பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம், சென்றோம் என்று இருக்கக் கூடாது; “வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம்” என்று வியாக்கியானம் பேசக் கூடாது; தூய வாழ்விற்கு உயர்வு பெற என்ன செய்யலாம்? என்பதை சிந்திக்க வேண்டும்.
ஒளவையார், “அரிதுஅரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்கிறார். அரிதான மானிடப் பிறவியைப் பெற்றவர்களாகிய நாம், “நான் யார்? கடவுள் யார்? நான் ஏன் துன்பப்படுகிறேன்? வாழ்க்கையின் குறிக்கோள் என்ன?” என்பனவற்றை ஆராய்ந்து அறிவது அவசியம். நான் துன்பங்களை விரும்பவில்லை, இருந்தும் ஏன் இவை எனக்கு நேரிடுகின்றன என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
இவற்றை உணர்வதே தன்னுணர்வு. இந்த தன்னுணர்வைப் பெறுவதற்கு பல்வேறு வழிகள் வேத சாஸ்திரங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் கிருஷ்ண உணர்வே தன்னுணர்விற்கான தலைசிறந்த வழியாகும்.