ஆன்மீக குருவிற்கான பரிசோதனை (பாகம் இரண்டு)

வழங்கியவர்: தெய்வத்திரு அ..பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

ஆன்மீக குரு என்பவர் இதயத்திலுள்ள கவலை என்னும் காட்டுத்தீயினை அணைக்கக்கூடியவராக இருக்க வேண்டும் என்றும் அதுவே குருவிற்கான முதல் பரிசோதனை என்றும் சென்ற இதழில் கண்டோம். இதர பரிசோதனைகளை இங்கு காணலாம்

கீர்த்தனத்தில் ஈடுபடுபவர்

குருவிற்கான இரண்டாவது சோதனை என்னவெனில்,

மஹாப்ரபோ கீர்தனந்ருத்யகீதா

வாதித்ரமாத்யன்மனஸோ ரஸேனா

குருவின் இரண்டாம் அறிகுறி, அவர் எப்போதும் கீர்த்தனத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவைப் புகழ்வதே அவருடைய பணி. ஆன்மீக குரு பகவானின் திருநாமத்தைப் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் உள்ளார்; ஏனெனில், அதுவே இந்த ஜடவுலகின் எல்லாவிதமான துன்பங்களுக்கான தீர்வாகும்.

தற்போதைய தருணத்தில் யாராலும் தியானம் செய்ய இயலாது. பல்வேறு இடங்களில் பிரபலமாக இருக்கும் தியானங்கள் வெறும் ஏமாற்று வேலையே. சஞ்சலம் மிகுந்த இந்த கலி யுகத்தில் தியானம் செய்வது மிகவும் கடினமானதாகும். எனவே, சாஸ்திரங்கள் கூறுகின்றன. க்ருதே யத் த்யாயதே விஷ்ணும். ஸத்ய யுகத்தில், மக்கள் ஒரு இலட்சம் வருடங்கள் வாழ்ந்து வந்த காலகட்டத்தில், வால்மீகி முனிவர் அறுபதாயிரம் வருடங்கள் தியானம்செய்து பக்குவத்தை அடைந்தார். ஆனால் தற்போதைய தருணத்தில் நீங்கள் அறுபது வருடங்கள் அல்லது அறுபது மணி நேரம் வாழ்வீர்கள் என்பதற்குக்கூட உத்திரவாதம் இல்லை. எனவே, தியானம் என்பது இந்த யுகத்திற்கு சாத்தியமானதல்ல. அதற்கு அடுத்த யுகமான திரேதா யுகத்தில் மக்கள் யாகங்களைச் செய்தனர், அதுவே வேத சாஸ்திரத்தில் பரிந்துரைக்கப்பட்டது. த்ரேதாயாம் யஜதோ மகை:. மகை: என்றால் மாபெரும் யாகங்களை நிறைவேற்றுதல்என்று பொருள். அதற்கு பெருமளவிலான பணம் தேவைப்படுகிறது. தற்போதைய கலி யுகத்திற்கு முந்தைய யுகமான துவாபர யுகத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் விக்ரஹத்தை வழிபடுவது சாத்தியமாக இருந்தது, ஆனால் தற்போதைய கலி யுகத்தில், அதுவும் இயலாத காரியமாக உள்ளது. எனவே, கலி யுகத்தில் பொதுவாக பரிந்துரைக்கப்படும் வழிமுறை கலௌ தத் ஹரி கீர்த்தனாத், பகவானின் திருநாமத்தை கீர்த்தனம் செய்வதால் எல்லா பக்குவத்தையும் எளிமையாக அடைய முடியும். இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் அந்த கீர்த்தனத்தைப் பரப்புவதற்கு உரியதாகும். ஆடல் பாடல் கொண்ட இந்த இயக்கத்தினை ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அறிமுகப்படுத்தினார். இது கடந்த ஐநூறு வருடங்களாகச் சென்று கொண்டுள்ளது. இந்தியாவில் இது பிரபலமானதாகும், மேற்கத்திய நாடுகளில் நாங்கள் சில வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தினோம். தற்போது மக்கள் இதனை ஏற்றுக் கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். இதுவே வழிமுறையாகும்.

எனவே, குரு என்பவர் எப்போதும் கீர்த்தனத்தில் ஈடுபட்டவராக உள்ளார். மஹாப்ரபோ கீர்தனந்ருத்யகீதா, ஆடுதல் மற்றும் பாடுதல். அவர் அதனைச் செய்யாவிடில் எவ்வாறு தனது சீடர்களுக்கு அதனைக் கற்றுக் கொடுக்க முடியும். எனவே, ஆன்மீக குருவின் முதல் அறிகுறி உங்களை எல்லாக் கவலைகளிலிருந்தும் விடுவிப்பதற்கான உபதேசங்களை வழங்குதல். அவரு டைய இரண்டாம் அறிகுறி, அவர் பகவானுடைய நாம கீர்த்தனத்திலும் நடனத்திலும் எப்போதும் ஈடுபட்டுள்ளார்.

மஹாப்ரபோ கீர்தனந்ருத்யகீதா

வாதித்ரமாத்யன்மனஸோ ரஸேனா

ஆன்மீக குரு கீர்த்தனத்தினாலும் நடனத்தினாலும் தனது மனதினுள் தெய்வீக ஆனந்தத்தினை எப்போதும் அனுபவிக்கின்றார். ஆனந்தம் இல்லாமல் செயற்கையாக நடனமாட உங்களால் முடியாது. பக்தர்கள் நடனமாடும்போது அது செயற்கையானதல்ல. அவர்கள் தெய்வீக ஆனந்தத்தை உணர்கின்றனர், அதனால் நடனமாடுகின்றனர். அவர்களுடைய நடனம் ஆன்மீகத் தளத்திலிருந்து நிறைவேற்றப்படுகிறது. ரோமாஞ்ச கம்ப ஸ்ருதரங்க பாஜோ, சில நேரங்களில் அங்கே ஆன்மீக அறிகுறிகள் தென்படுகின்றனசில நேரங்களில் அழுகின்றனர், சில நேரங்களில் மயிர்கூச்செறிகின்றதுஇதுபோன்று பல அறிகுறிகள் உள்ளன. இந்த அறிகுறிகள் இயற்கையானவை, நகல் செய்யப்படுவதில்லை, ஒருவன் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடையும்போது அவை தானாகத் தோன்றுகின்றன.

விக்ரஹ வழிபாட்டில் ஈடுபடுத்துதல்

குருவின் மூன்றாவது அறிகுறி யாதெனில்:

ஸ்ரீவிக்ரஹாராதனநித்யநாநா

ஸ்ருங்காரதன்மந்திரமார்ஜனாதௌ

யுக்தஸ்ய பக்தாம்ஸ் நியுஞ்ஜதோ

வந்தே குரோ ஸ்ரீசரணாரவிந்தம்

ஆன்மீக குருவின் கடமை தன்னுடைய சீடர்களை விக்ரஹ வழிபாட்டில் ஈடுபடுத்து வதாகும். எங்களுடைய நூறு மையங்களிலும் நாங்கள் விக்ரஹ வழிபாட்டில் ஈடுபட்டு வருகிறோம். இங்கே ஸ்டாக்ஹோமில் விக்ரஹ வழிபாடு என்பது இன்னும் முழுமையாக நிலைநாட்டப் படவில்லை, ஆனால் நாங்கள் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு மற்றும் குருவின் புகைப்படங்களை வழிபடுகின்றோம். இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற இதர மையங்களில் விக்ரஹ வழிபாடு உள்ளது. விக்ரஹ வழிபாடு என்றால் விக்ரஹத்திற்கு நன்றாக உடையுடுத்துதல், கோயிலை நன்றாகத் தூய்மை செய்தல், விக்ரஹத்திற்காக அருமையான பதார்த்தங்களை அர்ப்பணித்தல், விக்ரஹத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரசாதத்தினை உண்ணுதல் போன்றவையாகும். இதுவே விக்ரஹ வழிபாட்டின் வழிமுறை. விக்ரஹ வழிபாடு குருவினால் நிகழ்த்தப்படுகிறது, அவர் தன்னுடைய சீடர்களையும் அந்த வழிபாட்டில் ஈடுபடுத்துகிறார். இது மூன்றாவது அறிகுறியாகும்.

பிரசாத விநியோகத்தை ஊக்குவிப்பவர்

நான்காவது அறிகுறியானது:

சதுர்விதஸ்ரீபகவத்பிரசாதோ

ஸ்வாத்வ்அன்னத்ருப்தான் ஹரிபக்தஸங்கான்

க்ருத்வைவ த்ருப்திம் பஜத ஸதைவ

வந்தே குரோ ஸ்ரீசரணாரவிந்தம்

ஆன்மீக குரு பிரசாத விநியோகத்தினை ஊக்குவிப்பவராக இருக்கிறார். எங்களுடைய தத்துவம் வறட்டுத் தத்துவமல்ல. வெறுமனே பேசிவிட்டு சென்றுவிடுபவர்கள் அல்ல நாங்கள். நாங்கள் பிரசாதத்தினை விநியோகிக்கின்றோம், எங்களுடைய ஒவ்வொரு கோயிலிலும் வருபவர்கள் அனைவருக்கும் நாங்கள் மிக அதிகளவில் பிரசாதம் வழங்குகிறோம். எங்களுடைய ஒவ்வொரு கோயிலிலும் ஐம்பதிலிருந்து இருநூறு பக்தர்கள் வசிக்கின்றனர், அவர்கள் மட்டுமின்றி வெளியாட்களும் வந்து பிரசாதம் எடுத்துக்கொள்கின்றனர். பிரசாத விநியோகம் என்பதும் குருவின் மற்றோர் அறிகுறியாகும்.

நீங்கள் பகவத் பிரசாதத்தினை உட்கொண்டால், படிப்படியாக ஆன்மீகமயமாவீர்கள், பிரசாதத்திற்கு அந்த சக்தியுள்ளது. இதனால்தான், இறையுணர்வு என்பது நாவுடன் தொடங்குவதாக கூறப்படுகிறது, ஸேவோன்முகே ஹி ஜிஹ்வாதௌ. நீங்கள் நாவினை பகவானுடைய தொண்டில் ஈடுபடுத்தினால், அப்போது உங்களால் இறைவனை உணர முடியும். பகவானின் திருநாமத்தை உச்சரிக்கிறீர்கள், அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட உணவின் மீதியினை பிரசாதமாக ஏற்கிறீர்கள்இந்த இரு வழிகளின் மூலமாக தன்னுணர்வினை அடைகிறீர்கள். நீங்கள் மாபெரும் கல்வி பெற்ற தத்துவவாதியாக, விஞ்ஞானியாக, செல்வந்தராக இருக்க வேண்டும் என்பது அவசியமல்ல. நீங்கள் உண்மையான மனப்பான்மையுடன் பகவானின் சேவையில் உங்களுடைய நாவினை உபயோகித்தால் போதும். உங்களால் அவரை உணர இயலும். இஃது அவ்வளவு எளிமையானதாகும். இதில் எந்த சிரமமும் இல்லை. எனவே, ஆன்மீக குரு என்பவர் இந்த பிரசாத நிகழ்ச்சியினை அறிமுகப்படுத்துகிறார்.

ஸ்வாத்வஅன்னத்ருப்தான் ஹரிபக்தஸங்கான். ஹரிபக்தஸங்கான் என்றால், “பக்தர்களின் சங்கத்தில்என்று பொருள். உங்களால் இதனை வெளியே செய்ய இயலாது. க்ருத்வைவ த்ருப்திம் பஜத ஸதைவ, பிரசாத விநியோகம் நன்றாகச் செயல்படும்போது, அவர் மிகவும் திருப்தியடைகிறார், இது நான்காவது அறிகுறியாகும்.

ஆன்மீக குருவானவர் பிரசாத விநியோகத்தினால் திருப்தியடைகிறார்.

ஆன்மீக குருவானவர் பிரசாத விநியோகத்தினால் திருப்தியடைகிறார்.

கிருஷ்ண லீலைகளை நினைப்பவர்

ஐந்தாவது அறிகுறி யாதெனில்:

ஸ்ரீ–ராதிகாமாதவயோர் அபார

மாதுர்யலீலாகுணரூபநாம் நாம்

ப்ரதிக்ஷணாஸ்வாதனலோலுபஸ்ய

வந்தே குரோ ஸ்ரீசரணாரவிந்தம்

ஆன்மீக குருவானவர் எப்போதும் ஸ்ரீமதி ராதாராணி மற்றும் கோபியர்களுடனான கிருஷ்ணரின் லீலைகளை நினைத்தவண்ணம் உள்ளார். சில நேரங்களில் அவர் கோப நண்பர்களுடனான கிருஷ்ண லீலைகளைப் பற்றியும் நினைக்கின்றார். அதாவது அவர் எப்போதும் கிருஷ்ணரைப் பற்றிய லீலைகளை நினைத்தவண்ணம் உள்ளார். கிருஷ்ணருடைய ஏதேனும் ஒரு லீலையினை நினைத்தபடி உள்ளார். ப்ரதிக்ஷணாஸ்வாதனலோலுபஸ்ய. ப்ரதிக்ஷண என்றால் இருபத்துநான்கு மணி நேரமும் என்று பொருள். இதுவே கிருஷ்ண உணர்வாகும். ஒருவன் கிருஷ்ணரை நினைப்பதில் இருபத்துநான்கு மணி நேரமும் ஈடுபட வேண்டும். நீங்கள் உங்களுடைய வாழ்வை அதற்குத் தகுந்தாற்போல அமைத்துக்கொள்ள வேண்டும். எங்களுடைய கிருஷ்ண பக்தி இயக்கத்தில் இங்குள்ள அனைத்து ஆண்களும் பெண்களும் தினமும் இருபத்துநான்கு மணி நேரமும் சேவையில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்வெறுமனே பெயருக்காக வாரத்தில் ஒருநாள் கோயிலுக்குச் சென்று தியானத்தில் ஈடுபடுவது என்பது அல்ல. அவர்கள் இருபத்து நான்கு மணி நேரமும் ஈடுபட்டுள்ளனர்.

ஆன்மீக குருவானவர் கிருஷ்ண லோகத்திற்கு உயர்வு பெற்று சேவை செய்வதை நினைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆன்மீக குருவானவர் தானும் விக்ரஹ வழிபாட்டில் ஈடுபட்டு மற்றவர்களையும் அதில் ஈடுபடுத்துகிறார்.

கிருஷ்ண சேவைக்கான ஆர்வம்

அடுத்த அறிகுறி யாதெனில்:

நிகுஞ்சயூனோ ரதிகேலி ஸீத்த்யை

யா யாலீபிர் யுக்திர் அபேக்ஷணீய

தத்ராதி தாக்ஷ்யாத் அதிவல்லபஸ்ய

வந்தே குரோ ஸ்ரீசரணாரவிந்தம்

ஆன்மீக குருவின் இறுதிக் குறிக்கோள், கிருஷ்ணருடைய லோகத்திற்கு உயர்வு பெற்று கோபியர்களுடன் சங்கம் கொண்டு கிருஷ்ணருடைய சேவையில் அவர்களுக்கு உதவுவதாகும். சில ஆன்மீக குருமார்கள் கோபியர்களின் சேவகிகளாக ஆவதைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கின்றனர், சிலர் கோபர்களுடைய சேவகர்களாக ஆவதைப் பற்றி எண்ணிக் கொண்டுள்ளனர். சிலர் நந்த மஹாராஜர் மற்றும் யசோதையின் சேவகர்களாக ஆவதைப் பற்றி நினைத்துக் கொண்டுள்ளனர், சிலர் தாஸ்ய ரஸத்தில் கடவுளின் சேவகர்களாக ஆவதைப் பற்றி நினைத்துக் கொண்டுள்ளனர். சிலர் பூக்களை வழங்கும் மரங்கள், பழங்களை வழங்கும் மரங்கள், கன்றுகள் அல்லது பசுக்களாக விருந்தாவனத்தில் மாறுவதைப் பற்றி யோசித்துக் கொண்டுள்ளனர். ஸாந்த, தாஸ்ய, ஸக்ய, வாத்ஸல்ய, மாதுர்ய என ஐந்து விதமான ரஸங்கள் உள்ளன. ஆன்மீக உலகில் அனைத்தும் உள்ளது. சிந்தாமணிப்ரகரஸத்மஸு, ஆன்மீக உலகிலுள்ள அனைத்தும் ஆன்மீகமானவை. மரங்கள் ஆன்மீகமானவை, பழங்கள் ஆன்மீகமானவை, பூக்கள் ஆன்மீகமானவை, நீர் ஆன்மீகமானது, சேவகர்கள் ஆன்மீகமானவர்கள், நண்பர்கள் ஆன்மீகமானவர்கள், தாய்மார்கள் ஆன்மீகமானவர்கள், தந்தைமார்கள் ஆன்மீகமானவர்கள், கடவுள் ஆன்மீகமானவர், அவருடைய சகாக்கள் ஆன்மீகமானவர்கள், அங்கே பலதரப்பட்ட வகைகள் உள்ளபோதிலும், அவையனைத்தும் பூரணமானவை.

நதிக்கரையில் உள்ள மரத்தின் பிம்பம் நதியில் தெரிவதைப்போல, ஆன்மீக உலகிலுள்ள வகைகளனைத்தும் இந்த ஜடவுலகில் பிம்பமாகத் தோன்றுகின்றன. நதிக்கரையில் உள்ள மரத்தின் பிம்பம் நதியில் எவ்வாறு தோன்றும்? தலைகீழாகத் தோன்றும். அதுபோலவே, இந்த ஜடவுலகமானது ஆன்மீக உலகின் பிம்பமாகும், ஆனால் இது திரிபடைந்த பிம்பமாக உள்ளது. ஆன்மீக உலகில் ராதைக்கும் கிருஷ்ணருக்கும் இடையில் அன்பு உள்ளது. கிருஷ்ணர் எப்போதும் இளமையானவராக இருக்கிறார். நவயௌவன. ராதாராணியும் எப்போதும் இளமை கொண்டவளாக உள்ளாள்: ஏனெனில், அவள் கிருஷ்ணருடைய ஆனந்த சக்தியாவாள். நாம் கிருஷ்ணரைத் தனியாக வழிபடுவதில்லை, அவரை அவருடைய நித்திய துணையான ஸ்ரீமதி ராதாராணியுடன் வழிபடுகிறோம். ராதாராணிக்கும் கிருஷ்ணருக்குமிடையில் நித்தியமான காதல் உள்ளது. எனவே, வேதாந்த சூத்திரம் கூறுகிறது, ஜன்மாத்யஸ்ய யத:, எல்லாம் யாரிடமிருந்து தோன்றியதோ அவரே பரம்பொருள். இந்த ஜடவுலகில் தாய்க்கும் மகனுக்குமிடையில் அன்பைக் காண்கிறோம், கணவனுக்கும் மனைவிக்குமிடையில் அன்பைக் காண்கிறோம், எஜமானருக்கும் சேவகருக்குமிடையில் அன்பைக் காண்கிறோம், நண்பர்களுக்கிடையில் அன்பைக் காண்கிறோம், எஜமானர் மற்றும் நாய், பூனை அல்லது பசுக்களுக்கிடையில் அன்பைக் காண்கிறோம். ஆனால் இவை ஆன்மீக உலகின் பிம்பங்களே.

கிருஷ்ணர், மிருகங்கள், பசுக்கள், கன்றுகள் ஆகியவற்றின் மீதும் அன்பு செலுத்துபவராக உள்ளார். இங்கே நாம் நாய்கள் மீதும் பூனைகளின் மீதும் அன்பு செலுத்துவதைப்போல, அங்கே கிருஷ்ணர் பசுக்கள் மற்றும் கன்றுகளின் மீது அன்பு செலுத்துகிறார். இவ்வாறாக, மிருகங்களின் மீது அன்பு செலுத்தும் மனப்பான்மைகூட ஆன்மீக உலகிலிருந்துதான் வருகிறது. இருப்பினும், அஃது இங்கே பிம்பமாகத் தோன்றுகிறது. ஆன்மீக உலகில் இவை தத்தமது உண்மையான நிலையில் நிலைபெற்றிருக்காவிடில், ஜடவுலகம் என்னும் இந்த பிம்பத்தில் அவற்றை எவ்வாறு காண முடியும்? எனவே, அனைத்தும் ஆன்மீக உலகில் இருக்கின்றது என்பதே உண்மை. ஆயினும், அன்பு செலுத்துவதற்கான அந்த உண்மையான சுபாவத்தினைப் புரிந்துகொள்வதற்கு, நீங்கள் கிருஷ்ண உணர்வினைப் பயிற்சி செய்ய வேண்டும்.

இந்த ஜடவுலகிலுள்ள உறவுகள் நமக்கு விரக்தியைக் கொடுக்கின்றன. ஓர் ஆண் ஒரு பெண்ணை விரும்புகிறான், அல்லது பெண் ஓர் ஆணை விரும்புகிறாள்ஆனால் இவை விரக்தியில் முடிகின்றன. சில காலத்திற்குப் பின்னர், அவர்கள் விவாகரத்து பெறுகின்றனர்; ஏனெனில், அவர்களின் அன்பு திரிபடைந்த பிம்பமாகும். இந்த உலகில் உண்மையான அன்பு இல்லை. இங்கே காமம் மட்டுமே உள்ளது. உண்மையான அன்பு ஆன்மீக உலகில் ராதைக்கும் கிருஷ்ணருக்குமிடையில் உள்ளது. கிருஷ்ணருக்கும் கோபியர்களுக்குமிடையில் உண்மையான காதல் உள்ளது. கிருஷ்ணருக்கும் அவருடைய இடையர்குல நண்பர்களுக்கிடையில் உண்மையான அன்பு உள்ளது. கிருஷ்ணருக்கும் பசுக்கள் மற்றும் கன்றுகளுக்குமிடையில் உண்மையான அன்பு உள்ளது. கிருஷ்ணருக்கும் மரங்கள், மலர்கள் மற்றும் நீருக்குமிடையில் உண்மையான அன்பு உள்ளது. ஆன்மீக உலகில் அனைத்தும் அன்பினால் நிறைந்தவை. ஆனால் இந்த ஜடவுலகினுள் நாம் ஆன்மீக உலகின் பிம்பத்தினால் திருப்தியடைந்து வருகிறோம். நாம் தற்போது இந்த மனிதப் பிறவியை அடைந்துள்ளோம், இந்தப் பிறவியில் கிருஷ்ணரைப் புரிந்துகொள்வோமாக. இதுவே கிருஷ்ண உணர்வாகும்.

நீங்கள் கிருஷ்ணரை தத்துவபூர்வமாக புரிந்துகொள்ள வேண்டும், மேலோட்டமாக அல்ல என்று பகவத் கீதை கூறுகிறது, ஜன்ம கர்ம மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத:. கிருஷ்ண விஞ்ஞானத்தைப் புரிந்துகொள்ளுங்கள். கிருஷ்ணரின்மீது அன்பு செலுத்த முயற்சி செய்யுங்கள் என்பதே அறிவுரையாகும். விக்ரஹத்தை வழிபடுங்கள், பிரசாதம் எடுத்துக்கொள்ளுங்கள், கிருஷ்ணரின் திருநாமங்களை உச்சரியுங்கள், ஆன்மீக குருவின் உபதேசங்களைப் பின்பற்றுங்கள்இதுவே வழிமுறையாகும். இவ்விதமாக நீங்கள் கிருஷ்ணரைப் புரிந்துகொள்வது எவ்வாறு என்பதை கற்றுக்கொள்வீர்கள், அதன் பின்னர் உங்களுடைய வாழ்க்கை வெற்றிகரமானதாகும். இதுவே எங்களுடைய கிருஷ்ண பக்தி இயக்கம். மிக்க நன்றி.

ஆன்மீக குருவானவர் கிருஷ்ண லோகத்திற்கு உயர்வு பெற்று சேவை செய்வதை நினைத்துக் கொண்டிருக்கிறார்.

mm
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

Leave A Comment