கூரத்தாழ்வார் வைபவம்

Must read

வழங்கியவர்: கிருஷ்ண காமினி தேவி தாஸி

ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, சிந்தனைச் செல்வர், தத்துவ மேதை, சமூகப் புரட்சியாளர், மனிதப் பண்புகளின் களஞ்சியம் எனப்படும் ஸ்ரீ இராமானுஜர் அவதரித்தார். அவரது இணையற்ற சீடர்களில், கூரத்தாழ்வார், முதலியாண்டார், பிள்ளை உறங்காவில்லி தாஸர், திருவரங்க அமுதனார், எம்பார், பராசர பட்டர் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில் கூரத்தாழ்வாரைப் பற்றி இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.

தோற்றம்

கூரேசர் எனப்படும் கூரத்தாழ்வார் காஞ்சிக்கு வடமேற்கே சுமார் ஆறு கி.மீ. தூரத்தில் உள்ள கூரம் என்னும் ஊரில், ஹாரீத கோத்ரம், வடமான் குலத்தைச் சேர்ந்த அனந்தர், பெருந்தேவி நாயகி தம்பதியருக்குப் பிறந்தார். இவர் இராமானுஜர் அவதரிப்பதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது கலி யுகம் 4111 சௌம்ய ஆண்டு (1009ஆம் ஆண்டு) தைத் திங்கள், அஸ்த நட்சத்திரம், தேய்பிறை, பஞ்சமி திதி, வியாழனன்று அவதரித்தார். ஸ்ரீவத்ஸாங்க மிஸ்ரர் (திருமருமார்பர்) என்பது இவரின் இயற்பெயர்.

குணநலன்கள்

கூரேசர் ஞானத்திலும் நற்பண்பிலும் நினைவாற்றலிலும் தலைசிறந்தவர். இல்லறப் பற்றற்ற இவர் தமது திருமாளிகையில் இரவுபகலாக அன்னதான சத்திரம் நடத்தியதால், அதன் கதவு “அடையா நெடுங்கதவு” என்று அறியப்பட்டது.

கூரேசரோடு ஒப்பிட்டுச் சொல்ல முன்னும் பின்னும் பக்தர்கள் எவரும் இலர். பகவத் பக்தி, பாகவத பக்தி, ஆச்சாரிய அபிமானம், பௌதிகப் பொருட்களிலும் இல்வாழ்விலும் பற்றின்மை, ஒளிவிடும் புலமை, ஒப்பற்ற நினைவாற்றல், அன்பு, அடக்கம், கருணை போன்ற பல நல்ல குணங்கள் அவருக்கு அழகூட்டும் அணிகலன்களாக இருந்தன.

கூரத்தாழ்வார் தமது மகன்களுடன் (பராஸர பட்டர், வேத வியாஸ பட்டர்)

திருமணம்

ஒருநாள் இரவு கூரேசர் நகர சோதனைக்குச் சென்றபோது, அவ்வூரைச் சேர்ந்த ஆண்டாள் என்னும் கன்னிகையின் பெற்றோர், தமது மகளுக்குத் திருமணமாகி தாம்பத்திய உறவு கொண்டால், கணவரை இழப்பாள் என்ற ஜோதிடரின் கணிப்பால் அவளுக்குத் திருமணமாகவில்லையே என்று கூறிக் கலங்குவதைக் கேட்டார். இல்லறப் பற்றற்றவராயினும், அடுத்த நாளே அப்பெண்ணின் பெற்றோரிடம் பேசி, அக்கன்னிகையை தாமே மணந்து தாம்பத்திய உறவின்றி வாழ்வதாக உறுதியளித்து அவ்வாறே வாழ்ந்து வந்தார். கூரேசரும் ஆண்டாளும், புராணங்கள், இதிகாசங்கள் என சகல சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்த ஆழ்ந்த ஞானமுள்ள வேத வித்துக்களாகத் திகழ்ந்தனர்.

