அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காப்பதற்காக ஒவ்வொரு யுகத்திலும் பகவான் தோன்றுகிறார் என்பதை அனைவரும் அறிவர். அதன்படி, கலி யுகத்திற்கான அவதாரம் கல்கி என்று மட்டுமே மக்கள் அறிவர். ஆயினும், மக்களால் பரவலாக அறியப்படாமல், அதே சமயத்தில் அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காப்பதற்காக, கலி யுகத்தில் பகவான் மூன்று அவதாரங்களில் தோன்றியுள்ளார். அந்த மூன்று அவதாரங்களைப் பற்றிக் காண்போம்.
கலி யுகம் 4,32,000 வருடங்களைக் கொண்டது. தற்போது 5,000 வருடங்கள் கடந்துள்ள நிலையில், மீதமுள்ள 4,27,000 வருடங்களில் தர்மம் மேன்மேலும் படிப்படியாகக் குறைந்து, கலி புருஷன் அதர்மச் செயல்களை உச்ச நிலையில் தலை தூக்கி அரங்கேற்றுவான் என ஸ்ரீமத் பாகவதம் கூறுகின்றது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் துவாபர யுகத்தின் இறுதியில் தன் திவ்யமான லீலைகளை முடித்த பிறகு மீண்டும் ஆன்மீக உலகிற்குச் சென்றார். அதன் பிறகு தோன்றிய கலி புருஷன், ஒருநாள் மூன்று கால்களை இழந்து ஒற்றைக் காலுடன் நின்று கொண்டிருந்த எருதினை மேலும் துன்புறுத்தியபடி, அதன் மீதமிருந்த காலையும் உடைத்துக் கொண்டிருந்தான். (கலி புருஷனின் இச்செயலானது, கலி யுகத்தில் தர்மம் 25 சதவீதத்தில் தொடங்கி, இறுதியில் சூன்யமாகிவிடும் என்பதைக் காட்டுகின்றது) நாட்டைக் காவல் காப்பதற்காக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மாமன்னர் பரீக்ஷித் அக்காட்சியைக் காண நேர்ந்தது. ஒரு சூத்திரன் மன்னரைப் போல உடையணிந்து கொண்டு எருதை வதைப்பதையும் அதனைக் கண்டு பசு கண்ணீர் விட்டு அழுது கொண்டிருப்பதையும் பார்த்த மாத்திரத்தில், மாமன்னர் அவனைக் கொல்வதற்காக வாளை உருவினார்.
ஆன்மீகம் குன்றிய தற்போதைய கலி யுகம் சண்டையும் ஏமாற்றமும் நிறைந்த யுகம் என்று வேத சாஸ்திரங்கள் விவரிக்கின்றன. சப்தரிஷி மண்டலம் மகர நட்சத்திரத்தைக் கடந்து சென்றபோது கலி யுகம் தோன்றியது என்று ஸ்ரீமத் பாகவதம் (12.2.31) கணித்துள்ளது. கி.மு.3102, பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி அதிகாலை 2:27 மணிக்கு கலி யுகம் ஆரம்பமானதாக ஜோதிட வல்லுநர்கள் கணித்துள்ளனர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையை அர்ஜுனனுக்கு உபதேசித்து சுமார் 36 வருடங்களுக்குப் பிறகு கலி யுகம் தோன்றியது.