வழங்கியவர்: வனமாலி கோபால் தாஸ்
அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரப்பூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கி பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த இதழில்: பதினான்காம் அத்தியாயம்
சென்ற இதழில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மறைவிற்குப் பின் ஜடவுலகை விட்டுச் செல்ல தயாராகும்படி பாண்டவர்களிடம் நாரத முனிவர் உபதேசித்ததைக் கண்டோம். கலி யுகத்தின் தொடக்கத்தைக் கண்டு யுதிஷ்டிரர் வருந்துவதை இந்த இதழில் காண்போம்.
கலி காலத்தின் ஆதிக்கம்
கிருஷ்ணரையும் யதுக்களையும் பார்த்து அவர்களது எதிர்காலத் திட்டம் பற்றி அறிவதற்காக அர்ஜுனன் துவாரகைக்கு பயணமானான். சில மாதங்கள் கழிந்த பின்னர், அர்ஜுனன் திரும்பி வருவதில் கால தாமதம் ஏற்படுவதையும் பல தீய சகுனங்களையும் கண்டு யுதிஷ்டிரர் கவலைக்குள்ளானார்.
கலியின் ஆதிக்கத்தால் நித்ய காலத்தின் போக்கு மாறிவிட்டதை அவர் கண்டார். அது நினைக்கவே பயங்கரமாக இருந்தது. பருவ காலங்கள் ஒழுங்கின்றி மாறின. மக்கள் கோபக்காரர்களாகவும் பேராசைக்காரர்களாகவும் ஏமாற்றுபவர்களாகவும் மாறத் தொடங்கினர். மேலும், அவர்கள் தங்களது வாழ்க்கைத் தேவைகளுக்காக தீய வழிமுறைகளைக் கையாள்வதையும் அவர் கண்டார்.
நண்பர்களுக்கு இடையிலுள்ள சாதாரண விவகாரங்களில் கூட வஞ்சகம் நிறைந்துவிட்டது. மேலும், தாய், தந்தை, மகன்கள், சகோதரர்கள், மற்றும் நலன்விரும்பிகளுக்கு இடையில்கூட எப்போதும் கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டன. கணவன் மனைவிக்கிடையிலும்கூட அவநம்பிக்கையும் சண்டையும் தோன்றி விட்டது.
இவற்றையெல்லாம் கண்ட யுதிஷ்டிர மஹாராஜன் பீமனிடம் உரையாடினார்: “துவாரகைக்குச் சென்ற அர்ஜுனன் ஏழு மாதங்களாகியும் இன்னும் திரும்பி வரவில்லை. அங்கு என்ன நடக்கிறது? நாரதர் கூறியதைப் போல கிருஷ்ணர் தமது லீலைகளை முடித்துக்கொள்ளப் போகிறாரா?”
தீய சகுனங்கள்
யுதிஷ்டிரர் தொடர்ந்து கூறினார்: “உயர் கிரகங்களின் ஆதிக்கத்தினால் வெகு விரைவில் விளையப்போகும் ஆபத்தை சுட்டிக் காட்டும் தீய சகுனங்கள் தென்படுகின்றன. என் உடலின் இடது பாகத்தில் அடிக்கடி நடுக்கம் ஏற்படுகிறது. பயத்தால் என் இதயம் துடிக்கிறது. ஒரு பெண் நரி அழுது கொண்டே நெருப்பைக் கக்குவதையும், இந்த நாய் என்னைப் பார்த்து பயமில்லாமல் குரைப்பதையும் பார். பசு போன்ற பயனுள்ள மிருகங்கள் இடப்புறமாக என்னைக் கடந்து செல்கின்றன. கழுதை போன்ற தாழ்ந்த மிருகங்கள் என்னை வலம் வருகின்றன. என்னைக் கண்டதும் என் குதிரைகள் அழுவதுபோல் காணப்படுகின்றன.
“இந்த புறா ஒரு மரணத் தூதனைப் போல் காணப்படுவதைப் பார். ஆந்தைகளின் வீறிட்ட அலறல்களும் அவற்றுடன் போட்டியிடும் காகங்களும் என் இதயத்தை நடுங்கச் செய்கின்றன. பிரபஞ்சத்தையே சூனியமாகச் செய்து விட விரும்புவதைப் போல் இவை காணப்படுகின்றன. புகை வானத்தை எப்படி சூழ்ந்து கொண்டுள்ளது என்று பார். பூமியும் மலைகளும் துடிப்பதைப் போல் காணப்படுகின்றன. மேகமில்லாத நீலவானிலிருந்து இடியோசை கேட்பதைப் பார். மண்ணை வாரியடித்து வேகமாக வீசும் காற்று இருட்டை உருவாக்குகிறது. மேகங்கள் இரத்தம் சிந்தச் செய்யும் நாசத்தை விளைவிக்கின்றன. சூரிய கதிர்கள் சிதைந்து கொண்டிருக்கின்றன. நட்சத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிடுவதுபோல் தென்படுகின்றன. குழம்பிய ஜீவராசிகள் எரிவதுபோலும் அழுவதுபோலும் காணப்படுகின்றனர்.
“நதிகள், குளம், குட்டைகள், நீர்த்தேக்கங்கள் உட்பட மனமும் கலங்கியுள்ளது. நெய்யில் அக்னி ஜொலிக்கவில்லை, கன்றுகள் பால் குடிக்கவில்லை, பசுக்களும் பால் கறக்கவில்லை. அவை கண்ணீர்மல்க அழுகின்றன, காளைகளும் புற்களை மேய்வதில்லை.
“கோயிலிலுள்ள விக்ரஹங்கள் அழுவதுபோல காணப்படுகின்றன. நகரங்கள், கிராமங்கள், நந்தவனங்கள், சுரங்கங்கள், மற்றும் ஆசிரமங்கள் பொலிவிழந்து மகிழ்ச்சியற்று காணப்படுகின்றன. இந்த உலகம் பகவானின் தாமரை பாத சுவடுகளால் அலங்கரிக்கப்படும் பாக்கியத்தைப் பெற்றிருந்தது. இந்நிலை நீடிக்காது என்பதையே இந்த அறிகுறிகள் சுட்டிக் காட்டுகின்றன.”
யுதிஷ்டிரரின் கேள்விகள்
யுதிஷ்டிரரும் பீமனும் இவ்வாறு உரையாடிக் கொண்டிருந்தபோது அர்ஜுனன் துவாரகையிலிருந்து திரும்பி வந்தான். யுதிஷ்டிரரின் பாதங்களை வணங்கி நின்ற அவனது மனவருத்தத்தையும் பொலிவிழந்த தோற்றத்தையும் கண்ட யுதிஷ்டிரர் நாரத முனிவரின் குறிப்புகளை நினைவுகூர்ந்து, அர்ஜுனனிடம் வினவினார். “அன்புள்ள சகோதரனே, நமது உறவினர்களான மது, போஜ, தசார்ஹ, ஆர்ஹ, ஸாத்வத, அந்தக மற்றும் யது வம்சத்தினர் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? நமது பாட்டனார் சூரசேனர், மாமா வசுதேவர், பரம புருஷரான பலராமர், ஹ்ருதீகர், அவரது மகன் கிருதவர்மர், கம்சனின் தந்தையான உக்ரசேனர், பிரத்யும்னர், சுஷேணர், சாருதேஷ்ணர், சாம்பன் மற்றும் ரிஷபரை தலைமையாகக் கொண்ட கிருஷ்ணரின் மகன்களும் பேரன்களும் நலமா?
“பக்தர்களிடம் மிகவும் அன்புடையவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகா புரியில் பக்தர்களாலும் நண்பர்களாலும் சூழப்பட்டு சுகமாக இருக்கிறாரா? பகவானுடைய கரங்களால் பாதுகாக்கப்படும் யது வம்சத்தினர் ஆன்மீக உலகவாசிகளைப் போல் வாழ்வை அனுபவிக்கிறார்கள். ஸத்யபாமாவைத் தலைமையாகக் கொண்ட இராணிகள் பகவானுக்கு திருப்தி தரும் வகையில் சேவை செய்து, அவர் தேவர்களை வெல்லத் தூண்டுகின்றனர். அதனால் பகவான் தேவர்களை வென்று ஸத்யபாமாவுக்கு தேவலோக பாரிஜாத மரத்தையும் யது வம்சத்தினருக்கு சுதர்மா எனப்படும் தேவலோக ராஜ்யசபையையும் வழங்கினார்.
“அன்புள்ள சகோதரனே அர்ஜுனா, உன் உடல் நலம் சரியாக உள்ளதா? நீ பொலிவிழந்து காணப்படுகிறாயே! நீண்டகாலம் துவாரகையில் தங்கியதால் பிறர் உன்னை அலட்சியத்தால் அவமரியாதை செய்தனரா? உன் வாக்குறுதியைக் காப்பாற்ற இயலவில்லையா? கேட்டவருக்கு தானமளிக்க இயலாமல் போனதா? பிராமணர்கள், குழந்தைகள், பசுக்கள், பெண்கள், நோய் வாய்ப்பட்டவர்கள் என யாரேனும் உன்னிடம் பாதுகாப்பு கேட்டு, உன்னால் பாதுகாக்க இயலாமல் போயிற்றா? வழியில் உன்னைவிட தாழ்ந்த அல்லது உனக்கு சமமான ஒருவரால் தோற்கடிக்கப்பட்டாயா? உன்னுடன் உணவருந்த தகுதியுடையவர்களான முதியோர்களையும் சிறுவர்களையும் உதாசீனப்படுத்திவிட்டு, நீ மட்டும் தனியாக உணவருந்தினாயா? ஏதேனும் மன்னிக்க முடியாத வெறுக்கத்தக்க குற்றத்தைச் செய்தாயா?
“அல்லது உன்னுடைய மிக நெருங்கிய நண்பரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை இழந்திருக்கக்கூடும் என்பதால், நிரந்தரமான சூனியத்தை உணர்கிறாயா? எனதன்பு சகோதரனே, உன்னுடைய பெரும் சோகத்திற்கு வேறெந்த காரணத்தையும் என்னால் நினைத்துப் பார்க்க இயலவில்லை.”
இந்த அத்தியாயத்தில் யிதிஷ்டிரரின் கேள்விகளை ஆழ்ந்து கவனித்தால் ஒரு மனிதனுக்குரிய தர்மத்தை அறிந்து கொள்ளலாம்.
யுதிஷ்டிரரின் இக்கேள்விகளுக்கு அர்ஜுனன் அளித்த பதில்களை அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.