துருவ மஹாராஜர் வைகுண்டம் செல்லுதல்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: திரு. வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: நான்காம் ஸ்கந்தம், அத்தியாயம் 10-12

சென்ற இதழில் துருவன் கானகம் சென்றதையும் பகவானின் ஆசியைப் பெற்று நாடு திரும்பி முடிசூட்டிக் கொண்டதையும் கண்டோம். இவ்விதழில் அவரது ஆட்சியைப் பற்றியும் அவர் வைகுண்ட லோகம் செல்வதைப் பற்றியும் அறியலாம்.

 

யக்ஷர்களைப் போருக்கு அழைத்தல்

பூமண்டலத்தில் துருவ மஹாராஜர் சிசுமாரன் மகள் பிரமி, வாயுவின் மகள் இலா ஆகிய இருவரையும் மணந்து நல்லாட்சி செய்து வந்தார். ஒருநாள் அவரது தம்பி உத்தமன் இமயமலைக்கு வேட்டையாடச் சென்றபோது, யக்ஷர்களால் கொல்லப்பட்டார். இதை அறிந்த துருவ மஹாராஜர் யக்ஷர்களின் தலைநகரான அலகாபுரிக்குச் சென்று விண்ணும் மண்ணும் அதிர தமது சங்கை முழங்கி யக்ஷர்களிடம் போருக்கான அறைகூவல் விடுத்தார்.

துருவ மஹாராஜரின் வெற்றி

சங்கின் முழக்கத்தைக் கேட்ட யக்ஷர்கள் பற்பல ஆயுதங்களுடன் துருவ மன்னரைத் தாக்க வந்தனர். போரில் மிகவும் தேர்ச்சி பெற்ற துருவ மன்னரோ அவர்களின் அனைத்து ஆயுதங்களையும் முறியடித்து, அவர்களை அழிக்கத் தொடங்கினார். அவரது பேராற்றலைக் கண்டு அதிசயித்த யக்ஷர்கள் அவரைப் பாராட்டிய அதே சமயத்தில் மேலும் இரு மடங்கு ஆயுதங்களைக் கொண்டு அவரைத் தாக்கத் தொடங்கினர்.

துருவ மன்னர் அம்பு மழையால் சூழப்பட்டார். ஆனால், பனிமூட்டத்தினைப் போக்கி வெளிவரும் சூரியனைப் போல சிறிது நேரத்தில் அதிலிருந்து வெளியே வந்தார். அவரது அம்புகள் எதிரிகளின் ஆயுதங்களையும் கேடயங்களையும் துளைத்து அவர்களது உடலைக் கிழித்தன. அவர்கள் அணிந்திருந்த கிரீடங்களும் ஆபரணங்களும் மலைபோல குவிந்தன. சிங்கத்தால் சிதறடிக்கப்பட்ட யானைக் கூட்டத்தைப் போல உயிர்தப்பிய வீரர்கள் தெறித்து ஓடினர்.

துருவ மன்னர் யக்ஷர்களிடம் போரிடுதல்

துருவ மஹாராஜரின் குழப்பம்

யுத்த களத்தில் ஆயுதம் ஏந்திய வீரர்கள் யாரும் இல்லாததைக் கண்ட துருவ மன்னர், அலகாபுரிக்குள் பிரவேசிப்பதைப் பற்றி தனது சாரதியிடம் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென கடலால் தாம் சூழப்பட்டதைப் போன்றும் பயங்கரமான ஓசையையும், நாலா திக்குகளிலிருந்தும் தம்மை நோக்கி விரைந்து வரும் புழுதிப் புயலையும் துருவ மஹாராஜர் கண்டார். கணப்பொழுதில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது, அம்மழையில் இரத்தமும் சளியும் சீழும் எலும்பும் மலமூத்திரமும் தலையற்ற முண்டங்களும் அவர்முன் விழுந்தன.

பலவித ஆயுதங்களும் பாறாங்கற்களும் பறந்து வந்தன. நெருப்பை உமிழும் பாம்புகளும் மதங்கொண்ட யானைகளும் சிங்கங்களும் புலிகளும் தம்மை நோக்கி பாய்ந்து வருவதைக் கண்டார். இவை அரக்க குணம் கொண்ட யக்ஷர்களின் மந்திர தந்திரங்களாகும். இவற்றால், சிறிது நேரம் குழப்பமுற்றார் துருவ மன்னர்.

புனித நாமத்தின் மகிமை

அவரின் குழப்பத்தைக் கண்ட சாதுக்களும் முனிவர்களும் உதவுவதற்காக விரைந்து வந்து உற்சாகப்படுத்தினர், துருவ மஹாராஜரே, முழுமுதற் கடவுள் பக்தர்களின் துன்பங்களை நீக்குபவர். அவரது திருநாமம் பக்தர்களுக்கு எல்லாப் பாதுகாப்பையும் அளிக்கக்கூடியது. எனவே, அஞ்சாது பகவானின் திருநாமத்தை உரக்க உச்சரிப்பீராக.”

(குறிப்பு: ஒருவன் மரணத் தருவாயில், ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று பகவானின் திருநாமத்தை உச்சரித் தாலோ கேட்டாலோ, அவன் இந்த ஜட வாழ்வின் பிறப்பு இறப்பு சுழற்சியில் மீண்டும் சிக்காமல் இறை வனின் அடைக்கலத்தை அடைவான் என்பது உறுதி.)

 

துருவர் வைகுண்டத்திற்குச் செல்லுதல்

யக்ஷர்களை வதைத்தல்

முனிவர்களின் ஆலோசனையைக் கேட்ட துருவ மன்னர் ஊக்கம் பெற்று, நாராயண அஸ்திரத்தை வில்லில் பூட்டி நாணேற்றினார். உடனே யக்ஷர்களால் உருவான மாயா தந்திரக் காட்சிகள் எல்லாம் மறைந்து போயின. அதன்பின் அவர் தம் கூரிய அம்புகளால் யக்ஷர்களை வதைத்து, சூரிய மண்டலத்திற்கும் மேலுள்ள உயர்ந்த கிரகங்களுக்கு அவர்களை அனுப்பினார்.

மனுவின் அறிவுரை

போரில் குற்றமற்ற யக்ஷர்களும் வதைக்கப்படு வதைக் கண்டு கருணை கொண்ட மனு, சக முனிவர்களுடன் வந்து துருவ மன்னரை அமைதிப்படுத்தும் வண்ணம் பேசினார். அன்புள்ள புத்திரனே, தேவையற்ற ஆத்திரம் நன்மை தராது; நரகத்திற்குத் தான் வழி வகுக்கும். யக்ஷர்களால் உனது பாசமிகு சகோதரன் கொல்லப்பட்டது உண்மைதான் என்றாலும், குற்றம் செய்யாத பிற யக்ஷர்களை நீ தேவையின்றி கொல்வது தவறாகும். பக்திப் பாதையில் பயணிக்கும் நீ பிற உயிர்களைக் கொல்வது தவறாகும். நீ பகவானின் தூய பக்தன் என்பதால், அனைவராலும் பின்பற்றப்படுபவனாக இருக்கிறாய். உன் தகுதிக்கு இச்செயல் சற்றும் தகாததாகும்.

குபேரனின் சந்ததியினரான இந்த யக்ஷர்கள் உண்மையில் உனது சகோதரனைக் கொன்றவர்கள் அல்லர். அவனது மரணத்திற்கு காரணம் அவனது முன்வினைப் பயனே.”

சரணாகதி

ஸ்வாயம்புவ மனு தொடர்ந்தார், முழுமுதற் கடவுளே அனைத்து உயிர்களுக்குள்ளும் பரமாத்மாவாக வீற்றுள்ளார். பிரம்மதேவர் உள்ளிட்ட அனைத்து தேவர்களும் அவரது கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றனர். ஐந்து வயதில் நீ உனது சிற்றன்னையின் வார்த்தைகளால்  துன்புற்று முழுமுதற் கடவுளை உணர்வதற்காக வனம் சென்று தவத்தில் ஈடுபட்டாய்! அதுபோல, குற்றமற்ற பகவானிடம் நீ இப்போதும் முழுவதுமாக சரணடைய வேண்டும். ஆன்மீக உணர்வில் முன்னேறவிடாமல் தடுக்கும் மோசமான எதிரி சினமே ஆகும். உலகிலிருந்து விடுதலையடைய விரும்பும் ஒருவன் சினத்திற்கு அடிமையாதல் கூடாது.”

இவ்வாறு அறிவுரை கூறிய மனுவை துருவ மஹாராஜர் மரியாதை செய்து விடையளித்தார்.

குபேரனின் ஆசி

மனுவின் அறிவுரைகளைக் கேட்டு போரைக் கைவிட்ட துருவ மன்னரின் முன்பு யக்ஷர்களின் தலைவரான குபேரன் தோன்றி, பின்வருமாறு பேசினார், பாவமற்ற சத்திரிய புத்திரனே! விடுவதற்கரிய உனது பகைமையைக் கைவிட்டதைக் கேள்விப்பட்டு மிகவும் மகிழ்கிறேன். உண்மையில் நீ யக்ஷர்களைக் கொல்லவும் இல்லை, யக்ஷர்களால் உனது சகோதரன் கொல்லப்படவும் இல்லை. பிறப்பிற்கும் இறப்பிற்கும் மூல காரணமாக விளங்குவது பரம புருஷ பகவானின் சக்தியான நித்திய காலமேயாகும். ஆகையினால், அனைத்து உயிர்களுக்கும் இறுதிப் புகலிடம் தருபவரான உன்னத பகவானுக்கு உனது நூறு சதவீத சக்தியைப் பயன்படுத்தி முழு நேரமும் தொண்டு செய்வாயாக. என்னிடம் வேண்டிய வரங்களைப் பெறுவாயாக.”

தாம் எப்போதும் முழுமுதற் கடவுளை மாறாத நம்பிக் கையுடன் நினைக்க வேண்டும் என்ற வரத்தினை துருவ மஹாராஜர் குபேரனிடம் வேண்டிப் பெற்றார்.

துருவ மன்னரின் பக்தித் தொண்டு

இல்லம் திரும்பிய துருவ மஹாராஜர் பகவானை திருப்திப்படுத்துவதற்காக உரிய வேள்விகளைச் செய்தார். தமது செல்வச் செழிப்புகளையெல்லாம் பகவானின் புகழைப் பரப்புவதற்காகப் பயன் படுத்தினார். பக்தித் தொண்டின் விளைவாக, அனைத்தும் பகவானிடத்தில் நிலைபெற்றிருப்பதையும் பகவான் அனைத்து உயிர்வாழிகளிலும் இருப்பதையும் அவரால் காண முடிந்தது.

துருவ மன்னர், பகவானின் பக்தர்களிடம் மிகுந்த மரியாதையுடனும் ஏழை எளியவர்களிடம் அன்புடனும் குடிமக்களிடம் உண்மையான தந்தையாகவும் சமய அறநெறிகளைப் பாதுகாப்பவராகவும் விளங்கினார். இவ்விதமாக 36,000 ஆண்டுகள் அறம், பொருள், இன்பம் போன்றவற்றை நன்கு நிறைவேற்றி பூமியை ஆட்சி புரிந்தார். பின்னர், ஆட்சிப் பொறுப்பை தம் மைந்தனிடம் அளித்தார்.

பத்ரிகாஷ்ரமத்தில் துருவ மன்னர்

துருவ மன்னர் ஆழிசூழ் உலகெல்லாம் நீண்டிருந்த தம் ஆட்சி, உடல், மனைவி, மக்கள், சுற்றம், படை, பொற்களஞ்சியம் போன்ற அனைத்தும் பகவானின் மாயா சக்தியின் படைப்புகளே என்று கருதினார். உரிய காலத்தில் இமயமலையின் அடிவாரத்திலிருந்த பத்ரிகாஷ்ரமத்திற்குச் சென்றார். அங்கே தூய நீரில் நீராடி, யோகப் பயிற்சியால் புலன்களைக் கட்டுப்படுத்தி பகவானின் விக்ரஹத்தை மனதில் நிறுத்தினார்.

பக்தித் தொண்டில் மேலும் வளர்ச்சியடைந்தபோது, கிருஷ்ண பிரேமையால் அவரது உள்ளம் உருகியது, கண்களில் கண்ணீர் பெருகியது, உடலில் மயிர்க்கூச்செறிந்தது. முழுவதுமாக தேக அபிமானத்திலிருந்து விடுபட்ட அவர் ஆனந்தக் கடலில் திளைத்தார்.

வைகுண்ட பயணம்

துருவ மன்னரிடம் முக்தி அடைந்ததற்கான அடையாளங்கள் வெளிப்பட்டவுடன் வானில் ஒளிமயமான அழகிய  விமானம் ஒன்று தோன்றி தம்மை நோக்கி வருவதைக் கண்டார். அதில் பகவான் விஷ்ணுவின் எழில்மிக்க இரு துணைவர்கள் இருப்பதைக் கண்டார், செய்வதறியாது திகைத்தார். எனினும், கூப்பிய கரங்களுடன் பகவானின் திருநாமங்களை பக்தியுடன் உச்சரித்தார்.

(குறிப்பு:–பகவானையும் அவரது பிரதிநிதிகளையும் திருப்திப்படுத்துவதற்கு எளிய வழி, பகவானின் திருநாமங்களை உச்சரிப்பதே. ஆபத்திலும் ஆனந்தத்திலும் எல்லாச் சூழ்நிலைகளிலும் பகவானின் திருநாமத்தை உச்சரிப்பதே பக்குவமான முறையாகும்.)

விமானத்திலிருந்து இறங்கிய பகவானின் தொண்டர்களான நந்தரும் சுனந்தரும் துருவ மன்னரிடம் கீழ்க்கண்டவாறு உரையாடினர்:

மன்னரே, உமக்கு எல்லா மங்கலங்களும் உண்டாகட்டும். ஐந்து வயதிலேயே நீர் கடுமையான தவ வாழ்வை மேற்கொண்டு முழுமுதற் கடவுளை திருப்தி செய்தீர். முழுமுதற் கடவுளின் தூதர்களான நாங்கள் உம்மை வைகுண்ட லோகத்திற்கு அழைத்துச் செல்ல வந்துள்ளோம். உமது முன்னோர்களும் முனிவர்களும் தேவர்களும் இதுவரை அடைந்திராத பகவான் விஷ்ணுவின் உலகத்தை நீர் அடைய இருக்கிறீர்.”

இதைக் கேட்ட துருவ மன்னர் புனித நீராடி, முனிவர்களை வணங்கி ஆசி பெற்று, விமானத்தை மும்முறை வலம் வந்து, விமானத்தையும் விஷ்ணு தூதர்களையும் பணிந்து வணங்கி, விமானத்தில் ஏற தயாரானார். அச்சமயத்தில், மரணதேவன் தம்மை நோக்கி வருவதைக் கண்ட அவர் சற்றும் அஞ்சாமல் அக்காலனின் தலைமீது கால் வைத்து விமானத்தில் ஏறினார். அந்நேரத்தில் தேவர்கள் அவர்மீது மலர்மாரி பொழிந்தனர். கந்தர்வர்கள் அவர் புகழை இனிமையாகப் பாடினர். மத்தளங்கள், துந்துபிகள் மங்கல இசையுடன் முழங்கின.

விமானம் புறப்படும் தருவாயில் தம் அன்னையின் நிலையை எண்ணிப் பார்த்தார் துருவ மன்னர். அவரது எண்ணத்தைப்  புரிந்து கொண்ட விஷ்ணு தூதர்கள், அவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த விமானத்தில் அன்னை சுனிதி அமர்ந்திருப்பதைச் சுட்டிக்காட்டினர்.

(குறிப்பு:–ஆன்மீகப் பாதையில் துருவருக்கு வழிகாட்டியதால் அன்னை சுனிதிக்கும் மிகச்சிறந்த பேரான வைகுண்ட வாசம் கிடைத்தது.)

வைகுண்ட விமானம் சூரிய குடும்பத்தைச் சேர்ந்த கிரகங்களையும் சப்த ரிஷி மண்டலத்தையும் தாண்டி (வழியெங்கும் மங்கல வரவேற்பையும் புகழ்மாலைகளையும் ஏற்றுக்கொண்ட வண்ணம்) சுய ஒளி பெற்ற வைகுண்ட லோகங்களை அடைந்தது.

பக்தர்களுடன் நட்புறவு கொண்டவர்கள் மட்டுமே அங்கே செல்ல முடியும். இவ்வாறாக, துருவ மன்னர் மூவுலகங்களின் உச்சி சிகரத்தை அடைந்தார். இன்றளவும் அவரின் இருப்பிடமான துருவ லோகத்தை அனைத்து கிரகங்களும் சுற்றி வருகின்றன.

நாரதரின் புகழுரை

துருவனின் பெரும் பேற்றை பிரசேதர்களின் வேள்விச் சாலையில் நாரத முனிவர் பின்வருமாறு பாராட்டி பேசினார், கணவனையே தெய்வமாகத் தொழும் சுனிதியின் மைந்தன் துருவன், வேதாந்திகளாலும் வேதங்களை முறையாகப் பின்பற்றுபவர்களாலும் அடைய முடியாத உயர்ந்த நிலையை அடைந்தார். அவர் சின்னஞ்சிறு வயதில் எமது அறிவுரைகளை ஏற்று கடுந்தவங்களை மேற்கொண்டு வெல்வதற்கரிதான பகவானை தன் பக்திமிக்க நற்குணங்களால் கவர்ந்தார்!”

 

துருவ சரித்திரத்தைக் கேட்பதன் பலன்

துருவ மன்னரின் புகழ்மிக்க வரலாற்றை கவனத்துடன் கேட்பவர் தனம், புகழ், நீண்ட ஆயுள் போன்றவற்றைப் பெறுவர், அனைத்து பாவங்களும் நீங்கப் பெறுவர். பக்தியுடன் இச்சரிதத்தைக் கேட்பவர் தூய பக்தித் தொண்டை நிறைவேற்றும் பாக்கியத்தைப் பெறுவர். துருவ மஹாராஜரைப் போன்ற உயர்ந்த குணநலன்கள் வாய்க்கப் பெறுவர். துருவரின் வரலாறு மரணமற்ற வாழ்வை அடைவதற்குரிய மேன்மையான ஞானமாகும்.

துருவரின் மரபில் வந்த மன்னர்களின் வரலாற்றை அடுத்து வரும் இதழ்களில் காணலாம்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives