விதவையின் உடையை ஏன் உடுத்துகிறேன்

Must read

[et_pb_section fb_built=”1″ _builder_version=”3.22″ global_colors_info=”{}”][et_pb_row _builder_version=”3.25″ background_size=”initial” background_position=”top_left” background_repeat=”repeat” global_colors_info=”{}”][et_pb_column type=”4_4″ _builder_version=”3.25″ custom_padding=”|||” global_colors_info=”{}” custom_padding__hover=”|||”][et_pb_text _builder_version=”3.27.4″ background_size=”initial” background_position=”top_left” background_repeat=”repeat” global_colors_info=”{}”]

கணவனை இழந்த இந்த பக்தை இன்றைய நவீன உலகிலும் விதவைகளுக்கான பாரம்பரிய உடையை உடுத்துகின்றார். ஏன், எதற்காக என்பதை அவரே விளக்குகிறார்.

வழங்கியவர்:  நரசிம்ம-ரக்ஷிதா தேவி தாஸி

எனது மண வாழ்க்கை 34 வருடங்கள் ஓடியது. கட்டுக்கோப்பான ஸ்மார்த பிராமண குடும்பத்தில் பிறந்தமையால், சிறு வயதிலிருந்தே பாரம்பரிய பண்பாட்டில் மூழ்கியிருந்தேன். நாங்கள் வேத வழி வாழ்வினை உண்மையுடன் பின்பற்றிய தாத்தா, பாட்டி, மாமா, மற்றும் அத்தைகளுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தோம். அந்த வாழ்க்கை தலைசிறந்த வேத பண்பாட்டின் மீது மதிப்பையும் மரியாதையையும் ஊட்டியது.

பாட்டியின் உதாரணம்

எனது தாத்தா இவ்வுலகை விட்டு மறைந்த பின்னர், எனது பாட்டி தலையை மழித்துக் கொண்டாள்; தோடு, மூக்குத்தி, வளையல், கொலுசு என எல்லா ஆபரணங்களையும் அகற்றி விட்டாள், குங்குமமும் அவள் நெற்றியிலிருந்து மறைந்தது, வெளிர் மஞ்சள் நிறத்தில் ஒன்பது கஜ சேலையை உடுத்தத் தொடங்கினாள். சிறுமியாக இருந்த எனக்கு பாட்டியின் தோற்றம் வியப்பளித்தது, மற்றவர்களைப் போல அவள் ஏன் அழகாக உடையணிவதில்லை என்று சிந்திப்பது வழக்கம். எனக்கு திருமணமான பின்னர், என்னுடைய கணவரின் பாட்டியும் என்னுடைய பாட்டியைப் போன்றே (விதவைக்கான தோற்றத்துடன்) வாழ்ந்து வருவதைக் கண்டேன்.

காலப்போக்கில், விதவைக்குரிய சமுதாய வழக்கத்தைப் பற்றி பெரியவர்களிடமிருந்து கற்றுக் கொண்டேன். இந்த அற்புதமான வழக்கத்தை பண்பாடுடைய குடும்பத்தினர் தொன்றுதொட்டு பின்பற்றி வருகின்றனர் என்பதை உணர்ந்தேன். இஃது இந்துக்களுடைய பண்பாட்டுத் திணிப்போ மூட நம்பிக்கையோ அல்ல என்றும், பெண்களுக்கான விஞ்ஞானபூர்வமான பழக்கம் என்றும் அறிந்து கொண்டேன். பெண் ஒருத்தி தன்னுடைய செல்வம், அழகு, புகழ், அறிவு, அன்பு, பாசம் முதலியவை அனைத்தையும் தன்னுடைய கணவனுக்காகப் பயன்படுத்துகிறாள்; கணவனை இழந்த பின்னர், வேறு யாருக்காகவும் அவற்றை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் அவளுக்கு இல்லை.

என்னுடைய பாட்டியின் தோற்றம் சற்று வித்தியாசமானதாகவே இருந்தது, அவள் வீட்டு விசேஷங்களில் பொதுவாக கலந்துகொள்ள மாட்டாள்; அவள் அவ்வாறு இருந்தபோதிலும், அனைவரும் பாட்டியினை மிகவும் மதித்தனர். அவள் எங்கள் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாகவும், கற்பிற்கும் பணிவிற்கும் உதாரணமானவளாகவும் திகழ்ந்தாள். மேலும், அவள் தனது அற்புதமான சமையலின் மூலமாக எங்கள் அனைவரையும் எப்போதும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவாள். அவளுடைய தோற்றம் மற்ற பெண்களிடமிருந்து எந்த விதத்திலும் அவளைக் குறைத்துவிடவில்லை, அனைவரும் அவளை அளவின்றி நேசித்தனர். இராமாயணம், மஹாபாரதம், மற்றும் இதர சாஸ்திரங்களிலிருந்தும் பல்வேறு கதைகளை எடுத்துரைத்து, அவள் எங்களை எப்போதும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்குவாள். அக்கதைகளில் வரும் பெண்களைப் போன்று நாமும் தூய்மையானவர்களாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி விரிவாக எடுத்துரைப்பாள்.

தரமான மக்களே முக்கியம்

நன்மை தரக்கூடிய செயல் என்ன என்பதைப் பற்றிய எந்தவொரு சரியான தகவலும் நவீன கால மக்களிடம் இல்லை, அவர்களுடைய தலைவர்களிடமும் இல்லை. மக்கள்தொகை பெருக்கம், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துதல், மக்கள்தொகை அடர்த்தி முதலியவற்றைப் பற்றி அவர்கள் சிந்திக்கின்றனர்; இவை எண்ணிக்கையைத் தெரிவிக்கின்றதே தவிர, மக்களுடைய தரத்தைப் பற்றிக் குறிப்பிடுவதில்லை. மக்களின் தரத்தை நிர்ணயிப்பதற்கு, அவர்களிடம் எந்த அளவிற்கு ஒழுக்கம், நீதி, நேர்மை மற்றும் ஆன்மீக உணர்வு இருக்கின்றது என்பதைக் கருத்தில்கொள்ள வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில், குறைந்த கஷ்டத்துடன் நிறைந்த வசதிகளைப் பெற்றுவிட்டால், அந்த சமுதாயம் முன்னேறிவிட்டதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், சமுதாய முன்னேற்றத்தை மக்கள் எந்த அளவிற்கு வசதியாக வாழ்கிறார்கள் என்பதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கணக்கிட முடியாது; மாறாக, அவர்கள் எந்த அளவிற்கு அமைதியாக வாழ்கின்றனர் என்பதையும் எந்த அளவிற்கு ஆன்மீகத்தில் முன்னேறியுள்ளனர் என்பதையும் வைத்தே கணக்கிடப்பட வேண்டும். நல்ல மக்களை உருவாக்கி சமுதாயத்தை முன்னேற்றுவதற்காகவே வர்ணாஷ்ரமம் அமைக்கப்பட்டுள்ளது.

வர்ணாஷ்ரம முறையில் பெண்கள் திருமணத்திற்கு முன்பாக தந்தையினாலும், திருமணத்திற்குப் பின்னர் கணவனாலும், வயோதிகத்தில் மகன்களாலும் பாதுகாக்கப்பட வேண்டும்.

வர்ணாஷ்ரமத்தில் பெண்கள்

இந்த வர்ணாஷ்ரம முறையில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்பதால், அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. திருமணத்திற்கு முன்பாக அவர்கள் தங்களது தந்தையினால் கவனமாகப் பாதுகாக்கப்பட வேண்டும், திருமணத்திற்குப் பின்னர் கணவனாலும், வயோதிகத்தில் மகன்களாலும் அவள் பாதுகாக்கப்பட வேண்டும். பாதுகாப்பு என்றதும் “தடை விதிக்கின்றோம்” என்று சிலர் எதிர்ப்பு தெரிவிக்கலாம்; ஆயினும், குழந்தைகளின் நன்மைக்காக நாம் அவர்களை பல்வேறு விதங்களில் தடை செய்கின்றோமே? பாதுகாப்பு என்பது அவர்களுடைய உடல் ரீதியிலான நன்மையையும் ஆன்மீக நன்மையையும் உறுதி செய்கின்றது; இதில் கற்பின் பங்கு மிக முக்கியமானதாகும்.

ஒரு பெண்ணின் கற்பும் வெட்கமும் அவள் எவ்வாறு தன்னை உடுத்திக் கொள்கின்றாள் என்பதை வைத்தும் உணரப்படுகிறது. பெண்களின் உடையானது அவர்களது உடலை மற்றவர்களிடமிருந்து பாதுகாக்கும் வகையில் இருத்தல் அவசியம்; அது மற்றவர்களையும் அவர்களது பாதிப்பிலிருந்து காப்பாற்றும்.

குணங்களின் அடிப்படையிலான உடைகள்

நாம் உண்ணும் உணவானது எவ்வாறு முக்குணங்களால் பாதிக்கப்பட்டு கட்டுண்ட மனிதனைக் களங்கப்படுத்துகின்றதோ, அவ்வாறே நாம் உடுத்தும் உடையானது ரஜோ குணத்திலும் தமோ குணத்திலும் இருக்குமெனில், அது நம்முடைய உணர்வைப் பாதிக்கின்றது. கவர்ச்சிகரமான ரஜோ குண உடைகள் தன்னிலும் மற்றவரிலும் காமத்தைத் தூண்டுகின்றன.

வேத பாரம்பரியத்தின்படி, பெண்களுடைய உடை அவளது சமுதாய நிலையினை எடுத்துரைக்கின்றது. மதிப்பிற்குரிய கற்புடைய பெண்கள் ஆறு கஜம் அல்லது ஒன்பது கஜம் சேலையை உடுத்துவர். சாஸ்திர நெறிகளை தர்மத்துடன் பின்பற்றுவதற்கு இந்த உடை அவர்களுக்கு உதவுகிறது. தர்ம சாஸ்திரத்தின்படி, பல்வேறு தரப்பட்ட மக்களுக்கு ஏற்ப பல்வேறு தரப்பட்ட உடைகள் இருக்கின்றன. உடையை வைத்து சமுதாயத்திலுள்ள ஒருவர் அடையாளப்படுத்தப்படுகிறார்.

இது தொடர்பாக ஸ்ரீல பிரபுபாதர் விளக்குகிறார்: “பெண்ணினுடைய உடையை வைத்து, அவள் தனது கணவனுடன் வாழ்கின்றாளா, விதவையா, திருமணமாகாதவளா, கணவன் வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளானா, அல்லது அவள் விபச்சாரியா என்பதையும் புரிந்துகொள்ள முடியும். பண்பாடு மிகவும் அருமையானதாக இருந்தமையால், உடையை வைத்தே ஒருவன் புரிந்துகொள்ள முடியும். ‘இந்தப் பெண்ணின் கணவன் வீட்டில் இருக்கவில்லை.’ ‘இந்தப் பெண் ஒரு விதவை.’ ‘இந்தப் பெண் ஒரு வேசி.’ “இந்தப் பெண் திருமணமாகாதவள்.” உடையின் மூலமாக இவற்றைப் புரிந்துகொள்ள முடியும். குங்குமம் அணியும் விதத்தை வைத்து அவள் திருமணமானவள் என்பதை அறியலாம். அவள் நன்றாக உடை உடுத்தும்போது, வீட்டில் கணவன் இருக்கின்றான் என்பதைப் புரிந்துகொள்ளலாம். வெள்ளை உடையில் எந்த ஆபரணமுமின்றி இருக்கும்போது, அவள் ஒரு விதவை என்பதை உணரலாம். தலையின் நடுவில் வகிடு எடுத்து சீவியிருக்கும்போது அவள் குடும்பப் பெண் என்பதை உணரலாம். இவ்வாறு ஆண்கள் புரிந்துகொள்ளத்தக்க வகையில் பெண்கள் உடையணிய வேண்டும்.” (ஸ்ரீமத் பாகவத சொற்பொழிவு, மே 9, 1973)

“யாக்ஞவல்கியருடைய தர்ம சாஸ்திரத்தின்படி, வீட்டில் கணவன் இல்லாதபோது பெண்ணானவள் எந்தவொரு வீட்டு விசேஷங்களிலும் கலந்துகொள்ளக் கூடாது, உடலையும் அலங்கரித்துக் கொள்ளக்கூடாது.” (ஸ்ரீமத் பாகவத பொருளுரை 1.11.31)

விதவைப் பெண்களின் பாரம்பரிய உடை

தற்போதைய நிலையில் இந்தப் பண்பாட்டை ஏறக்குறைய நாம் மறந்து விட்டோம். மேற்கத்திய கலாசாரத்தை நகல் செய்வதன் மூலமாக சமுதாயத்தில் பெரிய குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன, சமுதாய உறவிற்கு காமமே அடிப்படை என்னும் அளவிற்கு சூழ்நிலை நரகமாகி விட்டது. பாரம்பரிய உடையை உடுத்துவதற்கு முடிவு செய்வதன் மூலமாக, பெண்கள் ஒரு நல்ல ஆரம்பத்தினை ஏற்படுத்த முடியும், தங்களது உணர்விலும் பார்வையிலும் உடனடியாக மாற்றம் இருப்பதை அவர்களால் உணர முடியும். திருமணமான பெண்கள் அல்லது திருமணமாகாத பெண்கள் ஒருபுறம் இருந்தாலும், ஒரு பெண் விதவையாக இருந்தால்கூட அவளுக்கென்று ஒரு வகையான உடையும் நடத்தையும் உள்ளது, அஃது அவளது ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவுகிறது.

பொதுவாக, வட இந்தியாவிலுள்ள விதவைப் பெண்கள் வெள்ளை சேலை உடுத்தி தலையை மழித்துக் கொண்டு முக்காடு போட்டபடி வாழ்கின்றனர்; தென்னிந்தியாவிலோ வெளிர் மஞ்சள் நிறத்திலும் சேலை உடுத்துகின்றனர். ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் பாரம்பரியத்தில்கூட விதவைகள் குறிப்பிட்ட (கருப்பு நிற) உடையின் மூலமாக தங்களை வேறுபடுத்திக் கொண்டனர் என்பதைக் காண்கிறோம். இறையுணர்வற்ற நவீன கால வாழ்க்கை முறையின் தாக்கத்தினால், இந்தப் பண்பாடு மேற்கத்திய நாடுகளில் முற்றிலுமாக அழிந்துவிட்டது, இந்தியாவிலும் படிப்படியாக குன்றி வருகிறது.

நவீன காலத்தில் விதவையின் உடை

53 வயதில் நான் என் கணவரை இழந்தபோது, என்னுடைய பாட்டியின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற விருப்பம் கொண்டேன். ஆயினும், என்னைச் சுற்றியிருந்த ஒவ்வொருவரும் அந்த முடிவை எடுத்தமைக்காக என்னைத் திட்டித் தீர்த்தனர். “காலம் மாறி விட்டது, இன்னும் அந்த காலத்தைச் சார்ந்த பயனற்ற கடுமையான பழக்கவழக்கங்களைப் பின்பற்றத் தேவையில்லை,” என்று அறிவுறுத்தினர். ஆயினும், அத்தருணத்தில் என்னுடைய வாழ்வின் நோக்கம் ஆன்மீகப் பண்பாட்டை நோக்கி பலமாக திரும்பியது. எனவே, என்னுடைய வெளித் தோற்றத்தை மாற்றிக்கொள்வதன் மூலமாக, இந்த பௌதிக உலகின் மீதான பற்றின்மையை வளர்ப்பதற்கான சுதந்திரம் எனக்குக் கிட்டும் என்று தோன்றியது.

என்னுடைய விதவை உடையானது இன்றும்கூட பல்வேறு நபர்களிடமிருந்து சிறப்பான மரியாதையைப் பெற்று தருகிறது என்பதைப் பார்த்தபோது, எனக்கே ஆச்சரியமாக இருந்தது. பற்றின்மை வளர்த்தல் விதவைகளுக்கு அவசியமானதாகும். கணவர் உயிருடன் இல்லாத தருணத்தில், வேறு யாருடைய இன்பத்திற்காகவும் நன்றாக உடையணிய வேண்டிய அவசியமில்லை.

ஆன்மீக வாழ்விற்கு உதவும் உடை

என்னுடைய கதையைக் கேட்கும்போது, யாரோ பாரம்பரியத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணின் தனிப்பட்ட தேர்வாகத் தோன்றலாம். ஆயினும், மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்பும் எல்லாருக்கும் எல்லா காலத்திற்கும் எல்லா இடத்திற்கும் வேதப் பண்பாடு பொருத்தமானது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதிலும் குறிப்பாக, மனித வாழ்வின் நோக்கம் ஸ்ரீ கிருஷ்ணருக்கான தூய அன்புத் தொண்டினை வளர்ப்பது என்பதைப் புரிந்துகொள்வதற்கு, வேதப் பண்பாடு மிகவும் உதவுகிறது. மேலும், உடலின் மீதான பற்றுதலிலிருந்து விடுபடுவதே ஆன்மீக வாழ்வின் அடிப்படை உபதேசம் என்பதால், அந்நிலையை அடைய உதவும் உடையினை அணிதல் சிறந்ததன்றோ?

நவீன கால வாழ்க்கை நம்முடைய புலன்களை திருப்தி செய்வதை அடிப்படையாகக் கொண்டுள்ளதால், இது நம்மை மேன்மேலும் பௌதிக வாழ்வின் பந்தத்தினுள் பிணைத்து நம்முடைய நித்திய இலக்கை மறக்கச் செய்கிறது; அதாவது, முழுமுதற் கடவுள் கிருஷ்ணருடனான நம்முடைய உறவை மறக்கச் செய்கிறது. ஆனால், வேத வாழ்விலோ உடலின் தேவைகளைக் குறைத்துக்கொள்வதற்கும், அனைவரும் முழுமுதற் கடவுளின் இன்பத்திற்கு உரித்தானவர்கள் என்பதை மனதில் நிறுத்துவதற்கும் நாம் பயிற்றுவிக்கப்பட்டோம். அந்த பகவானே அனுபவிப்பவர், நாம் அனைவரும் அவரால் அனுபவிக்கப்பட வேண்டியவர்கள். எனவே, உண்ணுதல், உடுத்துதல், பணிபுரிதல், பேசுதல், கேட்டல், நுகர்தல், தொடுதல் என வாழ்வின் எல்லா நிலையிலும் ஒருவன் பகவானுக்கு இன்பமளிப்பதை நோக்கமாகக் கொண்டு பயிற்றுவிக்கப்பட்டான்.

உடுத்தும் உடையானது ஒரு விதவைக்கு எளிமையை உணர்த்துகிறது, அவளது வாழ்வின் உறுதியையும் விரதத்தையும் எடுத்துரைக்கின்றது; கிருஷ்ணரை எப்போதும் நினைத்துக் கொண்டு அவருக்கு சேவை செய்வதற்காக மேற்கொள்ளப்படும் தவமாக இது கருதப்படுகிறது. பெண்களை அடக்கி ஆள்வதற்காக நம்முடைய முன்னோர்கள் திணித்த ஒரு சடங்காக இதனை நாம் கருதக் கூடாது. பாரம்பரிய பெண்கள் அத்தகைய வாழ்க்கை முறையை தாமாகவே முன்வந்து விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டனர். கணவனை இழந்து வாழ்வதற்கு பூர்வ ஜன்ம கர்ம வினையே காரணம் என்பதையும், இறுதியான நிலையில் இவையனைத்தும் பக்தித் தொண்டில் நம்மை தீவிரப்படுத்தி தம்முடைய திருநாட்டிற்கு அழைத்துச் செல்வதற்கான பகவானுடைய திட்டமே என்பதையும் அவர்கள் புரிந்து கொண்டு வாழ்ந்தனர்.

மற்றவர்களுக்கு உதவுதல்

ஸ்ரீல பிரபுபாதரைப் பின்பற்றுபவர்களுக்கு மத்தியில், விதவைகள் உதாரண பெண்களாக இருக்க வேண்டும், ஆன்மீக முன்னேற்றத்திற்குத் தேவையான எல்லாவற்றையும் பின்பற்றுபவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இத்தகு வாழ்க்கை முறை பக்தர்களாக இருக்கும் இளம் பெண்களுக்கு நல்ல வழிகாட்டுதல்களையும் முன்மாதிரியையும் அமைத்துத் தரும்; மேலும், வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளிலும் கிருஷ்ண உணர்வை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதில் அவர்களுக்கு தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கும். கணவரை இழந்து விதவையாக வாழ்ந்த குந்தி, கணவரைப் பிரிந்து காட்டில் வாழ்ந்த சீதை, கணவர் சந்நியாசம் ஏற்றதால் விதவையைப் போன்றே வாழ்ந்த விஷ்ணு பிரியா முதலியோரை எடுத்துக்காட்டாகக் கொண்டு, நாமும் வேத பாரம்பரியத்தைப் பின்பற்றுதல் நலம்.

பாரதத்தின் வேதப் பண்பாட்டினை உலகம் முழுவதும் கற்பித்த ஸ்ரீல பிரபுபாதரின் தெளிவான உபதேசங்களுக்கு நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன்; மேலும், என்னுடைய ஆன்மீக குருவான தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி அவர்கள் இந்தப் பண்பாட்டினை என்னுடைய வாழ்வில் நடைமுறைப்படுத்துவதற்கான தைரியத்தையும் பலத்தையும் ஊக்கத்தையும் வழங்கினார். ஆரம்பத்தில் நான் தயங்கியபோதிலும், அவருடைய தொடர் அறிவுரைக்குப் பின்னர், இதனை நான் ஏற்றுக் கொண்டேன். இதன் மூலமாக வாழ்வில் அடுத்து என்ன செய்வது என்பதில் நான் குழம்பி நிற்கவில்லை, என்னுடைய தர்மம் தெளிவானதாக உள்ளது, என்னுடைய கடமைகள் சிக்கலின்றி உள்ளன; எனவே, நான் பாதுகாக்கப்பட்டவளாக, தஞ்சம் பெற்றவளாக உணர்கின்றேன், மகிழ்ச்சியாக வாழ்கின்றேன்.

இந்த வயதில் கிருஷ்ண உணர்வின் வளமான பண்பாட்டையும் அனுபவத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வது எனக்கு நலமென தோன்றுகிறது. பெண்களுக்கு மத்தியில் கற்பின் நெறிகளைப் பின்பற்றுவதிலும், பெண்களுக்கான தர்மத்தை போதிப்பதிலும், தம்பதியர்களுக்கு இடையிலான சிரமங்களைக் களைவதிலும் உதவி வருகிறேன். மேலும், பெண்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்வதற்கு அதிகமான நேரம் எனக்குக் கிட்டுகிறது. நான் என்னையும் மற்றவர்களையும் கிருஷ்ண உணர்வில் முன்னேற்றிக் கொண்டு வாழ்வின் பக்குவத்தை அடைவதற்கு இவை உதவியாக உள்ளன.

[/et_pb_text][/et_pb_column][/et_pb_row][/et_pb_section]
[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives