வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்
அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.
தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த இதழில்: நான்காம் ஸ்கந்தம், அத்தியாயம் 16-17
சென்ற இதழில் துருவ மன்னரின் வம்சத்தில் வந்த பிருது, மாமன்னராக முடிசூட்டப்பட்டதைக் கண்டோம். இவ்விதழில் அவரது அற்புதச் செயல்களைப் பற்றியும் ஆட்சியைப் பற்றியும் காணலாம்.
தம்மைப் புகழ்வதை தடுத்து நிறுத்திய பிருது மன்னர் முழுமுதற் கடவுளின் ஓர் அவதாரம் என்பதை மாமுனிவர்களிடமிருந்தும் மகான்களிடமிருந்தும் கேட்டறிந்த இசைக் கலைஞர்கள் ஆனந்தத்தில் திளைத்தனர். பிருது மன்னர் தங்களிடம் புன்னகையோடு உரையாடியதை எண்ணி மகிழ்ந்தனர். சூதர்கள், மாகதர்கள் போன்ற இசைக் கலைஞர்கள் முனிவர்களின் அறிவுரைப்படி அவரைத் தொடர்ந்து புகழ்ந்தனர்.
போற்றுதற்குரிய மன்னரே, நீர் முழுமுதற் கடவுளின் அவதாரமாவீர். அளவற்ற கருணையால் இங்கு அவதரித்துள்ள உமது ஒப்பற்ற குணங்களை புகழ்வது எளிதன்று. வேனனின் உடலிலிருந்து நீர் தோன்றியதாகத் தெரியும்போதிலும், உண்மையில் நீங்கள் உங்களது தெய்வீக சக்தியாலேயே அவதரித்துள்ளீர். பிரம்மதேவரால்கூட உம்மை முறையாகப் போற்ற இயலாது எனும்போது, எமது புகழ்ச்சி உண்மையில் எந்த முக்கியத்துவமும் இல்லாததே. எனினும், உம்மைப் புகழ்வதால் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.”
பிருது மன்னரின் எதிர்காலச் செயல்கள்
அதனைத் தொடர்ந்து, மாமன்னர் பிருதுவின் எதிர்காலச் செயல்களை அறிந்திருந்த அவர்கள் அச்செயல்களைப் பின்வருமாறு போற்றிப் புகழ்ந்தனர்.
சமய அறநெறிகளைப் பின்பற்றி, காத்து, அவற்றை அனைவரும் பின்பற்றுமாறு செய்யும் நீர் நாத்திகர்களுக்கும் சமயத்திற்கு புறம்பானவர்களுக்கும் கடுமையான தண்டனையளிப்பீர்! நீர் ஒருவராக இருப்பினும், பல்வேறு தேவர்களாக பற்பல செயல்களைச் செய்கின்றீர். மக்களைப் பல்வேறு வேள்விகளில் ஈடுபடுத்துவீர். மாதம் மும்மாரி மழை பெய்வித்து இப்பூமியைக் காத்து எல்லா உயிர்களையும் மகிழ்வுடன் வாழ வைப்பீர்! நீர் சூரியனைப் போன்று ஆற்றல் மிக்கவராக, சூரிய ஒளிபோன்று அனைவருக்கும் சமமாக கருணையை அளிப்பீர். உமது மிக்க அன்பும் பூமியை ஒத்த பொறுமையும், பரிவு கலந்த பார்வையும் சந்திரனை ஒத்த முகத்தில் தவழும் புன்னகையும் மக்களது அமைதியையும் ஆனந்தத்தையும் அதிகரித்த வண்ணம் இருக்கும்.
உமது வெற்றிகளின் இரகசியமோ, உமது நிதிக்குவியலின் அளவோ யாராலும் புரிந்துகொள்ள முடியாதவை. வருண தேவனை கடல் மூடியுள்ளது போல உமது நிலையும் பாதுகாக்கப்பட்டு மூடப்பட்டும் இருக்கும். எதிரிகளாக இருப்போருக்கு தாங்கள் நெருப்பைப் போன்றவர். மக்களின் அகத்திலும் புறத்திலும் நடைபெறும் செயல்கள் அனைத்தையும் தாங்கள் அறிவீர்! உயிர்களை இயக்கும் காற்றைப் போன்றவர் நீர்! எல்லாருக்கும் சமமானவராவீர். அதனால் எதிரியின் உறவினராயினும் குற்றமற்றவரை தண்டிக்க மாட்டீர். தனது மைந்தனே ஆயினும், குற்றவாளி எனில் தண்டிக்க தயங்க மாட்டீர்.”
சக்தி ஆவேச அவதாரம்
கலைஞர்கள் தொடர்ந்தனர்: சூரியக் கதிர்கள் வடதுருவம்வரை, பிரபஞ்சம் முழுவதும் தடையின்றி செல்வதுபோல, உமது ஆட்சியும் எவ்வித இடையூறுமின்றி பரந்து விரிந்திருக்கும். நீங்கள் தீர்மானத்தில் உறுதிமிக்கவராக, சத்தியத்தில் நிலைபெற்றவராக, சரணடைந்தவர்களுக்கு அடைக்கலம் தருபவராக அனைவரிடத்தும் மரியாதை உடையவராக தீனர்களிடம் கருணையுடையவராக, அறிவில் முதிர்ந்தவர்களான அந்தணர்களை மதித்துப் போற்றுபவராக விளங்குவீர்!
தன் மனைவியை உடலின் மறுபாதியாகவே கருதும் நீங்கள் மற்ற எல்லாப் பெண்களையும் அன்னையாகவே ஏற்பீர்! குடிமக்களுக்குத் தந்தையாகவும் பகவானின் புகழைப் பரப்பும் பக்தர்களுக்குப் பணிவான தொண்டனாகவும் நடந்துகொள்வீர். மூவுலகிற்கும் தலைவரான நீங்கள் முழுமுதற் கடவுளால் அதிகாரமளிக்கப்பட்டவர்; அதாவது, முழுமுதற் கடவுளின் சக்தி ஆவேச அவதாரம். நீங்கள் உயிர்களின் மகிழ்ச்சியை எப்போதும் அதிகரிப்பீர்! உலக வேறுபாடுகள் அறியாமையால் எழுகின்றன என்பதால், பூரண அறிவு பெற்ற நீங்கள் அனைவருக்கும் கருணை காட்டுவீர்.
உங்களுடைய ரதத்தில் ஏறி சுதந்திரமாக நீங்கள் உலகம் முழுவதும் வலம் வரும்போது, அனைத்து மன்னர்களும் தேவர்களும் தத்தம் மனைவியருடன் இணைந்து பல்வேறு பரிசுகளை உங்களுக்கு வழங்குவர், பணிவுடன் உமது புகழ்பாடி மகிழ்வர்.”
வீர தீரச் செயல்கள்
சக்திமிக்க மாமன்னர் பிருதுவே, நீங்கள் ஒரு பிரஜாபதியைப் போன்று குடிமக்களைக் காப்பீர். பசு போன்ற பூமியின் பால் போன்ற வளத்தைக் கறந்து எல்லா உயிர்களையும் பரிபாலிப்பீர்! இந்திரனின் வஜ்ராயுதத்தைப் போன்று சக்தியுடைய உமது வில்லின் கூர்மையான முனைகளால் மலைகளை உடைத்து நிலப்பரப்பினை சமப்படுத்துவீர்!
சிங்கத்தின் கம்பீர நடை கண்டு சிறு விலங்குகள் அஞ்சி ஓடுவதுபோன்று, உமது ராஜ்ஜியத்தில் நீங்கள் பயணிக்கும்போது கயவர்களும் திருடர்களும் எல்லா திசைகளிலும் அஞ்சி ஓடுவர். நீங்கள் சரஸ்வதி நதியின் கரையில் நூறு அஸ்வமேத யாகங்களைச் செய்வீர், இதன் இறுதி வேள்வியில் தேவேந்திரன் வேள்விக் குதிரையினை திருடிச் செல்வான். நான்கு குமாரர்களில் ஒருவரான ஸனத்குமாரரை உமது அரண்மனை நந்தவனத்தில் சந்தித்து, அவரை பக்தியுடன் துதித்து, பரமானந்தத்தை அடைவதற்கான அறிவுரைகளை அவரிடமிருந்து கேட்டறியும் லீலையைப் புரிவீர்!
உமது புகழ் மூடிமறைக்க இயலாத அளவிற்கு பரவி பொதுமக்களும் தேவர்களும் அசுரர்களும் உமது பெருந்தன்மை மிக்க செயல்களைப் போற்றிப் பாடுவர். குடிமக்களின் மூவகைத் துன்பங்களை முற்றிலும் நீக்கியருளப் போகும் உமது ஆட்சித் திறனை யாரால் முழுமையாகப் புகழ முடியும்? எங்கள் மகிழ்ச்சிக்காகவும் நன்மைக்காகவும் ஒரு சிறு முயற்சியையே நாங்கள் மேற்கொண்டோம்.” இவ்விதமாக அவர்கள் பேசியதைக் கேட்ட பிருது மன்னர் தகுந்த சன்மானங்களை வழங்கி அவர்களை கௌரவித்தார்.
அத்தியாயம் 17
மஹாத்மா விதுரர், மைத்ரேயரிடம் பிருது மன்னரின் அற்புத செயல்களை மேலும் விளக்கமாகக் கூறுமாறு வேண்டினார். மைத்ரேயரும் அவற்றை விவரிக்கத் தொடங்கினார்.
குடிமக்களின் வேண்டுகோள்
அந்தணர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பிருது மன்னர் முடிசூட்டப்பட்ட சமயத்தில், நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடிக் கொண்டிருந்தது. இதனால், குடிமக்கள் அவரை அணுகி முறையிட்டனர், அரசே மரப்பொந்தில் தோன்றிய தீ மரத்தையே எரிப்பதுபோல, எங்கள் வயிற்றில் தோன்றிய பசி தீ எங்களை எரிக்கின்றது. நீங்கள் எங்களது அரசர் மட்டுமல்ல, பகவானின் சக்தியளிக்கப்பட்ட பிரதிநிதியும் ஆவீர். தயைகூர்ந்து எங்களுக்குத் தேவையானவற்றை வழங்கி, எம்மை பாதுகாக்கும்படி உம்மை வேண்டுகிறோம்.”
இதைக் கேட்ட பிருது மன்னர் பஞ்சத்திற்கான காரணத்தை ஆராய்ந்தார். குடிமக்கள் வேலை செய்யத் தயாராக இருப்பதை கவனித்ததால், அவர்களின் சோம்பேறித்தனம் பஞ்சத்திற்கு காரணமல்ல என்று முடிவு செய்தார். இறுதியில், பூமி தனது வளங்களை மறைத்துக் கொண்டுள்ளதே இதற்கு காரணம் என தீர்மானித்தார்.
பூமியின் சரணாகதி
மக்களின் துன்பத்திற்கு காரணமாகத் திகழ்ந்த பூமியின் மீது சினம் கொண்ட பிருது மன்னர் அதனை தண்டிக்க தயாரானார். அவரின் சினத்திலிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்காக பூமிதேவி ஒரு பசுவின் வடிவை எடுத்து தப்பி ஓடினாள். அவள் அவரிடமிருந்து தப்புவதற்காக விண்ணிலும் ஓடினாள், மண்ணிலும் ஓடினாள்; ஆனால் எங்கு ஓடியும் அவரிடமிருந்து தப்பிக்க இயலவில்லை. இறுதியில், அவள் அவரிடமே சரணடைந்து தன்னைக் காத்தருளும்படி வேண்டினாள்.
பிருது மன்னரின் கண்டிப்பு
அதற்கு பிருது மன்னர், பூமியே, எனது ஆணைகளையும் தீர்ப்புகளையும் மீறிய நீ, வேள்விகளில் அளிக்கும் அவிர்பாகத்தை ஏற்றுக் கொண்ட பின்னரும், அதற்குப் பலனாக போதுமான அளவு தானியங்களை நீ விளைவிக்கவில்லை. நீ குற்றம் செய்திருப்பதால் நீ ஏற்றுக் கொண்டுள்ள பசுவின் வடிவம் உன்னைக் காக்கும் என சொல்ல இயலாது. பிரம்மதேவரால் படைக்கப்பட்ட மூலிகைகள் மற்றும் தாவரங்களுக்கான விதைகளை நீ மறைத்து வைத்துள்ளாய். ஒரு கொடியவன் ஆணாயினும் பெண்ணாயினும் பிற உயிர்களிடத்தில் கருணையின்றி சுயநலவாதியாக இருந்தால், அரசனால் கொல்லப்படலாம்,” என கண்டிப்புடன் கூறினார்.
பூமியின் பிரார்த்தனை
அதனைத் தொடர்ந்து பூமிதேவி பிருதுவிடம் பிரார்த்தித்தாள்: இயற்கையின் முக்குணங்களால் பாதிக்கப்படாத போற்றுதற்குரிய தேவரே, நீங்கள் உலகச் செயல்களால் குழப்பம் அடைவதில்லை. என்னைப் படைத்தவரும் நீரே. உம்மை விட்டால் நான் யாரிடம் சரண் புகுவேன்? உமது மாயா சக்தியால் மூடப்பட்டிருக்கும் மக்கள் உமது உன்னத செயல்களைப் புரிந்துகொள்ள முடியாது.
நீரே அனைத்து காரணங்களுக்கும் மூல காரணம். உமக்கு எனது மரியாதை கலந்த வணக்கங்கள். நீர் பிறப்பற்றவர், வராஹ அவதாரம் எடுத்து என்னை கர்ப்பக் கடலிலிருந்து வெளிக்கொணர்ந்து காப்பாற்றியவரும் நீரே. அதனால் தாங்கள் ’தராதரன் எனப் புகழப்படுகிறீர். உமது பக்தர்களின் செயல்களே புரிந்துகொள்வதற்குக் கடினமானவை எனும்போது, உமது திருவிளையாடல்களை நான் எங்ஙனம் புரிந்துகொள்வேன்?”
பூமி பிருது மன்னரை எவ்வாறு சமாதானப்படுத்தி எல்லா வளங்களையும் வழங்கினாள் என்பதையும் பிருதுவின் வேள்வியைப் பற்றியும் அடுத்த இதழில் காணலாம்.