இராமானுஜரின் சீடராதல்

தமது செல்வச் செழிப்பையும் தர்ம சிந்தனையையும் பகவான் வரதர் (காஞ்சி வரதராஜப் பெருமான்) அறிந்து வியப்புற்ற செய்தியை திருக்கச்சி நம்பிகள் மூலம் அறிந்த கூரேசர் மனம் வருந்தி கண்ணீர் விட்டார். பெருமாளே தமது செல்வச் செழிப்பை அறிந்து வியந்ததால், அச்செல்வம் இனி நமக்குத் தகாது என்றெண்ணி செல்வத்தின் பெரும்பகுதியை தானமாக வழங்கி விட்டு, காஞ்சிக்கு வந்து இராமானுஜரை சரணடைந்தார். இராமானுஜரும் அவருக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்வித்து சீடராக ஏற்றுக் கொண்டார். கூரேசர் பின்னாளில் இராமானுஜரின் பவித்திரம் என்று அறியப்பட்டார்.

இராமானுஜர் சபைக்குச் சென்றால் ஆபத்து ஏற்படலாம் என்று எண்ணி, அவருடைய காவி உடைகளை அணிந்து கொண்டு கூரத்தாழ்வார் புறப்படுதல்.

பொன்வட்டிலை ஏரியில் எறிதல்

கூரேசர் ஆண்டாளைப் பிரிந்து வாழ்வதை அறிந்த இராமானுஜர் ஆண்டாளை அழைத்துக் கொண்டு திருவரங்கம் வருமாறு பணித்தார். உடனே கூரேசரும் கூரம் சென்று, எஞ்சியிருந்த செல்வங்களையும் தானமாக வழங்கிவிட்டு, மனைவியுடன் திருவரங்கம் திரும்பினார். வழியில் மதுராந்தகம் அருகே காட்டில் நடந்து வந்தபொழுது, ஆண்டாள், “பயமாக இருக்கிறது” என்றாள். கூரேசர், “மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம், ஏதாவது வைத்திருக்கிறாயா?” என்று வினவினார். அதற்கு ஆண்டாள், “தேவரீர் அமுது செய்ய ஒரே ஒரு பொன்வட்டிலை மட்டும் எடுத்து வந்தேன்,” என்றாள். உடனே, கூரேசர் அதனை வாங்கி அருகில் வீசிவிட்டு, “இனி பயமின்றி நட” என்று சொன்னார். அதனாலேயே கூரேசர், பொன்வட்டில் தனையெறிந்த புகழுடையோன் வாழியே என புகழப்பட்டார்.

ஆண்டாள் பெற்ற அரவணை பிரசாதம்

கூரேசர் செல்வச் செழிப்புடன் ஒரு மன்னரைப் போல வாழ்ந்து வந்தார். ஆயினும், இராமானுஜரை சரணடைந்த பின்னர், உஞ்சவிருத்தியெடுத்து அதனைச் சமைத்து பாகவதர்களுக்கு அளித்து தாமும் அமுது செய்து வந்தார்.

ஒருநாள் இராமாயண கிரந்த சேவையில் இருந்ததால், அவர் உஞ்சவிருத்திக்குச் செல்லவில்லை. உஞ்சவிருத்திக்குச் செல்லாததால் உணவேதும் உட்கொள்ளவில்லை. உண்ணும் சோறு, பருகும் நீர் எல்லாமே கண்ணன் என்ற உணர்வோடு பகவானின் மீது பாசுரங்கள் சிலவற்றை பக்தியோடு பாடிவிட்டு பட்டினியுடனே படுத்துக் கொண்டார்.

ஆண்டாள் தான் பட்டினியுடன் இருப்பதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் தனது கணவர் பட்டினியோடு இருப்பதை அப்பதிவிரதையால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அன்னசாலை வைத்து அனுதினமும் ஆயிரக்கணக்கானோரின் பசியைப் போக்கி, செல்வச் சீமானாகத் தங்கத்தட்டிலே உணவருந்திய தமது கணவர், பசியுடன் படுத்துக் கொண்டதைக் கண்டு கூரேசரின் மனைவி கண்ணீர் வடித்தாள். அப்போது திருவரங்கன் அரவணை அமுது செய்யும் மணியோசை கேட்டது. உடனே ஆண்டாள், “பிரபோ! அரங்கநாதா! குழந்தைகள் பசித்திருக்க தாய்தந்தை அமுது செய்வரோ? உம்மையே நம்பி உமக்கே ஆட்செய்யும் உமது பக்தர் இங்கே பட்டினிகிடக்க, நீர் அமுது செய்தருளுகிறீர் போலும்,” என்று நினைத்தாள்.

மாயனான திருவரங்கன் அக்கணமே அதனை உணர்ந்து, உடனே அர்ச்சகர் மூலம் ஆவேசித்து, குடை, சாமர வாத்தியங்களுடன் தமது அரவணை பிரசாதத்தை கூரத்தாழ்வார் திருமாளிகையில் சேர்க்கச் சொன்னார். அதன்படி, உத்தம நம்பி என்ற கோயில் மேற்பார்வையாளர் சகல மரியாதைகளுடன் கூரத்தாழ்வாரின் இல்லத்திற்கு வந்தார். வாத்ய ஒலி கேட்டு “பெருமாள் புறப்பாடாகி வருகிறார்” என்று எண்ணி, கூரேசர் திடுக்கிட்டு எழுந்தார். ஆயினும், வெளியில் வந்தபோது, உத்தம நம்பி அவரிடம் அரங்கனின் அரவணை பிரசாதக் கூடையை கும்பிட்டுக் கொடுத்தார். ஏதும் புரியாத கூரத்தாழ்வார் அதனை, மஹா பிரசாதம் என்று கூறி, அதில் தனக்கும் பத்தினிக்குமாக இரண்டு பிடிகள் மட்டும் பக்தியுடன் பெற்றுக் கொண்டார்.

உத்தம நம்பி சென்ற பின்னர் கூரேசர் தம் மனைவியிடம் “இன்றைய தினம் பெருமாளின் கருணை இவ்விதமிருக்க யாது காரணம்? நீ ஏதாவது நினைத்தாயா?” என்று வினவ, ஆண்டாளும் தான் எண்ணியதைச் சொன்னாள். ஆழ்வார் வருந்தினார்: “என்னைக் காப்பாற்று என்று குழந்தைகள் தாயாரிடம் கேட்க வேண்டுமா? கருணைக் கடலான பகவான் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும் என்று பக்தன் திடமான விசுவாசத்தைக் காட்ட வேண்டும். உலகத்திற்கே படியளக்கும் பிரபு தமது அடியார்களை மறந்து விடுவாரோ?” இவ்வாறு கூறிவிட்டு, கூரேசர் அரவணை பிரசாதத்தில் ஒரு சிறு பகுதியை மட்டும் தாம் எடுத்துக் கொண்டு மீதியை மனைவிக்குக் கொடுத்தார்.

முன்பு மாமன்னர் தசரதருக்கு புத்திர காமேஷ்டி யாகத்தில் கிடைத்த பாயாசத்தின் மூலமாக, இராமர், இலட்சுமணர், பரதர், சத்ருக்னர் ஆகிய நால்வரும் எவ்வாறு அவதரித்தனரோ, அவ்வாறே ஆண்டாள் அமுது செய்த அவ்விரு பகுதி அரவணை பிரசாதத்தினால் ஐய்யிரு திங்களில் இரண்டு திருக்குமாரர்கள் அவதரித்தனர். செய்தியறிந்து குதூகலப்பட்ட இராமானுஜர் குழந்தைகளைக் கண்குளிர நோக்கி, மிகுந்த மகிழ்ச்சியுடன் தமது திருக்கரங்களால் அவர்களைத் தூக்கிக் கொஞ்சினார். அக்குழந்தைகளுக்கு ‘பராஸர பட்டர்,’ ‘வேத வியாஸ பட்டர்’ என்று பெயரிட்டார். அதன் மூலம், அவர் ஆளவந்தாரின் விருப்பத்தை பூர்த்தி செய்தார். விஷ்ணு புராணம் அருளிய பராசரர், மஹாபாரதம் அருளிய வேத வியாஸர் ஆகிய இருவரின் பெயர்களை தகுதியுள்ளோருக்குச் சூட்டி பெருமை சேர்க்க வேண்டும் என்பதே ஆளவந்தாரின் அந்த விருப்பம்.

இராமானுஜர் கூரத்தாழ்வாரை காஞ்சிபுரம் சென்று, வரதராஜரிடம் கண்களை வேண்டுமாறு கூறுதல்.

சோழ மன்னனின் சதித்திட்டம்

இராமானுஜராலும், அவரது ஸ்ரீ-பாஷ்யத்தாலும், அவரது சீடர் குழுவாலும் வைஷ்ணவம் செழித்து ஓங்கியது. இதைக் கண்ட சிவ பக்தனான சோழ மன்னன் மிகவும் பொறாமை கொண்டு, சைவ சமயத்தை அரசாங்க சமயமாக்கினான். வைஷ்ணவத்தை அழிப்பதற்காகப் பல இடையூறுகளைச் செய்தான்.

அவன் மற்ற சமயத் தலைவர்களையும் பண்டிதர்களையும் பயமுறுத்தி, ஷிவாத் பரதரம் நாஸ்தி (சிவனுக்கு மேலான பரம்பொருள் இல்லை) என்று எழுதி அவர்களிடம் கையொப்பம் பெற்றான். அப்போது அங்கிருந்த நாலூரான் என்பவன், “பிரபோ! பல்லாயிரம் பண்டிதர்களிடம் கையொப்பம் பெற்று என்ன பயன்? வையகம் முழுவதும் வைஷ்ணவம் செழிக்கச் செய்து திருவரங்கத்தில் இருக்கும் இராமானுஜர் கையொப்பம் இட்டாலன்றி பரமசிவன் பரம்பொருளாக மாட்டார், தங்களின் மனோரதமும் நிறைவேறாது,” என்றான். உடனே, அரசன் திருவரங்கத்திற்கு ஆட்களை அனுப்பி இராமானுஜரைக் கையோடு அழைத்துவர உத்தரவிட்டான். இராமானுஜர் கையொப்பமிடாவிடில் அவரைக் கொல்வதென்று மனதிற்குள் முடிவு செய்தான்.

கூரத்தாழ்வார் அரசவைக்குப் புறப்படுதல்

அரசனின் காரணத்தை நொடியில் புரிந்து கொண்ட கூரத்தாழ்வார், இராமானுஜர் சபைக்குச் சென்றால் அவருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று எண்ணி, அவருக்கு பதிலாக தாமே செல்லலாம் என்று முடிவு செய்தார்.

அச்சமயம் நீராடச் சென்றிருந்த இராமானுஜரிடம் சொல்லிக்கொள்ளாது, அவரது காவி உடைகளை கூரத்தாழ்வார் அணிந்து கொண்டார். அங்கிருந்த மற்ற சீடர்களிடம், “உடனே எம்பெருமானாரை (இராமானுஜர்) அழைத்துக் கொண்டு வெளிதேசம் சென்று விடுங்கள்” என்று கூறிவிட்டு, முக்கோல் தரித்து, தாமே இராமானுஜர் என்று அரசனின் ஆட்களை நம்ப வைத்து அரசவைக்குப் புறப்பட்டார். அவர் தனியே செல்வது உகந்ததல்ல என்று கருதிய நூறு வயதான பெரியநம்பிகளும் கூரத்தாழ்வாரைத் தொடர்ந்தார்.

நீராடித் திரும்பிய இராமானுஜர் செய்தியறிந்து, தம் பொருட்டு பெரிய நம்பிகளும் கூரத்தாழ்வாரும் ஆபத்தை எதிர்கொள்வதை நினைத்து அனலில் இட்ட புழுவாய் துடித்தார். சீடர்களோ, “அழைத்து வரப்பட்டது இராமானுஜர் அல்ல என்று தெரிந்தவுடன் அரசன் விட்டுவிடுவான், ஆழ்வாரும் பெரியநம்பிகளும் தீங்கின்றித் திரும்புவர்,” என்று கூறி, இராமானுஜரை சமாதானப்படுத்தினர். எனினும், கூரத்தாழ்வார் சொன்னதுபோல், இராமானுஜர் வெளிதேசம் செல்வது நல்லது என்று பிரார்த்தித்தனர். அதன்படி, தமது உள்ளம் ஒப்பாவிடினும், “அரங்கனின் திருவுள்ளம்” என்று எண்ணிய இராமானுஜர் தமது காவி உடையின் மேல் வெள்ளை உடையை அணிந்து கொண்டு சீடர் குழுவுடன் எண்பதாம் வயதில் (1097ஆம் ஆண்டு) திருவரங்கத்தை விட்டு மேல்திசை நோக்கிப் பயணமானார்.

காவியுடை, திரிதண்டத்துடன் அவைக்கு வந்த கூரத்தாழ்வாரை இராமானுஜர் எனக் கருதிய சோழ மன்னன், அவரிடம், ஷிவாத் பரதரம் நாஸ்தி என்று எழுதிய ஓலையில் கையொப்பமிடச் சொன்னான். அப்போது நாலூரான் கூறினான், “இவர் இராமானுஜர் அல்லர். இருப்பினும், இராமானுஜரின் இன்னொரு உரு என்பதால், இவர் கையொப்பம் இட்டாலே இராமானுஜர் கையொப்பமிட்டதற்கு சமம்.”

கூரத்தாழ்வார் கூறினார், “பரம்பொருளை நாமாக நிர்ணயம் செய்ய இயலாது. இவ்வுலகைக் காண கண்கள் எவ்வளவு முக்கியமோ அதுபோல் பரம்பொருளைக் காண சாஸ்திரங்கள் முக்கியம். சாஸ்திரங்களை அறிந்த அவைச் சான்றோர்களை எம்முடன் வாதிடச் சொல்லுங்கள். சாஸ்திர பிரமாணங்களைக் காட்டி வாதிட்டால், அவை யாரை பரம்பொருளாகக் கூறுகின்றன என்பதைத் தெளிவுபடத் தெரிந்துகொள்ளலாம்.” அதன் பின்னர், கூரத்தாழ்வார் ஒரு வார காலம் அச்சபையில் ஸ்ரீமந் நாராயணரே பரம்பொருள் என வாதிட்டார். அங்கிருந்த பெரியநம்பிகளும் பல பிரமாணங்களைக் காட்டி விஷ்ணுவே பரம்பொருள் என்பதை நிலைநாட்டினார். சோழனின் அரசவைப் புலவர்கள் எதிர்வாதம் செய்ய இயலாது தலைகுனிந்தனர். அதைக் கண்ட அரசனின் கோபம் எல்லை கடந்தது. “இந்த அந்தணர்களின் கண்களைப் பிடுங்கி அந்தகர்களாக்கி (குருடர்களாக்கி) அனுப்பி விடுங்கள்,” என்று அரசன் தனது ஆட்களுக்கு உத்தரவிட்டான்.

அதற்கு கூரத்தாழ்வார், “உன்னைப் போன்ற பகவத் துவேசியைக் கண்ட கண்கள் எனக்கு வேண்டாம். நானே பிடுங்கி எறிகிறேன்,” என்று கூறி, கண்களைப் பிடுங்கி அரசன் மேல் எறிந்தார், பெரிய நம்பிகளின் கண்கள் சிப்பாய்களால் பிடுங்கப்பட்டன. கண்களை இழந்த கூரத்தாழ்வாரும் பெரிய நம்பிகளும் அதனை துச்சமென எண்ணி, இந்தப் புறக்கண்கள் போனால் என்ன? இராமானுஜரை சோழனிடமிருந்து எவ்வித இடையூறுமின்றி தப்பிவித்தோம் என்று மகிழ்ந்தனர்.

கண்களை மீண்டும் பெறுதல்

கண்களை இழந்ததால் நோய்வாய்ப்பட்ட பெரிய நம்பிகள் அவையிலிருந்து திரும்பும் வழியில் பரமபதம் எய்தினார். சோழன் இழைத்த குற்றத்தினால், அவன் உடல் முழுவதையும் கிருமிகள் ஆட்கொள்ளத் தொடங்கின, படிப்படியாகச் சீர்கெட்டு மடிந்தான், இராமானுஜர் மீண்டும் திருவரங்கம் திரும்பினார். இராமானுஜர் கூரத்தாழ்வாரை காஞ்சிபுரம் அனுப்பி வைத்து, வரதராஜரிடம் கண்களை வேண்டுமாறு கூறினார். ஆழ்வாரோ அங்குச் சென்று, “அறியாமையில் தவறிழைத்த அந்த சோழ மன்னனுக்கு மோக்ஷம் தாருங்கள்,” என்று வரம் கேட்டு திரும்பி வந்தார்.

தனக்கென்று எதையும் வேண்ட விரும்பாத கூரத்தாழ்வாரின் பக்தியை மெச்சிய இராமானுஜர், அவரை மீண்டும் காஞ்சிபுரத்திற்கு அனுப்பி வைத்து, “இராமானுஜர் தமது சீடர் கூரத்தாழ்வானுக்குக் கண்களை மீட்டுத்தர விரும்புகிறார்,” என்று வேண்டச் செய்தார். அதன்படி, கூரத்தாழ்வார் மீண்டும் கண்களைப் பெற்றார்.

மறைவு

“இராமானுஜரை வைகுண்டத்தில் எதிர்கொள்ள அவருக்கு முன்பாக பரமபதம் செல்ல வேண்டும்,” என்று கூரத்தாழ்வார் திருவரங்கனிடம் வேண்டினார். அரங்கனும், “உமக்கு பரமபதம் தந்தோம். உம்முடன் தொடர்புடையோருக்கும் உமது திருநாமம் சொல்வோருக்கும் பரமபதம் அளிப்போம்,” என்று திருவாய் மலர்ந்தருளினார். பின்னர், கூரத்தாழ்வார் தமது 124ஆம் வயதில் (1133 ஆம் ஆண்டில்) பரமபதம் எழுந்தருளினார்.

இயற்றிய நூல்கள்

கூரத்தாழ்வார் திருமாலிருஞ்சோலைச் செல்லும் வழியில், ஸ்ரீ-வைகுண்ட ஸ்தவம், அதிமானுஷ ஸ்தவம் ஆகிய சொற்சுவையும் பொருட்சுவையும் கொண்ட அரிய நூல்களை அருளினார். மேலும், ஸ்ரீ ஸ்தவம், ஸ்ரீ-சுந்தர பாஹு ஸ்தவம், காஞ்சி வரதரை பிரார்த்தித்து ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் ஆகிய நூல்களையும் அருளினார். இந்த ஐந்து நூல்களும் பஞ்ச ஸ்தவங்கள் என்று புகழ்பெற்றன. அவை மட்டுமின்றி, அபிக மனஸாரம், புருஷ-ஷுக்த பாஷ்யம், ஸாரீரக ஸாரம் ஆகிய நூல்களையும் அருளி கூரத்தாழ்வார் வைஷ்ணவ உலகிற்குத் தொண்டாற்றினார்.

சாஸ்திரங்களைப் படித்து சரணாகதி என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள இயலாதவர்கள் கூரத்தாழ்வாரின் வரலாற்றைப் படித்தறிந்தால் அதனை தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும். சரணாகதி நிஷ்டைக்கு மிகச்சிறந்த உதாரணம் கூரத்தாழ்வார்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives