கீழுலக ஸ்வர்கங்கள்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: ஐந்தாம் ஸ்கந்தம், அத்தியாயம் 24–25

சென்ற இதழில் சூரிய சந்திரனின் இயக்கத்தைப் பற்றியும் நட்சத்திரங்களைப் பற்றியும் பார்த்தோம். இந்த இதழில் கீழுலக ஸ்வர்க்கங்களைப் பற்றியும் பகவான் ஸங்கர்ஷணரைப் பற்றியும் காணலாம்.

இராகுவின் தோல்வி

சூரியனுக்கு கீழே 80,000 மைல் தொலைவில் இராகு கிரகம் உள்ளது. சிம்ஹிகா என்பவரின் மைந்தன் தேவராக இருப்பதற்கும் கிரகத்தின் அதிபதியாக இருப்பதற்கும் முற்றிலும் தகுதியற்றவன் என்றபோதிலும், முழுமுதற் கடவுளின் அருளால் அவன் இராகு கிரகத்திற்கு அதிபதியாக விளங்குகிறான்.

பகவான் மோஹினி ரூபம் ஏற்று தேவர்களுக்கு அமிர்தத்தை வழங்கியபோது, இராகு சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே தொந்தரவு செய்து அவர்களுக்கு அமிர்தம் கிடைக்காமல் தடுத்தான்.சூரியன் மற்றும் சந்திரனுக்கு இராகு இடையூறு செய்யும் காலமே கிரகண காலம் என்று அழைக்கப்படுகிறது. எனினும், ஒரு முகூர்த்தத்திற்கு (48 நிமிடங்கள்) மேல் சூரியன் மற்றும் சந்திரனின் முன் நிற்க முடியாமல் இராகு பின்வாங்குகிறான். இதற்கு காரணம், தம்மிடம் சரணடைந்த சூரியதேவன் மற்றும் சந்திரதேவனைக் காப்பதற்காக பகவான் விஷ்ணு சக்திமிக்க தமது ஸுதர்சன சக்கரத்தினை அவர்களின் பாதுகாப்பிற்காக அங்கு நியமித்துள்ளார்.

குறிப்பு: பக்தர்கள் எப்போதும் எல்லாச் சூழ்நிலைகளிலும் பகவானின் பாதுகாப்பையே நம்பியிருக்கின்றனர்.

சூட்சும உயிர்வாழிகள்

இராகுவிற்கு கீழே 80,000 மைல் தொலைவில் சித்த லோகம், சாரண லோகம் மற்றும் வித்யாதர லோகம் அமைந்துள்ளன. இவற்றிற்கு அடியிலுள்ள வானின் உள்பகுதி அந்தரீக்ஷம் எனப்படுகிறது. யக்ஷர்கள், இராட்சஸர்கள், பிசாசுகள், பேய்கள் முதலிய சூட்சும உயிர்வாழிகள் இங்கே வாழ்கின்றனர்.

கீழுலக ஸ்வர்கங்கள்

பூமிக்கு கீழே அதளம், விதளம், சுதளம், தலாதளம், மஹாதளம், ரஸாதளம், பாதாளம் எனும் ஏழு லோகங்கள் உள்ளன. இவற்றின் நீள அகலங்கள் பூமியின் நீள அகலத்திற்கு இணையானவை.

இந்த ஏழு கீழுலகங்களில் தைத்யர்கள், தானவர்கள் மற்றும் நாகர்கள் வசிக்கின்றனர். இவர்கள் பௌதிக சிற்றின்பங்களில் மூழ்கி, தங்களை மறந்த நிலையில் உள்ளனர். இங்கே தேவர்களின் ஸ்வர்க லோகங்களைக் காட்டிலும் அழகிய மாளிகைகள், நந்தவனங்கள் மற்றும் புலனின்பத்திற்கான இடங்கள் மிகுந்து காணப்படுகின்றன. இந்த லோகங்களிலுள்ள ஏரிகள், அருவிகள், பறவைகள், மலர்கள், கனிகளைக் கொண்ட இயற்கை எழில் கொஞ்சும் சூழ்நிலை முதலியவை இங்கு வசிப்பவர்களின் மனதை மயக்கி புலனின்பத்தில் மூழ்கடிக்கிறது.

