கிருஷ்ணர் என்றாலே அனைவரின் மனதிலும் உடனடியாக ராதையின் நினைவும் வருகிறது. ராதையும் கிருஷ்ணரும் பிரிக்க முடியாதவர்கள். கிருஷ்ண பக்தர்களில் அவரின் காதலியர்களாக விருந்தாவனத்தில் வசித்த கோபியர்களே தலைசிறந்தவர்கள் என்பதையும் அந்த கோபியர்களின் மத்தியில் ஸ்ரீமதி ராதாராணியே உயர்ந்தவள் என்பதையும் பலரும் அறிவர். அதே சமயத்தில், கிருஷ்ண லீலைகளை விரிவாக எடுத்துரைக்கும் ஸ்ரீமத் பாகவதத்தில் ஸ்ரீமதி ராதாராணியின் பெயர் இல்லாதது ஏன் என்பது சில பக்தர்களின் மனதில் வருத்தத்தையும், வேறு சிலரின் மனதில், “ஸ்ரீமதி ராதாராணியே தலைசிறந்த பக்தை என்பது சரியா?” என்ற ஐயத்தையும் ஏற்படுத்தலாம். அதற்கு விளக்கமளிக்க முயல்வோம்.
ஸ்ரீமதி ராதாராணி கருணையே வடிவானவள். உலக உயிர்வாழிகளிடம் மிகவும் கருணையும், பேரன்பும் உடையவள். கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவளாக இருப்பினும், துளியும் கர்வம் இல்லாதவள். விருந்தாவனத்தில் கோபியர்கள் கிருஷ்ணருடன் லீலைகளைப் புரிவதற்கான சந்தர்பத்தை ராதாராணியே ஏற்படுத்திக் கொடுப்பாள். இதர கோபியர்கள், கிருஷ்ணருடன் மாதுர்ய பாவத்தைப் (தெய்வீக காதல் உணர்வுகளைப்) பகிர்ந்துகொள்ளும்போது, தான் கிருஷ்ணருடன் இருக்கும் போது அடையும் மகிழ்ச்சியைவிட பல்லாயிரம் மடங்கு மகிழ்ச்சியடைவாள் ஸ்ரீமதி ராதாராணி. அவ்வளவு கருணை உடையவள் ராதாராணி, நாம் ராதாராணியின் அருளைப் பெற்றோமானால், கிருஷ்ணரின் அருள் தானாகவே கிடைக்கும். இதனால் கிருஷ்ணரை விட்டுவிடலாம் என்று நாம் நினைத்துவிடக் கூடாது. கிருஷ்ணரை விட்டுவிட்டால் ராதை தனது கருணையை நமக்கு வழங்க மாட்டாள்.