விருந்தாவனம், கிருஷ்ணரின் லீலா பூமி

Must read

கிருஷ்ணர் எண்ணிலடங்காத லீலைகள் செய்த விருந்தாவனத்தின் லீலா ஸ்தலங்கள் குறித்து ஓர் அறிமுகம்

வழங்கியவர்: வேணுதாரி கணைய தாஸ்

விருந்தாவனம்: ஓர் அறிமுகம்

சுமார் 5,000 வருடங்களுக்கு முன்பு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இப்பூவுலகில் தோன்றி லீலைகள் புரிந்த புண்ணிய பூமி, விருந்தாவனம், அல்லது விரஜ மண்டலம் என்று அறியப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகள் பதிந்த காரணத்தினால், விருந்தாவனத்தைவிட சிறந்த இடம் மூவுலகிலும் இல்லை. டெல்லியிலிருந்து ஆக்ரா செல்லும் வழியில் உள்ள இத்திருத்தலத்தை சேவித்தவரை சேவித்தாலே பாவங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்பதை ஆதி வராஹ புராணத்தில் காண்கிறோம். 168 சதுர மைல்கள் பரப்பளவைக் கொண்ட விரஜ மண்டலத்தில்137 காடுகள் உள்ளபோதிலும், பன்னிரண்டு காடுகள் மிகவும் முக்கியமானவை: மதுவனம், தாலவனம், குமுதவனம், கதிரவனம், மஹாவனம், பத்ரவனம், பாண்டீரவனம், பில்வவனம், லௌஹவனம், பஹுலாவனம், காம்யவனம், மற்றும் விருந்தாவனம். மொத்த விரஜ மண்டலமும் விருந்தாவனம் என்று அழைக்கப்படும்போதிலும், விருந்தாவனம் என்று குறிப்பிட்ட ஒரு வனமும் உண்டு.

உத்தரை மற்றும் பரீக்ஷித் மஹாராஜனின் உதவியுடன் கிருஷ்ணரின் கொள்ளுப் பேரனான வஜ்ரநாபரால் விருந்தாவனத்தில் கிருஷ்ணரின் பல்வேறு திருவுருவங்களும் கோவில்களும் அமைக்கப்பட்டன. காலப்போக்கில், அவையாவும் வனத்தினுள் மறைந்தும் புதைந்தும் போயின. சுமார் 500 வருடங்களுக்கு முன்பு, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் ஆலோசனையின் பேரில் அவற்றைக் கண்டெடுத்த கோஸ்வாமிகள், பிரம்மாண்டமான கோவில்களை நியமித்து முறைப்படி பூஜையைத் தொடங்கினர்.

பின்னர், முகலாய மன்னனான ஔரங்கசீப் காலத்தில், இந்துக் கோவில்களின் மீதான அதிரடித் தாக்குதல்களின் காரணத்தினால், பகவானின் திருவுருவங்களை விருந்தாவன வாசிகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றினர்; மதன-மோஹனர், கோவிந்தர், கோபிநாதர் என பலரும் இராஜஸ்தான் மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். விருந்தாவனத்தில் கிருஷ்ணர் நிகழ்த்திய லீலா ஸ்தலங்கள் அனைத்தையும் இங்கே முழுமையாக விவரிக்க இயலாது என்பதால், பகவத் தரிசன வாசகர்களுக்காக முக்கிய ஸ்தலங் களின் அடிப்படைக் குறிப்பினை மட்டும் இங்கு வழங்குகிறேன்.

மதுரா, ஸ்ரீ கிருஷ்ணரின் ஜன்ம பூமி

விரஜ மண்டல யாத்திரையானது ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த மதுராவிலிருந்து தொடங்குகின்றது. மதுராவில் கிருஷ்ணர் அவதரித்த இடத்தில் வஜ்ரநாபரால் எழுப்பப்பட்ட திருக்கோவில் காலப்போக்கில் முகலாயர்களால் அழிக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கு எழுப்பப்பட்ட கோவில்களும் தகர்க்கப்பட்டு, பெரிய மசூதி ஒன்று கட்டப்பட்டது. தற்போது அம்மசூதிக்கு அருகில், பிரம்மாண்டமான கோவிலும் அதனுள் சிறை போன்ற ஓர் அமைப்பும் ஏற்படுத்தப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

விஷ்ராம் காட்: கம்சனை வதம் செய்த பின்னர், கிருஷ்ணர் ஓய்வெடுத்த யமுனைக் கரை, இன்று விஷ்ராம் காட் (ஓய்வெடுத்த படித்துறை) என்று அழைக்கப்படுகிறது. ஹிரண்யாக்ஷனைக் கொன்று பூமியை மீட்ட பின்னர், வராஹரும் இங்கு ஓய்வெடுத்ததாக மதுரா மஹாத்மியத்தில் காண்கிறோம். கம்சனின் கோட்டையான கம்ச திலா, கிருஷ்ணர் கம்சனைக் கொன்ற ரங்க பூமி, வியாசர் தோன்றிய வியாச திலா, அம்பரீஷ மன்னர் விரதம் மேற்கொண்ட அம்பரீஷ திலா உட்பட பல்வேறு பிரசித்தி பெற்ற இடங்கள் மதுராவில் அமைந்துள்ளன.

மதுராவில் கிருஷ்ணர் அவதரித்த இடத்தில்அமைந்துள்ள பிரம்மாண்டமான கோவில்

விருந்தாவனம்

விருந்தாவனம், விருந்தாதேவி என்று அழைக்கப்படும் துளசிதேவியின் வனமாகும். இதனை அவர் ஸ்ரீமதி ராதாராணிக்கு பரிசளித்தபோது, இராதை இதற்கு விருந்தாவனம் என்று பெயர் சூட்டினார். இராதா கிருஷ்ணரின் ராஸ லீலை நடைபெறும் இடம் என்பதால், விருந்தாவனம் விரஜ மண்டலத்தின் மிக முக்கிய பகுதியாகும்.

நிதுவனம், ஸேவா குஞ்சம்: கிருஷ்ணர் ராஸ லீலை புரிந்த இவ்விரண்டு இடங்களும் விருந்தாவனத்தில் முக்கியமானவை. நிதுவனத்தினுள் ராஸ லீலை நித்தியமாக நடைபெறுவதால், இன்றும் மாலை ஆறு மணிக்கு மேல் யாரும் தங்குவதில்லை, இங்கு அதிகமாக இருக்கும் குரங்குகள்கூட வெளியே வருவதைக் காணலாம்.

கோவில்கள்: நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களைக் கொண்ட விருந்தாவனத்தில் ஏழு கோவில்கள் மிகவும் முக்கியமானவை: (1) ஸநாதன கோஸ்வாமியினால் வழிபடப்பட்ட இராதா மதன-மோஹனர் திருக்கோவில், (2) ரூப கோஸ்வாமியின் இராதா கோவிந்தர் திருக்கோவில், (3) மதுபண்டிதரின் இராதா கோபிநாதர் திருக்கோவில், (4) ஜீவ கோஸ்வாமியின் இராதா தாமோதரர் திருக்கோவில், (5) கோபாலபட்ட கோஸ்வாமியின் இராதா ரமணர் திருக்கோவில், (6) ஸ்ரீல விஸ்வநாத சக்ரவர்த்தி தாகூரின் இராதா கோகுலானந்தர் திருக்கோவில், மற்றும் (7) சியாமானந்த பண்டிதரின் இராதா சியாமசுந்தரர் திருக்கோவில்.

இஸ்கான்: கிருஷ்ண பலராமர் தமது நண்பர்களுடன் விளையாடும் ரமண ரேதி என்னும் இடத்தில் ஸ்ரீல பிரபுபாதரால் கிருஷ்ண பலராமர் திருக்கோவில் ஸ்தாபிக்கப்பட்டது. இங்குள்ள விக்ரஹங்களின் கொள்ளை அழகாலும் அற்புதமான வழிபாட்டினாலும், கிருஷ்ண பலராமர் திருக்கோவில் இன்று விருந்தாவனத்தில் அதிக மக்கள் வரக்கூடிய மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகத் திகழ்கிறது. கோவிலுக்குச் சற்று தொலைவில், நந்த மஹாராஜர் பிராமணர்களுக்கு பசுக்களை தானம் வழங்கிய இடத்தில், சுமார் 350 பசுக்களுடன் இஸ்கானின் கோசாலை அமையப் பெற்றுள்ளது.

காளிய காட்: யமுனை நதியின் நீரை விஷமாக்கிய ஆயிரம் தலைகளைக் கொண்ட காளியன் என்ற பாம்பிற்கு பாடம் புகட்ட ஒரு கதம்ப மரத்தின் மீது ஏறி கிருஷ்ணர் யமுனையினுள் குதித்தார். காளியனின் கர்வத்தை அடக்கி, அவன்மீது நடனமாடினார். யமுனையின் இப்படித்துறை காளிய காட் (காளியனை அடக்கிய படித்துறை) என்று அறியப்படுகிறது. கிருஷ்ணரின் திருப்பாதம் பட்ட அந்த கதம்ப மரத்தினை 5,000 வருடங்கள் கடந்து இன்றும் தரிசிக்கலாம்.

துவாதச-ஆதித்ய திலா: குளிர்ந்த யமுனையில் காளியனுடன் நீண்ட நேரம் இருந்ததால், குளிர்ச்சியுற்ற தனது திருமேனிக்கு சிறிது உஷ்ணத்தை விரும்பிய கிருஷ்ணர் அருகிலிருந்த குன்றின் மீது அமர்ந்தார். அப்போது உலகின் பன்னிரண்டு ஆதித்தியர்களும் (சூரியதேவர்களும்) அங்கு ஒன்றுகூடி, பகவான்மீது சூரிய ஒளியைப் பொழிந்ததால், இவ்விடம் துவாதச-ஆதித்ய திலா (பன்னிரண்டு ஆதித்தியர்கள் தோன்றிய குன்று) என்று பெயர் பெற்றது. ஸநாதன கோஸ்வாமி இராதா மதன-மோஹனரை இங்குதான் வழிபட்டு வந்தார். மதன-மோஹனரின் அருளைப் பெற்ற ராம்தாஸ் கபூர் எனும் உப்பு வியாபாரி இவ்விடத்தில் பிரம்மாண்டமான கோவிலைக் கட்டினார். இதுவே விருந்தாவனத்தில் முதன்முதலில் கட்டப்பட்ட மிகப்பெரிய கோவிலாகும்.

பிரம்ம குண்டம்: கிருஷ்ணரின் நண்பர்களைக் கடத்திச் சென்றது தவறு என்பதை உணர்ந்த பிரம்மதேவர் கண்ணீருடன் பகவானிடம் வேண்டினார். அக்கண்ணீரால் உருவான குளம், பிரம்ம குண்டமாகும்.

கோபேஷ்வர மஹாதேவர்: ராஸ லீலையைக் காண விரும்பிய சிவபெருமான், விருந்தாவனத்தினுள் நுழைந்தபோது கோபியர்கள் அவரையும் கோபியாக மாற்றினர். கோபேஷ்வர மஹாதேவர் என்று அழைக்கப்படும் இவருக்கு விருந்தாவனத்தில் ஒரு தனிப்பட்ட ஆலயம் உள்ளது.

அக்ரூரர் காட்: அக்ரூரர் நந்த கிராமத்திலிருந்து கிருஷ்ண பலராமரை அழைத்துச் சென்றபோது, ரதத்தை யமுனையின் ஒரு கரையில் நிறுத்திவிட்டு நீராடச் சென்றார். அப்போது கரையில் இருந்த கிருஷ்ண பலராமர் இருவரும், நீரினுள் நாராயணராகவும் ஆதிஷேஷராகவும் அக்ரூரருக்கு காட்சி கொடுத்தனர். இதனால் அக்ரூரர் காட் (அக்ரூரரின் படித்துறை) என்று அறியப்படும் இவ்விடம், விருந்தாவனத்திற்கும் மதுராவிற்கும் இடையில் உள்ளது.

துவாதச-ஆதித்ய திலாவின் உச்சியில் கட்டப்பட்ட இராதா மதன-மோஹனர் திருக்கோவிலின் ஒரு தோற்றம்

காளியனை அடக்குவதற்கு கிருஷ்ணர் உபயோகித்தகதம்ப மரம்

கோகுலம் (மஹாவனம்)

மதுராவிலிருந்து வசுதேவரால் யமுனையைக் கடந்து கொண்டு செல்லப்பட்ட கிருஷ்ணர், கோகுலத்தில் நந்த மகாராஜரின் பாதுகாப்பில் அவரது மகனாக வளர்ந்தார். நந்தபவன் என்று அழைக்கப்படும் நந்த மகாராஜரின் இல்லத்தினை இங்கு செல்வோர் இன்றும் காணலாம். பகவான் இங்குதான் நந்த-லாலாவாக (நந்தரின் செல்லப் பிள்ளையாக) தவழ்ந்து விளையாடி தனது பால்ய லீலைகளை அரங்கேற்றினார். பூதனா, திருணாவ்ருதன் போன்ற அசுரர்களை கிருஷ்ணர் கொன்றதும், வெண்ணெய் பானைகளை உடைத்ததால் அன்னை யசோதையினால் விரட்டிப் பிடிக்கப்பட்டு உரலில் கட்டப்பட்டதும் இங்குதான். அந்த உரல் இன்றும் பக்தர்களால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது.

பிரம்மாண்ட காட்: கோகுலத்தில் இருக்கும் மற்றொரு முக்கிய இடம் பிரம்மாண்ட காட். யமுனைக் கரையில் அமைந்துள்ள இப்படித்துறையின் அருகில்தான், பகவான் கிருஷ்ணர் சிறு குழந்தையாக இருந்தபோது மண்ணை உட்கொண்டு, அன்னை யசோதைக்கு பிரபஞ்சம் முழுவதையும் தமது திருவாயினுள் காட்டினார். மிகவும் மென்மையான மண்ணைக் கொண்ட இவ்விடம் பிரம்மாண்ட காட் (பிரபஞ்சத்தைக் காட்டிய படித்துறை) என்று அறியப்படுகிறது.

கோவர்தன மலை

வைகுண்டத்தைவிட உயர்ந்தது மதுரா, மதுராவைவிட உயர்ந்தது விருந்தாவனம், விருந்தாவனத்தைவிட உயர்ந்தது கோவர்தன மலையாகும். ஆரம்பத்தில் 115 கிமீ நீளமும் 72 கிமீ அகலமும் 29 கிமீ உயரமும் கொண்டிருந்த கோவர்தன மலையானது, புலஸ்திய முனிவரின் சாபத்தினால் தினமும் கடுகளவு குறைந்து, தற்போது வெறும் 80 அடி உயரமாக மட்டும் காணப்படுகிறது. கலி யுகம் 10,000 வருடத்தை எட்டும்போது கோவர்தன மலை மறைந்து விடும் என்று கர்க ஸம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது.

கோவிந்த குண்டம்: இந்திரனின் கொடிய மழைத் தாக்குதலிலிருந்து விரஜவாசிகளைக் காப்பதற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது ஏழு வயதில் இடது கை சுண்டு விரலால் கோவர்தன மலையை ஏழு நாள்கள் குடையாகத் தூக்கிப் பிடித்தார். தனது அபராதத்தை உணர்ந்த இந்திரன், சுரபிப் பசு, ஐராவத யானை, மற்றும் தேவர்களுடன் வந்து மன்னிப்பை வேண்டினார். அப்போது பகவானுக்கு அபிஷேகம் செய்ததால் தேங்கிய அபிஷேக நீரானது கோவிந்த குண்டம் என அழைக்கப்படுகிறது.

மானஸ கங்கை: கன்றின் வடிவில் வந்த வத்ஸாசுரனை கிருஷ்ணர் வதம் செய்ததால், அவர் கங்கைக்குச்  சென்று புனித நீராட வேண்டும் என்று அவரது நண்பர்கள் கூறினர். கங்கையை கிருஷ்ணர் மனதால் நினைக்க, கோவர்தனத்தின் ஒரு பகுதியில் கங்கை ஓர் ஏரி போன்று தோன்றியது. கிருஷ்ணரின் மனதிலிருந்து தோன்றியதால், இதற்கு மானஸ கங்கா என்று பெயர்.

ஒருமுறை கங்கையின் மகத்துவத்தைக் கேள்வியுற்ற விரஜவாசிகள் கங்கைக்குச் சென்று நீராட விரும்பினர். கங்கைக்குச் செல்ல வேண்டாம், கோவர்தனத்திலேயே கங்கை உள்ளது,” என்று கூறி அவர்களை கிருஷ்ணர் மானஸ கங்கைக்கு அழைத்து வந்தார். கரையில் கிருஷ்ணரைப் பார்த்த மாத்திரத்தில் அங்கு தோன்றிய கங்கா தேவியைக் கண்டு வியந்த விரஜவாசிகள் கங்கைக்கு தங்களது வந்தனங்களை செலுத்தி புனித நீராடினர்.

குஸும் ஸரோவர்: கோவர்தன பகுதியில் அமைந்திருந்த ஒரு தோட்டத்தில் கோபியர்கள் பறித்திருந்த மலர்களை தோட்டக்காரரின் வடிவில் வந்த கிருஷ்ணர் தட்டிவிட, இவர் கிருஷ்ணர் என்பதை அறிந்து கொண்ட இராதை பூக்களை நீரினால் தூய்மைப்படுத்த வேண்டும் என்று விரும்பினார். கிருஷ்ணரோ உடனடியாக தனது புல்லாங்குழலால் தரையை இருமுறை குத்தினார், அதனால் ஏற்பட்ட இரண்டு துவாரங்கள் பாதாள லோகம் வரை சென்றன. அதிலிருந்து வந்த நீரினால் பூக்கள் தூய்மை செய்யப்பட, அந்த நீரானது குஸும் ஸரோவர் (பூக்களின் ஏரி) என அழைக்கப்படுகிறது. இதன் அருகில் வனபிஹாரி (வனத்தில் திரிபவர்) என்ற பெயரில் கிருஷ்ணருக்கு ஒரு கோவில் உள்ளது.

கிருஷ்ணரால் உயர்த்தப்பட்ட கோவர்தன மலையின் ஒரு தோற்றம்

கோவர்தன பகுதியில் அமைந்துள்ள மிகவும் அழகான குஸும் ஸரோவர்

சியாம குண்டம், ராதா குண்டம்

கோவர்தனத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த இடம் ராதா குண்டம் (ராதாராணியின் குளம்). காளையின் வடிவில் வந்த அரிஷ்டாசுரனை கிருஷ்ணர் கொன்ற காரணத்தினால், அவரைக் களங்கம் தொற்றிக் கொண்டதாகவும் மூவுலகிலுள்ள எல்லா புனித நீர்நிலைகளிலும் அவர் நீராட வேண்டும் என்றும் ராதாராணி கூறினார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரோ தனது திருப்பாதங்களால் பூமியை அழுத்தி அங்கு ஒரு பெரும் பள்ளத்தை உருவாக்கினார். பின்னர், மூவுலகிலுள்ள புனித தீர்த்தங்கள் அனைத்தையும் அழைத்து, அவற்றின் நீரால் அப்பள்ளத்தை நிரப்பினார், இது சியாம குண்டம் எனப்படுகிறது.

இதைக் கண்ட ராதாராணி தானும் ஒரு குளத்தை உருவாக்குவதாகக் கூறி தமது திருக்கரங்களில் அணிந்திருந்த வளையல்களைக் கொண்டு தனது தோழியருடன் இணைந்து பூமியைத் தோண்ட ஆரம்பித்தார். சற்று நேரத்தில் அங்கு உருவான பள்ளத்தினை மானஸ கங்கையின் நீரினால் நிரப்ப கோபியர்கள் ஆயத்தமானபோது, சியாம குண்டத்தில் இருந்த புனித நதிகள் அனைத்தும் இராதையினால் உருவாக்கப்பட்ட குளத்தினுள் நுழைய அனுமதி வேண்டி, புதிய பள்ளத்தையும் நிரப்ப, அந்த குளம் ராதா குண்டம் என்று பெயர் பெற்றது.

வளையல்களைக் கொண்டு உருவானதால் இதற்கு கங்கன் குண்டம் (வளையலால் உருவாக்கப்பட்ட குளம்) என்ற பெயரும் உண்டு. இந்த ராதா குண்டமானது ஸ்ரீமதி ராதாராணிக்கு மிகவும் பிரியமானது மட்டுமின்றி, ராதா குண்டத்தின் நீருக்கும் ஸ்ரீமதி ராதாராணிக்கும் வேறுபாடில்லை என்பதால், ராதா குண்டத்தை தரிசிப்பதற்கும் ராதாராணியை தரிசிப்பதற்கும் வேறுபாடில்லை.

நந்த கிராமம்

நந்த மகாராஜரின் தந்தையான பர்ஜன்யர், கேசி என்ற அரக்கனின் தொல்லையினால், தான் வாழ்ந்து வந்த நந்தீஷ்வர மலையை விட்டு கோகுலத்திற்குச் சென்றார். கிருஷ்ணரை கோகுலத்தில் வளர்த்து வந்த நந்த மகாராஜர், கம்ஸனால் அனுப்பப்பட்ட அசுரர்களின் தொல்லையினால், மீண்டும் நந்தீஷ்வர மலைக்கு இடம் பெயர்ந்தார். அன்றிலிருந்து இன்றுவரை நந்தீஷ்வர மலையைச் சுற்றியுள்ள பகுதி நந்த கிராமம் என்று அறியப்படுகிறது.

கிருஷ்ணரின் இளமைப் பருவ லீலைகள் நந்த கிராமத்தில் நிகழ்ந்தவை. நந்தமகாராஜரால் வழிபடப்பட்டு வந்த வராஹ தேவர், சாலகிராமத்தினாலான லக்ஷ்மி நரசிம்மர் ஆகியோரை மட்டுமின்றி, நந்த மகாராஜரின் இல்லம், மற்றும் யசோதை தயிர் கடைந்த பானையையும் இங்கு செல்வோர் இன்றும் தரிசிக்க இயலும்.

பர்ஸானா

கிருஷ்ணர் கோகுலத்திலிருந்து நந்த கிராமத்திற்கு இடம்பெயர்ந்தபோது, ராவல் என்னும் இடத்திலிருந்து ஸ்ரீமதி ராதாராணி பர்ஸானாவிற்கு இடம்பெயர்ந்தார். பர்ஸானா, ராதாராணியின் தந்தையான மன்னர் விருஷபானுவின் தலைநகரமாகும். ராதா கிருஷ்ணரின் பல்வேறு லீலைகள் பர்ஸானாவில் நிகழ்ந்துள்ளன. விருந்தாவன லீலைகளில் பங்குகொள்ள விரும்பிய பிரம்மதேவர் பர்ஸானாவிற்கு வந்து மலையாக மாறினார். இங்குள்ள இரண்டு மலைகளில் ஒன்றான பிரம்ம கிரியின் மீது விருஷபானு தனது இல்லத்தினை அமைத்தார்; ஸ்ரீமதி ராதாராணி வாழ்ந்த இந்த இடத்தில் தற்போது ஒரு கோவில் உள்ளது.

காம்ய வனம்

கிருஷ்ணர் பசுக்களை மேய்க்கச் செல்லும் இந்த வனத்தின் ஓர் பகுதியிலுள்ள பாறை ஒன்றில், கிருஷ்ணர் தனது நண்பர்களுடன் அமர்ந்து உணவருந்தியதற்கு அடையாளமாக, உணவுப் பாத்திரங்கள், மற்றும் இலைகளின் அச்சு பதிந்திருப்பதைக் காண முடியும். இங்கிருந்துதான் பிரம்மதேவர் கோபர்களைக் கடத்திச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

வியோமாசுர குகை: கிருஷ்ணர் தனது கோபர்களுடன் கோவர்தன மலையில் ஒளிந்தும் மறைந்தும் விளையாடி மகிழ்ந்த சமயத்தில், வியோமாசுரன் எனும் அசுரன் கோபர்களைக் கடத்திச் சென்று ஒரு குகையினுள் அடைத்து குகையை மூடினான். கிருஷ்ணரின் பிடியிலிருந்து தப்பிக்க பாறையாக மாறினான். பகவானோ ஆகாயமார்கமாக பறந்து அப்பாறையின் மீது மோதி அவனை வதைத்தார். அப்போது, பகவானின் கைவிரல்கள், தாமரை பாதங்கள், கௌஸ்துப மாலை, மற்றும் குண்டலங்களின் அச்சு அப்பாறையில் பதிந்தது. மேலும், அருகிலுள்ள மற்றொரு பாறையில் பலராமரின் தாமரை பாதங்கள் பதிந்துள்ளதையும் காணலாம்.

சரண் பாரி: பாரி என்றால் மலை; சரண் பாரி என்றால் கிருஷ்ணரின் திருவடிகள் பதிக்கப்பட்ட மலை என்று பொருள்படும். இச்சிறிய மலை சிவபெருமானின் தோற்றம் என்றும், இங்கு அவர் கிருஷ்ணரின் திருவடிகளைத் தாங்கியுள்ளார் என்றும் அறியப்படுகிறது.

பிச்சல் பாரி: கிருஷ்ணர் தனது சகாக்களுடன் சறுக்கி விளையாடிய பாறை.

வஜ்ரநாபரால் ஸ்தாபிக்கப்பட்ட விருந்தாதேவி, மற்றும் காமேஸ்வரர் கோவிலும் இவ்வனத்தில்தான் உள்ளன.

விரஜ மண்டலத்தின் இதர காடுகள்

மதுவனம்: ஸத்ய யுகத்தில் துருவ மஹாராஜர் தவம் செய்து விஷ்ணுவின் தரிசனத்தைப் பெற்ற இடம். திரேதா யுகத்தில், மது என்னும் அசுரனின் மகனான லவனாசுரனை பகவான் ஸ்ரீ இராமரின் தம்பியான சத்ருகணர் இங்கு வதம் செய்தார். துவாபர யுகத்தில் கிருஷ்ணர் தமது பசுக்களை இங்குதான் நீர் அருந்துவதற்காக அழைத்து வருவார்.

தாலவனம்: தால (பனை) மரங்களால் நிறைந்துள்ள இக்காட்டில்தான் கழுதை வடிவில் வந்த தேனுகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்தார். கதிரவனம்: கொக்கு வடிவில் வந்த பகாசுரனை வதம் செய்த இடம். லௌஹவனம்: லௌஹன் என்னும் அசுரனை வதம் செய்த இடம். பத்ரவனம்: கன்றுக் குட்டியின் வடிவில் வந்த வத்ஸாசுரனை வதம் செய்த இடம்.

கோகிலவனம்: குயில் போன்று கூவி, ஸ்ரீமதி ராதாராணியை கிருஷ்ணர் அழைக்கக்கூடிய இடம். குமுதவனம்: கிருஷ்ணர் தனது சகாக்களுடன் விளையாடும் இடம். இங்கு பிரகாசமான சிவப்பு நிற குமுத பூக்கள் இருந்ததால், குமுதவனம் என்று பெயர் பெற்றது. இங்குள்ள பத்ம குண்டம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

பஹுலாவனம்: சிங்கத்தினால் தாக்கப்பட விருந்த ஒரு பசு, தனது கன்றுக் குட்டியை சந்திப்பதற்கு அவகாசம் கேட்டு, அதன் பின்னர் சிங்கத்திடம் வந்தபோது, பசுவின் நேர்மையை சிங்கத்தின் வடிவில் வந்திருந்த தர்மராஜன் பாராட்டினார். அப்போது அங்கு தோன்றிய கிருஷ்ணர் அப்பசுவிற்கு தாயின் ஸ்தானத்தை வழங்கினார்.

பாண்டிரவனம்: நண்பர்களுடன் நண்பனாக வந்த பிரலம்பாசுரன் எனும் அசுரனை பலராமர் வதம் செய்த வனம். பில்வவனம்: கோபியர்களுடனான கிருஷ்ணரின் ராஸ நடனத்தில் கலந்துகொள்ள விரும்பிய மஹாலக்ஷ்மி தாயார் தவம் புரிந்த இந்த வனத்தின் யமுனைக் கரையில் லக்ஷ்மிதேவியின் திருக்கோவில் ஒன்று உள்ளது.

அனைத்து ஆன்மீக ஸ்தலங்களிலும் முக்கியமானதாகக் கருதப்படும் இராதா குண்டம்

கேசி என்னும் அசுரனை கிருஷ்ணர் கொன்ற விருந்தாவனத்தின் யமுனைக் கரை (பெயர்: கேசி காட்)

நேரில் தரிசியுங்கள்

விருந்தாவனம் கிருஷ்ணர் வாழ்ந்த பூமி, இங்கு நூற்றுக்கணக்கான கிருஷ்ண லீலா ஸ்தலங்கள் உள்ளன; அவை ஒவ்வொன்றையும் தனித்தனி கட்டுரையாக வெளியிட முடியும். இருப்பினும், முக்கிய இடங்களை மட்டும் எந்தளவிற்கு சுருக்கமாக எடுத்துரைக்க முடியுமோ அதைச் செய்துள்ளேன். கிருஷ்ணர் தமது அற்புத லீலைகளை அரங்கேற்றிய இந்த இடங்களால் கவரப்பட்டு, விருந்தாவனம் செல்வதற்கான ஆவலை நீங்களும் வளர்த்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன். நான் இங்கு விரிவாக எதையும் எழுதவில்லை, அப்படியே எவ்வளவுதான் நான் எழுதினாலும் அது நேரில் பார்ப்பதற்கு இணையாகாது. பக்தர்களின் துணையுடன் குறைந்தது ஒருமுறையாவது விருந்தாவனம் சென்று வாழ்வைப் பக்குவப்படுத்து மாறு வேண்டுகிறேன். ஹரே கிருஷ்ண!

பர்ஸானாவில் அமைந்துள்ள ஸ்ரீமதி ராதாராணியின் கோட்டை

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives