வழங்கியவர்: ஜீவன கெளரஹரி தாஸ்

பிறப்பு, இறப்பு என்னும் சக்கரத்தில் சிக்கித் தவிக்கும் கலி யுக மக்களுக்கு ஒரு நற்செய்தி. பகவான் கிருஷ்ணரின் லீலைகளைச் செவியுறுவதன் மூலமாக நாம் வாழ்வின் பந்தத்திலிருந்து எளிதில் விடுபட இயலும். கிருஷ்ணர் தெய்வீக ரஸங்களை அனுபவிப்பதற்காக தம்மை எண்ணற்ற ரூபங்களில் விரிவுபடுத்திக் கொண்டு பல்வேறு லீலைகளைப் புரிகின்றார். அந்த லீலைகள் அனைத்தும் நம்மைப் போன்ற கட்டுண்ட ஆத்மாக்களை பிறவித் துயரிலிருந்து விடுவிப்பவை. அசுரர்களைக் கொல்லும் லீலையாக இருந்தாலும், பக்தர்களுடனான அன்புப் பரிமாற்ற லீலையாக இருந்தாலும், அவர் வழங்கும் உபதேசமாக இருந்தாலும், அவரது திருமண லீலையாக இருந்தாலும், அவை அனைத்தும் நம்மை மேம்படுத்தக்கூடியவை.

அதன்படி, கலி யுக மக்களை உய்விக்கும் வண்ணம் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை பரப்புவதற்காகத் தோன்றிய சைதன்ய மஹாபிரபுவின் எல்லா தெய்வீக லீலைகளையும் நாம் அறிவது சாலச் சிறந்தது. மற்றெல்லா அவதாரங்களைக் காட்டிலும் மாபெரும் கருணை வாய்ந்த அவதாரமான சைதன்ய மஹாபிரபுவின் தெய்வீகத் திருமண வைபவங்களை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

தெய்வீகத் திருமண லீலை

பகவான் தமது துணைவியர்களுடன் (அந்தரங்க சக்தி) நிகழ்த்தும் லீலைகள் தெய்வீகத்தின் மிகவுயர்ந்த தளத்தில் உள்ளன என்பது ஆச்சாரியர்களின் கருத்தாகும். ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் பகவான் நாராயணரின் துணைவியர்களாவர்; ருக்மிணி, சத்யபாமா முதலியோர் கிருஷ்ணரின் துணைவியர்களாவர்; பகவான் சைதன்யர் தமது அவதாரத்தில் தெய்வீகத் திருமண லீலைகளின் மூலமாக தமது துணைவியர்களான லக்ஷ்மிபிரியா, விஷ்ணுபிரியா ஆகியோரின் கரம் பற்றுகிறார். பகவான் மற்றும் அவரது அந்தரங்க சக்திகளின் புகழ்பாடுவதாக இந்த தெய்வீகத் திருமண லீலை அமைகிறது.

சைதன்ய மஹாபிரபு லஷ்மிபிரியாவை மணமுடித்தல்

சமஸ்கிருத பாடம்

பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு 1486இல் ஜகந்நாத மிஸ்ரருக்கும் ஸச்சிதேவிக்கும் மகனாக மாயாபுரில் அவதரித்தார். அவருக்கு நிமாய், விஸ்வம்பரர், கெளராங்கர், ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் என பல திருநாமங்கள் உள்ளன. குழந்தைப் பருவத்தில் நிமாய் கங்காதாஸ பண்டிதரின் குருகுலத்தில் கல்வி பயின்றார். அதன் பின்னர், ஸஞ்ஜய முகுந்தரின் இல்லத்தில் மாணவர்களுக்கு சமஸ்கிருத இலக்கணத்தை பயிற்றுவித்து வந்தார். நிமாய் பண்டிதரின் புலமையைக் கண்ட நவத்வீப மாணவர்கள் அவரிடமிருந்து சமஸ்கிருத இலக்கணத்தைக் கற்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர்.

லக்ஷ்மிபிரியா சைதன்ய மஹாபிரபுவை வழிபடுதல்

லக்ஷ்மிபிரியாவைச் சந்தித்தல்

இத்தகைய தருணத்தில் நிமாய் பண்டிதரின் தந்தையான ஸ்ரீ ஜகந்நாத மிஸ்ரர் ஆன்மீக உலகை அடைந்தார் (காலமானார்). தந்தையற்ற மகனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் நிமாய் பண்டிதரின் அன்னையான ஸச்சிதேவி ஆழ்ந்திருந்தார்.

சைதன்ய மஹாபிரபு ஒருநாள் கங்கைக் கரையில் நடந்து சென்றபோது, தமது அந்தரங்க சக்தியின் ஏற்பாட்டினால் லக்ஷ்மிபிரியாவைக் கண்டார். முதல்முறையாக சைதன்ய மஹாபிரபுவைக் கண்ட லக்ஷ்மிபிரியா தனது ஆழ்மனதில் அவரது திருப்பாதத்திற்கு மரியாதை செலுத்தினாள். இச்சம்பவம் நடந்த சில நாள்களிலேயே நவத்வீப நகரின் திருமண தரகரான வனமாலி பண்டிதர் அன்னை ஸச்சிதேவியை சந்தித்து வல்லப மிஸ்ரரின் மகளான லக்ஷ்மிபிரியாவை நிமாய் பண்டிதருக்கு மணமுடிக்க முன்மொழிந்தார்.

அன்னை ஸச்சிதேவி சிறிது காலம் செல்லட்டும் என பதிலுரைக்க, வனமாலி பண்டிதர் ஏமாற்றத்துடன் அவ்விடத்திலிருந்து சென்றார். அனைவரின் இதயத்திலும் பரமாத்மா ரூபத்தில் வீற்றிருக்கும் சைதன்ய மஹாபிரபு நடந்தவை அனைத்தையும் நன்கறிவார். வனமாலி பண்டிதரை வழியில் சந்தித்து வருத்தத்திற்கான காரணத்தைக் கேட்டறிந்தார்.

அன்னையின் சம்மதம்

இல்லம் திரும்பிய சைதன்ய மஹாபிரபு ஸச்சிதேவியிடம், “வரும் வழியில் வனமாலி பண்டிதரை சந்தித்தேன். அவர் ஏமாற்ற உணர்வில் இருக்கிறார்,” என தெரிவித்தார். தனது மகனின் விருப்பத்தை சூசகமாகப் புரிந்து கொண்ட அன்னை ஸச்சிதேவி, வனமாலி பண்டிதரை அழைத்து திருமண ஏற்பாடுகளைத் தொடங்குமாறு அறிவுறுத்தினாள்.

வனமாலி பண்டிதரும் உடனடியாக வல்லப மிஸ்ரரின் இல்லத்திற்கு விரைந்து சைதன்ய மஹாபிரபுவின் பாண்டித்துவத்தையும் புகழையும் எடுத்துரைத்தார். மேலும், சைதன்ய மஹாபிரபுவின் அழகு, கடல் போன்ற நற்குணங்கள், மனோநிலை முதலியவை அவரது மகளுக்கு மிகவும் பொருத்தமாக அமையும் என தெரிவித்தார். அதைக் கேட்ட வல்லப மிஸ்ரர், “நான் ஏழை பிராமணன் என்றபோதிலும், மிகவுயர்ந்த ஆபரணமான என் மகள் லக்ஷ்மிபிரியாவை நிமாய் பண்டிதருக்கு மணமுடிக்க முழுமையாக சம்மதிக்கிறேன்,” என தனது விருப்பத்தைத் தெரிவித்தார். வனமாலி பண்டிதர் உடனடியாக தடபுடலான திருமண ஏற்பாட்டிற்கு வழிவகுத்தார்.

சைதன்ய மஹாபிரபுவிற்கும் விஷ்ணுபிரியாவிற்கும் நடைபெற்ற விமரிசையான திருமணம்

மணகோலம்

நிமாய் ஆடம்பரமான பல்லக்கில் பிராமணர்கள் புடை சூழ, சங்கு முழங்க, பதினெட்டு இசைக் கருவிகள் இசைக்க நவத்வீப வீதியில் பவனி வந்தார். நவத்வீப மக்கள் அனைவரும் ஒன்றுகூடி நிமாய் பண்டிதருக்கு சிறப்பான வரவேற்பை வழங்கினர், அதன் விளைவாக கிருஷ்ண பிரேமையில் மூழ்கினர்.

அக்னி குண்டத்திற்கு முன் அழைத்து வரப்பட்ட லக்ஷ்மிபிரியா, சைதன்ய மஹாபிரபுவை ஏழு முறை வலம்வந்து தன்னை முழுமையாக அவரது பாதத்தில் சமர்ப்பித்தாள். திருமணத்திற்குப் பிறகு அவர்களது பொருத்தத்தை நவத்வீப மக்கள் வெகுவாகப் புகழ்ந்தனர். அவர்கள் இல்லற கடமைகளை நிறைவேற்றுவதில் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்தனர்.

வங்கதேச பயணம்

சிறிது காலத்திற்கு பிறகு பகவான் சைதன்யர் லக்ஷ்மிபிரியாவை அன்னை ஸச்சிதேவியின் பொறுப்பில் விட்டுவிட்டு, பொருள் ஈட்டுவதற்காக கிழக்கு வங்காளத்திற்கு (தற்போதைய வங்கதேசம்) சென்றார். அவர் வங்கதேசத்தில் தமது மூதாதையர்களின் இல்லம், பத்மா நதி, சில்லட், ஸ்ரீஹட்டா முதலிய இடங்களுக்கு விஜயம் செய்தார். அவர் சென்ற இடமெல்லாம் மாணவர்களின் கூட்டம் அலைமோதியது. சைதன்ய மஹாபிரபு அங்கு வந்துள்ள செய்தியை அறிந்த பலர் தங்களது குழந்தைகளை அவரிடம் கல்வி கற்க அனுப்பி வைப்பதில் போட்டியிட்டனர். சைதன்ய மஹாபிரபு கிருஷ்ண பக்தியின் சிறப்பையும் அருவவாதத்தின் தீமைகளையும் வலுவாக பிரச்சாரம் செய்தார்; ஹரி நாமத்தின் மகிமைகளையும் வெகுவாகப் பரப்பினார்.

லக்ஷ்மிபிரியாவின் மறைவு

ஆயினும், இங்கே நவத்வீபத்தில் சைதன்ய மஹாபிரபுவின் பிரிவுத் துயரை லக்ஷ்மிபிரியாவினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த பிரிவுத் துயர் ஒரு பாம்பின் வடிவினை ஏற்று, லக்ஷ்மிபிரியாவினைத் தீண்ட, அவள் ஆன்மீக உலகை அடைந்தாள். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு வங்கதேசத்திலிருந்து திரும்பி வந்து இச்செய்தியைச் செவியுற்றபோது, அரைமணி நேர காலத்திற்கு சாதாரண மனிதர்களைப் போன்று துயர உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார்.

அன்னையின் கவலை

காலப்போக்கில், அன்னை ஸச்சிதேவி தமது மகனான நிமாய் பண்டிதருக்கு இரண்டாவது திருமண ஏற்பாடுகளைச் செய்வதில் கவலையும் கவனமும் கொண்டிருந்தாள். ஒருநாள் அன்னை ஸச்சிதேவி ராஜ பண்டிதரான ஸநாதன மிஸ்ரரின் மகளான விஷ்ணுபிரியாவை தமது மகனுக்கு மணமுடிக்கும் விருப்பத்தை காசிநாத பண்டிதரிடம் தெரிவித்தார். காசிநாத பண்டிதர் உடனடியாக ஸநாதன மிஸ்ரரை அணுகி அவரது மகளை நிமாயிக்கு மணமுடிக்க முன்மொழிந்தார். நிமாய் பண்டிதரின் புகழை நன்கறிந்த ஸநாதன மிஸ்ரர் திருமணத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளித்தார்.

இச்செய்தியைக் கேட்டு நிமாய் பண்டிதரின் அண்டை வீட்டுக்காரரான புத்திமந்தகான் திருமணத்திற்கான மொத்த செலவையும் தாமே ஏற்பதாகவும், திருமணத்தை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யலாம் என்றும் தெரிவித்தார்.

நிமாய்-விஷ்ணுபிரியா திருமணம்

நிமாய்-விஷ்ணுபிரியா திருமணம் தேவலோகவாசிகளையே வியப்பூட்டும் வகையில் ஆடம்பரமாக அமைந்தது. லக்ஷ்மிபிரியா திருமணத்தைப் போல இத்திருமணத்திலும் தேவர்கள் மனித ரூபத்தில் கலந்து கொண்டனர். பிராமணர்கள் வேத மந்திரங்களை ஓத, நிமாய் வைஷ்ணவர்களின் மத்தியில் கம்பீரமாக அமர்ந்திருந்தார். யோக மாயையின் சக்தியினால் நவத்வீப மக்கள் கிருஷ்ண பிரேமையில் முழுமையாக மூழ்கி மற்றவர்களை அடையாளம் காணாத அளவிற்கு பரவச நிலையை அடைந்தனர்.

இத்திருமணத்தில் கலந்து கொண்ட இலட்சக்கணக்கான விருந்தினர்களுக்கும் சந்தனம் மற்றும் மலர்மாலை அணிவிக்கப்பட்டது. ஹரியின் நாமம் நவத்வீபம் முழுவதும் விண்ணைப் பிளக்கும் அளவிற்கு ஒலித்தது. திருமண நிகழ்ச்சியில் அனைவருக்கும் பல வகையான உணவு பதார்த்தங்கள் வர்ணிக்க முடியாத அளவிற்கு பரிமாறப்பட்டன. பெண்கள் மங்கலகரமான பஜனை பாடல்களைப் பாடி ஆடி கெளராங்கரை மகிழ்வித்தனர். தேவர்கள் மலர்மாரி பொழிய, வாத்தியங்கள் ஒலி எழுப்ப, நடன கலைஞர்கள் நடனமாட, ஹரி நாமம் அனைவரின் காதுகளிலும் ஒலித்துக் கொண்டே இருந்தது. நவத்வீபத்தில் இருந்த அனைத்து குழந்தைகளும் நாம ஸங்கீர்த்தனத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

நவத்வீப மக்களின் பரவசம்

சைதன்ய மஹாபிரபுவும் விஷ்ணுபிரியாவும் ஒரே பல்லக்கில் அமர வைக்கப்பட்டு கங்கை நதிக்கரையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட தருணத்தில், மலர்கள் கங்கை நீரை (கண்களுக்கெட்டிய தூரம் வரை) அலங்கரித்துக் கொண்டிருந்தன. இம்மாதிரியான ஆடம்பர திருமணத்தை இதற்கு முன் கண்டதில்லை என நவத்வீப மக்கள் பேசிக் கொண்டனர். கிருஷ்ணரின் மனைவியான சத்யபாமா சைதன்ய மஹாபிரபுவின் லீலையில் விஷ்ணுபிரியாவாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இவர்கள் இருவரின் அழகைப் பார்த்தவர்கள், ரதி-காமதேவன், ஸச்சி-இந்திரன், சீதா-இராமர், பார்வதி-சிவபெருமான், லக்ஷ்மி-நாராயணர் ஆகியோரைப் போன்று தோற்றமளிப்பதாக வர்ணித்தனர். நவத்வீப மக்கள் அனுபவித்த பரவசத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என சைதன்ய பாகவதத்தை இயற்றிய விருந்தாவன தாஸ தாகூர் பணிவுடன் தெரிவிக்கிறார். நவத்வீப மக்கள் சைதன்ய மஹாபிரபுவின் புகழ், அழகு, திருமண வைபவங்கள் முதலிய லீலைகளில் முழுமையாக மூழ்கியிருந்ததால் அனைவரும் இயற்கையாகவே முக்தியின் நிலையை வெளிப்படுத்தினர். சைதன்ய மஹாபிரபுவின் தெய்வீகத் திருமண லீலையில் மூழ்குவதால் கிடைக்கக்கூடிய கிருஷ்ண பிரேமையை நவத்வீப மக்கள் மற்றவர்களுக்கும் விநியோகம் செய்தனர்.

விஷ்ணுபிரியாவின் தீவிர பக்தி

விஷ்ணுபிரியா எந்நேரத்திலும் சைதன்ய மஹாபிரபுவிற்கு சேவை செய்வதில் மிகவும் விழிப்புடன் இருந்தாள். விஷ்ணுபிரியாவின் தீவிர பக்தி அன்னை ஸச்சிதேவியை மெய்சிலிர்க்க வைத்தது. விஷ்ணுபிரியாவின் பதிவிரதத்திற்கு அவர்களது இல்லத்து சேவகர்களான வம்சிவதன தாகூரும், ஈஷான தாகூரும் பெரும் துணையாக இருந்தனர். சைதன்ய மஹாபிரபு கயாவிற்கு பயணம்செய்து தமது குருவான ஈஸ்வர புரியிடம் தீக்ஷை பெற்ற பிறகு அவரது செயல்களில் கடலளவு மாற்றம் தென்பட்டது.

அவர் எப்போதும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரித்தபடி, கிருஷ்ண பிரேமையில் மூழ்கியவராகக் காணப்பட்டார். நவத்வீபத்தின் இதர வைஷ்ணவர்களுடன் இணைந்து ஹரி நாம ஸங்கீர்த்தனத்தை எல்லா இடங்களிலும் பரப்பத் தொடங்கினார். கலி யுக ஆத்மாக்களை விடுவிப்பதற்கான பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டார், விஷ்ணுபிரியா அவருக்கு பல்வேறு வழிகளில் உதவி புரிந்தாள்.

நவத்வீபத்தின் தாமேஸ்வரர் கோயிலிலுள்ள மஹாபிரபுவின் விக்ரஹம்

சைதன்யரின் சந்நியாசம்

சைதன்ய மஹாபிரபு தமது இருபத்துநான்காவது வயதில் சந்நியாசம் பூண்டபோது விஷ்ணுபிரியாவின் வயது 16. விஷ்ணுபிரியா பூமியில் 96 வருடம் லீலை புரிந்தாள். அதில் 80 வருடம் பிரிவில் பக்தி செய்யக்கூடிய உயர்ந்த சித்தாந்தத்தை உலக மக்களுக்கு எடுத்துக்காட்டினாள். சந்நியாசம் ஏற்ற பிறகு சைதன்ய மஹாபிரபு நாம ஸங்கீர்த்தன இயக்கத்தை பெரிய அளவில் தொடங்கினார். விஷ்ணுபிரியாவின் தியாக உணர்வே கிருஷ்ண பக்தி இயக்கம் பரவுவதற்கு அடித்தளமாக அமைந்தது. விஷ்ணுபிரியாவினால் வழிபடப்பட்ட சைதன்ய மஹாபிரபுவின் விக்ரஹத்தினை இன்றும் நவத்வீபத்திலுள்ள தாமேஸ்வரர் கோயிலில் காணலாம்.

சைதன்ய மஹாபிரபுவின் இந்த திருமண வைபவங்களை தியானிப்பதன் மூலம் ஒருவர் எளிதாக பெளதிக பந்தத்திலிருந்து விடுபடலாம்.