இந்த செயற்கையான ஸ்வர்க லோகங்களில் சூரிய ஒளிபடுவதில்லை. இதனால் இங்கு இரவு பகல் வேற்றுமை கிடையாது, காலத்தால் ஏற்படும் அச்சமும் இல்லை. இங்கு வாழும் ஏராளமான நாகங்களின் தலைகளிலுள்ள இரத்தின ஒளி இங்குள்ள இருளை நீக்கி ஒளியை வழங்குகிறது. மூலிகை சாறு மற்றும் மருந்துப் பொருட்களை உண்பதாலும், மூலிகை நீரில் நீராடுவதாலும், மூப்பு, நரை, மற்றும் நோய்களும் இங்குள்ள மக்களை பாதிப்பதில்லை. இங்குள்ளவர்கள் பகவானின் ஸுதர்சன சக்கரத்தைத் தவிர வேறு எதற்கும் அஞ்சுவதில்லை.

பகவான் வாமனதேவர் பலி மஹாராஜரிடம் மூன்றடி நிலம் கேட்டு, தந்திரமாக மூவுலகையும் ஆட்கொள்ளுதல்

அதள, விதள, சுதளம்

அதள லோகத்தில் மயதானவன் எனும் அசுரனின் மைந்தன் பலன் என்பவன் இருக்கிறான். அவன் 96 வகை யோக சக்திகளைப் பெற்றுள்ளவன். அவன் தனது கொட்டாவியில் இருந்தே ஸ்வைரினீ, காமினி, பும்ஷலீ எனும் மூன்றுவித பெண்களைப் படைத்தான். இப்பெண்களின் சகவாசத்தாலும் இவர்கள் தயாரித்து வழங்கும் ஹாடகம் எனும் மதுவின் மயக்கத்தாலும், ஆண்கள் தங்களை எல்லாம் வல்லவர்களாகவும் கடவுளாகவும் எண்ணுகின்றனர். இவ்வாறு இவர்கள் வெல்ல முடியாத மாயையையும் மரணத்தையும் மறந்து புலனின்பத்தில் மூழ்கிவிடுகின்றனர்.

அதள லோகத்திற்கு கீழே விதள லோகம் உள்ளது. இங்கு சிவபெருமான் தமது துணைவர்களுடனும் பூத கணங்களுடனும் வாழ்கின்றார். அவரின் சக்தியால் ஹாடகி எனும் நதியில் தங்கம் உற்பத்தியாகிறது. மலை போன்ற அந்த தங்கத்தை உபயோகித்து அசுரர்கள் ஆபரணங்கள் செய்து அணிந்து மகிழ்கின்றனர்.

சுதள லோகத்தில் பிரகலாதரின் பேரனான பலி மஹாராஜர் வாழ்கிறார். பூமியில் பலி மஹாராஜர் ஆட்சி செய்தபோது, பகவான் வாமன தேவராகத் தோன்றி அவரிடம் மூன்றடி நிலம் கேட்டு, தந்திரமாக மூவுலகையும் ஆட்கொண்டார். பலி மஹாராஜர் தமது செல்வங்கள் அனைத்தையும் பகவானுக்கு அர்ப்பணித்து ஆத்ம நிவேதனம் செய்ததால், அவரிடம் பகவான் மிகவும் திருப்தியுற்று தேவேந்திரனைவிட மிகச்சிறந்த செல்வந்தராக சுதள லோகத்தின் அரசனாக அவரை நியமித்தார். அங்கு அவர், பக்தித் தொண்டின் உண்மையான பலனான கிருஷ்ண பிரேமையுடன் பகவானை வழிபட்டு ஆனந்தமாக வாழ்ந்து வருகிறார்.

பக்தியின் மேன்மை

ஒருவன் பசிக்கும்போதோ தவறி கீழே விழும்போதோ தடுமாறும்போதோ, பகவான் ஹரியின் நாமத்தை விரும்பியோ விரும்பாமலோ ஒருமுறை உச்சரித்தாலும் முந்தைய கர்ம விளைவுகளிலிருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறான். அதே சமயத்தில், இத்தகைய விடுதலையைப் பெறுவதற்காக கர்மிகளும் ஞானிகளும் பெரும் துன்பத்தைத் தரும் பற்பல முயற்சிகளில் ஈடுபட்டு வாழ்வை வீணாக்குகின்றனர்.

உண்மையான அன்புடன் வழிபடுவோருக்கு பகவான் தம்மையே வழங்குகிறார். அத்தகைய கருணைமிக்க பகவான் சுதள லோகத்தில் பலி மஹாராஜரின் வாயிற்காப்பாளனாக பணிபுரிவதில் ஆனந்தமடைகிறார்.

பகவானால் பலி மஹாராஜருக்கு அளிக்கப்பட்ட செல்வமும் அந்தஸ்தும் பௌதிகமானவை அல்ல. ஒருவனது கர்மத்தால் பெறப்படுகின்ற பௌதிக செல்வம் பகவத் பக்தியைத் தடுத்து விடுகிறது. பகவான் வாமனர் பலி மஹாராஜரிடமிருந்து ஜட செல்வம் முழுவதையும் எடுத்துக் கொண்டு, அவரைக் கைது செய்து மலை குகைக்குள் தூக்கி எறிந்தார். அச்சூழ்நிலையில் பலி மஹாராஜர் பகவானிடம் செய்த பிரார்த்தனை மிகவும் முக்கியமானது.

பகவான் வாமனர் பலி மஹாராஜரைக் கைது செய்தல்

பலி மஹாராஜரின் பிரார்த்தனை

“அழியாத பக்தித் தொண்டு புரியும் வாய்ப்பை பகவான் வாமனர் இந்திரனுக்கு அளித்தபோதிலும், இந்திரனோ அதை விடுத்து அழிகின்ற மூவுலகச் செல்வத்தை பகவானிடம் வேண்டியது புத்திசாலித்தனம் அல்ல. அதைக் கற்றுத்தராத அவரது குருவான பிருஹஸ்பதியும் புத்திசாலி அல்ல. உண்மையில் தமக்கு நன்மை பயப்பது எது என்பதை எனது தாத்தா பிரகலாதர் மட்டுமே அறிந்திருந்தார். அதனால்தான் ஹிரண்யகசிபுவின் எல்லா ராஜ்ஜியத்தையும் பகவான் நரசிம்மதேவர் அவருக்கு அருளியபோதும், பிரகலாதர் அவற்றை மறுத்து தூய பக்தித் தொண்டையும் பகவானுடைய தொண்டருக்கு தொண்டராக இருப்பதையுமே வரமாக வேண்டினார். பெளதிகப் பற்றுமிக்க என் போன்றோரால் பிரகலாத மஹாராஜரைப் பின்பற்ற இயலாது.”

ஆற்றல்மிக்க அசுரனான இராவணன் ஒருமுறை பலி மஹாராஜரை வெற்றிகொள்ள வந்தபோது, பலி மஹாராஜரின் வாயிற்காப்பாளனாக இருக்கும் பகவான் தமது பாதத்தால் அவனை எட்டி உதைத்தார். இராவணன் 80,000 மைல்களுக்கு அப்பால் போய் விழுந்தான். இவ்வாறு தம் பக்தரை பகவான் காத்து அருள்கிறார். பலி மஹாராஜருக்கும் வாமன தேவருக்கும் இடையிலான லீலைகளை ஸ்ரீமத் பாகவதம் எட்டாம் ஸ்கந்தத்தில் விரிவாகக் காணலாம்.

தலாதளம், மஹாதளம், ரஸாதளம்

சுதள லோகத்திற்குக் கீழே தலாதள லோகம் உள்ளது. இது தானவ அசுரன் மயன் என்பவனால் ஆளப்படுகிறது. இவன் மாயாவிகளின் ஆச்சாரியனாக  விளங்குகிறான். சிவபெருமானின் அருளால் பௌதிக இன்பங்களை தடையின்றி அனுபவித்தாலும், இவனால் ஆன்மீக இன்பத்தை அடைய முடியாது.

இதற்குக் கீழேயுள்ள மஹாதள லோகத்தில், கத்ருவின் சந்ததியினரான ஏராளமான பாம்புகள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானவை குஹகன், தக்ஷகன், காலியன், சுஷேணன் என்பவை. கருடனால் தாக்கப்படுவோம் என்ற பயத்துடன் இருந்தாலும் தங்கள் மனைவி மக்களுடன் இவை விளையாடி மகிழ்கின்றன.

இதற்குக் கீழேயுள்ள ரஸாதள லோகத்தில் தைத்தியர்களும் தானவர்களும் வசிக்கின்றனர். இவர்கள் பணிர்கள், நிவாத கவசர்கள், காலேயர்கள் மற்றும் ஹிரண்யபுரவாசிகள் என்போர். இவர்கள் எப்போதும் இந்திரனுடன் பகைமை பாராட்டுகின்றனர். இந்திரனின் பெண் தூதரான ஸரமா என்பவள் உச்சரிக்கும் மந்திர சாபத்தைக் கண்டு மிகுந்த அச்சத்துடன் இவ்வுலகில் இவர்கள் ஒளிந்து வாழ்கின்றனர்.

ரஸாதள லோகத்திற்குக் கீழே பாதாளம் உள்ளது. இங்கே 5 தலை, 7 தலை, 10 தலை, 100 தலை மற்றும் 1,000 தலை கொண்ட ஏராளமான அசுர நாகங்களும் நாகலோக தலைவர்களும் வாழ்கின்றனர். இவற்றிற்கு எல்லாம் தலைவியாக வாசுகி எனும் பாம்பு உள்ளது. இப்பாம்புகளின் தலைகளில் உள்ள நாக ரத்தினங்கள் செயற்கை சொர்கங்கள் அனைத்தையும் ஒளிபெறச் செய்கின்றன.

ஸங்கர்ஷணரின் சக்தி

பாதாள லோகத்திற்கு கீழே 2,40,000 மைல் தூரத்தில் முழுமுதற் கடவுளின் விரிவங்கமான ஸங்கர்ஷணர் இருக்கிறார். உலகை அழிப்பது எவ்வாறு என்பதை இவர் சிவபெருமானுக்கு போதிக்கிறார். எனவே, இவர் தமோ குணத்தின் அதிபதியான சிவபெருமானால் வணங்கப்பட்டு தாமஸு என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் உயிர்வாழிகளுடைய அஹங்காரத்திற்கு (தவறான அடையாளத்திற்கு) மூல மூர்த்தியாக விளங்குகிறார். மாபெரும் லோகங்கள் அனைத்தும் ஸங்கர்ஷணருடைய மாபெரும் தலையில் சிறு கடுகைப் போல் தோற்றமளிக்கின்றன.

உயிர்வாழிகள் தம்மைத் திருத்திக் கொண்டு மீண்டும் பகவானிடம் செல்வதற்கான வாய்ப்பை இந்த ஜடவுலகப் படைப்பு தருகிறது. எனினும், இதைத் தவறாகப் பயன்படுத்தி மக்கள் வாழ்வை வீணடிக்கும்போது, அனந்ததேவர் சினம் கொள்கிறார். சினம் கொண்ட அவரது இரு புருவங்களுக்கு இடையிலிருந்து பதினொரு ருத்திரர்கள் தோன்றி படைப்பு முழுவதையும் அழிக்கின்றனர்.

அனந்ததேவரின் வழிபாடு

தூய பக்தர்களும் நாகர்களின் தலைவர்களும் பகவான் அனந்தரை பக்தியுடன் வழிபடுகின்றனர். மேலும், தேவர்கள், அசுரர்கள், உரகர்கள், சித்தர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர்கள், மாமுனிவர்கள் என பலரும் பகவானுக்கு தொடர்ந்து தம் பிரார்த்தனைகளை அர்ப்பணிக்கின்றனர்.

பகவான் ஸங்கர்ஷணர் நீல நிற உடையும், காதுகளில் குண்டலமும் அணிந்து, இடையில் தங்க கச்சை அணிந்துள்ளார். இவர் தமது கரத்தில் கலப்பையை ஏந்தியுள்ளார், கழுத்தில் துளசி மாலையும் வைஜயந்தி மாலையும் அணிந்துள்ளார். பக்தர்கள் மீது கொண்ட அன்பினால் பேருவகையோடு காட்சி அளிக்கிறார்.

நாகராஜர்களின் அழகுமிக்க இளவரசிகள் பகவானின் மங்கலகரமான அருளை வேண்டி அவரது அழகிய கரங்களில் அகில் மற்றும் சந்தனம் பூசி அன்புடன் வழிபடுகின்றனர்.

அனந்தரின் புகழ்

படைத்தல், காத்தல், அழித்தல் என்பனவற்றின் காரணமாகவும், அளவற்றவராகவும் ஆதியந்தம் அற்றவராகவும் பகவான் இருக்கிறார். சூட்சும மற்றும் ஸ்தூல பொருட்கள் அவரிடமிருந்தே வெளிவருகின்றன. பக்தர்களின் மீதான அளவற்ற கருணையால், அவர் வெவ்வேறு வடிவங்களில் பல்வேறு லீலைகளைப் புரிகிறார்.

ஒருவர் எந்த நிலையிலும் ஆன்மீக குருவின் மூலமாக பகவானின் திருநாமத்தைப் பெற்று ஜபித்தால், அவர் உடனே தூய்மை அடைகிறார். அனந்த தேவரின் புகழ் அளவற்றதாகும். எல்லையற்ற சக்தி பெற்றவராக அவர் முழு பிரபஞ்சத்தையும் தம் தலையில் தாங்கியுள்ளார்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives