ஸ்ரீல பிரபுபாதரின் அமெரிக்க சீடரும் அவரது சீக்கிய நண்பரும் மலை உச்சியில் இருக்கும் புராதன தீர்த்த ஸ்தலத்திற்கு மோட்டார் சைக்கிளில் மேற்கொண்ட புனித பயணம்
வழங்கியவர்: திரு. பதித பாவன தாஸ்
“நீ பிறப்பதற்கு முன்பாகவே நான் இராம கிரியைப் பார்த்துள்ளேன்,” என்று நான் என்னுடைய இளம் சீக்கிய நண்பனான அனுகரனிடம் கூற, அதனால் ஆர்வமடைந்த அனுகரன் என்னுடன் இணைந்து பகவான் இராமசந்திரரின் இராம கிரியை பார்வையிட ஒப்புக்கொண்டார். மறுநாள் காலை ஒன்பது மணிக்கு என்பீஃல்டு புல்லட்டை எடுத்துக் கொண்டு இராம கிரியை நோக்கி புறப்படுவதற்கு முடிவு செய்தோம்.
அனுகரன் சிங் பஞ்சாப் மாநில சீக்கிய வீரர்களின் பரம்பரையில் வந்த செல்வந்த குடும்பத்தைச் சார்ந்தவர். அவருடைய பரம்பரையில், இந்தியாவை தாக்க வந்தவர்களை தடுத்து நிறுத்துவதற்காக, பலரும் உயிர் தியாகம் செய்துள்ளனர். அவர் தற்பொழுது வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளபோதிலும், இந்தியாவின் புராதன பாரம்பரியத்தைக் கட்டிக் காக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமுடையவராக உள்ளார்.
“சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு இந்தியர்கள் தங்களது பண்பாட்டில் அதிக ஆர்வமில்லாதவர்களாக இருந்தனர். ஆனால் தற்போதைய தலைமுறையினர் இதில் மிகுந்த ஆர்வமுடையவர்களாக இருக்கின்றனர்,” என்று அவர் என்னிடம் கூறினார். நாக்பூரில் அமைந்துள்ள ராயல் என்பீஃல்டு கிளப்பை ஆரம்பித்தவர் அனுகரன். இந்தியா முழுவதும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் பாதுகாப்புடன் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்துவதே அந்த கிளப்பின் பணியாகும். ஒவ்வொரு பொருளுக்கும் சில குறிப்பிட்ட வேலைகள் உள்ளன, ஆனால் அவற்றின் உண்மையான பயன் அப்பொருட்களை நாம் கிருஷ்ணரின் தொண்டில் ஈடுபடுத்தும்போது மட்டுமே. எனவே, அனுகரனும் நானும் எங்களுடைய தீர்த்த யாத்திரையை என்பீஃல்டில் மேற்கொள்ள முடிவு செய்தோம்.
புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ இராமர், அவரது மனைவியான சீதா தேவி, இளைய சகோதரரான இலட்சுமணன் ஆகிய மூவரையும் மிகச்சிறந்த ரிஷியான அகஸ்திய முனிவர் வரவேற்ற புண்ணிய மலைக்கு பயணம் மேற்கொள்வதற்கு நாங்கள் பாக்கியம் செய்தவர்களே. ஸ்ரீ இராமர் அகஸ்திய முனிவரை இம்மலையில் சந்தித்த பின்னர், இங்குள்ள அகஸ்திய ஆசிரமமானது யாத்திரிகர்களால் இராம கிரி என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.
இராம கிரியின் வரலாறு
இலட்சக்கணக்கான வருடங்களுக்கு முன்பு திரேதா யுகம் நிகழ்ந்த காலத்தில், முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வுலகில் ஸ்ரீ இராமராக அவதரித்தார். ஸ்ரீ இராமரின் லீலைகள் அனைத்தும் ஆதி கவியாகிய வால்மீகி முனிவரால் இராமாயணத்தில் எழுதப்பட்டுள்ளது. வால்மீகி என்றால் புற்றிலிருந்து வந்தவர் என்று பொருள். இராமரின் தெய்வீக லீலைகளை தியானித்தபடி வால்மீகி திடமாக ஆன்மீக ஸமாதியில் நிலைபெற்று இருந்தார். அப்போது அவரைச் சுற்றி காட்டில் இருந்த எறும்புகள் புற்றைக் கட்டிவிட்டன. பற்பல வருடங்களுக்குப் பிறகு அந்த புற்றிலிருந்து வெளியே வந்த வால்மீகி, 24,000 சமஸ்கிருத ஸ்லோகங்களைக் கொண்ட இராமாயணத்தை இயற்றினார். இராமாயணமே உலகத்தின் மிகப் பழமையான புத்தகமாகும்.
கட்டுண்ட ஜீவன்களை பக்தி யோகம் அல்லது பக்தித் தொண்டு என்று அழைக்கபடக்கூடிய தெய்வீகப் பாதையை நோக்கி அழைத்துச் செல்வதே பகவான் இராமருடைய அவதார நோக்கமாகும். ஸ்ரீமத் பாகவதம், இராமாயணம் போன்ற சாஸ்திரங்களில் உள்ள பகவானின் லீலைகளைப் படிப்பதன் மூலமாகவும், ஸ்ரீல பிரபுபாதரைப் போன்ற தூய பக்தர்களின் திருவாயிலிருந்து பகவானின் அற்புத சக்திகளைப் பற்றி கேட்பதன் மூலமாகவும், ஒருவருடைய உண்மையான ஆன்மீக வாழ்வின் ஆனந்த நிலை தொடங்குகின்றது. பகவானின் லீலைகளை நினைவுகூறுவதை காரணமாக வைத்து தீர்த்த யாத்திரை மேற்கொள்ளும்போது, அந்த பிரயாணம்–விருந்தாவனம், அயோத்தியா, இராம கிரி என்று எந்த இடமாக இருந்தாலும்ஶீநம்மை தூய்மைப்படுத்தி நம்முடைய வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக அமைகின்றது.
நினைவிற்கெட்டாத காலந் தொட்டு ஜீவாத்மாக்களான நாம் ஒவ்வொருவரும் பிறப்பு இறப்பின் சுழற்சியில் சிக்கிக் கொண்டுள்ளோம். மாயையின் வலையில் பந்தப்பட்டுள்ள தன்னுடைய சேவகர்களை விடுவிப்பதற்காக கடவுள் தானே வருகின்றார், அல்லது அவரது அவதாரங்களை அனுப்பி வைக்கின்றார். பகவானின் திருப்பாதங்களின் மீது கவர்ச்சி கொண்டு அவரது தெய்வீகப் பாதுகாப்பை ஏற்பதும், அவரது திருநாமங்களைப் பாடுவதும், அந்த முழுமுதற் கடவுளின் திருநாட்டிற்குத் திரும்பிச் செல்வதற்கு உதவும் கதவுகளாக அமைகின்றன.
ஸ்ரீ இராமர் தனது தந்தையான தசரதரின் கட்டளைப்படி, அயோத்தியாவைத் துறந்து பதினான்கு ஆண்டுகள் வனவாசத்தை மேற்கொண்டார். முழுநிலவு மேகத்தினுள் நுழைவதுபோன்று, இராமர், சீதை, இலட்சுமணர் ஆகிய மூவரும் தெற்கு நோக்கி பயணம் மேற்கொண்டனர். சித்திரகூட மலையிலுள்ள மரங்களுக்கு இடையில் பயணித்த பின்னர், அங்கிருந்து அவர்கள் மத்திய பாரதத்தை கடந்து, விந்திய மலையின் வழியாக புனிதமான நர்மதா நதியை அடைந்தனர். அதன் பின்னர் பரந்து விரிந்திருக்கக் கூடிய தண்டக வனத்தை அவர்கள் அடைந்தனர். அப்பகுதி சாதுக்களின் வாசஸ்தலமாக இருந்து வந்தது. வனவாசத்தின் துயரங்களை தைரியமாக எதிர்கொண்டு வாழ்ந்து வந்த அவர்கள் தற்போது இராம கிரி என்று அழைக்கப்படக்கூடிய மலைமீது இருக்கும் அகஸ்திய முனிவரின் ஆசிரமத்தை அடைந்தனர். சத்திரிய பிரிவைச் சார்ந்தவர் என்ற முறையில், பகவான் இராமர் பிராமணரான அகஸ்திய முனிவருக்கு இனிமையான வார்த்தைகளுடன் நமஸ்காரம் செய்தார்.
ஒப்புயர்வில்லாத அகஸ்திய முனிவர், திரிகால ஞானி என்று அழைக்கப்படுகிறார். அதாவது, அவர் கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என மூன்றையும் காணும் திறன் படைத்தவர். ஆதலால், ஸ்ரீ இராமர் சாக்ஷாத் பகவான் நாராயணரே என்பதை அவர் புரிந்து கொண்டார். மேலும், கூடிய விரைவில் இவ்வுலகிலுள்ள அனைத்து அசுரர்களையும் அவர் கொல்ல உள்ளார் என்பதையும் தெரிந்து கொண்டார்.
தண்டக காட்டில் வசித்து வந்த பல்வேறு சாதுக்கள் அசுரர்களால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் எந்த ஓர் அசுரனாலும் அகஸ்தியரை தொந்தரவு செய்ய முடியவில்லை. தன்னுடைய கடினமான தவத்தினாலும் உயர்ந்த புத்திசாலித்தனத்தினாலும், அகஸ்திய முனிவர் மிகவும் மோசமான சகோதரர்களான இல்வலன், வாதாபி என்ற இரு அசுரர்களைக் கொன்றார். இல்வலன் சமஸ்கிருதம் பேசும் பிராமணரின் உருவத்தை எடுத்து சாதுக்களை உணவருந்த அழைப்பான். அப்போது வாதாபி அவர்களுடைய உணவாக மாறிவிடுவான். அனைவரும் சாப்பிட்டு முடித்த பின்னர், இல்வலன் புன்னகையுடன், வாதாபி, வெளியே வா,” என்று கூறுவான். அப்போது, அந்த அப்பாவி ரிஷிகளின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வாதாபி வெளியே வருவான்.
இந்த இரு அசுர சகோதரர்களின் கொட்டத்தை அடக்க, தேவர்கள் அகஸ்தியரை அணுகினர். அவர்களது வேண்டுகோளின்படி, இல்வலனின் விருந்தோம்பலை அகஸ்தியர் ஏற்றுக் கொண்டார். அகஸ்தியர் விருந்து உண்ட பின்னர், இல்வலனும் வழக்கம்போல வாதாபியை அழைத்தான். ஆனால் அகஸ்தியர் புன்னகையுடன் அறிவித்தார்: “உன்னுடைய சகோதரன் இனிமேல் வெளியே வரமுடியாது. ஏனெனில், என்னுடைய வயிற்றில் உள்ள செரிமான அக்னியினால் அவன் ஏற்கனவே எமராஜரின் உலகிற்கு அனுப்பப்பட்டு விட்டான்.” இதனால் கோபமடைந்த இல்வலன் அகஸ்திய முனிவரைத் தாக்குவதற்கு முன்வந்தான். ஆனால் அகஸ்தியரோ தன்னுடைய சக்தி வாய்ந்த பார்வையினால் உடனடியாக அவனை சாம்பலாக மாற்றினார்.
மிகவும் உயரமாக இருந்த விந்திய மலைகள் சூரியன் தெற்கு நோக்கிச்செல்வதை தடுத்து வந்த காரணத்தினால், அம்மலைகளைச் சற்று பணியுமாறு தெற்கு நோக்கி பயணம் மேற்கொண்ட அகஸ்தியர் வேண்டினார். “நான் தெற்கிலிருந்து திரும்பி வந்த பிறகு, மலைகளே, நீங்கள் மீண்டும் எழுந்து கொள்ளலாம்,” என்று அகஸ்தியர் அம்மலைகளுக்கு வாக்குறுதியும் கொடுத்தார். இருப்பினும், விந்திய மலைகளை எப்போதும் பணிவாக வைத்திருக்கும் நோக்கத்துடன், அகஸ்தியர் மீண்டும் வடக்கு நோக்கிச் செல்லவே இல்லை. அதற்கு பதிலாக, அவர் தன்னுடைய ஆஸ்ரமத்தை இராம கிரியில் வைத்துக் கொண்டார். இராம கிரி விந்திய மலைப் பகுதியின் தெற்கே அமைந்துள்ளது. ஒருகாலத்தில் மிகவும் உயரமாக இருந்த விந்தியமலை தற்போது வெறும் பள்ளத்தாக்காக மாறி நிற்கின்றது. இதுவே இந்தியாவின் வடக்குப் பகுதியையும் தெற்குப் பகுதியையும் பிரிப்பதாக விளங்குகிறது.
அகஸ்திய முனிவர் சீதை, இராமர், இலட்சுமணர் ஆகிய மூவரையும் பூ மற்றும் பழங்களைக் கொடுத்து முறைப்படி உபசரித்தார். இந்திரனால் தனது பாதுகாப்பிற்காக அளிக்கப்பட்ட பிரம்மதத்வ என்னும் வில்லினை அவர் இராமருக்கு பரிசளித்தார். விஸ்வகர்மாவினால் உருவாக்கப்பட்ட அந்த வில்லானது பல்வேறு வைரங்கள் பொதிக்கப்பட்டு அற்புதமாக காட்சியளித்தது. அந்த வில்லுடன் இணைந்து, யாராலும் வெல்லவியலாத பிரம்மாஸ்திரத்தையும் அகஸ்தியர் இராமருக்கு பரிசளித்தார். மேலும், இரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஒரு வாளையும் பரிசளித்தார்.
அகஸ்திய ஆஸ்ரமத்தில் வசித்து வந்த தண்டக வன முனிவர்களுடன் பேசும்போது, “இங்கே பிரச்சனைகள் செய்யும் அசுரர்களைக் கொல்வேன்,” என்று இராமர் அவர்களுக்கு உறுதியளித்தார். அவர் அந்த உறுதியை மேற்கொண்டபோது இராம கிரி முழுவதும் அதிர்ந்தது. இராம கிரியின் அடிவாரத்தில் இராம தேக் என்னும் பெயரில் ஒரு கிராமம் உள்ளது. இராம தேக் என்றால் இராமரின் சபதம் என்று பொருள். பகவத் கீதையில் (4.7-8), எப்போதெல்லாம் தர்மம் சீர்குலைந்து அதர்மம் மேலோங்குகின்றதோ, அப்போதெல்லாம் அவதாரமெடுத்து தனது பக்தர்களைக் காத்து துஷ்டர்களை அழிப்பதாக கிருஷ்ணர் கூறுகிறார்.
இலங்கையில் இராவணனுடனும் இதர இராக்ஷசர்களுடனும் ஸ்ரீ இராமர் போரிட்டபொழுது, அவரது தேரோட்டியான மாதலி, அகஸ்திய முனிவரால் அளிக்கப்பட்ட அஸ்திரங்களைப் பற்றி இராமருக்கு நினைவூட்டினார். இராமர் பிரம்மாஸ்திர மந்திரங்களை பிரயோகித்து இராவணனின் இதயத்தைத் துளைத்தார். பகவான் எப்பொழுதும் எல்லா காலத்திலும் தன்னுடைய பக்தர்களைப் பாதுகாக்கின்றார். நரசிம்மராக அவதரித்து பிரஹலாதரையும், இராமராக அவதரித்து தண்டக வன முனிவர்களையும், கிருஷ்ணராக அவதரித்து அர்ஜுனனையும், சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்து ஹரே கிருஷ்ண சங்கீர்த்தன இயக்கத்தையும் அவர் பாதுகாத்து வருகிறார். இதுவே அவரது சத்தியமாகும்.
எங்களின் பயணம்
மறுநாள் காலை மணி ஒன்பது: நான் எனது மைத்துனரின் வீட்டில் விருந்தாளியாக தங்கி இருந்தேன், அனுகரன் அவ்வீட்டின் முன்பாக தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வந்து சேர்ந்தார். நாங்கள் அந்த என்பீஃல்டு புல்லட்டில் எங்களது பயணத்தைத் தொடர்ந்தோம். சில விநாடிகளில் இராம கிரியின் பாதையைத் தொட்டுவிட்டோம். சுமார் ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு, எங்களுடைய வலதுகை புறமாக இராம கிரி மலை இருந்ததைக் கண்டோம். இராம தேக் கிராமத்தின் வழியாக அங்கிருந்த அசாதாரணமான கடைகள், ஆஸ்ரமங்கள், தர்மசாலா, பௌத்த மதத்தின் ஆயுர்வேத ஆஸ்ரமங்கள், பல்வேறு வீட்டு விலங்குகள் என எல்லாவற்றையும் கடந்து நாங்கள் சென்றோம்.
இராம கிரியை ஏறுவதற்கான சாலையை அடைந்தோம். பாதி மலையில் நாங்கள் ஏறியபோது, பாத யாத்திரிகர்களாக மலையேறிய பக்தர்களால் எங்களது பயணம் சற்று தடைப்பட்டது. அங்கு வந்திருந்த பெண்கள் உடுத்தியிருந்த சேலையை வைத்து, அவர்கள் மகாராஷ்டிர கிராமத்தைச் சார்ந்தவர்கள் என்று என்னால் யூகிக்க முடிந்தது. அவர்களில் பலரும் கால்களில் காலணி அணியாமல் வெறும் கால்களுடன் மலையேறிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் காலணி இல்லாமல் இருக்கவில்லை; உயர்ந்த காரணத்திற்காக உயர்ந்த பலனை அடைவதற்காக அவர்கள் அந்த தவத்தினை மேற்கொண்டிருந்தனர்.
சாலையின் இறுதி வளைவு சற்று அகலமாக இருந்தது. அங்கே எங்களுக்கு முன்பு இராம கிரி கோட்டையைக் கண்டோம். கோட்டை பல்வேறு நூற்றாண்டுகளுக்கு முன்பு போன்ஸ்லே வம்சத்து மன்னர்களால் கட்டப்பட்டது என்பதை அறிந்து கொண்டேன். இராம கிரியில் அவர்கள் கோட்டையை அமைத்ததற்கான இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன: (1) அப்பகுதியைச் சுற்றியுள்ள எல்லா இடங்களையும் மன்னர்களால் பார்வையிட முடியும், (2) புனித ஸ்தலங்களைப் பாதுகாப்பது மன்னர்களின் முக்கிய கடமை.
இருப்பினும், 1927இல், சிதல்பூண்டி என்னும் இடத்தில் நிகழ்ந்த போரில், போன்ஸ்லே வீரர்கள் ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்டனர். அவர்களின் தோல்விக்கு பிறகு இப்பகுதி முற்றிலும் சீரழியத் தொடங்கியது, கோட்டையும் சிதிலமடையத் தொடங்கியது. இன்று இங்குள்ள கோட்டையும் கோயில்களும் வரலாற்று சின்னங்களாக மதிக்கப்பட்டு, அரசாங்கத்தினால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
என்பீஃல்டை ஓரமாக நிறுத்தியபிறகு, அங்கிருந்த மிகப்பெரிய அசாதாரணமான வராஹ விக்ரஹத்தினை நாங்கள் நமஸ்கரித்தோம். வராஹருக்கான கோயில்கள் சில இடங்களில் உள்ளபோதிலும், இராம கிரியில் இருப்பவரைப் போல மிகப்பெரிய அளவில் இருக்கும் ஸ்வயம்பு வராஹ விக்ரஹம், எனக்கு தெரிந்த வரை மத்திய பிரதேசத்தில் உள்ள மோஜ்ஹோலி என்னும் இடத்தில் மட்டுமே உள்ளார். அங்கு அவர் ஸ்ரீ விஷ்ணு வராஹஜி என்னும் பெயரில் வழிபடப்பட்டு வருகின்றார். இராம கிரியில் உள்ள வராஹ விக்ரஹத்தின் வரலாற்றினை என்னால் துல்லியமாக கணிக்க இயலவில்லை. இருப்பினும், இந்தியாவில் உள்ள இரண்டு மிகப்பெரிய வராஹ விக்ரஹங்களில் இவர் ஒருவராக இருக்கிறார் என்பது உண்மையே. வராஹருக்கு மாலை அணிவித்து அவருடைய பிரசாதத்தினை பூஜாரியிடமிருந்து பெற்றுக் கொண்ட பிறகு, அகஸ்திய முனிவரின் ஆசிரமத்தினுள் நுழைந்தோம்.
பளிங்கு கற்களால் நன்றாக கட்டப்பட்டு பக்தியுடைய சாதுக்களால் கவனமாக பராமரிக்கப்பட்டு வரும் அந்த ஆசிரமம், யாத்ரிகர்களின் ஸ்தலமாக மாறி வருகின்றது. ரிஷிகள் பகவான் இராமரை வரவேற்ற யக்ஞ சாலையானது திரேதா யுகத்திலிருந்து இன்று வரை தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகின்றது. அகஸ்தியரின் குகைக்கு முன்பாக இரும்பு கதவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட யோகிகள் மட்டுமே அக்குகையினுள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அக்குகை அத்திபோர் என்று அழைக்கப்படுகிறது. ஆசிரமத்தில் உள்ள சாதுக்கள், அகஸ்திய முனிவரின் கோயிலைப் பராமரிப்பதிலும், அவரை இடைவிடாமல் வழிபடுவதிலும் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர். அவர்களது பக்தியைப் பார்க்கும்பொழுது புராண முக்கியத்துவம் கொண்ட இவ்விடத்தின் மகிமையை நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
அகஸ்திய முனிவரின் அமைதியான குகை மட்டுமின்றி இங்கே பல்வேறு இதர கோயில்களும் உள்ளன. அவற்றில் முதன்மையானதாக இருப்பது இலட்சுமணரின் கோயிலாகும். இலட்சுமணரே முதன்முதலில் இராம கிரிக்கு விஜயம் செய்து, தன்னுடைய சகோதரரான இராமரும் அவரது பத்தினியான சீதையும் வருகிறார்கள் என்பதை சாதுக்களுக்கு எடுத்துரைத்தார். அதனால்தான் இலட்சுமணரின் கோயில் முதலாவதாக எழுப்பப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இராமர், சீதை, அனுமான் என ஒவ்வொருவருக்கும் தனித்தனி கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விக்ரஹங்களைப் பற்றி உள்ளுர் மக்கள் கூறும் வரலாறு குறிப்பிடதக்கதாகும். 1736இல் மன்னர் பிரபு போன்ஸ்லே இராம கிரிக்கு விஜயம் செய்தார். அப்போது அவர் கண்டது, பகவான் இராமருடைய பாதுகை மட்டுமே, இங்கிருந்த சாதுக்கள் அப்பாதுகையை வழிபட்டு வந்தனர். அப்போது இங்கே விக்ரஹங்கள் இல்லை என்பதால், ஜெய்பூரிலிருந்து விக்ரஹங்களை தயாரித்து பிரதிஷ்டை செய்வதற்கு மன்னர் உறுதி பூண்டார். இருப்பினும், ஜெய்பூரில் தயாரிக்கப்பட்ட மூர்த்திகள் பிராண பிரதிஷ்டை செய்வதற்கு முன்பாக மன்னர் ஒரு கனவு கண்டார். அக்கனவில் பகவான் இராமர் இராம கிரிக்கு வடக்கே சில மைல் தொலைவில் உள்ள சூல் எனப்படும் நதியில் தன்னைத் தேடுமாறு மன்னருக்கு கட்டளையிட்டார். இறுதியாக, 1753இல் மூல விக்ரஹங்கள் கண்டெடுக்கப்பட்டு இராம கிரியின் உச்சியில் மாபெரும் திருவிழாக்கோலமாக பிரதிஷ்டை செய்யப்பட்டனர். ஜெய்ப்பூரிலிருந்து வந்த விக்ரஹங்கள் தனிப்பட்ட முறையில் மற்றோர் இடத்தில் ஆராதிக்கப்படுகின்றனர்.
அனுகரனும் நானும் ஒவ்வொரு கோயிலாக விஜயம் செய்தோம். எங்களால் இயன்ற தட்சணையை அங்கிருந்தவர்களுக்கு கொடுத்து வந்தோம். தரிசனம் பெற்ற பின்னர், மலைமீது மேலும் சற்று தூரம் ஏறினோம். மலை உச்சியை அடைந்தபோது, அங்கிருந்து அம்மலையை சுற்றியுள்ள விளைநிலங்களையும் ஏரிகளையும் சின்னஞ்சிறு கிராமங்களையும் எங்களால் காண முடிந்தது. அச்சமயத்தில் கீர்த்தனத்தின் ஒலி எங்களது காதுகளில் விழுந்தது. எந்த பாத யாத்ரிகர்களை நாங்கள் மலை ஏறி வந்தபோது பார்த்தோமோ, அவர்கள் தற்போது கோயிலை அடைந்து கீர்த்தனம் செய்து கொண்டுள்ளனர் என்பதை உணர்ந்தோம். கீர்த்தனமே கலி யுகத்திற்கான யுக தர்மமாயிற்றே. அப்பக்தர்கள் அனைவரும் பகவான் இராமரின் விக்ரஹத்தின் முன்பு அமர்ந்து அவருடைய திருநாமங்களை பாடிக் கொண்டு இருந்தனர். பகவானைக் கண்டதால் ஏற்பட்டிருந்த ஆனந்தத்தினை எல்லோருடைய முகத்திலும் காண முடிந்தது.
இராம கிரியை நோக்கி மேலும் பல என்பீஃல்டுகள்
எங்களின் கவனம் மலை அடிவாரத்தில் உள்ள அம்பல குண்டத்தை நோக்கி திரும்பியது. அழகான தெளிந்த நீருடன் இருக்கும் அந்த குண்டத்தின் கரையில் பல்வேறு கோயில் களும் மரங்களும் உள்ளன. இக்குண்டம் அம்பர் எனப்படும் மன்னரின் பெயரால் அழைக்கப்படுகிறது. மிகக்கொடிய வியாதியினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அம்மன்னர், இக்குண்டத்தில் குளித்து தன்னுடைய நோயைக் குணப் படுத்திக் கொண்டார். இக்குண்டத்தின் நீரானது கீழிருந்து வரக் கூடிய பாதாள கங்கையைச் சார்ந்தது என்று கூறப்படுகிறது.
பதினெட்டாம் நூற்றாண்டில் மன்னர் ரகு போன்ஸ்லே, இந்த ஏரியையும் இதைச் சுற்றி இருக்கும் பல்வேறு கோயில்களையும் சிறப்பான கற்களைக் கொண்டு புதுப்பித்துள்ளார். இங்கே ஜகன்நாதர், பஞ்சமுகி மஹாதேவர் (ஐந்து முகங்களைக் கொண்ட சிவபெருமான்) மற்றும் சூரிய நாராயணரின் கோயில்கள் உள்ளன.
ஆன்மீக சக்தியினால் உந்தப்பட்டு அனுகரனும் நானும் மலையிலிருந்து இறங்கி அம்பல குண்டத்தை அடைந்தோம். அங்கே நிழல்புறமாக பார்த்து எங்களது வண்டியை நிறுத்தினோம். அக்குண்டத்தில் குளித்து பிரார்த்தனை செய்த பிறகு, “நானும் பலமுறை இராம கிரிக்கு வந்துள்ளேன், ஆனால் இம்முறை இதன் அழகும் பொருளும் எனக்கு அதிகமாக விளங்கியுள்ளது,” என்று அனுகரனிடம் கூறினேன். நான் தற்போது ஸான்பிரான்சிஸ்கோவிற்கு திரும்பிவிட்டேன், என்னுடைய வீட்டு விவகாரங்களில் ஈடுபட்டுள்ளேன். இருப்பினும், இந்தியாவில் நான் பெற்ற அனுபவங்கள் மறக்க முடியாதவை. அடுத்த முறை இராம கிரிக்குச் செல்லும்போது, அனுகரனுடைய என்பீஃல்டு கிளப்பைச் சார்ந்த பல்வேறு உறுப்பினர்களும் தங்களது என்பீஃல்டுகளில் எங்களுடன் இணைய தயாராக உள்ளனர் என்னும் செய்தி இன்பத்தைக் கொடுக்கிறது.
குறிப்பு: இராம தேக் கிராமத்தையும் இராம கிரியையும் விஜயம் செய்ய விரும்பும் பக்தர்கள் இஸ்கான், நாக்பூரில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ ராதா மாதவர் கோயிலிலுள்ள பக்தர்களை தொடர்பு கொண்டால் வேண்டிய ஏற்பாடுகளை அவர்கள் செய்து தருவர்.
இராம நாமத்தின் மகிமை
இராம கிரியில் வீற்றுள்ள இராமர் கோயிலின் புனித தன்மையால் உந்தப்பட்டு, அந்த சூழ்நிலையை உபயோகித்து நான் அனுகரனிடம் பின்வருமாறு சற்று பிரச்சாரம் செய்தேன்: “பகவான் இராமர் அல்லது ஸ்ரீ கிருஷ்ணரின் வழிபாடு என்பது உலகிலுள்ள அனைவருக்குமானது. இஃது எந்தவொரு குறிப்பிட்ட பிரிவினருக்கோ மதத்தினருக்கோ மட்டுமானது அல்ல. அவர்களுடைய திருநாமம் அனைவரையும் விடுவிக்கும் திறன் படைத்தது. இவ்வுலகில் எல்லாவிதமான துயரங்களையும் அனுபவித்து வரும் ஜீவனை அதிலிருந்து விடுவித்து ஆனந்தமளிக்கும் சக்தி படைத்தது இந்த திருநாமம். பகவானின் திருநாமம் சாக்ஷாத் பகவானிலிருந்து வேறுபட்டது அல்ல. ஆன்மீக உலகின் எஜமானரான பகவானுக்கு முக்தி பெற்ற ஆத்மாக்கள் பலரும் சேவை செய்கின்றனர்; இருப்பினும், நம்மை விடுவிப்பதற்காக அந்த பகவான் இவ்வுலகினுள் இறங்கி வருகின்றார். கலி யுகத்தில் அவரை வழிபடுவதற்கான சிறப்பான வழிமுறை அவருடைய திருநாமத்தை ஸங்கீர்தனம் செய்வதாகும். இந்த ஸங்கீர்த்தனம் எல்லா தரப்பட்ட பிரிவினர்களுக்கும், மதத்தினர்களுக்கும் உரியதாகும். உலகெங்கிலும் ஸ்ரீல பிரபுபாதரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஸங்கீர்த்தன இயக்கம் இன்றும் அனைவரையும் பாதுகாத்து வருவதை நாங்கள் காண்கின்றோம்.
“நான் அமிர்தசரஸில் ஒரு வாரம் தங்கியிருந்து குருகிரந்த ஸாஹிப்பை கற்றறிந்தேன். அதன் அடிப்படையில் நான் தங்களுக்கு அறிவுரை கூறுகிறேன்: பகவான் ஹரியின் திருநாமம் எல்லா துன்பங்களையும் போக்கி பாவிகளைத் தூய்மைப்படுத்துகிறது. எனவே, ஹரி சேவையே நாம் அடைய வேண்டிய உயர்ந்த ஸ்தானமாகும். ஹரியினுடைய திருநாமமே கலி யுகத்தின் மிகப் பெரிய வரமாகும். (இராக அஸ, மஹலா IV, கர் II.1-2)
“குருநானக் அறிவுறுத்துகிறார்: இராமரின் திருநாமத்தைக் கேட்ட மாத்திரத்தில் நாம் இறையன்பில் மூழ்கிப் போகிறோம். இராமரின் திருநாமம் அதனை உச்சரிப்பவரின் மனதை திருப்திப்படுத்துகிறது. அதனை உச்சரிக்கும் நபர் மிகவுயர்ந்த இன்பத்தை அடைகின்றார். யாரொருவர் இராமரின் திருநாமத்தைத் தொடர்ந்து உச்சரிக்கின்றாரோ, அவர் இவ்வுலகை விட்டுச் செல்லும்போது ஒருபோதும் எமராஜரின் உலகத்திற்குச் செல்ல மாட்டார். சகோதரனே, நான் அந்த இராமரின் மீது தியானம் செய்கிறேன்.” (இராக அஸ IV, கர் I, சாண்ட் II, IX, 1,2.3)