வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்
அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரபூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கி பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த இதழில்: மூன்றாம் காண்டம், முதல் அத்தியாயம்
சென்ற இதழில், சௌனக ரிஷி சூத கோஸ்வாமியிடம் விதுரரைப் பற்றி விசாரித்ததாக அறிந்தோம். அதற்கான பதிலை சுகதேவ கோஸ்வாமிக்கும் பரீக்ஷித் மஹாராஜருக்கும் இடையே நடந்த உரையாடல் மூலமாக சூத கோஸ்வாமி வழங்குவதை இந்த இதழில் காணலாம்.
பரீக்ஷித் மஹாராஜரின் கேள்விகள்
சுகதேவ கோஸ்வாமியிடம் அரசர் கேட்டார்: “துறவியான விதுரருக்கும் மைத்ரேய முனிவருக்கும் நிகழ்ந்த சந்திப்பும் உரையாடலும் எங்கு எப்பொழுது நிகழ்ந்தது? பிரபுவே, தயவுசெய்து இதை எங்களுக்கு விளக்கிக் கூறுங்கள். துறவியான விதுரர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மிகச்சிறந்த தூய பக்தராவார். எனவே, மைத்ரேய ரிஷியிடம் அவர் கேட்ட கேள்விகள் மிகவுயர்ந்த நோக்கம் உள்ளவையாகவும் கற்றறிந்த பண்டிதர்களால் அங்கீகரிக்கப்பட்டதாகவும் இருந்திருக்க வேண்டும்.”
விதுரர் வீட்டைவிட்டு வெளியேறுதல்
பரீக்ஷித் மஹாராஜரால் கேள்வியெழுப்பப்பட்ட ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி விதுரரின் வரலாற்றை சற்று எடுத்துரைத்து பதிலுரைக்க ஆரம்பித்தார்.
திருதராஷ்டிர மஹாராஜன் நேர்மையற்ற தன் மகன்களை ஆதரிப்பதற்காக பாவ ஆசைகளால் கவரப்பட்டு குருடரானார். இவ்வாறாக தன் தம்பி மகன்களான பாண்டவர்களைக் கொல்வதற்காக அவர் அரக்கு மாளிகைக்கு தீ மூட்டினார். புண்ணிய புருஷராகிய யுதிஷ்டிர மஹாராஜரின் மனைவியான திரௌபதியின் கேசத்தையும் உடையையும் இழுத்த துச்சாதனனின் துஷ்ட செயலை திருதராஷ்டிர மன்னர் தடுக்கவில்லை.
மேலும், அநியாயமாக சூதாட்டத்தில் தோற்கடிக்கப்பட்ட பாண்டவர்கள் வனம் சென்று திரும்பிவந்து தமக்குரிய ராஜ்ஜியத்தின் பங்கினை வேண்டியபோது, திருதராஷ்டிரர் அதனை தர மறுத்தார். இதற்காக தூதுவந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அமுத மொழிகளையும் அவர் சிறிதும் ஏற்கவில்லை.
அதன்பின், பெரும் பண்டிதர்களால் இன்றும் போற்றப்படும் சிறந்த ஆலோசனைகளை மஹாத்மா விதுரர் தம் தமையனாரான திருதராஷ்டிரருக்கு வழங்கினார்: “யுதிஷ்டிரருக்கு உரிமையுள்ள இராஜ்ஜியத்தை திருப்பிக் கொடுத்துவிடுங்கள். அவரும் அவரது சகோதரர்களும் பொறுமையுடன் உங்களால் விளைந்த எல்லாத் துன்பங்களையும் சகித்துக் கொண்டு காத்திருக்கின்றனர். பழி உணர்வுடன் இருக்கும் பீமன்மீது உங்களுக்கு அச்சம் உண்டல்லவா?
“உலக அரசர்களையெல்லாம் வென்ற யது வம்சத்தினரால் பூஜிக்கப்படும் முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பாண்டவர்களுக்கு என்றென்றும் துணையிருக்கிறார். கிருஷ்ணரிடம் விரோதம் கொண்டுள்ள தங்கள் மகன் துரியோதனனை பராமரிப்பதால் எல்லா மங்களங்களையும் இழந்து நிற்கிறீர்கள். இந்நிலையை உடனே சரி செய்துவிடுங்கள்.”
அப்போது, தன் சகோதரர்கள், நண்பனாகிய கர்ணன் மற்றும் மாமா சகுனியுடன் அங்கிருந்த துரியோதனன், மஹாத்மா விதுரரின் பேச்சைக் கேட்டு, கோபம் பொங்க அவரை அவமானப்படுத்தினான்: “இந்த வேலைக்காரியின் மகனை யார் இங்கே வரச் சொன்னது? கபடனான இவன் யாருடைய பிச்சையால் வளர்ந்தானோ அவர்களுக்கு எதிராகவே செயல்படுகிறான். உயிரைத் தவிர ஏதுமற்றவனாக இவனை ஆக்கி அரண்மனையை விட்டு வெளியேற்றுங்கள்.”
கர்வமிக்க துரியோதனனின் இந்த சுடுமொழிகளைக் கேட்டு தூய பக்தரான விதுரர் மனம் வருந்தினார். இருப்பினும், பூரண பக்தித் தொண்டில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை எதிர்நோக்கியிருந்த தனக்கு துரியோதனனின் மூலம் பகவான் கிருஷ்ணரே கருணை காட்டுகிறார் என்று புரிந்து கொண்டார். எனவே, நல்லாத்மாவான விதுரர் மௌனமாக தனது வில்லையும் அம்பையும் வாசலில் வைத்து விட்டு அரண்மனையிலிருந்து வெளியேறினார்.
விதுரர் உத்தவரைச் சந்தித்தல்
திருதராஷ்டிரர், துரியோதனன் போன்றோரின் சகவாசத்தால் ஏற்பட்டிருந்த களங்கத்தினைத் தூய்மைப்படுத்துவதற்காக தீர்த்த யாத்திரையை மேற்கொள்வதென விதுரர் தீர்மானித்தார். பகவானின் உன்னத ரூபங்களை வழிபட்டு அவரது திவ்யமான பாத கமலங்களை தியானிப்பதற்கு உகந்த இடங்கள் தீர்த்தங்கள் எனப்படுகின்றன.
விதுரர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை சிந்தனையில் தியானித்தவாறு, அயோத்தி, துவாரகை, மதுரா போன்ற இடங்களுக்கு பிரயாணம் செய்தார். இந்த புனித பயணத்தில் பகவானை திருப்தி செய்வதை மட்டுமே தன் முக்கிய குறிக்கோளாக அவர் கொண்டிருந்தார். உணவு, உடை, உறக்கத்தை அவர் பெரிதாக பொருட்படுத்தாமல் துறவிபோல் இருந்தார். இவ்வாறாக பாரத கண்டம் முழுவதும் பயணம் செய்த அவர், இறுதியாக பிரபாஸ க்ஷேத்திரத்தை அடைந்தார். தம் உறவினர்களில் பெரும்பாலானோர் மறைந்துவிட்ட செய்தியை அவர் அங்கு அறிந்தார்.
அச்சமயத்தில், குருக்ஷேத்திர போரில் அதர்மம் அழிந்து இப்பூவுலகம் முழுவதும் யுதிஷ்டிர மஹாராஜரின் பாதுகாப்பான ஆட்சியின் கீழ் வந்திருந்ததை அறிந்து மனம் பூரித்தார். அதன்பின் சரஸ்வதி ஆற்றங்கரை மார்க்கமாக மேற்கு நோக்கி பிரயாணித்தார். அவ்வழியில் பதினொரு தீர்த்த யாத்திரை ஸ்தலங்கள் உள்ளன: (1) திரிதம், (2) உஷனா, (3) மனு, (4) பிருது, (5) அக்னி, (6) அஸிதம், (7) வாயு, (8) சுதாஸம், (9) கோ, (10) குஹம், (11) ஞிசிராத்ததேவம். இப்புனித இடங்களில் மாமுனிவர்களாலும் தேவர்களாலும் நிறுவப்பட்டு, பரம புருஷ பகவான் விஷ்ணுவின் பல்வேறு உருவங்கள் பூஜிக்கப்படும் பல கோயில்கள் இருந்தன. இவை தரிசிப்பவருக்கு மூல முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையே எப்போதும் நினைவூட்டின.
அதன் பின்னர், செல்வம் கொழிக்கும் சூரத், சௌவீரம் மற்றும் மத்ஸ்ய மாகாணங்களையும், குரு ஜாங்கலம் எனப்படும் மேற்கத்திய மாகாணத்தையும் கடந்து யமுனைக் கரையை அடைந்தார். அங்கு பிரஹஸ்பதியின் சீடரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உற்ற நண்பரும் பக்தருமாக விளங்கிய உத்தவரை எதிர்பாராமல் சந்தித்த விதுரர் பேரன்புடன் அவரைத் தழுவிக் கொண்டார்.
விதுரரின் கேள்விகள்
உத்தவரிடம் விதுரர் உறவினர்களின் நலத்தை விசாரித்தார்: “பிரம்மாவின் வேண்டுகோளுக்கு இணங்கி இவ்வுலகில் அவதரித்தவர்களும், அனைவரையும் உயர்த்தி உலக ஐஸ்வர்யத்தை செழிப்படைய செய்தவர்களுமான மூல முழுமுதற் கடவுள் கிருஷ்ணரும் பலராமரும் நலமா?
“பாண்டவர்களின் மிகச்சிறந்த நண்பரும் உதார குணமுள்ளவரும், தம் சகோதரிகளுக்கு தந்தை போன்றவரும் தம் மனைவிகளை எப்போதும் மகிழ்ச்சிப்படுத்துபவருமான என் மைத்துனர் வசுதேவர் நலமா? யதுக்களின் சேனாதிபதியும் முற்பிறப்பில் காமதேவனாக இருந்தவரும் ருக்மிணியின் அன்பு புதல்வருமான பிரத்யும்னர் நலமாக உள்ளாரா?
“பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் மீண்டும் அரியணையில் அமர்த்தப்பட்ட சாத்வத, விருஷ்ணி, போஜ மற்றும் தாஷார்ஹ வம்சத்தினரின் அரசரான உக்ரசேனர் நலமா? ஜாம்பவதியின் புதல்வரும், முற்பிறப்பில் கார்த்திகேயனாக இருந்தவருமான சாம்பன் நலமா?
“அர்ஜுனனிடமிருந்து போர் நுணுக்கங்களை கற்றவரும் வாழ்வின் உன்னத கதியை அடைந்தவருமான யுயுதானன் நலமா? (விருந்தாவன) மண்ணில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பாத சுவடுகளை கண்ட உடனேயே ஆனந்த பரவசத்தினால் மூர்ச்சடைந்து தரையில் விழுந்த, சரணடைந்த பக்தரான அக்ரூரர் சுகமா?
“முழுமுதற் கடவுளை கர்ப்பத்தில் சுமந்த தேவகி நலமா? பக்தர்களின் ஆசையை பூர்த்தி செய்பவரும் ரிக் வேதத்தின் காரணமும், மனதின் படைப்பாளியுமான அனிருத்தர் நலமா? ஸ்ரீ கிருஷ்ணரையே தங்கள் ஆத்மாவாக ஏற்று அவரது வழிகாட்டுதலை பின்பற்றுபவர்களான ஹ்ருதீகன், ஷாருதேக்ஷணர், கதன் மற்றும் சத்யபாமாவின் புதல்வர்கள் நலமாக உள்ளனரா?
“கிருஷ்ணராலும் அர்ஜுனனாலும் பாதுகாக்கப்பட்ட யுதிஷ்டிரர் இராஜ்ஜியத்தை நன்கு பராமரிக்கிறாரா? கதாயுதத்தால் எதிரிகளை திகைக்கச் செய்பவரான பீமன் தன் சபதங்களை நிறைவேற்றி அமைதி பெற்றாரா? சிவபெருமானுடன் போரிட்டு திருப்திபடுத்தி அவரிடமிருந்து பசுபத அஸ்திரத்தை பெற்றவரும் காண்டீபதாரியும் சிறந்த ரத வீரருமான அர்ஜுனன் நலமா? தம் அண்ணன்களின் அரவணைப்பில் இருந்த நகுலன், சகதேவன் நலமா?
“நான்கு திக்குகளையும் வென்ற பாண்டுவின் மறைவிற்கு பின் தன் மைந்தர்களுக்காகவே வாழ்ந்து வந்த பிருதா (குந்திதேவி) உயிருடன் இருக்கிறாளா? தன் மகன்களின் செயல்களை ஆதரித்து, உண்மையான நண்பனாக இருந்த என்னை வீட்டை விட்டு வெளியேற்றியவரும் பாண்டவர்களுக்கு அநீதி இழைத்தவருமான திருதராஷ்டிரருக்காக நான் மிகவும் வருந்துகிறேன்.
“ஜடவுலக மனிதர்கள் பகவானைப் பற்றி அறியாததால் அவரது செயல்களால் குழப்பமடைகின்றனர் என்பதை உலகம் முழுவதும் பிரயாணம் செய்த நான் அறிந்து ஆச்சரியப்படுகிறேன். பகவானின் கருணையால் நான் அவரது பெருமைகளை அறிந்து, எல்லாவிதங்களிலும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.
“பகவான் பிறப்பற்றவர் என்றபோதிலும், பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள சரணடைந்த அரசர்களின் மீது கொண்டுள்ள தனிப்பெருங் கருணையால் யது வம்சத்தில் தோன்றி தீயவர்களை அழித்தார். தீர்த்த ஸ்தலங்களில் அவரது புகழ் பாடப்படுகின்றது. மேலும் அவரது உன்னத பெருமைகளை உங்களிடமிருந்து கேட்க விரும்புகிறேன்.”
விதுரரின் கேள்விகளுக்கான உத்தவரின் பதில்களை அடுத்த அத்தியாயத்திலிருந்து காணலாம்.
குறிப்பு: தம் உறவினர்களின் மறைவைப் பற்றிய செய்தி விதுரருக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்ததால், பெரும் ஆவலின் காரணத்தால் அவர் (அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக) உத்தவரிடம் மேற்கண்டவாறு விசாரித்தார்.