கிருஷ்ணரின் வழிகாட்டுதலின் கீழ் செயல்பட மறுப்பவர்கள், குணங்களினால் வழிநடத்தப்படுவர். அர்ஜுனன் போர் புரிய வேண்டும் என்பது கிருஷ்ணரின் விருப்பம்; அதை அவன் ஏற்க மறுத்தால்கூட அவனது சத்திரிய சுபாவத்தினால் போர் செய்யும்படி தூண்டப்படுவான். இயற்கையினால் தூண்டப்பட்டு செயல்படுவதைக் காட்டிலும், கிருஷ்ணரின் வழிகாட்டுதலில் செயல்படுதல் சாலச் சிறந்தது அப்போது அவன் பந்தப்பட மாட்டான்.
காமம், கோபம், பேராசை ஆகியவை ஒருவனை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் கதவுகள். இவை ஆத்மாவை அழிவுப் பாதையில் நடத்துவதால், ஒவ்வொரு அறிவுள்ள மனிதனும் இவற்றைத் துறக்க வேண்டும் என்று கிருஷ்ணர் அறிவுறுத்துகிறார். நரகத்தின் இந்த மூன்று கதவுகளிலிருந்து தப்பியவன் தன்னுணர்வைப் பெறுவதற்கு அனுகூலமான செயல்களைச் செய்து படிப்படியாக பரம இலக்கை அடையலாம்.
கிருஷ்ணரின் உலகம் இந்த ஜடவுலகத்தைப் போன்று சூரியனாலோ சந்திரனாலோ மின்சாரத்தாலோ ஒளியூட்டப்படுவதில்லை. அந்த உலகம் தானாகவே பிரகாசமாக உள்ளது. இந்த ஜடவுலகில் சூரிய கிரகம் மட்டுமே சுயப் பிரகாசம் கொண்டுள்ளது. வைகுண்டம் என்று அழைக்கப்படும் அந்த ஆன்மீக உலகிலோ அனைத்து கிரகங்களும் சுயப் பிரகாசமுடையவை. அவற்றின் பிரகாசமே பிரம்மஜோதி.