் சீற்றத்தை ஓரளவிற்கு எதிர்கொள்ளலாம் என இதுவரை கனவு கண்டிருந்தனர். மின்சாரம் மற்றும் அலைபேசி செயலிழந்து போனதால் முதல் இடியை சந்தித்தனர். இயற்கையின் முன் அனைவரும் சமம் என்பதைவிட அனைவரும் தூசு என நன்கு உணர்ந்தனர். அதிர்ஷ்ட வசமாக மின்சாரம் கிடைக்கப் பெற்றவர்கள் தொலைக் காட்சிப் பெட்டியை பார்த்து துரதிர்ஷ்டவசமாக பீதி மற்றும் பய உணர்வுகளை தங்களை அறியாமல் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.

பொதுவாக இயற்கை சீற்றம் ஏற்படும்போது நிவாரணப் பொருட்கள் வழங்குவதைவிட மன பிரம்மையிலிருந்து அவர்களை வெளிக் கொண்டு வருவதே பெரும் சவாலாக அமைகிறது. பௌதிக உலகில் ஒருவர் ஆன்மீகப் பயிற்சியில் ஈடுபட்டாலும் ஈடுபடாவிட்டாலும் இம்மாதிரியான துன்பத்தை அனுபவித்தே ஆக வேண்டும். அதே சமயத்தில் பக்தித் தொண்டு பயிற்சியில் ஈடுபடுபவர்கள் வெகு விரைவிலேயே இயல்பு நிலைக்கு திரும்பிவிடுகின்றனர்.

இம்மாதிரியான சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர் களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவது ஒரு பக்கமும், மற்றொரு பக்கத்தில் அவர்களின் உணர்வு துவண்டு விடாமல் பாதுகாப்பதும் மிகமிக அவசியமாகும்.

விரஜவாசிகளைக் காப்பாற்றுவதற்காக கிருஷ்ணர் கோவர்தன மலையைக் குடையாகப் பிடித்தல்.

துன்பத்திற்கான காரணம்

இவ்வுலகில் யாரும், என் வீடு எரியட்டும், “என் வீடு நீரில் மூழ்கட்டும், என் உறவினர்கள் இயற்கையின் சீற்றத்தினால் மாளட்டும்” என நினைப்பதில்லை. இத்துன்பங்கள் நம்மீது திணிக்கப்படுகிறது. இயற்கையின் சீற்றம் நமது உணர்வுகளை சீர் செய்துகொள்வதற்கு ஒரு வரப்பிரசாதம் என நாம் எண்ண வேண்டும். அதாவது இறையுணர்வற்ற நாகரிகமற்ற வாழ்விலிருந்து விடுபட்டு கிருஷ்ண உணர்விற்கு வர வேண்டும்.

நாம் கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் நினைத்து வருத்தப்படுகிறோம்; ஆனால் அந்த வருத்தத்தினை நிரந்தரமாக போக்குவதற்கு நிகழ்காலத்தில் கிருஷ்ண உணர்வுப் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்பதை அறியாமல் இருக்கிறோம். ஒவ்வொரு அசம்பாவிதமும் உயர்ந்த பூரணத்துவ நிலையை அடைவதற்கான ஒரு படிக்கட்டு என்பதை நாம் உணருவதில்லை. இயற்கையின் சீற்றம் என்பது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் மரணத்தை நமக்கு முன்கூட்டியே அறிவிப்பதற்காக உபயோகிக்கப்படும் எச்சரிக்கை பலகையாகும்.

நமது உணர்வை கிருஷ்ணர்மீது திசை திருப்பாமல் இருப்பதே இயற்கையின் சீற்றத்திற்கு அடிவேராக அமைகின்றது. பௌதிக உலகம் நமது நிரந்தர வசிப்பிடம் என தவறாக கருதுவதும் துன்பத்திற்கான முக்கிய காரணம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசத்தைப் பின்பற்றாவிடில், நமது திட்டம் இயற்கையின் முன் எப்போது வேண்டுமானாலும் தவிடு பொடியாகலாம். இயற்கையின் சீற்றம் ஏற்படும்போது, மக்கள் கிருஷ்ணரிடம் சரணடை வதற்குப் பதிலாக, தங்களுடைய திட்டத்தை மாற்றிய மைத்து பாதுகாப்பான திட்டத்தைத் தேடுகின்றனர்; ஆனால் அந்த பாதுகாப்பான திட்டம் தோல்வியடையும்போது, மற்றொரு திட்டத்திற்குத் தாவுகின்றனர்.

பக்தித் தொண்டின் பெருமைகளைக் கேட்டும்கூட அதில் கவரப்படாமல் இருக்கின்றனர். உயர்வு பெறுவதற்கான சொந்த வழியை அவர்கள் தயார் செய்கின்றனர். இவை அசுரத்தனமான வாழ்விற்குக் கொண்டுச் செல்லக்கூடிய மனித சமூகத்தின் சில குறைபாடுகளாகும். இப்படிப்பட்ட இயற்கையின் அசம்பாவிதம் ஏற்படும்போது இலட்சக்கணக்கான மக்களில் ஒரு சிலருக்கு மட்டுமே கேள்வி ஞானம் உதித்து, நிரந்தரமான பாதுகாப்பினை எவ்வாறு அடைவது என்கிற தாக்கம் ஏற்படுகிறது.

பாதுகாப்பான வாழ்க்கை

விருந்தாவனத்தில் வசித்தவர்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்மீது முழு நம்பிக்கைக் கொண்டவர்கள். இந்திரன் தனக்கு வந்து சேர வேண்டிய பூஜை தடுத்து நிறுத்தப்பட்டதை அறிந்து, விருந்தாவனத்தின் மீது எண்ணிப்பார்க்கவியலாத அளவிற்கு கடும் மழையைப் பெய்வித்தான். ஒவ்வொரு மழைத் துளியும் ஒரு பெரிய தூணைப் போல பொழிந்தது. நீரினால் ஏற்படும் பிரளயத்தைப் போன்று வானத்திலிருந்து கடும் மழை விருந்தாவனத்தின் மீது கொட்டியது.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தன்மீது முழு நம்பிக்கைக் கொண்டிருந்த விருந்தாவனவாசிகளைக் காக்கும் பொருட்டு, தனது இடதுகை சுண்டு விரலால் கோவர்தன மலையை குடை போன்று தூக்கிப் பிடித்தார். அப்போது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தன்னுடைய சுதர்சன சக்கரத்திடம் விருந்தாவனத்து மண்ணில் ஒரு சொட்டு நீர்கூட தேங்கக்கூடாது என்று கட்டளையிட்டார். அந்த கட்டளையை ஏற்ற சுதர்சன சக்கரம் ஒரு வாரம் கோவர்தன மலையைச் சுற்றியபடி தனது கடும் வெப்பத்தினால் அனைத்து நீரையும் உரிஞ்சிவிட்டது. இருபத்துநான்கு மணி நேரம், ஏழு நாட்கள் என சுதர்சன சக்கரத்தின் 24 ஒ 7 சேவையைக் கண்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தன் பக்தர்கள் பாதுகாக்கப்பட்டதை பாராட்டும் விதத்தில் கோவர்தன மலையின் அடிவாரத்தில் நிரந்தரமாக சுதர்சன சக்கரம் வசிப்பதற்கு சக்ரேஸ்வர் என்கிற புனித தலத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தன்னைச் சார்ந்து வாழ்பவர்களை என்றும் கைவிடுவதில்லை என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் உண்டா? கிருஷ்ண உணர்வில் இருப்பவர்கள் வாழ்க்கையையும் மரணத்தையும் மங்களகரமானதாகவே கருதுகின்றனர். பௌதிக உலகிலுள்ள மக்கள் பாதுகாப்பு, வசதி மற்றும் ஐஸ்வர்யத்தைத் தேடி அலைகின்றனர். இம்மூன்றும் அவற்றின் மிகவுயர்ந்த தரத்தில் விருந்தாவனத்து வாசிகளிடம் எப்போதும் தென்படுகிறது.

 ஸம்சார வெள்ளத்தில் சிக்கியவர்கள் கிருஷ்ண உணர்வினால் காப்பாற்றப்படுகின்றனர்.

ஆபத்துகள் வரவேற்கக்கூடியது

ஆபத்துகள் கிருஷ்ணரை நினைவுபடுத்துவதால் பக்தர்கள் ஆபத்துகளைக்கூட வரவேற்கின்றனர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைத் தொடர்ந்து நினைவுகொள்வதால், பிறவி மற்றும் மரணம் என்கிற ஸம்சார சக்கரத்தில் இருந்து எளிமையாக விடுபட முடியும். பக்தர்கள் ஆபத்தான சமயத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மீதான பற்றுதலை பெருமளவில் அதிகரித்துக்கொள்கின்றனர். பக்தர்கள் சௌகரியமான நிலையையும் ஆபத்தான நிலையையும் சமமாகக் கருதுவதால், ஆபத்துகளை கிருஷ்ணரின் மற்றோர் உருவமாகக் கருதுகின்றனர்.

கிருஷ்ணர்மீது மனம் நிலைநிறுத்தப்படாத சமயத்தில் மட்டுமே பய உணர்வு ஏற்படுகிறது என்பதை நன்கு உணர வேண்டும். கிருஷ்ணரிடம் தலை வணங்க மாட்டேன் என வீர வசனம் பேசுபவர்கள் யாரோ ஒரு தலைவரிடம் தலை வணங்குகின்றனர். கிருஷ்ணரிடம் கையேந்த மாட்டேன் என கூறுபவர்கள் ஹெலிகாப்டரில் உணவுப் பொட்டலங்களுக்காக கையேந்துகின்றனர். ஆனால் பக்தர்களோ வாழ்க்கையில் சந்திக்கும் தற்காலிக பின்னடைவுகளைக் கண்டு கலங்குவதில்லை.

எல்லா ஆபத்துகளைக் காட்டிலும், கிருஷ்ணரை மறந்திருப்பதே மிகப்பெரிய ஆபத்தாக கருதப்பட வேண்டும். “மாமியார் தன்னுடைய மருமகளுக்கு நேரடியாக பாடம் கற்பிக்காமல் மகள் மூலமாக கற்பிப்பாள்” என்று ஒரு வங்காள பழமொழி உள்ளது. அதைப் போன்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் துன்பமயமான சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை தனது பக்தர்கள் மூலமாக உலக மக்களுக்கு கற்பிக்கிறார். இதற்கான சிறந்த உதாரணங்கள்: பாண்டவர்கள், குந்தி மஹாராணி, திரௌபதி, பிரகலாதர், ஹரிதாஸ் தாகூர், மற்றும் பலர். எந்த சூழ்நிலையிலும் பக்தித் தொண்டு செய்வது எவ்வாறு என்பதை இவர்கள் மூலம் நாம் கற்க வேண்டும்.

கிருஷ்ணரைச் சார்ந்து

கிருஷ்ணரைச் சார்ந்து வாழ்ந்தால் வாழ்க்கை பூரணத்துவ நிலையை அடையும். கிருஷ்ணரை நேசிப்பதால் அனைத்துவிதமான ஆசிர்வாதமும் கிட்டுகிறது. ஒவ்வொரு நொடிப் பொழுதும் நமது சுவாசத்திற்கு காற்றை வழங்குகிற கிருஷ்ணரை வணங்குவதால் நாம் எதையும் இழக்கப் போவதில்லை. கிருஷ்ணர் மீது விசுவாசம் மற்றும் நன்றிக் கடனை வெளிப்படுத்துபவர்கள் உடனடியாக துன்பங்களின் தாக்கத்திலிருந்து விடிவு பெறுகின்றனர். கிருஷ்ண உணர்வில் இருப்பவர்களால் மட்டுமே தங்களுடைய வாழ்க்கையை, குடும்பத்தை, சமூகத்தை மற்றும் நாட்டை பூரணமாக்க முடியும்.

பக்திப் பாதையை தேர்ந்தெடுத்துவிட்டால், ஆபத்துகளும் துன்பங்களும் வராது என நினைப்பது முட்டாள்தனம். பௌதிக உடலை எடுத்தவர்களுக்கு துன்பங்கள் ஏறக்குறைய உறுதி; ஆனால் பக்தர்களோ அந்த துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தன்னை நிச்சயம் பாதுகாப்பார் என்னும் திடமான நம்பிக்கையுடன் வாழ வேண்டும். அதுவே சரணாகதி. சரணாகதி என்றால், ஏதோ ஒருநாள் நாம் அடையக்கூடிய இலக்கு அல்ல; மாறாக, ஒவ்வொரு நொடியும் நாம் மேற்கொள்கிற பயணம் என்பதை நாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, எல்லாச் சூழ்நிலையிலும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைச் சார்ந்து வாழ்வதே சரணாகதியின் பாதையாகும்.

நீங்கள் புத்திசாலியா?

அனைவரும் புத்திசாலிகளாக செயல்பட வேண்டும் என்றே விரும்புகின்றனர். ஆனால் உண்மையான புத்திசாலிகள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே இயற்கையைக் கட்டுப்படுத்துகிறார் என்பதை அறிந்தவர்களாவர். அனைத்து ஜீவன்களுமே தனது குழந்தைகள் என கிருஷ்ணர் பகவத் கீதையில் (14.4) குறிப்பிடுகிறார். சில சமயங்களில் தந்தையொருவர் ஒரு கோரமான முக மூடியை அணிந்து கொள்ளும்போது, அவரை தனது தந்தை என உணராத சிறு குழந்தைகள் ஆரம்பத்தில் அழுவது உண்டு. அதே போன்று கிருஷ்ணரே நமது தந்தை என்பதையும், அவரே அனைத்தையும் கட்டுப் படுத்துகிறார் என்பதையும் அறியாதவர்கள், அவருடைய தற்காலிக கோரமான முகத்தை (சுனாமி, பூகம்பம், மழை, வெள்ளம், போர், வறட்சி, பஞ்சம்) கண்டு அஞ்சி அழுகின்றனர்.

புத்திசாலி குழந்தைகளோ தங்கள் தந்தையின் கோர முகமூடியை அகற்றி அவரை நன்கு அரவணைத்து நேசிக்கின்றனர். அதே போன்று பக்தர்களும் இயற்கையைக் கட்டுப்படுத்தும் தங்கள் தந்தையான கிருஷ்ணரை பக்தித் தொண்டின் மூலமாக அரவணைத்துக்கொள்வதால், இயற்கையின் சீற்றத்தால் உயிருடன் இருந்தாலும் உயிரை விட்டாலும் அதனைக் கண்டு அவர்கள் அஞ்சுவதில்லை. மரணம் என்பது உடலுக்கு மட்டுமே என்பதையும், தனக்கு (ஆத்மாவிற்கு) ஒருபோதும் மரணம் நிகழாது என்பதையும் அவர்கள் நன்கு அறிந்துள்ளனர்.

திரைப்படங்களில் வில்லன் மக்களைத் துரத்தும்போது, அவர்கள் கதாநாயகனிடம் அடைக்கலம் புகுவதையும் அதனால் அவர்களின் நெருக்கம் அதிகரிப்பதையும் கண்டிருக்கலாம். அதுபோலவே, இயற்கையின் சீற்றமும் பக்தர்களிடையே பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் அதிக நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. இதுவே பக்தித் தொண்டின் உயர்ந்த கொள்கையாகும்.

மழை வெள்ள பாடங்கள்

பக்தன் தனக்கென்று எதையும் துன்பமாக கருது வதில்லை; இருப்பினும், மற்றவர்கள் துயரப்படும்போது அதனை தன் துயரமாக எண்ணிக்கொள்கிறான். பௌதிக உலகில் காணப்படும் ஆபத்துகள் நாம் நம்முடைய ஆன்மீக வாழ்க்கையை தீவிரமாகவும் சீரிய முறையிலும் மேற்கொள்ள வேண்டும் என்பதற்கு ஓர் உந்துதலை ஏற்படுத்துகின்றன. அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரின் குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர், 1931ஆம் ஆண்டில் கூறிய முக்கிய உபதேசம்: “மழை வெள்ளத்தில் சிக்கித் தவிப்பதைவிட பிறவிக் கடல் என்னும் ஸம்சாரக் கடலில் சிக்கித் தவிப்பதே மிகவும் கொடுமையான துன்பம்.” எனவே, பிறவிக் கடல் என்னும் மாபெரும் துன்பத்திலிருந்து கிருஷ்ண பக்தியைப் பிரச்சாரம் செய்து மக்களை விடுவிக்கக்கூடிய பிரச்சாரகர்கள் அனைவருமே ஆன்மீக மருத்துவர்கள் என்று அவர் தெரிவித்தார்.

மழை வெள்ளத்தில் நிவாரணப் பொருட்கள் வழங்குப வர்களையும் உயிரைக் காப்பாற்றுபவர்களையும் பல்வேறு மக்கள் போற்றுகின்றனர், அது நன்மையே. ஆயினும், வெள்ள நிவாரணத்தைப் போற்றும் மக்கள் ஸம்ஸார நிவாரணத்தைப் போற்றுவதைப் பற்றி சற்றும் நினைத்துப் பார்ப்பதில்லை. பிறவி, மரணம் என்கிற ஸம்சார வெள்ளத்தில் சிக்கியிருக்கிற எண்ணற்ற ஜீவன்களுக்கு, ஸ்ரீல பிரபுபாதரின் வழிகாட்டுதலின்படி ஆன்மீக ஞானத்தை (பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற) புத்தகங்களின் ரூபத்தில் விநியோகம் செய்யும் நிவாரணப் பணியாளர்களான பக்தர்களைப் போற்ற தயங்குகின்றனர். சாதாரண வெள்ளத்திலிருந்து மக்களை விடுவிப்பவர்கள் நிச்சயம் சிறப்பானவர்கள், ஆனால் அவர்களைக் காட்டிலும் ஸம்சார வெள்ளத்திலிருந்து மக்களை விடுவிப்பவர்கள் எண்ணிலடங்காத மடங்கு சிறந்தவர்களாவர்.

மக்களை ஸம்சார வெள்ளத்திலிருந்து விடுவிப்ப தற்கான எளிய மருந்து ஹரி நாம ஸங்கீர்த்தனம். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு நமக்கு எளிமையாக உபதேசித்த ஆன்மீக மருந்து–ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரேஶீஎன்னும் மஹா மந்திரமாகும். இதனை நாம் தினமும் உச்சரித்தால் துன்பமயமான சூழ்நிலையிலும் பாதிக்கப்படாமல் வாழ்ந்து, இறுதியில் ஆனந்தமயமான வாழ்வினை அடையலாம்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives