சிவபெருமான் சாந்தமடைதல்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: நான்காம் ஸ்கந்தம், அத்தியாயம் 6-7

சென்ற இதழில் சதி தனது தந்தையின் யாகத்திற்குச் சென்றது, யாக சாலையில் சதி சரீரத்தை துறந்தது, தக்ஷனின் யாகம் தடைபட்டது ஆகியவற்றைக் கண்டோம். இந்த இதழில் பிரம்மதேவர் சிவபெருமானை சாந்தப்படுத்துல், தக்ஷனின் யாகம் நிறைவேறுதல் ஆகியவற்றைக் காண்போம்.

பிரம்மதேவரின் அறிவுரை

ருத்ர கணங்களால் தாக்கப்பட்ட புரோகிதர்களும் தேவர்களும் மிகுந்த பயத்துடன் பிரம்மதேவரிடம் சென்று முறையிட, பிரம்மதேவர் பதிலளித்தார், சிவபெருமானுக்கு வேள்வியின் அவிர்பாகத்தை வழங்காமல் பெறும் தவறை இழைத்துவிட்டீர்கள். இருப்பினும், அவர் எளிதில் திருப்தியுறும் தன்மை கொண்டவர் என்பதால், அவரது திருவடிகளைப் பற்றி மன்னிப்பு கோருங்கள். தக்ஷனுடைய சொல் அம்புகளால் புண்பட்ட அவர் தற்போது தமது மனைவியையும் இழந்துள்ளார். ஆகவே, அவர் கோபம் கொண்டால் அனைத்து உலகங்களும் அழிவுறுவது திண்ணம். உங்களது யாகம் சரிவர நிறைவேற வேண்டுமெனில், அவரிடம் சென்று மன்னிப்பை யாசியுங்கள்.” இவ்வாறு தேவர்களுக்குக் கட்டளையிட்ட பிரம்மதேவர், அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு கைலாசத்தை நோக்கிப் புறப்பட்டார்.

கைலாசத்தின் வர்ணணை

கைலாச மலையானது தேவர்கள், கின்னரர்கள், கந்தர்வர்கள், அப்சரப் பெண்கள் முதலியோரால் நிறைந்திருந்தது; பலவித மரங்கள், செடி-கொடிகள், புதர்கள் மண்டி இருந்தது; பளிங்கு போன்ற நீரோடைகளையும் அருவிகளையும் கொண்டிருந்தது. அந்த மலையில் மான்கள், மயில்கள், வானரங்கள், சிங்கங்கள், புலிகள் முதலியன கூட்டம்கூட்டமாகத் திரிகின்றன. நந்தா எனப்படும் கங்கை நதி அங்கு பாய்ந்தோடுகின்றது. அங்குள்ள தடாகங்களின் படிக்கட்டுகள் வைரம், வைடூரியம் முதலிய இரத்தினங்களால் பதிக்கப்பட்டிருந்தன. தடாகங்கள் நீலத்தாமரை மலர்களால் நிறைந்திருந்தன. அங்கே பகவான் நாராயணரின் பாத கமலங்களின் தூசியைத் தாங்கிய நந்தா, அலகந்தா எனும் இரு புனித நதிகள் பாய்ந்தோடுகின்றன. இவ்வாறாக கைலாசத்தின் அழகைக் கண்டு மிகவும் வியப்புற்ற தேவர்கள், மேலும் முன்னேறிச் சென்று ஓர் ஆலமரத்தைக் கண்டனர்.

கைலாசத்தில்  சிவபெருமான்  அமைதியாக அமர்ந்திருத்தல்

புனிதரான சிவபெருமான்

அந்த ஆலமரமானது 100 யோஜனம் (800 மைல்) உயரமுள்ளது. அதன் கிளைகள் 75 யோஜனம் (600 மைல்) படர்ந்திருந்தன. அதனால் அங்கு எப்போதும் நிழல் நிரம்பியிருந்தது, வெயிலின் கொடுமை என்பதே இல்லை. மேலும் பறவைகளின் கூடுகள் அம்மரத்தில் இல்லை. அங்கே ஸனகர், ஸனந்தனர், குபேரன் ஆகியோர் சேவை செய்ய பரமசிவன் வீற்றிருந்தார்.

இந்திரன் தலைமையின் கீழ் அனைத்து தேவர்களும் கூப்பிய கரங்களுடன் சிவபெருமானுக்கு தங்களது வந்தனங்களை அர்ப்பணித்தனர். பிரம்மதேவரைக் கண்டவுடன் எழுந்து அவரது திருவடிகளை வணங்கினார் பரமசிவன், அவரைத் தொடர்ந்து அங்கிருந்த அனைவரும் பிரம்மதேவரை வணங்கினார். பின்னர், பிரம்மதேவர் சிவபெருமானிடம் புன்முறுவல் செய்த வண்ணம் பேசலானார்.

பிரம்மதேவரின் வேண்டுகோள்

அன்புள்ள சிவபெருமானே, நீரே பௌதிகத் தோற்றம் முழுவதையும் நெறிப்படுத்துபவர். சிலந்தி தனது வலையை உருவாக்கி பராமரித்து பின் தன்னுள் இழுத்துக்கொள்வதைப் போல, இப்பௌதிக உலகத்தை நீரே படைத்து, காத்து, அழிக்கின்றீர். இந்த புரோகிதர்கள் தங்களுக்குரிய அவிர்பாகத்தைத் தராமல் யாகம் செய்து பெரும் தவறிழைத்துவிட்டனர். அதனால், தாங்கள் அந்த வேள்வியை அழித்தது நியாயமே. ஆயினும், பாதியில் நின்றுபோன இந்த யாகத்தை பூர்த்தி செய்ய தாங்ளே இவர்களுக்கு அருள்புரிய வேண்டும்.”

சிவபெருமானின் ஆசி

பிரம்மதேவரின் வேண்டுகோளை ஏற்று சிவபெருமான் பின்வருமாறு கூறினார், அன்புள்ள தந்தையே, தேவர்கள் சிறுபிள்ளைத்தனமாகச் செய்த தவறை நான் பொருட்படுத்தவில்லை. அவர்களைத் திருத்துவதற்காகவே நான் தண்டித்தேன். தக்ஷனின் தலை எரிந்துவிட்ட காரணத்தினால், அவர் ஓர் ஆட்டின் தலையைப் பெறட்டும். பகன், மித்திரனின் கண்களைக் கொண்டு தனது யஜ்ஞ பாகத்தைப் பெறட்டும், பூஷன், யாகம் செய்யும் எஜமானரின் பற்களால் மென்று சாப்பிடட்டும். வேள்வியில் எனது பாகத்தை அளிப்பதற்கு ஒப்புக்கொள்ளும் இதர தேவர்களின் உடலுறுப்புகள் முன்புபோல் குணமடையட்டும்.” இவ்வாறு சிவபெருமானின் ஆசியைப் பெற்ற அனைவரும் மகிழ்ச்சியுற்றனர். பின்னர், பிருகு முனிவரின் அழைப்பை ஏற்று தேவர்கள் புடைசூழ பிரம்மதேவருடன் சிவபெருமான் யாகசாலைக்குச் சென்றார்.

தக்ஷன் உயிர்ப்பிக்கப்படுதல்

பரமசிவனின் வழிகாட்டுதலின்படி ஆட்டின் தலையை தக்ஷனது உடலுடன் பொருத்தினர். தலையைப் பொருத்தியதும் தக்ஷன் உணர்வு பெற்று தூக்கத்திலிருந்து எழுந்தவனைப் போல எழுந்தார். தன் காழ்ப்புணர்ச்சி நீங்கி தூய்மையடைந்த தக்ஷனின் எதிரில் சிவபெருமான் நிற்க, அவன் அவரைத் துதிக்க விரும்பினான், தனது தவறால் மகள் மரணித்ததை எண்ணி வருந்தி கண்ணீர் சிந்தினான். பின் தன்னை ஒருவாறு நிலைப்படுத்திக் கொண்டு பின்வருமாறு பிரார்த்தித்தான், எம்பெருமானே, உமது புகழை அறியாது கொடிய வார்த்தைகளை பிரயோகித்தேன். நீர் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. உம்மைப் போன்ற மேலானவரை பணியாததால் நரகம் நோக்கி சென்று கொண்டிருந்தேன். ஆனால், என்மீது கருணை கொண்டு என்னை தண்டித்ததன் மூலம் என்னை நரகத்திலிருந்து காத்தருளினீர். எனது வார்த்தைகளால் உம்மை திருப்திப்படுத்த இயலாது. ஆதலால், உமது கருணையினாலேயே நீர் திருப்தியுறுங்கள்.” இவ்வாறு வேண்டிய தக்ஷன் பரமசிவன் மற்றும் பிரம்மதேவரின் அனுமதியோடு ரிஷிகளை முன்வைத்து தனது யாகத்தைத் தொடர்ந்தான்.

ஆட்டுத் தலையைப் பெற்ற தக்ஷன் சிவபெரும்பானிடம் மன்னிப்பை வேண்டுதல்

பகவான் விஷ்ணு தோன்றுதல்

பிராமணர்கள் முதலில் யாகசாலையை தூய்மை செய்யும் சடங்கினை மேற்கொண்டனர், பிறகு யாகத்தைத் தொடங்கினர். யஜுர் வேத மந்திரங்கள் முழங்க, தக்ஷன் யாக குண்டத்தில் ஹவிஸை சமர்ப்பித்தவுடன், அங்கே கருட வாகனத்தில் பகவான் விஷ்ணு தோன்றினார். பகவானின் வரவைக் கண்ட பிரம்மா, சிவன், தேவர்கள், கந்தவர்கள், ரிஷிகள் முதலியோர் அனைவரும் பகவானுக்கு தங்களது பணிவான வணக்கங்களை சமர்ப்பித்தனர். பகவான் விஷ்ணுவின் உடலிலிருந்து வீசிய ஒளி மற்றவர்களது ஒளியை மங்கச் செய்தது.

விஷ்ணுவைத் துதித்தல்

தான் யாகத்தில் அர்ப்பணித்ததை பகவான் விஷ்ணு ஏற்றுக் கொண்டார் என்னும் மகிழ்ச்சியில் தக்ஷன் பிரார்த்திக்கத் தொடங்கினான், பகவானே, தாங்கள் அனைத்து கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டவர், முற்றிலும் ஆன்மீகமானவர், அச்சம் அறவே அற்றவர், பௌதிக சக்தியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளவர், முற்றிலும் தன்னிறைவு பெற்றவர்.”

அதன்பின், அங்கிருந்த அனைத்து தேவர்கள், முனிவர்கள் என அனைவரும் பகவானை வழிபட்டு வெவ்வேறு பிரார்த்தனைகளை அர்ப்பணித்தனர். அவர்கள் தத்தமது தவறுகளை மன்னித்து அருளும்படி தாழ்மையுடன் வேண்டினர்.

 

சிவபெருமானின் பிரார்த்தனை

பகவான் விஷ்ணுவிடம் சிவபெருமான் பிரார்த்தனை செய்தார், அன்புள்ள பகவானே, எனது மனமும் உணர்வும் எப்பொழுதும் தங்களது தாமரைத் திருவடிகளையே பற்றியுள்ளது, எனது மனம் சிறந்த முனிவர்களால் வணங்கப்படும் உமது தாமரைத் திருவடிகளின் மீது இவ்வாறு நிலைபெற்றுள்ளது. இதனால், எனது செயல்கள் தூய்மையற்றவை என யாரேனும் நிந்தித்தால், அவற்றால் நான் சற்றும் சலனமடைவதில்லை. தங்களைப் போலவே நானும் அவர்களின் மீதுள்ள கருணையால் அவர்களை மன்னித்து அருள்கிறேன்.” பரமசிவனைத் தொடர்ந்து, பிரம்மதேவர் முதலிய அனைவரும் தத்தமது பிராத்தனைகளை அர்ப்பணித்தனர். இவ்வாறாக, அனைவரது பிரார்த்தனையாலும் திருப்தியடைந்த பகவான் விஷ்ணு மகிழ்ச்சியுடன் பேசலானார்.

தக்ஷனின் யாகத்தில் பகவான் விஷ்ணு எட்டு கரங்களுடன் தோன்றுதல்

பகவான் விஷ்ணுவின் அறிவுரை

தக்ஷ பிரஜாபதியே, நானே முழுமுதற் கடவுள், நான் என் குண அவதாரங்களின் மூலமாக படைத்தல், காத்தல் மற்றும் அழித்தலில் ஈடுபட்டுள்ளேன். நல்லறிவற்ற மனிதன் மட்டுமே பிரம்மா, சிவன் போன்ற தேவர்களும் பிற உயிர்வாழிகளும் சுதந்திரமானவர்கள் என்று எண்ணுகிறான். உண்மையில், அனைவரும் எனது அங்க உறுப்புகளே, இதனை உணர்ந்தவர் அமைதியுறுகிறார்.”

இவ்வாறு உபதேசிக்கப்பட்ட தக்ஷன் மிகுந்த மரியாதையுடன் பகவான் விஷ்ணுவை முறைப்படி வழிப்பட்டான். தக்ஷன் அவரவர் அவிர்பாகத்தை வழங்கி பிரம்மதேவரையும் சிவபெருமானையும் தனித்தனியே வழிபட்டான், வேள்விச் சடங்குகளை வெற்றிகரமாக நிறைவேற்றிய பிறகு நீராடி மனநிறைவு அடைந்தான். குழுமியிருந்த தேவர்கள் அவனை வாழ்த்தி விடைபெற்றனர்.

அதைத் தொடர்ந்து, தக்ஷனின் முந்தைய யாகத்தில் உடலைத் துறந்த சதி தேவி, இமவானின் மகளாகப் பிறந்து பார்வதி என்னும் பெயருடன் சிவபெருமானை மீண்டும் தனது கணவராக அடைந்தாள்.

தக்ஷன் பற்றிய இந்த வரலாற்றினை பக்தியுடனும் நம்பிக்கையுடனும் கேட்பதாலும், பிறருக்கு எடுத்துரைப்பதாலும், ஒருவன் உலக வாழ்வின் அனைத்து மாசுகளும் நீங்கப் பெற்று தூய்மை அடைவான் என மைத்ரேயர் விதுரரிடம் கூறினார்.

அடுத்த இதழிலிருந்து துருவ மஹாராஜரின் சரித்திரத்தைக் காணலாம்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives