பக்தர்கள் ஏன் திரைப்படங்களைப் பார்ப்பதில்லை ?

Must read

வழங்கியவர்கள்: ஸந்தான கிருஷ்ண தாஸ்

மக்கள் கிருஷ்ண பக்தர்களைப் பார்த்து அடிக்கடி கேட்கும் கேள்விகளில் ஒன்று, நீங்கள் திரைப்படம் பார்ப்பீர்களா?” பக்தர்கள், இல்லை, நாங்கள் பார்ப்பதில்லை,” என்று கூறியதும், ஏன் பார்க்கக் கூடாது, திரைப்படம் பார்ப்பதால் நமது துன்பங்களை சிறிது நேரத்திற்காவது மறந்து இன்பமாக இருக்கலாமே என்று வினாக்களை எழுப்புகின்றனர். அதைப் பற்றி சிறிது ஆராயலாமே.

 

திரைப்படங்கள் பக்திக்கு சாதகமா?

இக்கட்டுரையை எழுத நினைத்தபோது, சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு சிறிய சம்பவம் எனது மனதில் விரியத் தொடங்கியது. ஒரு ஞாயிறு பகல் பொழுதில் சென்னை சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள இஸ்கான் கோயிலின் தரைத்தளத்தில் தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி அவர்களை உபன்யாசத்திற்குப் பிறகு சந்தித்தேன். அப்போது பிரபல திரைப்பட நடிகரும் இயக்குநருமான ஒருவர் கோயிலுக்கு வந்திருந்தார். அவரும் ஸ்வாமிஜியைச் சந்திக்க வந்தார், தரையில் விழுந்து நமஸ்காரம் செய்து விட்டு எழுந்து நின்றார். பக்தர்கள் அவரை ஸ்வாமிஜியிடம் அறிமுகப்படுத்தியதும், ஸ்வாமிஜி அவரிடம், திரைப்படம் பார்ப்பதற்கு நாங்கள் யாரையும் ஊக்குவிப்பதில்லை!” என்று கூறிய வண்ணம் தமது கண்களை அகலமாக விரித்து அவரை உற்று நோக்கினார். மிகச்சிறிய இடைவெளிக்குப் பிறகு, அவர் தொடர்ந்தார், ஆனால், நீங்கள் இராமாயணம், மஹாபாரதம் முதலியவற்றைக் கொண்டு, கிருஷ்ண உணர்விலான திரைப்படங்களை எடுத்தால், உங்கள் படத்தைப் பார்க்கச் சொல்லி நான் அனைவரையும் கேட்டுக்கொள்வேன்.”

ஸ்வாமிஜி கூறியதன் அர்த்தம் என்ன? கிருஷ்ண பக்தி இயக்கம் மக்களுக்கு தூய பக்தியை போதிக்கின்றது. இந்த தூய பக்தியே துன்பமற்ற லோகத்தை அடைய பக்தனுக்கு உதவும். இப்பயிற்சியில் ஈடுபடும் பக்தன், கிருஷ்ண பக்திக்கு சாதகமான செயல்கள் அனைத்தையும் எவ்வித இலாபத்தையும் எதிர்பார்க்காமல் செயல்படுத்த வேண்டும். அதே சமயத்தில் இப்பயிற்சிக்கு சாதகமில்லாத விஷயங்களைத் துறத்தல் என்பதும் அவசியம். அதாவது, திரைப்படம் என்பது கிருஷ்ண பக்திக்கு சாதகமாக இருந்தால் மட்டுமே அதனை பக்தர்கள் ஏற்பர், இல்லாவிடில் இவ்விஷயங்களை அவர்கள் துறக்கின்றனர் என்பதே பொருள்.

பெரும்பாலான திரைப்படங்கள் நிச்சயம் கிருஷ்ண பக்திக்கு சாதகமில்லாமலேயே இருப்பதால், கிருஷ்ண பக்தர்கள் அவற்றை அணுகுவதில்லை. அவர்கள் தங்களது மனதை செயற்கையாகக் கட்டுப்படுத்துகின்றனர் என்று நினைத்துவிட வேண்டாம், பக்தன் தனது புலன்களை பகவானின் தூய தொண்டில் ஈடுபடுத்துவதால், அவனது புலன்கள் இயற்கையாகவே கட்டுப்பாட்டில் அமைந்துள்ளன.

தர்மத்தின் கொள்கைகளை மீறுதல்

மனித வாழ்வு தவத்திற்கானதென்றும், மனித வாழ்க்கை என்பது நாய்களுக்கும் பன்றிகளுக்கும் கிடைக்கும் புலனின்பத்திற்கானது அல்ல என்றும் ஸ்ரீமத் பாகவதத்தில் (5.5.1) ரிஷபதேவர் கூறுகிறார். முறையற்ற உடலுறவு, போதைப் பழக்கங்கள், அசைவ உணவு உண்ணுதல், சூதாடுதல் ஆகிய நான்கும் மனித வாழ்வின் நான்கு எதிரிகள் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன. இந்நான்கு செயல்கள் எங்கெல்லாம் செய்யப்படுகின்றனவோ, அங்கு பாவ புருஷனான கலி குடியிருக்கின்றான் என்று ஸ்ரீமத் பாகவதத்தில் (1.17.38) கூறப்பட்டுள்ளது. மேலும் இவற்றை மீறுவதால் மனித சமுதாயத்தைத் தாங்கியிருக்கும் தர்மத்தின் நான்கு தூண்களான கருணை, உண்மை, தவம், தூய்மை ஆகியவை ஆட்டங் காண்கின்றன. திரைப்படங்களில் மேற்கூறிய நான்கு தவறுகளும் எவ்வாறு காட்டப்படுகின்றன என்பதை அனைவரும் அறிவர்.

ஆமை எவ்வாறு தனது புலன்களைக் கூட்டிற்குள் வைத்துள்ளதோ அவ்வாறே பக்தர்கள் தங்களது புலன்களை புலனின்ப விஷயங்களிலிருந்து விலக்கி வைத்திருப்பர்.

பக்குவநிலைக்கான பயிற்சி

கிருஷ்ண பக்தர்கள் வாழ்வின் பக்குவநிலையை அடைவதற்காகப் பயின்று வருகின்றனர். பக்குவநிலையை அடைய விரும்புவோர் ஆமை எவ்வாறு தன் புலன்களைத் தேவையற்ற சமயங்களில் கூட்டிற்குள் இழுத்துக்கொள்ளுமோ அவ்வாறு புலன்களை புலனின்பப் பொருட்களிலிருந்து விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கிருஷ்ணர் பகவத் கீதையில் (2.58) கூறியுள்ளார். இதையே வள்ளுவரும் (திருக்குறள் 126) பின்வருமாறு கூறுகிறார்.

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப் புடைத்து

ஆமை தனது ஐந்து உறுப்புகளை ஆபத்து வரும்போது கூட்டிற்குள் மறைத்துக்கொள்வதுபோல, ஒருவன் தனது ஐந்து புலன்களையும் அறத்திற்கு மாறான தீமை வரும்போது அடக்கும் ஆற்றல் பெறுவானாயின், அஃது அவனுக்கு பிறவிதோறும் அரணாக இருந்து உதவும்.”

இப்போது கூறுங்கள், திரைப்படங்கள் பக்தர்களுக்குத் தேவையா?

பக்திக்கு ஏற்ற மனம்

மனிதனின் பந்தத்திற்கும் விடுதலைக்கும் மனமே காரணம். புலனின்பப் பொருள்களில் ஆழ்ந்துள்ள மனம் பந்தத்திற்கும், அவற்றிலிருந்து விலக்கப்பட்ட மனம் விடுதலைக்கும் காரணமாகின்றன,” என்று அம்ருத-பிந்து உபநிஷத் (2) கூறுகிறது.

பௌதிக ஈடுபாடுகளிலிருந்து மனதை விடுவிப்பதற்கான சரியான மருத்துவத்தை ஏற்காதவன், தன்னுணர்வில் வெற்றி அடைவது கடினம் என்று பரம புருஷ பகவான் அறிவிக்கிறார். மனதை பௌதிக இன்பங்களில் ஈடுபடுத்திய வண்ணம் பக்தியைப் பயில முயல்வது, விறகின் மீது நீரை ஊற்றிய வண்ணம் நெருப்பை மூட்ட முயல்வதைப் போன்றதாகும். மனதைக் கட்டுப்படுத்தாமல் யோகத்தைப் பயில்வது கால விரயமே. அத்தகு யோகம் பௌதிக இலாபத்தை உண்டாக்கலாம். ஆனால், ஆன்மீக உணர்வைப் பொறுத்தவரை அது பயனற்றதாகும். எனவே, மனதைக் கட்டுப்படுத்த விரும்புவோர், திரைப்படம் முதலிய தேவையற்ற விஷயங்களைத் தவிர்த்து, பகவானின் திவ்யமான அன்புத் தொண்டில் இடையறாது ஈடுபட வேண்டும்.

திரைப்படத்தின் அவலநிலை

திரைப்படங்கள் மனிதனின் மனதில் என்ன விதைக்கின்றன? அரை நிர்வாணத்துடன் நடித்து காம உணர்வைத் தூண்டி பணத்திற்காக எதையும் செய்யும் நடிகைகள், மனிதனை மிருகமாக்கும் குரூர சிந்தனை கொண்ட வசனங்கள், இரட்டை அர்த்தம் கொண்ட ஆபாச வசனங்கள், பக்திக்கு வேட்டு வைக்கும் பாடல்கள், ஜாதி மோதலுக்கு வழிவகுக்கும் சண்டைக் காட்சிகள், திரைப்படத்தைப் பார்த்து கொலை செய்தேன் என்று கூறும் வாலிபர்கள், நாகரிகமற்ற வார்த்தைகளால் பழிப்பது, நன்றி கெட்ட தனம், ஒழுக்கச் சிதைவுகள், கோடிகளில் பணம் புரண்டும் நிம்மதியற்ற வாழ்க்கை, தற்கொலை, விவாகரத்து, ஆபாசம் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இன்றைய திரைப்படத்தின் அவலநிலை இவ்வாறு உள்ளபோதிலும், மக்களுக்கு அதன் மீதான மோகம் குறைந்தபாடில்லை.

தனது தாயை கொன்னே புடுவேன்” என மிரட்டுதல், பெற்றோரை ஏய் பெரிசு” என்றும் ஆசிரியரை ஏய் வாத்தி” என்றும் அழைத்தல், பொறுப்பற்றவர்களாகக் குடித்து கும்மாளம் அடித்தல் முதலியவை கதாநாயகனின் தன்மைகள். அப்படியிருந்தும், அவர்களை (துரத்தித் துரத்தி)காதலிக்கும் காதலிகளே கதாநாயகிகள். இதைக் காணும் குழந்தைகள் பெற்றோர்களையும் பெரியவர்களையும் ஆசிரியர்களையும் மதிக்க வேண்டும் என்று நினைப்பது மடமை; இருந்தும்கூட மக்கள் இன்றும் குடும்பத்துடன் திரைப்படத்திற்குச் செல்கின்றனரே. எனவேதான், அனைத்து குற்றங்களுக்கும் காரணம் திரைப்படம்” என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி வி. தனபாலன் அவர்கள் வழக்கு விசாரணை ஒன்றில் கருத்து கூறியுள்ளார்.

பக்திக்கு ஏற்படும் பாதகங்கள்

திரைப்படம் என்பது, கதையை நம்பி இல்லாது சதையையும் அரிதாரத்தையும் நம்பி இருக்கிறது என்பதை அதைப் பார்ப்பவர்களும் படைப்பவர்களும் நன்கு அறிந்துள்ளனர். ஆனால் கோவிந்தனின் நாமத்தை பஜனை செய்பவர்களாக இருக்கும் பக்தர்களுக்கு, அத்தகு திரைப்படக் காட்சிகள் பேரழிவாக அமையும் என்பதை ஆதி சங்கரர் பின்வருமாறு கூறியுள்ளார்:

நாரீ ஸ்தன பர நாபீ தேஷம்

த்ருஷ்ட்வா மாக மோஹாவேஷம்

ஏதன் மாம்ஸவதாதி விகாரம்

மனஸி விசிந்தய வாரம் வாரம்

அதாவது, ஒரு பெண்ணின் மார்பகம், தொப்புள் முதலிய பகுதிகளைப் பார்ப்பதால் அளவு கடந்த மோகம் ஏற்படும். அவை வெறும் மாமிசத்தின் விகாரமான நிரந்தரமற்ற தோற்றங்களே என்பதை மனதில் மீண்டும்மீண்டும் நினைவில்கொள்ள வேண்டும் என்று நாம் அறிவுறுத்தப்படுகிறோம். (பஜ கோவிந்தம் 3)

தவறான காட்சிகளைப் பார்ப்பதால் நமது பக்தி பெருமளவில் பாதிக்கப்படும். காமுகன் ஒருவன் மஞ்சள் பூசி அலங்கரித்த தனது கரத்தால் வேசி ஒருத்தியை கட்டியணைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த மாத்திரமே அஜாமிளனின் இதயத்தில் செயலற்றுக் கிடந்த காம இச்சைகள் தலையெடுக்கத் துவங்கி மோக வசப்பட்டு அவற்றிற்கு அடிமையானான் என்கிறது ஸ்ரீமத் பாகவதம் (6.1.61). ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் ஆச்சாரமிக்க பிராமணக் குலத்தில் பிறந்து ஒழுக்க நெறிகளை வழுவாது பின்பற்றி வந்த அஜாமிளனுக்கே அடிசறுக்கியபோது, இன்றைய பௌதிகக் கல்வியால் ஆன்மீக வாசம் அற்றுப்போன நம் போன்றவர்களின் நிலையை என்னவென்பது?

பக்தர்களின் சகவாசம்

பக்தர்களின் தொடர்பில் பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ள பக்தன் பகவானின் செயல்களை எப்போதும் நினைப்பதால், புலனுகர்ச்சியில் வெறுப்படைகிறான் என்று ஸ்ரீமத் பாகவதத்தில் (3.25.26) பகவான் ஸ்ரீ கபிலர் கூறுகிறார். எனவே, கிருஷ்ண உணர்வு முறையே புலன்களைக் கட்டுப் படுத்த உதவும் எளிய யோகமுறையாகும், இந்த முறையினாலேயே மனதைக் கட்டுப்படுத்த முடியும். எனவேதான், பக்தர்கள் திரைப்படம் உள்ளிட்ட பௌதிக சகவாசத்தை தவிர்த்து பக்தர்களின் சகவாசத்தை ஏற்று உன்னத ஆனந்தத்தைப் பெறுகின்றனர்.

மேலும், பகவானின் சேவையில் எப்போதும் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டுள்ள பக்தனுக்கு திரைப்படம் என்பது வெறும் கால விரயமாகும். கிருஷ்ண சேவையில் 24 மணி நேரமும் ஈடுபட்டுள்ள பக்தன் பொழுதே போதவில்லை” என்று வாழ்கிறான்;  பொழுதே போதவில்லை” என்னும் பட்சத்தில் பொழுதுபோக்கு” எனப்படும் திரைப்படத்திற்கான அவசியம் என்ன?

திரைப்படம் பார்த்தல் என்பதைக் கைவிடுவது பக்தர்களுக்கு சிரமமான ஒன்றல்ல. யாரொருவர் ஸ்ரீமத் பாகவதம் முதலிய உன்னத இலக்கியங்களைத் தொடர்ந்து படிக்கின்றனரோ, அவர்கள் அதிலுள்ள உயர்ந்த சுவையை உணர்வர். வெறும் திரையில் காணும் நாயகர்களின் மீதான மோகத்தினைக் கைவிட்டு, உண்மையான நாயகர்களின் மீது பற்றுதல்கொள்வர். அத்தகு பற்றுதல் அவர்களின் முக்திக்கு உதவும்.

திரைப்படத் துறையில் இருப்பவர்களேகூட அத்துறைக்கு நற்சான்றிதழ் வழங்க மாட்டார்கள். அவ்வாறிருக்க, பக்தர்கள் அதைப் பார்க்கலாமா என்பதே நாம் எழுப்பும் வினா.

காமுகனின் செயலை ஒருமுறை பார்த்த அஜாமிளன் தன் நிலையிலிருந்து வீழ்ந்தான்; திரைப்படங்களில் அதையே பார்த்துக் கொண்டிருந்தால்…?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives