சதி தன் உடலைக் கைவிடுதல்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: நான்காம் ஸ்கந்தம், அத்தியாயம் 3-5

 

இதழில் மனு புத்திரிகளின் வம்சம், தக்ஷன் சிவபெருமானுக்கு வழங்கிய சாபம் முதலியவற்றைக் கண்டோம். இந்த இதழில் சதி தனது தந்தையின் யாகத்திற்குச் செல்ல விரும்புதல், யாக சாலையில் சதி சரீரத்தைத் துறத்தல், தக்ஷனின் யாகம் தடைபடுதல் முதலியவற்றைக் காணலாம்.

 

தக்ஷனின் வேள்வி

மாமனாருக்கும் (தக்ஷனுக்கும்) மருமகனுக்கும் (சிவபெருமானுக்கும்) இடையிலான பகைமை தொடர்ந்தது. பிரம்மதேவரால் பிரஜாபதியாக நியமிக்கப்பட்டதிலிருந்து தக்ஷனின் கர்வம் மேலும் தலைக்கேறியது. இதனால், வாஜபேய யாகத்தை நடத்திய தக்ஷன் அதில் கலந்துகொள்ள சிவனுக்கு அழைப்பு விடுக்கவில்லை. மேலும், பிரகஸ்பதி ஸவம் எனும் சிறந்த யாகத்தையும் துவங்கினான்.

அந்த யாகத்திற்கு பிரம்ம ரிஷிகள், தேவ ரிஷிகள், பித்ருக்கள், தேவர்கள் முதலியோர் தத்தமது மனைவியருடன் புஷ்பக விமானங்களில் சென்று கொண்டிருந்தனர். இதனைக் கண்ட தக்ஷனின் மகளான சதி தனது கணவர் சிவபெருமானிடம் கூறலானாள்.

சதி சிவபெருமானின் உரையாடல்

தந்தைக்கும் கணவருக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதை சதி நன்கு அறிந்திருந்தாள். இருப்பினும், நண்பர், கணவர், குரு, தந்தை ஆகியோரின் இல்லங்களுக்கு அவர்களது அழைப்பின்றியே செல்லலாம் என அவரிடம் சாதுர்யமாகக் கூறினாள்.

அன்பு மனைவியின் பேச்சைக் கேட்ட சிவபெருமான், பிரஜாபதிகளின் முன்னிலையில் சொல் அம்புகளால் தக்ஷன் தன்னைத் தாக்கியதை நினைவுகூர்ந்து சிரித்தபடி பேசலானார், அழைக்கப்படாவிடினும் உறவினர்களின் இல்லங்களுக்குச் செல்லலாம் என்பது உண்மையே. ஆனாலும் அந்த உறவினர்கள் தேஹாபிமானத்தால் அஹங்காரம் கொண்டு தங்களை சிறந்தவர்களாக எண்ணி நம்மிடத்தில் குறை காணாதவர்களாக இருந்தால், நாம் அவர்களுடைய வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்குச் செல்லலாம். கல்வி, தவம், செல்வம், அழகு, இளமை, நற்குடி பிறப்பு ஆகிய ஆறும் சான்றோர்களின் ஆபரணங்கள். ஆனால் அதுவே துஷ்டர்களுக்குத் தீமையாகின்றது. ஏனெனில், இவை அவர்களுக்கு செருக்கை உண்டாக்குகின்றது. எனவே, இதுபோன்ற தீயவர்களின் இல்லங்களுக்கு உறவினர்தானே என்றெண்ணி ஒருபோதும் செல்லக் கூடாது.

வில்லம்பினால் ஏற்படும் புண் தரும் வேதனையைவிட, சொல் அம்பினால் ஏற்படும் வலி கொடிய வேதனையைத் தரும். உறவினர்களின் சுடுசொற்கள் கூரிய அம்பைக் காட்டிலும் வலியையும் துன்பத்தையும் ஏற்படுத்த வல்லவை. சொல் அம்பினால் புண்பட்டவன் எப்போதும் அதை நினைத்து இரவும் பகலும் உறக்கமின்றித் தவிக்கின்றான்.

தக்ஷனுக்கு நீ பிரியமான மகள் என்றாலும், உன்னை எனக்கு மணம் முடித்ததை எண்ணி அவர் தற்போதும் வருந்துகிறார். ஆகவே, நீ அங்கு சென்றால், உன் தந்தையிடமிருந்து அன்பையோ மரியாதையையோ பெற மாட்டாய். எனது அறிவுரையைப் புறக்கணித்து நீ அங்கு சென்றால், மரணத்திற்கு நிகரான அவமானத்தை அடைய நேரிடும்.” இவ்வாறு தனது மனைவி சதிக்கு சிவபெருமான் அன்புடன் எச்சரிக்கை விடுத்தார்.

சிவபெருமான் சதியை எச்சரித்தல்

சதிக்கு நேர்ந்த அவமானம்

சதியோ உறவினர்களைக் காண வேண்டுமென்ற ஆவல் ஒருபுறம், கணவரின் எச்சரிக்கை மறுபுறம் என இரண்டிற்குமிடையில் சிக்கித் தவித்தாள். இறுதியில், ஒரு முடிவு செய்து, தனது தந்தையின் இல்லம் நோக்கிப் புறப்பட்டாள். அவள் தனியாகச் செல்வதைக் கண்ட நந்திதேவர், மணிமான், மதன் மற்றும் ஆயிரக்கணக்கான யட்சர்கள் அவளைப் பின்தொடர்ந்து சென்றனர். சங்கு, துந்துபி போன்ற இசைக்கருவிகள் முழங்க பெரும் ஆரவாரத்துடன் தக்ஷனின் வேள்விச் சாலையில் அவள் பிரவேசித்தாள்.

ஆயினும், தக்ஷன் மீதுள்ள பயத்தால் அவளை யாரும் வரவேற்கவில்லை. தனது தாய் மற்றும் சகோதரிகளால் தான் வரவேற்கப்பட்டாலும் தந்தை மௌனமாக இருந்ததை சதியால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

தந்தை, சிவபெருமானை வேள்விக்கு அழைக்காததோடு அவருக்குரிய அவிர்பாகத்தையும் வழங்காததைக் கண்டு அவள் மிகவும் கோப முற்றாள், தனது தந்தையை எரித்துவிடுவதைப் போன்று பார்த்தாள். அச்சமயத்தில் தக்ஷனைத் தாக்க முற்பட்ட பூதகணங்களைத் தடுத்த சதி அனைவரின் முன்னிலையிலும் பேசலானாள்.

சிவபெருமானின் உயர்வு

சதி கூறினாள், சிவபெருமான் எந்த உயிருக்கும் பகைமை பாராட்டாதவர்.  ’சிவ எனும் இரண்டெழுத்து எல்லா பாவங்களையும் நீக்குகின்றது. மூவுலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் நண்பராக சிவபெருமான் விளங்குகிறார். எல்லாரது விருப்பங்களையும் அவர் நிறைவேற்றுகிறார். குற்றமற்ற மஹாத்மாவான சிவபெருமானிடம் நீர் காழ்ப்புணர்ச்சி கொண்டுள்ளதால், அவரை அவமதிக்கின்றீர். உம்மை அழிப்பதற்கு அம்மஹாத்மாவின் பாதத் துளியே போதுமானதாகும்.

பௌதிகச் செல்வம் மற்றும் பதவியினால் ஆணவம் கொண்டுள்ள உம்மால் ஆன்மீகச் செல்வத்தைப் பற்றி அறியவியலாது. தன்னுணர்வு பெற்றவர்களால் மட்டுமே அதை அறிந்துகொள்ள இயலும்.”

சதி தன் உடலைக் கைவிடுதல்

சதி தன் உடலைத் துறத்தல்

இவ்வாறு கூறி தக்ஷனைக் கண்டித்த சதி, சிவபெருமானை அவமதித்த உம்மால் வழங்கப்பட்ட இவ்வுடலை இனிமேலும் நான் கொண்டிருக்க மாட்டேன்,” என்று கூறி, வேள்விச் சாலையில் காவி உடையணிந்து, ஆசமனம் செய்து வடக்கு நோக்கி அமர்ந்தாள். மனதை சிவபெருமானின் திருவடிகளில் பூரணமாக ஈடுபடுத்தி யோகத்தின் மூலம் நெருப்பை வரவழைத்து தக்ஷனால் பெறப்பட்ட தனது சரீரத்தை சதி துறந்தாள்.

தேவர்கள் பூதகணங்களை வெல்லுதல்

சதி தன் கணவரின் நினைவிலேயே உடலைத் தானே மாய்த்துக் கொண்ட அற்புதத்தைக் கண்டு மக்களெல்லாம் வியந்து பேசிக் கொண்டிருந்தபொழுது, சிவபெருமானின் சேவகர்கள், தம் தலைவியைக் காக்க இயலவில்லையே என்ற கோபத்தினாலும் வருத்தத்தினாலும் தக்ஷனையும் அவரது ஆதரவாளர் களையும் தாக்குவதற்கு ஆயுதங்களுடன் பாய்ந்தனர்.

அதைக் கண்ட பிருகு முனிவர் யஜுர் வேத மந்திரங்களை உச்சரித்து வேள்வியில் பொருட்களை சமர்ப்பித்து, சக்திமிக்க ஆயிரக்கணக் கான தேவர்களை (ரிபுக்கள்) தோன்றச் செய்தார். அவர்கள் சதியின் காவலர்களைத் தாக்கி சிதறடித்தனர்.

தக்ஷனின் வேள்வி தடைபடுதல்

சதி தனது தந்தை செய்த அவமதிப்பினால் மாண்டு விட்டாள் என்பதையும் அவளது காவலர்கள் அனைவரும் ரிபுக்கள் எனும் தேவர்களால் விரட்டியடிக்கப்பட்டனர் என்பதையும் நாரதரிடமிருந்து சிவபெருமான் கேள்வியுற்றார்.

ஆத்திரமடைந்த சிவன் தம் தலையிலிருந்து ஒரு முடியைப் பிடுங்கி வீசி எறிந்தார். அதிலிருந்து ஆயிரம் கரங்களில் ஆயுதம் ஏந்திய மிகப் பயங்கரமான தோற்றமுடைய வீரபத்திரன் தோன்றினார். அவரிடம் சிவபெருமான் ஆணையிட்டார், எனது உடலிலிருந்து தோன்றியதால் நீயே என் துணைவர்கள் அனைவருக்கும் தலைவன். தக்ஷனையும் அவனது துணைவர்களையும் கொல்வாயாக.”

வீரபத்திரனும் சிவபெருமானின் ஏனைய படைவீரர்களும் ஆரவாரத்துடன் கூச்சலிட்டுக் கொண்டே தக்ஷனின் வேள்விச் சாலையை நோக்கிச் சென்றனர். முதலில் வேள்விச் சாலையின் பந்தலை வெட்டிச் சாய்த்தனர். அடுத்ததாக, பெண்களின் பகுதிகளில் நுழைந்து கலகம் செய்தனர், வேள்விக் குண்டத்தை அழித்தனர்.

பல்வேறு ஆரவாரங்களுக்கு மத்தியில், இறுதியில், வீரபத்திரன் தக்ஷனின் தலையைத் துண்டித்து, வேள்வித் தீயின் தென்பகுதியில் எறிந்து, அதை வேள்விப் பொருளாக அர்ப்பணித்தார். அதன்பின், வேள்விச்சாலை முழுவதும் தீப்பற்றி எரிவதைக் கண்டு அனைவரும் திருப்தியுற்று தங்கள் தலைவரின் இருப்பிடமான கைலாயத்திற்குப் புறப்பட்டனர்.

சிவபெருமான் சாந்தமடைதல், தக்ஷனுக்கு ஆட்டுத் தலை பொருத்தப்படுதல் முதலியவற்றை அடுத்த இதழில் காணலாம்.

நான்காவது ஸ்கந்தம், அத்தியாயம் 3-5 பகுதிகள்

அத்தியாயம் 3

(1)       தக்ஷனின் யக்ஞம் (1-7)

(2)       சதியின் விருப்பம் (8-14)

(3)       சிவபெருமானின் அறிவுரை (15-25)

அத்தியாயம் 4

(1)       சதிக்கு நேர்ந்த அவமானம் (1-10)

(2)       சிவபெருமானின் உயர்வு (11-16)

(3)       சதி தக்ஷனைக் கண்டித்தல் (17-23)

(4)       சதி தன் உடலைத் துறத்தல் (24-30)

(5)       தேவர்களின் வெற்றி (31-34)

அத்தியாயம் 5

(1)       தக்ஷனின் வேள்வி தடைபடுதல் (1-26)

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives