கலி யுகத்திற்கான மூன்று அவதாரங்கள்

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காப்பதற்காக ஒவ்வொரு யுகத்திலும் பகவான் தோன்றுகிறார் என்பதை அனைவரும் அறிவர். அதன்படி, கலி யுகத்திற்கான அவதாரம் கல்கி என்று மட்டுமே மக்கள் அறிவர். ஆயினும், மக்களால் பரவலாக அறியப்படாமல், அதே சமயத்தில் அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காப்பதற்காக, கலி யுகத்தில் பகவான் மூன்று அவதாரங்களில் தோன்றியுள்ளார். அந்த மூன்று அவதாரங்களைப் பற்றிக் காண்போம்.

கலி யுகத்தின் தன்மைகள்

கலி யுகத்தைப் பற்றி ஸ்ரீமத் பாகவதம் (1.1.10) பின்வருமாறு கூறுகின்றது. “கலி யுக மக்கள் எப்போதும் குறைந்த ஆயுள் கொண்டவர்களாக, சண்டை பிரியர்களாக, சோம்பேறிகளாக, தவறாக வழிநடத்தப்பட்டவர்களாக, துரதிர்ஷ்டசாலிகளாக, மனநிம்மதி இல்லாதவர்களாக இருப்பர்.”

பாகவதத்தின் மற்றோர் இடத்தில் (12.2.1) கூறப்பட்டுள்ளது: “அறம், வாய்மை, தூய்மை, சகிப்புத்தன்மை, கருணை, ஆயுள், பலம், நினைவாற்றல் ஆகியவை கலி யுகத்தின் வலுவான தாக்கத்தினால் தினந்தோறும் குறைந்து கொண்டே போகும்.” பாகவதத்தின் பன்னிரண்டாவது ஸ்கந்தத்தில் உள்ள அந்த அத்தியாயம் முழுவதுமே கலி யுகத்தின் பல்வேறு தீய நிலைகளைப் பட்டியலிடுகிறது.

சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு கூறப்பட்ட அந்தத் தன்மைகளை நாம் இன்று கண்கூடாகக் காண்கிறோம். சாஸ்திரங்களின் சிறப்பு யாதெனில், அவை பிரச்சனைகளை மட்டும் எடுத்துரைக்காமல், அதற்கான தீர்வுகளையும் வழங்கியுள்ளன. அந்த தீர்வுகளே இந்த மூன்று அவதாரங்கள்.

மூன்று அவதாரங்கள்

யார் அந்த மூன்று அவதாரங்கள்? (1) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருநாமம், (2) அவரது பெருமைகளை எடுத்துரைக்கும் ஸ்ரீமத் பாகவதம், மற்றும் (3) பக்தரின் வடிவில் தோன்றிய பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு. கலி யுகத்திலுள்ள நம் அனைவரிடமும் பல்வேறு அசுரத் தன்மைகள் இருப்பதால், அதர்மம் செய்பவர்களை பகவான் அழிக்க விரும்பினால், அவர் நம் அனைவரையும் கொன்றாக வேண்டும். ஆயினும், இந்த மூன்று அவதாரங்களும் கலி யுகத்தின் நிலைதாழ்ந்த ஆத்மாக்களை வதம் செய்யாமல், அவர்கள் திருந்துவதற்கு வழி செய்கின்றனர்.

பகவானின் திருநாமத்தை உச்சரித்து, ஸ்ரீமத் பாகவதத்தைச் செவியுற்று, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை வழிபட்டால், நாம் எவ்வளவு பெரிய பாவிகளாக இருந்தாலும் தூய்மையடைவோம்; எவ்வளவு பெரிய புண்ணியவானாக இருந்தாலும் உண்மையான புண்ணியத்தைப் பெறுவோம்.

பகவானின் திருநாமம்

ஹரேர் நாம ஹரேர் நாம

ஹரேர் நாமைவ கேவலம்

கலௌ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ

நாஸ்த்யேவ கதிர் அன்யதா

“பகவான் ஹரியின் நாமத்தைத் தவிர, ஹரியின் நாமத்தைத் தவிர, ஹரியின் நாமத்தைத் தவிர, கலி யுகத்தில் வேறு கதியில்லை, வேறு கதியில்லை, வேறு கதியில்லை.” (பிருஹன் நாரதீய புராணம் 3.8.126)

கலி யுகம் பல்வேறு தோஷங்களின் கடலாக உள்ளபோதிலும் இந்த யுகத்திற்கென்று ஒரு மாபெரும் நற்குணம் உள்ளது என்றும், பகவானது திருநாமத்திடம் தஞ்சமடைவோர் மிகவுயர்ந்த முக்தியைப் பெறுவர் என்பதே அந்த நற்குணம் என்றும் ஸ்ரீமத் பாகவதம் (12.3.51) கூறுகிறது.

பகவத் நாம கீர்த்தனம் என்பது எல்லா யுகத்திலும் இருக்கிறது; இருப்பினும், கலி யுகத்தில் பகவான் பிரத்யேகமான நாம ரூபத்தில் அவதரிக்கின்றார்.

கலி-காலே நாம-ரூபே க்ருஷ்ண-அவதார

நாம ஹஇதே ஹய ஸர்வ-ஜகத்-நிஸ்தார

“கலி யுகத்தில் பகவான் கிருஷ்ணர் தமது திருநாமத்தின் வடிவில் (ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தின் வடிவில்) அவதரிக்கின்றார். அந்த நாமத்தை உச்சரிப்பவர்கள் பகவானுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு, நிச்சயமாக முக்தியடைவர்.” (சைதன்ய சரிதாம்ருதம், ஆதி லீலை 17.22)

பகவானுடைய நாமத்திற்கும் சாக்ஷாத் பகவானிற்கும் எந்த வேறுபாடும் இல்லை, அபின்னத்வம் நாம நாமின:. கோலோக விருந்தாவனத்தின் இனிமையான பிரேமையினை (இறையன்பினை) உலக மக்களுக்குக் காண்பிப்பதற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வுலகில் அவதரித்தார். அதுபோலவே, அந்த கோலோக பிரேமை என்னும் செல்வத்தை கலி யுக மக்களுக்கு வழங்குவதற்காக கிருஷ்ணரின் திருநாமம் கலி யுகத்தில் அவதரித்துள்ளது. கோலோகேர ப்ரேம-தன ஹரி-நாம-ஸங்கீர்தன.

ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கக்கூடிய அசுர குணங்களைக் கொன்று, அனைவருக்கும் பிரேமை என்னும் மிகவுயர்ந்த முக்தியை வழங்குவது ஹரே கிருஷ்ண மஹா மந்திரமே. ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மந்திரமே கலி யுகத்தின் எல்லா களங்கங்களையும் ஒழிக்கக்கூடியது என்றும், இதைத் தவிர நமக்கு வேறு உபாயம் கிடையாது என்றும் கலி-ஸந்தாரண உபநிஷத் தெளிவாகக் கூறியுள்ளது.

கலி யுகத்தில் பகவான் திருநாமத்தின் வடிவில் அவதரித்துள்ளார்.

ஸ்ரீமத் பாகவதம்

ஹரி நாமத்துடன் இணைந்து கலி யுக மக்களுக்கு கிருஷ்ணரைப் பற்றிய அறிவை வழங்கும் அவதாரமாகத் திகழ்வது ஸ்ரீமத் பாகவதம். “பௌதிக வாழ்வின் துயரங்களை ஜீவன் பக்தி யோகத்தின் மூலமாக எளிதில் போக்கிவிட முடியும்; இருப்பினும், மக்கள் இதனை அறியாதவர்களாக இருப்பதால், மாமுனிவரான வியாஸர் பகவானுடைய சம்பந்தத்தை வழங்கும் ஸ்ரீமத் பாகவதத்தினை அருளியுள்ளார்.” (ஸ்ரீமத் பாகவதம் 1.7.6)

“இந்த ஸ்லோகத்திலுள்ள [ஸ்ரீமத் பாகவதம் 10.1.14] க்ருஷ்ண-சரிதம் கலி-கல்மஷ-க்னம் என்னும் சொற்கள், பகவான் கிருஷ்ணரின் செயல்கள் எல்லாத் துன்பங்களுக்கும்—குறிப்பாக கலியின் துன்பங்கள் எல்லாவற்றிற்கும்—ஒரு மிகச்சிறந்த நிவாரணி என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. கலி யுக மக்கள் குறைந்த ஆயுளுடன் ஆன்மீகப் பண்பாடு இல்லாதவர்களாக இருப்பர் என்று கூறப்படுகிறது. அப்படியே யாரேனும் ஆன்மீகப் பண்பாட்டில் ஆர்வமுடையவனாக இருந்துவிட்டால், அவன் கிருஷ்ண-கதாவினை அணுகாத பல்வேறு போலி குருமார்களாலும் யோகிகளாலும் தவறாக வழிநடத்தப்படுகின்றான். எனவே, பெரும்பாலான மக்கள் துரதிர்ஷ்டசாலிகளாகவும் இயற்கையின் துயரங்களால் துன்பப்படுபவர்களாகவும் உள்ளனர். இந்த யுகத்தின் துன்பப்படும் மக்களுக்கு விடுதலையளிப்பதற்காகவே நாரத முனியின் வேண்டுகோளின்படி, ஸ்ரீல வியாஸதேவர் ஸ்ரீமத் பாகவதத்தினைத் தொகுத்தார். (கலி-கல்மஷ-க்னம்)” (ஸ்ரீமத் பாகவதம் 10.1.14, ஸ்ரீல பிரபுபாதரின் பொருளுரை)

கலி யுகத்தின் தொடக்கத்தில், கலியின் கொடுமைகளிலிருந்து மக்களைக் காக்கும் பொருட்டு 60,000 முனிவர்கள் நைமிஷாரண்யத்தில் கூடினர். அவர்கள் அங்கிருந்த சூத கோஸ்வாமியிடம், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வுலகை விட்டுச் சென்ற பின்னர், கலி யுகத்தில் தர்மம் எங்கு தஞ்சமடைந்துள்ளது என வினவினர். (ஸ்ரீமத் பாகவதம் 1.1.23) இதற்கு பதிலளிக்கும் விதமாக சூத கோஸ்வாமி பின்வருமாறு கூறினார்:

இதம் பாகவதம் நாம புராணம் ப்ரஹ்ம-ஸம்மிதம்

உத்தம-ஷ்லோக-சரிதம் சகார பகவான் ருஷி:

நி:ஷ்ரேயஸாய லோகஸ்ய தன்யம் ஸ்வஸ்த்யயனம் மஹத்

“ஸ்ரீமத் பாகவதம் எனப்படும் இந்த சாஸ்திரம் பகவானுடைய இலக்கிய அவதாரமாகும், இது பகவானின் அவதாரமான ஸ்ரீல வியாஸதேவரால் இயற்றப்பட்டது. இஃது எல்லா மக்களின் இறுதி நன்மைக்கு உரித்தானதாகும். இது பூரண வெற்றியும் பூரண ஆனந்தமும் பூரண பக்குவமும் கொண்டதாகும்.” (ஸ்ரீமத் பாகவதம் 1.3.40). இதன் பொருளுரையில் ஸ்ரீல பிரபுபாதர் கூறியுள்ள கருத்துகள் மிகவும் முக்கியமானவை: “பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இலக்கிய அவதாரம் என்பதால், ஸ்ரீமத் பாகவதம் அவரிடமிருந்து வேறுபடாததாகும். பகவானை எவ்வாறு வணங்குகின்றோமோ அவ்வாறே ஸ்ரீமத் பாகவதமும் வழிபடப்பட வேண்டும். இதனை கவனமுடனும் பொறுமையுடனும் படிப்பதன் மூலமாக, நம்மால் பகவானின் உன்னத ஆசிகளைப் பெற முடியும். கடவுள் எவ்வாறு பூரண ஒளியும் ஆனந்தமும் பக்குவமும் பெற்றுள்ளாரோ, ஸ்ரீமத் பாகவதமும் அவ்வாறே திகழ்கிறது.”

ஸ்ரீல வியாஸதேவர் எல்லா வேத இலக்கியங்களையும் புராணங்களையும் அலசி ஆராய்ந்த பின்னர், தமது குருவான நாரத முனிவரின் அறிவுரையின்படி, ஸ்ரீமத் பாகவதத்தினைத் தொகுத்தார். “தர்மம், ஞானம் முதலியவற்றுடன் இணைந்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது தெய்வீக தாமத்திற்குச் சென்ற மாத்திரத்தில், இந்த ஸ்ரீமத் பாகவதம் என்னும் பிரகாசமான சூரியன் உதயமாகியுள்ளது. கலி யுகத்திலுள்ள அறியாமை என்னும் அடர்ந்த இருளினால் பார்வையை இழந்தவர்கள் இந்த புராணத்திடமிருந்து ஒளியைப் பெறலாம்.” (ஸ்ரீமத் பாகவதம் 1.3.43)

இவ்வாறு பகவானின் இலக்கிய அவதாரமாக கலி யுகத்தில் காணப்படும் ஸ்ரீமத் பாகவதத்தினை ஒரு பக்த பாகவதரிடமிருந்து பெற்றால், நாம் பூரண பலனை அடைவோம்.

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு

கலி யுக மக்களைக் காப்பதற்காக திருநாமத்தின் வடிவிலும் இலக்கிய வடிவிலும் அவதரித்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அந்த இரண்டின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைப்பதற்காக தாமே தமது பக்தரின் வடிவில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்தார். ஒவ்வொரு யுகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தர்மம் உள்ளது, அதனைப் பரப்புவதற்காக யுக அவதாரமாக ஒவ்வொரு யுகத்திலும் பகவான் தோன்றுகிறார். கலி யுக தர்மமான ஹரி நாம ஸங்கீர்த்தனத்தைப் பரப்புவதற்காக, அவர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாகத் தோன்றினார்.

யுக அவதாரங்களைப் பற்றி விளக்குகையில், கலி யுக அவதாரத்தைப் பற்றி ஸ்ரீமத் பாகவதம் பின்வருமாறு கூறுகிறது:

க்ருஷ்ண-வர்ணம் த்விஷாக்ருஷ்ணம்

ஸாங்கோபாங்காஸ்த்ர-பார்ஷதம்

யஜ்ஞை: ஸங்கீர்தன-ப்ராயைர்

யஜந்தி ஹி ஸு-மேதஸ:

“கிருஷ்ண நாமத்தை இடையறாது பாடும் பகவானது அவதாரத்தை கலி யுகத்தின் புத்திசாலி மக்கள் ஸங்கீர்த்தனத்தின் மூலமாக வழிபடுவர். அவரது மேனியின் நிறம் கறுமை அல்ல என்றபோதிலும், அவர் சாக்ஷாத் கிருஷ்ணரே. அவர் தமது அங்கங்கள், உப-அங்கங்கள், அஸ்திரங்கள் மற்றும் அந்தரங்க சேவகர்களால் சூழப்பட்டுள்ளார்.” (ஸ்ரீமத் பாகவதம் 11.5.32)

அதாவது, சாக்ஷாத் ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சைதன்யராகத் தோன்றியபோது, அவருடன் அவரது அங்கமான ஸ்ரீ பலராமரும் ஸ்ரீ நித்யானந்த பிரபுவாக அவதரிக்கின்றார்; மேலும், மஹாவிஷ்ணுவும் அத்வைத பிரபுவாகத் தோன்றுகிறார். இவ்வாறாக, ஸ்ரீ சைதன்யரின் அவதாரம் என்று நாம் குறிப்பிடும்போது, அதில் அவரது அங்கங்களும் உப-அங்கங்களும் அடங்குகின்றனர்.

கலி யுக அவதாரத்தைப் பற்றிய மற்றுமொரு குறிப்பில் (ஸ்ரீமத் பாகவதம் 7.9.38) சன்ன: கலௌ, “கலி யுகத்தில் பகவான் மறைக்கப்பட்ட அவதாரமாகத் தோன்றுகிறார்,” என கூறப்பட்டுள்ளது. அதாவது, நாம ஸங்கீர்த்தனத்தில் எப்போதும் ஈடுபட்டிருக்கும் பகவானின் கலி யுக அவதாரம் தம்மை மற்றவர்களின் பார்வையிலிருந்து மறைத்துக் கொண்டு லீலைகள் புரிகின்றார். இது சாக்ஷாத் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவையே குறிக்கிறது.

ஸ்ரீ சைதன்யர் தாமே ஒரு கிருஷ்ண பக்தனின் உருவில் தோன்றி, கிருஷ்ண பக்தியின் பரவசத்தில் எவ்வாறு திளைப்பது என்பதை மக்களுக்கு எடுத்துரைத்தார். இவர் எந்த அவதாரத்திலும் வழங்காத கிருஷ்ண பிரேமை என்னும் பொக்கிஷத்தை மிகமிக தாழ்ந்த மக்களுக்கும்கூட தாராளமாக வழங்குவதால், இவரே பகவானின் எல்லா அவதாரங்களிலும் மிகமிக கருணை வாய்ந்தவராவார்.

கலி யுகத்தில் பகவான் ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவில் அவதரித்துள்ளார்.

இதர அவதாரங்கள்

கலி யுகத்தில் பகவானுக்கு வேறு அவதாரங்கள் இல்லையா? நிச்சயம் உண்டு. அவர்களைப் பற்றியும் சிறு குறிப்புகளை வழங்குகிறோம்.

அர்ச்சா அவதாரங்கள்: பகவானுடைய திருவிக்ரஹங்கள் அனைவரும் அவரது அவதாரங்களே. பகவானுக்கும் அவரது விக்ரஹத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை. விக்ரஹ பூஜையின் மூலமாக பகவானை வழிபடுதல் என்பது துவாபர யுகத்தின் தர்மம் என்பதால், விக்ரஹ அவதாரங்களை கலி யுகத்திற்கான அவதாரங்கள் என்று கூறிவிடல் இயலாது. மேலும், விக்ரஹ வழிபாட்டினை முந்தைய காலங்களைப் போன்று பக்குவமாக நிறைவேற்ற கலி யுகத்தில் இயலாது; இருப்பினும், பகவானின் கருணை வாய்ந்த விக்ரஹ அவதாரங்கள் கலி யுகத்திலும் பக்தர்களுக்கு பேருதவி புரிகின்றனர். இதனால், ஆச்சாரியர்கள் ஹரி நாம ஸங்கீர்த்தனத்துடன் விக்ரஹ வழிபாட்டினையும் பரிந்துரைக்கின்றனர்.

வியாஸதேவர்: இவர் வேத நூல்கள் எல்லாவற்றையும் கலி யுக மக்களின் நன்மைக்காக தொகுத்து வழங்கினார். இவரும் பகவானின் ஓர் அவதாரமே. அதே சமயத்தில், இவர் துவாபர யுகத்தின் இறுதியில் தோன்றியவர் என்பதாலும், பகவானின் பூரண அவதாரமாக இல்லாமல் சக்தி-ஆவேஷ அவதாரமாக இருப்பதாலும், கலி யுகத்திற்கான அவதாரமாகக் கூறப்படவில்லை.

புத்தர்: கலி யுகத்தின் தொடக்கத்தில் வேதங்களைத் தவறாகப் புரிந்து கொண்டு மிருக வதையில் ஈடுபட்டவர்களைத் தடுத்து, அகிம்சையை போதிப்பதற்காக புத்தர் தோன்றினார். அந்த குறிப்பிட்ட சூழ்நிலையின் காரணத்தினால், அவர் ஒரு வகையான நாத்திகக் கொள்கையினை சற்று மூடி மறைத்தபடி பிரச்சாரம் செய்தார். புத்தரின் கொள்கைகள் ஏற்கத்தக்கவை அல்ல என்பதாலும், அவரும் பகவானின் சக்தி-ஆவேஷ அவதாரமே என்பதாலும், கலி யுகத்திற்கான அவதாரமாக அவரை இங்கு குறிப்பிடவில்லை.

கல்கி: கலி யுகத்தின் இறுதியில் (இன்னும் சுமார் 4,27,000 வருடங்கள் கழித்து) பகவான் கல்கி அவதரிப்பார். அவர் முற்றிலும் சீரழிந்து நிற்கும் சமுதாயத்தில், தமது சக்திவாய்ந்த வாளைக் கொண்டு அனைவரையும் வதம் செய்வார். ஆயினும், அவரும் சக்தி-ஆவேஷ அவதாரமே, பூரண அவதாரம் அல்ல.

எனவே, ஹரி நாமம், ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு ஆகிய முக்கிய அவதாரங்களிடம் தஞ்சமடைந்து, கலி யுகத்தின் தீமைகளை முற்றிலுமாக விரட்டுவோம், வாரீர்.

கலி யுகத்தில் பகவான் ஒரு பக்தரின் ரூபத்தில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்தார்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives