வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்
அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரபூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்குத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த இதழில்: மூன்றாம் காண்டம், பன்னிரண்டாம் அத்தியாயம்
சென்ற இதழில் காலக் கணிதம் பற்றியும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் காலத்தைக் கட்டுப்படுத்துவது பற்றியும் பார்த்தோம். இந்த இதழில் பிரம்மாவின் படைப்புகளைப் பற்றி விதுரரிடம் மைத்ரேய முனிவர் விளக்குவதைக் காணலாம்.
குமாரர்களின் தோற்றம்
ஜீவன்கள், தங்களது உண்மையான அடையாளத்தை மறந்தாலொழிய அவர்களால் இந்த ஜடவுலகில் வாழ முடியாது. ஆகவே, பிரம்மா முதலில் ஒருவரது உண்மை அடையாளத்தைப் பற்றிய மறதி அல்லது தேக அபிமானம், மரண உணர்ச்சி, சுய வஞ்சனை, விரக்தி, பொய்யான உரிமை உணர்வு ஆகியவற்றை படைத்ததன் மூலமாக, உயிர்கள் இந்த பௌதிக உலகில் வாழ்வதற்குத் தகுந்த சூழ்நிலைகளை உருவாக்கினார்.இவை போன்ற ஐவகை அஞ்ஞானங்களைப் படைத்ததால் பிரம்மா மகிழ்ச்சியடையவில்லை.
இதை பாவமெனக் கருதிய அவர் தம்மை புனிதப்படுத்திக் கொள்வதற்காக பகவான் கிருஷ்ணரை தியானித்தார். மேலும், ஞானத்தின் நான்கு கொள்கைகளான ஸாங்க்யம், யோகம், வைராக்யம், தபஸ் ஆகியவற்றை நிறுவுவதற்காக ஸனகர், ஸனாதனர், ஸனந்தனர் மற்றும் ஸனத் குமாரர் என்னும் மாமுனிவர்களைப் படைத்தார்.
அம்முனிவர்களிடம் பிரஜைகளைப் படைக்கும்படி பிரம்மதேவர் கூறினார். ஞானமே வடிவான அவர்கள், முழுமுதற் கடவுளான வாஸுதேவரிடம் பற்றுக் கொண்டு முக்தியை நோக்கமாகக் கொண்டிருந்ததால், தம் தந்தையின் விருப்பத்திற்கு உடன்படவில்லை. இதனால் பிரம்மதேவரின் மனதில் சினம் தோன்றியது.
ருத்ரரின் தோற்றம்
அவர் தன் சினத்தைக் கட்டுப்படுத்த முயன்றபோதிலும், அஃது அவரது புருவங்களுக்கு மத்தியிலிருந்து நீலமும் சிவப்பும் கலந்த வண்ணத்தில் ஒரு குழந்தையாகத் தோன்றியது. பெரும் கவலை கொண்டு கதறி அழத் துவங்கிய அக்குழந்தை, தன் பெயரையும் தனக்குரிய இடத்தையும் குறிப்பிடும்படி பிரம்மதேவரிடம் வினவியது.
அதற்கு பிரம்மா பதிலளித்தார்: “தேவர்களின் தலைவனான நீர் ’ருத்ரர்’ என பொதுவாக அழைக்கப்படுவீர். உமக்கு பதினோரு இதர பெயர்களும் உண்டு: மன்யு, மனு, மஹினஸன், மஹான், சிவன், ருத்வஜன், உக்ரரேதான், பவன், காலன், வாமதேவன் மற்றும் திருதவிரதன். உமக்கு ருத்ராணீகள் எனப்படும் பதினோரு மனைவியர் உண்டு. அவர்களின் பெயர்கள்: தீ, திருதி, ரஸலா, உமா, நியுத், ஸர்பி, இலா, அம்பிகா, இராவதி, ஸ்வதா மற்றும் தீக்ஷா. உமக்குரிய இடங்கள்: இதயம், புலன்கள், மூச்சுக் காற்று, வானம், காற்று, அக்னி, தண்ணீர், பூமி, சூரியன், சந்திரன் மற்றும் தவம். இவையனைத்தையும் ஏற்றுக் கொண்டு மக்கள்தொகையை பெருமளவில் உற்பத்தி செய்வீராக.”
அதன்படி ருத்ரர் தன்னைப் போன்ற பயங்கர குணமும் வலிமையும் உடல் தோற்றமும் கொண்ட பல பிரஜைகளை உற்பத்தி செய்தார். அப்பிரஜைகள் தம் கண்களிலிருந்து எழும் தீ பிழம்புகளால் எல்லா திசைகளையும் பிரம்மதேவரின் படைப்புகளையும் அழிக்கத் துவங்கினர்.
உடனே பிரம்மதேவர் ருத்ரரிடம், “அன்பு மைந்தனே, நீர் இப்போது தவம் செய்வதே சிறந்தது. அதுவே உமக்கும் எல்லா உயிர்வாழிகளுக்கும் மங்களங்களையும் நல்லாசிகளையும் பெற்றுத் தரும். அழிவுக் காலத்தில் உமது சேவை தேவைப்படும். அதுவரை தவம் செய்த வண்ணம் காத்திருங்கள்,” என்று கூறினார். அதன்படி ருத்ரர் கைலாய மலையின் வனத்தினுள் புகுந்து முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நோக்கி தவம் புரிய தொடங்கினார்.
குறிப்பு: ருத்ரர், பகவானின் கருணையைப் பெறுவதற்காக தவம் செய்வதை ஓவியங்களில் நாம் காணலாம்.
கிருஷ்ணரின் பேரன் வஜ்ரநாபரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோபிநாதர் வீற்றுள்ள கோயில்–கோபிநாத்ஜி கோயில்
முனிவர்களின் பிறப்பு
அடுத்ததாக, பிரம்மா தன் உடலிலிருந்தும் மனதிலிருந்தும் பத்து முனிவர்களை புதல்வர்களாகப் பெற்றார். பிரம்மாவின் மனதிலிருந்து மரீசியும், விழிகளிலிருந்து அத்ரியும், வாயிலிருந்து அங்கிரரும், காதுகளிலிருந்து புலஸ்தியரும், நாபியிலிருந்து புலஹரும், கரத்திலிருந்து க்ரதுவும், தொடு உணர்ச்சியிலிருந்து ப்ருகுவும், சுவாசத்திலிருந்து வசிஷ்டரும், கட்டை விரலிலிருந்து தக்ஷனும், முதிர்ந்த பக்குவப்பட்ட சிந்தனையிலிருந்து மதிப்புமிக்க மைந்தனான நாரதரும் பிறந்தனர்.
பக்தியெனும் சமய அறநெறியானது பகவான் உறையும் பிரம்மதேவரின் மார்பிலிருந்தும், சமயத்திற்கு புறம்பானவையும் அச்சம் தரும் மரணமும் அவரது பின்பகுதியிலிருந்தும் தோன்றின. அவரது இதயத்திலிருந்து காமமும், புருவங்களுக்கு இடையிலிருந்து கோபமும், உதடுகளின் வழியே பேராசையும், வாயிலிருந்து வாக்கும், ஆண் குறியிலிருந்து கடல்களும், ஆசன வாயிலிருந்து இழிந்த வெறுக்கத்தக்க செயல்களும் தோன்றின. மேலும், பிரம்மதேவரின் நிழலிலிருந்து கர்தம முனிவர் தோன்றினார்.
பிரம்மாவின் புதல்வி
பிரம்மதேவரின் உடலிலிருந்து வாக் எனும் அவரது புதல்வி தோன்றினாள். அவள் காம இச்சை இல்லாதவளாக இருந்தபோதிலும், பிரம்மாவின் மனதில் அத்தகைய இச்சை எழுந்தது. அதைக் கண்ட முனிவர்கள் அவரிடம் அதைப் பற்றி வினவ, மிகவும் வெட்கமடைந்த அவர், தனது உடலை உடனடியாக கைவிட்டார். அதன்பின், படைப்புத் தொழிலை மேற்கொள்வதற்காக மற்றொரு உடலை ஏற்றார்.
வேதங்களும் வேள்விகளும்
ரிக், யஜுர், ஸாம, அதர்வ எனும் நான்கு வேதங்களும் பிரம்மாவின் நான்கு வாய்களிலிருந்து தோன்றின. வேள்விகளுக்கு தேவைப்படும் நான்கு விஷயங்களான ஓதுபவர், அர்ப்பணிப்பவர், நெருப்பு, உபவேதங்கள் ஆகியவையும் நான்கு சமய அறநெறிகளான தவம், தூய்மை, வாய்மை, கருணை ஆகியவையும் நான்கு சமுதாயப் பிரிவுகளுக்குரிய தர்மங்களும் வெளிப்பட்டன.
மேலும், மருத்துவ விஞ்ஞானம், இராணுவ விஞ்ஞானம், இசைக் கலை, சிற்பக் கலை மற்றும் ஐந்தாம் வேதமான இதிகாசங்கள் ஆகியவற்றையும் அவர் படைத்தார். ஷோடஷு, யுக்தம், புரீஷி, அக்னிஷ்டோமம், ஆப்தோர்யாமம், அதிராத்ரம், வாஜபேயம், கோஸவம் ஆகிய பல்வேறு விதமான அக்னி வேள்விகள் பிரம்மாவின் கீழ்த்திசை வாயிலிருந்து தோன்றின.
வேத அறிவு
கல்வி, தானம், தவம், சத்தியம் ஆகியவை சமயத்தின் நான்கு அங்கங்களாகும். இவற்றை கற்றுக்கொள்வதற்கு தொழிலின் அடிப்படையில் நான்கு வர்ணங்களும் ஆஷ்ரமங்களும் பிரம்மதேவரால் படைக்கப்பட்டன. பிரம்மச்சரிய வாழ்க்கை உபநயன விழாவிலிருந்து துவங்குகிறது. இதன் நோக்கம் வேத கல்வி பயின்று புலன்களைக் கட்டுப்படுத்துவதே. இல்லற வாழ்க்கையானது தர்மப்படி தொழில் செய்து தானம் வழங்குவதற்கானது.
நான்கு வகையான ஓய்வுபெற்ற வாழ்க்கைகளான வைகானஸஸ், வாலகில்யஸ், ஔதும்பரஸ், ஃபேனபஸ் ஆகியவையும், துறவு வாழ்வின் நான்கு பிரிவுகளான குடீசகஸ், பஹ்வோதஸ், ஹம்ஸஸ், நிஷ்க்ரியஸ் ஆகியவையும் பிரம்மாவிடமிருந்து தோன்றின. தர்க்க சாஸ்திரம், நன்னடத்தை விதிகள், சட்டம் ஒழுங்கு, வாழ்வின் இலக்கு, வேத பண்களான பூ: புவ: ஸ்வ: ஆகியவை பிரம்மாவின் வாய்களிலிருந்தும், இதயத்திலிருந்து ஓம்காரமும் வெளிப்பட்டன.
இலக்கியக் கலையான உஷ்ணிக் பிரம்மாவின் உடலிலுள்ள மயிர்கால்களிலிருந்தும், வேத மந்திரமான காயத்ரீ அவரது தோலிலிருந்தும், த்ரிஷ்டுப் அவரது தசையிலிருந்தும், அனுஷ்டுப் அவரது நரம்புகளிலிருந்தும், ஜகதீ அவரது எலும்புகளிலிருந்தும் தோன்றியன. பாடல்களை எழுதும் கலையான பங்க்தி அவரது எலும்பின் மஜ்ஜையிலிருந்தும், ப்ருஹதீ அவரது மூச்சுக் காற்றிலிருந்தும் பிறந்தது.
அதன் பின்னர், பிரம்மதேவர் உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள், மெல்லின, இடையின மற்றும் வல்லின எழுத்துக்கள், சப்த ஸ்வரங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தினார். ஆகையால் அவர் ஆன்மீக ஒலியின் அவதாரம் எனப்படுகிறார்.
மனுவின் பிறப்பு
மாமுனிவர்கள் ஆற்றல் மிகுந்தவர்களாக இருந்தபோதும் ஜனத்தொகை போதுமான அளவு அதிகரிக்கவில்லை என்பதால், பிரம்மதேவர் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டிருந்தபோது, ஓர் ஆண் உருவமும் ஒரு பெண் உருவமும் அவரது உடலிலிருந்து தோன்றின. அந்த ஆண் ஸ்வயம்புவ மனு ஆவார், அப்பெண் மனுவின் மனைவியான அரசி ஸதரூபா ஆவாள். இவர்கள் இருவரும் இணைந்து ஐந்து குழந்தைகளைப் பெற்றனர். அவர்களில் இருவர் ஆண்கள்: பிரியவ்ரதன், உத்தானபாதன்; மற்ற மூவரும் பெண்கள்: ஆகூதி, தேவஹூதி மற்றும் பிரஸூதி.
தந்தையான மனு தன் மூத்த புதல்வி ஆகூதியை ருசி என்னும் முனிவருக்கும், இரண்டாவது புதல்வி தேவஹூதியை கர்தம முனிவருக்கும், கடைசிப் பெண் பிரஸூதியை தக்ஷனுக்கும் மணமுடித்துக் கொடுத்தார். இவர்களிடமிருந்தே உலகின் மக்கட்தொகை பெருக ஆரம்பித்தது.
மனுவின் வம்சத்தினரைப் பற்றிய விபரங்கள் ஸ்ரீமத் பாகவதத்தின் ஆறாம் காண்டம் வரை தொடரவுள்ளன.