வாழ்க்கை பிறப்பில் தொடங்கி இறப்பில் முடிகிறதா? இதற்கு முன்பு நாம் வாழ்ந்துள்ளோமா? மரணத்திற்குப் பிறகு நாம் வாழ்வோமா? இத்தகைய கேள்விகள் கிழக்கத்திய நாடுகளில் பரவலாக கேட்கப்படுபவை. மனிதனின் வாழ்க்கையானது தொட்டிலிலிருந்து சுடுகாடுவரை மட்டுமல்ல என்றும், பல இலட்சக்கணக்கான வருடங்களாக நீடித்து வரக்கூடியது என்றும் பெரும்பாலான மக்களால் ஏற்கப்பட்டுள்ளது.
மேலை நாடுகளின் ஆதிக்க சக்திகள் அங்கிருந்த மக்களிடம் மறுபிறவி குறித்த ஆழ்ந்த சிந்தனைகளை பல நூற்றாண்டுகளாக தடுத்துவிட்டது. ஆனால் மேலை நாட்டின் வரலாற்றிலும், உயிர் நித்தியமானது என்றும் அஃது ஓர் உடலிலிருந்து மற்றொன்றுக்கு மாறிச் செல்கிறது என்றும் புரிந்து கொண்ட சிந்தனையாளர்கள் இருக்கத்தான் செய்துள்ளனர். ஏராளமான தத்துவஞானிகள், நூலாசிரியர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், மற்றும் அரசியல்வாதிகள் இக்கருத்திற்கு ஆழ்ந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.
தொன்மை வாய்ந்த கிரேக்க நாட்டில்
தொன்மை வாய்ந்த கிரேக்கர்களில் ஸாக்ரடீஸ், பிதகோரஸ், ப்ளேடோ ஆகியோர் மறுபிறவியை தங்களது போதனைகளின் ஒருங்கிணைந்த பகுதியாக சேர்த்துள்ளனர். ஸாக்ரடீஸ் தனது வாழ்வின் இறுதிக் காலத்தில், “உண்மையில் மறுபிறவி என்ற ஒன்று உள்ளது என்பதிலும் இறந்த பின்னர் மீண்டும் பிறவி ஏற்படுகிறது என்பதிலும் நான் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளேன்” என்று கூறியுள்ளார். பிதகோரஸ் தனது முற்பிறவிகளை தன்னால் நினைவுகொள்ள முடியும் என்று உறுதியுடன் கூறியுள்ளார். ப்ளேடோ தனது பெரும்பாலான நூல்களில் மறுபிறவியைப் பற்றி விளக்கமாக எழுதியுள்ளார். தூய்மையான ஆத்மா புலனின்பத்தின் மீது கொண்ட ஆசையால் முற்றிலும் உண்மையான தளத்திலிருந்து வீழ்ச்சியடைந்து ஜடவுடலைப் பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார். வீழ்ச்சியடையும் ஆத்மாக்கள் முதலில் மனித இனத்தில் பிறவியெடுக்கின்றனர், உயர்ந்த அறிவைப் பெற போராடும் தத்துவஞானி மனிதர்களில் உயர்ந்தவன். அவனது ஞானம் முழுமையடைந்தால், அவன் நித்திய வாழ்விற்குத் திரும்பலாம். ஆனால் அவன் ஜட ஆசைகளில் சிக்கிக் கொண்டால், மிருக உடலுக்குத் தள்ளப்படுகிறான். அதிகமாக உண்பவர்களும் குடிகாரர்களும் எதிர்காலத்தில் கழுதைகளாகப் பிறப்பர் என்றும், வன்முறையாளர்களும் நேர்மையற்றவர்களும் ஓநாய் அல்லது ஆந்தையாகப் பிறப்பர் என்றும், சமூக மரபுகளைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுபவர்கள் தேனீக்களாகவும் எறும்புகளாகவும் பிறப்பர் என்றும் ப்ளேடோ நம்பினார். சில காலம் கழித்து அந்த ஆத்மா மீண்டும் மனிதப் பிறவியைப் பெற்று விடுதலையடைவதற்கான மற்றொரு வாய்ப்பினைப் பெறுவதாகவும் அவர் நம்பினார். ப்ளேடோவும் இதர கிரேக்க தத்துவஞானிகளும் மறுபிறவி பற்றிய தங்களது அறிவை ஆர்பிஸம் (orphism) போன்ற மாயமான மதங்களிலிருந்தோ இந்தியாவிலிருந்தோ பெற்றிருக்கக்கூடும் என்று சில அறிஞர்கள் நம்புகின்றனர்.
யூதம், கிறிஸ்துவம், இஸ்லாம்
யூத மதத்திலும் ஆரம்பகால கிறிஸ்துவ மத வரலாற்றிலும் மறுபிறவி பற்றிய சிறு குறிப்புகள் காணப்படுகின்றன. புனித நூல்களில் மறைந்துள்ள ஞானத்தை தெளிவுபடுத்துபவர்கள் என்று பல ஹீப்ரு பண்டிதர்களால் கருதப்படும் கபலா (Cabala) என்னும் பிரிவில், கடந்தகால மற்றும் எதிர்காலப் பிறவிகள் பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன. கபலா பிரிவினரின் முக்கிய நூல்களில் ஒன்றான ஜோஹர் (Zohar) என்னும் நூலில், “ஆத்மாக்கள் எங்கிருந்து தோன்றியதோ அந்த பரம்பொருளுடன் மீண்டும் இணைய வேண்டும். அவ்வாறு இணைவதற்கு அவை பக்குவமடைய வேண்டும். அந்த பக்குவநிலையினை ஒரு பிறவியில் அடையாவிடில், அவை மற்றொரு பிறவி, மூன்றாவது பிறவி, என்று பல்வேறு பிறவிகளை எடுத்து கடவுளிடம் மீண்டும் இணைவதற்கான தகுதியைப் பெற வேண்டும்,” என்று கூறப்பட்டுள்ளது.
கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் பழமை வாய்ந்த கிறிஸ்துவ பாதிரியார்களில் ஒருவரும் பைபிளில் பாண்டித்துவம் பெற்றவருமான ஓரிஜென் (origen) என்பவர் பின்வருமாறு எழுதியுள்ளார்: “தீய செயல்களில் விருப்பம் கொண்ட சில ஆத்மாக்கள் உடலைப் பெறுகின்றனர். முதலில் மனித உடலைப் பெறும் அவர்கள், பின்னர் தங்களது அளவற்ற இச்சையால், மனித வாழ்வின் காலம் முடிந்த பின்னர் மிருகங்களாகவும், அதன் பின்னர் தாவரங்களாகவும் பிறக்கின்றனர். இந்நிலையிலிருந்து படிப்படியாக உயர்த்தப்பட்டு அவர்கள் தங்களின் ஸ்வர்க நிலையை அடைகின்றனர்.”
மறுபிறவியின் அடிப்படைக் கொள்கைகளை கிறிஸ்துவும் அவரது சீடர்களும் அறிந்திருந்ததை வெளிக்காட்டும் தகவல்கள் பைபிளிலேயே பல இடங்களில் காணப்படுகின்றன. ஒருமுறை, எலியாஸ் மீண்டும் பூவுலகில் தோன்றுவார் என்று பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளது குறித்து இயேசுவிடம் அவரது சீடர்கள் கேட்டனர். இது குறித்து புனித மத்தேயு அவர்கள் பின்வருமாறு எழுதியுள்ளார்: “கேள்வி எழுப்பிய சீடர்களிடம் இயேசு, “எலியாஸ் நிச்சயம் தோன்றுவார், அனைவரையும் இரட்சிப்பார். இருப்பினும் நான் உங்களுக்குக் கூறுவது யாதெனில், எலியாஸ் ஏற்கெனவே பிறந்துவிட்டார். அவரை நீங்கள் அறியவில்லை,” என்று பதிலளித்தார். ஞானஸ்நானம் செய்பவரான ஜான் என்பவரையே இயேசு குறிப்பிடுகிறார் என்பதை அவர்களது சீடர்கள் புரிந்துகொண்டனர்.” வேறு விதமாகக் கூறினால், மன்னர் ஹேரோத் (Herod) அவர்களால் சிரச்சேதம் செய்யப்பட்ட ஜான், தீர்க்கதரிசியான எலியாஸ் அவர்களின் மறுபிறவி என்பதை இயேசு உறுதி செய்துள்ளார். மற்றொரு முறை இயேசுவும் அவரது சீடர்களும் பிறவியிலேயே குருடராக இருந்த ஒருவரை தங்களது வழியில் காண நேர்ந்தது. “யார் செய்த பாவத்தினால் இவர் குருடராகப் பிறந்துள்ளார்? இவர் செய்த பாவமா, இவரது பெற்றோர்கள் செய்த பாவமா?” என்று சீடர்கள் இயேசுவிடம் கேட்டனர். யார் பாவம் செய்திருந்தாலும் சரி, கடவுளின் பணியை வெளிப்படுத்துவதற்கு இஃது ஒரு வாய்ப்பு என்று பதிலளித்த இயேசு, அந்த குருடனைக் குணப்படுத்தினார். அவன் குருடனாகப் பிறந்ததற்கு, அவன் செய்த பாவம் காரணமா என்ற கேள்வி, அவன் தனது முற்பிறவியில் அதற்கான பாவத்தைச் செய்திருக்க வேண்டும் என்னும் உள் அர்த்தத்தைக் கொண்டுள்ளது. இதற்கு இயேசு பதிலளிக்கவில்லை என்றபோதிலும், இதனை மறுக்கவும் இல்லை.
குரான் கூறுகிறது, “நீங்கள் இறந்து கிடந்தீர்கள், அவர் உங்களை மீண்டும் உயிர்ப்பித்தார். அவர் உங்களை இறக்கச் செய்வார், மீண்டும் உங்களை உயிர்ப்பிக்கவும் செய்வார். இறுதியில் அவர் உங்களை தன்னிடம் இணைத்துக் கொள்வார்.” இஸ்லாமிய மதத்தைத் தழுவியவர்களில், குறிப்பாக சுஃபி இனத்தவர்கள், மரணம் இழப்பல்ல என்றும், அழிவற்ற ஆத்மா தொடர்ந்து வெவ்வேறான உடல்களில் பிரவேசிக்கிறது என்றும் நம்புகின்றனர். சுஃபி இனத்தின் புகழ்பெற்ற கவிஞரான ஜலாலுத்-தின் ரூமி (Jalau D-Din Rumi) அவர்கள் பின்வருமாறு எழுதியுள்ளார்:
தாதுவாக இறந்து செடியானேன்,
செடியாக இறந்து விலங்கானேன்,
விலங்காக இறந்து மனிதனானேன்.
எதற்காக நான் அஞ்சவேண்டும்? இறப்பதால் எதை நான் இழந்தேன்?
காலத்திற்கு அப்பாற்பட்ட இந்திய வேத நூல்கள், ஜட இயற்கையுடனான தனது அடையாளத்திற்கு ஏற்ப ஆத்மா 84,00,000 வடிவங்களை ஏற்கின்றான் என்றும், ஒரு குறிப்பிட்ட உடலை ஏற்ற பின்னர், அதிலிருந்து படிப்படியாக உயர்ந்த உடல்களைப் பெற்று இறுதியில் மனித உடலை அடைகிறான் என்றும் உறுதி செய்கின்றன.
இவ்வாறாக, யூதம், கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய மேலை நாட்டின் அனைத்து முக்கிய மதங்களிலும்–அதன் அதிகாரப்பூர்வமான தலைவர்கள் தங்களது பிடிவாதத்தினால் மறுபிறவியை ஏற்காமல் புறக்கணிக்கின்றனர் என்ற போதிலும்–மறுபிறவி பற்றிய கருத்துகள் இடம் பெற்றுள்ளதை நம்மால் காண முடிகிறது.
இடைக்காலமும் மறுமலர்ச்சியும்
இன்றைக்கும் புதிராக விளங்கும் ஒரு காலக்கட்டத்தில், கி.பி. 553ஆம் ஆண்டில், பிஸன்டைன் (Byzantine) பேரரசின் மன்னரான ஜஸ்டினியன் (Justinian), ஆத்மாவின் பல்வேறு பிறவிகள் தொடர்பான போதனைகளை ரோமன் கத்தோலிக்கத்தில் தடை செய்தார். அப்போது எண்ணற்ற கிறிஸ்துவ நூல்கள் அழிக்கப்பட்டன, மறுபிறவி பற்றிய குறிப்புகளும் அச்சமயத்தில் புனித நூல்களிலிருந்து நீக்கப்பட்டதாக பல்வேறு அறிஞர்கள் இன்றும் நம்புகின்றனர். கத்தோலிக்க பிரிவினரால் கொடுமையாக நடத்தப்பட்ட போதிலும், க்நோஸ்டிக் (Gnostic) என்னும் பிரிவினர் மேலை நாடுகளில் மறுபிறவியின் கொள்கைகளை இன்றும் காத்து வருகின்றனர்.
மறுமலர்ச்சிக் காலத்தின்போது, மறுபிறவி பற்றிய ஆர்வம் மக்களிடையே மீண்டும் மலர்ந்தது. இதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர் இத்தாலியைச் சேர்ந்த புகழ்பெற்ற தத்துவஞானியும் கவிஞருமான கியார்டனோ ப்ருனோ (Giardano Bruno). இவர் மறுபிறவியைப் பற்றி போதனை செய்ததால், உயிரோடு எரிக்கப்பட வேண்டும் என்று தண்டனை வழங்கப்பட்டார். ப்ருனோ தன்மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு பதிலளிக்கையில், இறுதியாக, “ஆத்மா உடலல்ல” என்றும், “அஃது இன்று ஓர் உடலிலும் நாளை வேறு உடலிலும் இருக்கலாம். ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலுக்கு மாறிச் செல்லலாம்” என்றும் பிரகடனம் செய்தார்.
மறுபிறவியின் கருத்துகளை கிறிஸ்துவ அமைப்புகள் பலமாக மறைத்த காரணத்தினால், அக்கருத்துகள் அடித்தளத்திற்குச் சென்றன. ஆயினும் ரோஸிக்ரூஷியன், ஃப்ரீமேஸன், கபலிஸ்ட் ஆகிய பிரிவுகளில் இப்போதனைகள் இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்தன.
அறிவொளிக் காலம்
அறிவொளிக் காலத்தில் (Age of Enlightenment) ஐரோப்பிய அறிஞர்கள் கிறிஸ்துவ அமைப்பின் கட்டுப்பாடுகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர். புகழ்பெற்ற தத்துவஞானியான வோல்டேர், மறுபிறவியின் கொள்கை தவறானதோ பயனற்றதோ அல்ல என்றும், ஒரு முறைக்குப் பதிலாக இரண்டு முறை பிறப்பது ஆச்சரிய மானதல்ல என்றும் எழுதியுள்ளார்.
மறுபிறவியின் கொள்கைகள் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவிற்கும் பரவின. அமெரிக்காவை நிர்மாணித்த தலைவர்களில் பலர் இவற்றால் கவரப்பட்டு இறுதியில் இதனை ஏற்றுக் கொண்டனர். மறுபிறவியில் தனது நம்பிக்கையை உறுதிசெய்த பெஞ்சமின் ஃப்ராங்க்ளின், “இவ்வுலகில் நான் இருப்பதை வைத்து பார்க்கும்போது, வருங்காலத்திலும் நான் ஏதாவது ஒரு வடிவில் எப்போதும் இருப்பேன் என்று நம்புகிறேன்” என எழுதியுள்ளார்.
1814ஆம் ஆண்டில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஜான் ஆடம்ஸ் என்பவர், மற்றொரு முன்னாள் ஜனாதிபதியான தாமஸ் ஜெபர்ஸன் என்பவருக்கு மறுபிறவியின் கொள்கையைப் பற்றிக் கடிதம் ஒன்றை வடித்தார். அதில் அவர் பின்வருமாறு எழுதியுள்ளார்: “பரமனுக்கு எதிராகச் செயல்பட்ட ஆத்மாக்கள் இருண்ட பிரதேசத்தினுள் எறியப்பட்டனர். அவர்கள் நற்தகுதி பெறும் பொருட்டு அந்த நரகத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, பூவுலகிற்கு உயர அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களின் தகுதியைப் பொறுத்து, விலங்குகள், ஊர்வன, பறவைகள், பிராணிகள், மனிதர்கள் என பல்வேறு உடல்களில் வைக்கப்படுகின்றனர். நற்தகுதி பெற்றவர்கள் பசுக்களாகவும் மனிதர்களாகவும் பிறவியெடுக்க அனுமதிக்கப்பட்டனர். மனிதப் பிறவியில் நன்னடத்தையைக் கடைப்பிடித்தவர்கள் ஸ்வர்கத்தை அடைகின்றனர்.”
ஐரோப்பாவில் வாழ்ந்த நெப்போலியன் தனது படைத் தளபதிகளிடம், தனது முற்பிறவியில் தான் சார்லிமேக்னி என்ற பெயரில் வாழ்ந்ததாகச் சொல்லி மகிழ்வதுண்டு. ஜெர்மனியின் புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவரான கோதே என்பவரும் மறுபிறவியில் நம்பிக்கை கொண்டிருந்தார். நாடக ஆசிரியராகவும் விஞ்ஞானியாகவும்கூட புகழ்பெற்றிருந்த அவர், “நான் இப்போது பிறந்திருப்பதைப் போல இதற்கு முன்பு ஆயிரம் முறை பிறந்திருப்பேன் என்பது நிச்சயம். மீண்டும் ஆயிரம் முறை திரும்பி வருவேன் என்றும் நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
19ஆம் நூற்றாண்டின் மத்தியில்
மறுபிறவி மற்றும் இந்திய தத்துவத்தின் மீதான ஆர்வம், எமர்ஸன், விட்மேன், தொரியாவ் உட்பட அமெரிக்காவின் புகழ்பெற்ற மனிதர்களையும் தொற்றிக் கொண்டது. “இவ்வுலகிலுள்ள அனைத்து உயிர்களும் தொடர்ந்து வாழ்கின்றன, யாரும் மடிவதில்லை, இதுவே இவ்வுலகின் இரகசியம்–உயிர்கள் நமது பார்வையிலிருந்து சில காலம் மறைந்து மீண்டும் தோன்றுகின்றன. யாரும் மரணமடைவதில்லை; இதனை அறியாதவர்கள் மனிதர்களின் மரணத்தை வருத்தம் தோய்ந்த இறுதிச் சடங்குகளுடன் அனுசரிக்கின்றனர்–ஆனால் அச்சடங்குகள் அனைத்தையும் அந்த உயிர்கள், ஜன்னல், கிணறு, அல்லது சப்தத்தின் மூலமாக வேறுபட்ட உருவுடன் பார்த்துக் கொண்டுள்ளனர்,” என்று எமர்ஸன் எழுதியுள்ளார்.
தொரியாவ் எழுதியுள்ளது யாதெனில், “எனது முற்பிறவியின் அனுபவங்களை நான் என்னை அறியாமலேயே குறிப்பிட்டுள்ளேன்.” மறுபிறவியில் தொரியாவ் கொண்டிருந்த ஆர்வத்திற்கு மற்றுமொரு சான்று “ஏழு பிராமணர்களின் உடல் மாற்றம்” என்ற தலைப்பில் அவர் எழுதிய நூலாகும். அச்சிறிய நூல், பண்டைய சமஸ்கிருத வரலாற்றிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு சிறுகதையாகும். அதிலுள்ள மறுபிறவியின் கதை, வேட்டைக்காரர்கள், இளவரசர்கள், விலங்குகள் என முன்னேறிச் செல்லும் ஏழு முனிவர்களின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்கிறது.
“என்னைப் பற்றிய பாடல்” என்னும் தனது பாடலில் வால்ட் விட்மேன் பின்வருமாறு எழுதுகிறார்:
நான் பிறப்பற்றவன்–இதை நான் அறிவேன்
பல இலட்சம் கோடையையும் குளிரையும் கடந்துவிட்டோம்
இன்னும் பல இலட்சங்கள் நம்முன் நிற்கின்றன
அவற்றிற்குமுன் மேலும் பல இலட்சங்களும் உள்ளன
நவீன காலம்
இருபதாம் நூற்றாண்டில் காலடி எடுத்து வைக்கும்போது, மேலை நாட்டின் செல்வாக்கு வாய்ந்த கலைஞர்களுள் ஒருவரான பால் காகுயின் என்பவரது மனதை மறுபிறவியின் கருத்துகள் கவர்ந்துள்ளதைக் காணலாம். தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அவர் எழுதிய தாஹிடியில், “ஜடவுடல் அழிந்த பின்பும் ஆத்மா அழிவதில்லை. அதன் தகுதியையும் குறைகளையும் பொறுத்து உயர்வான அல்லது தாழ்வான மற்றொரு உடலை அது பெறுகிறது,” என்று குறிப்பிட்டுள்ளார். மறுபிறவியின் கருத்துகள் மேற்கத்திய நாடுகளில் முதன்முதலில் பிதகோரஸினால் கற்பிக்கப்பட்டதாகவும், அவர் அதனை இந்திய சாதுக்களிடமிருந்து கற்றதாகவும் கலைஞர் காகுயின் நம்பினார்.
தானியங்கிகளின் தந்தை என்று அறியப்படும் அமெரிக்காவின் ஹென்றி ஃபோர்டு, மறுபிறவியின் கருத்துகளை தனது இருபத்தாறாம் வயதில் ஏற்றுக் கொண்டதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மேலும், தன்னுடைய அறிவாற்றல் பற்பல பிறவிகளில் தான் பெற்ற நீண்ட அனுபவத்தின் பயனே என்றும் அவர் கூறியுள்ளார். இதே போன்று, முன்னாள் அமெரிக்க படைத் தளபதிகளில் ஒருவரான ஜார்ஜ் எஸ். பேட்டன் என்பவர் தனது முற்பிறவியில் போர்க்களத்தில் தான் பெற்ற அனுபவங்களே தனது திறமைக்கு காரணம் என்று நம்பினார்.
ஐரிஷ் நாட்டு நாவலாசிரியரும் கவிஞருமான ஜேம்ஸ் ஜாய்ஸ் என்பவரின் யுலிஸெஸ் என்னும் நாவலில் மறுபிறவியே முக்கிய கருப்பொருளாக அமைந்தது.
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஹெர்மன் ஹெஸ்ஸே, சித்தார்த்த என்னும் தனது புகழ்பெற்ற நாவலில், உயிர்கள் யாரும் மடிவதில்லை என்றும் புதுப்புது முகங்களை மட்டுமே பெறுகின்றனர் என்றும் கூறியுள்ளார்.
எண்ணற்ற விஞ்ஞானிகளும் மனோவியல் வல்லுநர்களும் இதர பிரபல நபர்களும் மறுபிறவியில் நம்பிக்கை கொண்டுள்ளனர். புகழ்பெற்ற மனோவியல் வல்லுநர்களில் ஒருவரான கார்ல் ஜங், பிரிட்டிஷ் நாட்டின் உயிரியல் வல்லுநரான தாமஸ் ஹக்ஸ்லே, அமெரிக்காவின் மனோதத்துவ வல்லுநரான எரிக் எரிக்ஸன், பிரபல தத்துவஞானியான ஜே.டி.ஸாலிங்ஜர், நாவலாசிரியர் ரிச்சட் பாச், நோபல் பரிசு பெற்ற ஐஸக் பேஸேவிஸ் ஸிங்கர், ஆங்கிலேய கவிஞர்களில் முக்கியமானவரான ஜான் மஸேஃபில்ட் ஆகியோர் அதில் குறிப்பிடத்தக்கவர்கள்.
நவீன காலத்தின் மிகச்சிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவரும் அகிம்சையை போதித்தவருமான மகாத்மா காந்தி, மறுபிறவி பற்றிய தனது அனுபவம் உலக அமைதியை அடைவதில் தனக்கு நம்பிக்கையளிப்பதாகக் கூறினார். “மனிதர்களுக்கு இடையிலான பகை நிரந்தரமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இருப்பதால், என்றாவது ஒருநாள் உலகிலுள்ள அனைவரையும் நட்புறவுடன் அரவணைப்பேன் என்று நான் நம்புகிறேன்,” என அவர் கூறியுள்ளார்.
பாடகரும் கவிஞரும் எல்லோராலும் கொண்டாடப்பட்டவருமான பீட்டில் குழுவைச் சார்ந்த ஜார்ஜ் ஹாரிஸன் மறுபிறவி பற்றிய தனது தீவிர சிந்தனைகளை தனது நண்பர்களுக்கு மத்தியில் பலமுறை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலை நாடுகளில் அறிஞர்கள் மற்றும் பொதுமக்களின் மனதை மறுபிறவியின் கருத்துகள் மீண்டும் கவர்ந்துள்ளன. திரைப்படங்கள், நாவல்கள், பிரபலமான பாடல்கள் மற்றும் பத்திரிகைகள் மறுபிறவிக் கோட்பாட்டை இப்போது அதிகமாகப் பயன்படுத்துகின்றன. பிறப்பிலிருந்து வாழ்க்கை ஆரம்பமாவதில்லை என்றும் மரணத்தில் அது முடிவதில்லை என்றும் வழிவழியாக அறிந்துகொண்ட 150 கோடி மக்களுடன் இன்று இலட்சக்கணக்கான மேலை நாட்டினர் இணைந்து வருகின்றனர். ஆனால் தெரிந்துகொள்ளும் ஆர்வமோ நம்பிக்கையோ மட்டும் போதுமானதல்ல. பக்குவமான அறிவுடன் கூடிய முழு விஞ்ஞானத்தையும் புரிந்துகொள்வது அவசியம். அந்த விஞ்ஞானத்தை வழங்கும் நூல்களில் பகவத் கீதை தலைசிறந்து விளங்குகின்றது.
(மறுபிறவி குறித்து கீதையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அடுத்த இதழில்)