பசுத்தோல் போர்த்திய புலிகள் சாதுவின் வேடத்தில் போலிகள்

Must read

Bhakti Vikasa Swamihttp://www.bvks.com
தவத்திரு. பக்தி விகாஸ ஸ்வாமி, இங்கிலாந்தில் பிறந்து கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இஸ்கானில் தொண்டு செய்து வருபவர். ஸ்ரீல பிரபுபாதரின் நேரடி சீடரும், மூத்த சந்நியாசியுமான இவர், பல்வேறு புத்தகங்களுக்கு ஆசிரியருமாவார்.

வழங்கியவர்:  தவத்திரு. பக்தி விகாஸ ஸ்வாமி

சாதுக்கள் சீரழியும்போது…

சாதுக்களாக அறியப்படும் மதிக்கத்தக்க இறையன்பர்கள், (முறையற்ற காமச் செயல்களைப் போன்ற) கேவலமான நடத்தையில் ஈடுபட்டதை அம்பலப்படுத்தி இந்தியப் பத்திரிகைகளில் அவ்வப்போது செய்திகள் வருவதைக் காணலாம். முறையற்ற காமத்தில் ஈடுபட்டாலும் சரி, முறையான காமத்தில் ஈடுபட்டாலும் சரி, சந்நியாசம் ஏற்ற சாதுவைப் பொறுத்தவரையில், எல்லா வித காமச் செயல்களுமே முறையற்றதுதான். சில சமயங்களில், கொலைக் குற்றங்களும், மடத்திற்குள் நிகழும் சண்டைகளும்கூட வெளிவருகின்றன. ஊடகங்கள் அவற்றை வெளியிட, பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து, சாதுவின் பேரும் புகழும் பாதாளத்தை நோக்கிச் சென்றுவிடுகின்றன; பொதுமக்கள் பிரச்சனைக்குரிய சாதுவின் மீது கோபமடைகின்றனர்; அவரது சீடர்களில் பலர் அவரை விட்டு விலகிவிடுகின்றனர். மேலும், சீடர்கள் கிண்டல் செய்யப்படுவதும், ஆசிரமங்கள் சூறையாடப்படுவதும் தவிர்க்க முடியாதவையாகிவிடுகின்றன.

இதனை நல்வாய்ப்பாகக் கருதும் பெயரளவு பகுத்தறிவுவாதிகளும் நாத்திகர்களும், “உண்மையில் எல்லா சாதுக்களுமே போலிகள்தான்; எல்லாரும் ஏமாற்றுபவர்களே; சிலர் தற்போது மாட்டிக் கொண்டனர்; ஆனால் இதர சாதுக்களும் தகாத செயல்களில் ஈடுபடுபவர்களே,” என்று ஊரெங்கும் அறிவிக்கின்றனர். சாதுக்கள் எவ்வாறு இருக்க வேண்டுமோ அவ்வாறு அவர்கள் இல்லாததையும், சாதாரண மனிதர்களைக் காட்டிலும் கீழ்த்தரமான செயல்களில் அவர்கள் ஈடுபடுவதையும் காணும் மக்கள் அதிருப்தியடைவது இயற்கையே. அதிலும் குறிப்பாக, புண்ணியவான்களாகவும், ஆன்மீகத்தில் உயர்ந்தவர்களாகவும், ஏன் கடவுளாகவும் விளம்பரப்படுத்தப்பட்ட நபர்கள் மாட்டிக் கொள்ளும்போது, அது பேரதிர்ச்சியை அளிக்கின்றது. அவர்களின் கீழ்த்தரமான நடத்தையைக் கண்டு, அவரது சீடர்களும் மிகவும் விரக்தியடைகின்றனர்.

 

மக்களின் முட்டாள்தனம்

இத்தகு நிகழ்ச்சிகள் அம்பலப் படுத்தப்படும்போது, சமுதாயத்தில் பொதுவாக நன்மதிப்புடன் விளங்கும் இஸ்கான் பக்தர்களையும் பொதுமக்கள் சில காலங்களுக்கு ஒதுக்கிவிடுகின்றனர்; ஊடகங்களின் தாக்கத்தினால், எல்லா சாதுக்களுமே மோசமானவர்கள் என்று நினைக்கத் தொடங்குகின்றனர், அத்தகு எண்ணம் அறிவுப்பூர்வமானதல்ல. ஒன்று அல்லது இரண்டு பெயரளவு சாதுக்கள் மோசமானவர்களாக ஆன காரணத்தினால், எல்லாருமே மோச மானவர்கள் என்பது அர்த்தமல்ல. உண்மையில், இஸ்கானில் உறுப் பினராக இருக்க வேண்டுமெனில், ஒவ்வொருவரும் சில கொள்கைகளைக் கடைபிடிக்க வேண்டும்: மாமிசம், மீன், முட்டை ஆகியவற்றை சாப்பிடக் கூடாது, சூதாட்டம் கூடாது, போதை வஸ்துக்கள் கூடாது, தகாத பாலுறவும் கூடாது. அதிகாலையில் எழுவது உட்பட பல்வேறு கடுமையான ஆன்மீகப் பயிற்சிகளை அவர்கள் பின்பற்ற வேண்டும். எனவே, ஏமாற்றுப் பேர்வழிகளுடன் இஸ்கான் பக்தர்களை இணைப்பது என்பது சற்றும் அறிவற்ற செயல்.

ஆனால் பெரும்பாலான மக்கள் முட்டாள்களாக இருப்பதால், அவர்கள் அவ்வாறு செய்கின்றனர். போலி சாதுக்களை அத்தகு மக்கள் முன்பு ஏற்றுக் கொண்டிருந்தனர் என்பதே அவர்களது முட்டாள்தனத்தின் சாட்சி. இந்த மனிதர்கள் அனைவரும் போலிகள் என்பதை இஸ்கான் பக்தர்கள் எப்போதும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மக்கள் முட்டாள்களாக இருந்திராவிடில், இத்தகு போலி மனிதர்களை ’போலிகள்’ என்று ஊடகங்கள் அறிவிப்பதற்கு முன்பே, பொதுமக்கள் அவர்களைப் ’போலிகள் என்று உணர்ந்திருப்பர். தகாத காமச் செயல்களிலோ சட்ட விரோத செயல்களிலோ ஈடுபட்டதால் மட்டும் அவர்கள் போலிகள் அல்ல. அவர்கள் பிரச்சாரம் செய்த கருத்துகளும் கொள்கைகளும் அவர்களை ஆரம்பத்திலிருந்தே போலிகளாகக் காட்டுகின்றன.

மாமிசம், சூதாட்டம், போதை வஸ்துக்கள், தகாத பாலுறவு ஆகிய நான்கு பாவச் செயல்களை ஒவ்வொருவரும் தவிர்க்க வேண்டும்.

போலிகளின் தன்மைகள்

சாஸ்திரங்களின் உண்மையான போதனைகளையும் பகவத் கீதையின் உண்மையான ஆன்மீக ஞானத் தினையும் வழங்காமல், தங்களைத் தாங்களே ஆன்மீகத் தலைவர் களாகக் காட்டிக்கொள்ளும், பெயரள விலான இந்த பாபாக்கள், பாபுக்கள், அம்மாக்கள், ஸ்ரீ-ஸ்ரீகள் என இவர்கள் அனைவருமே ஏமாற்றுப் பேர் வழிகள்தான். ஆன்மீகத்தின் இறுதி உண்மையும் மக்களுக்கு உதவக்கூடிய ஒரே ஞானமுமான முழுமுதற் கடவுள் கிருஷ்ணரை முன்வைக்காமல், தங்களது சீடர்களிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு எல்லா அபத்தங்களையும் பேசும் இவர்கள், தங்களது சீடர்களால் மிகப்பெரிய சாதுவாக விளம்பரப்படுத்தப்படுவதில் இன்பமடைகின்றனர். நீதிக்குப் புறம்பான தகாத செயல்களில் அவர்கள் வெளிப்படையாக ஈடுபடாதபோதிலும், சீடர்களுக்கு ஆன்மீக நன்மையை வழங்கக்கூடிய போதனைகள் அவர்களிடம் இல்லாத காரணத்தினால், தங்களைத் தாங்களே ஆன்மீகத் தலைவர்களாகக் காட்டிக்கொள்ளும் இவர்களது செயல், நீதிக்குப் புறம்பான தகாத செயல்களைக்காட்டிலும் மோசமானதாகும். இந்த ஏமாற்றுப் பேர்வழிகள், தங்களது சீடர்களுக்கு ஆசி வழங்குகின்றனரேயொழிய, அவர்களது உணர்வுகளை மாற்றிக் கொள்ளும்படியும், பௌதிக எண்ணத் திலிருந்து வெளிவரும்படியும், இவ்வுலகிலுள்ள அனைத்தும் தற்காலிகமானது என்பதைப் புரிந்துகொள்ளும்படியும் ஒருபோதும் அறிவுறுத்துவதில்லை.

 

ஏமாற விரும்பும் மக்கள்

ஆனால் மக்கள் முட்டாள்களாக உள்ளனரே. உண்மையில் இத்தகு சாதுக்களால் ஏமாற்றப்படுவதற்கு அவர்கள் விரும்புகின்றனர். நானும் ஆன்மீகவாதி, மதத்தைப் பின்பற்றுபவன் என்னும் போலியான நல்லுணர்வுடன் இருக்க அவர்கள் நினைக்கின்றனர்; ஆனால் முற்றிலும் பௌதிகவாதிகளாக இருக்கும் காரணத்தினால் ஏமாற்றும் சாதுக்களிடம் செல்கின்றனர். துன்பத்திலிருந்தும் பிரச்சனைகளிலிருந்தும் விடுபட்டு இந்த ஜடவுலகத்தில் இருந்தபடியே மிகவும் அற்புதமான வாழ்வை அனுபவிக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன், கடவுளின் ஆசியையும் குருவின் ஆசியையும் பெற மக்கள் சாதுவை (அல்லது தேவாலய பாதிரியாரை) அணுகுகின்றனர். அத்தகு எதிர்பார்ப்பு அபத்தமானது; ஏனெனில், சற்றேனும் ஆன்மீக அறிவு பெற்ற மனிதன்கூட இந்த ஜடவுலகம் துன்பம் நிறைந்த இடம், இன்பத்திற்கான இடமல்ல என்பதை புரிந்துகொள்ள முடியும். இது பகவத் கீதையிலும் கூறப்பட்டுள்ளது.

இக்கருத்தினை தனது சீடர்களுக்கும் மற்றவர்களுக்கும் உபதேசிப்பதே உண்மையான சாதுவின் கடமையாகும். ஆனால் மக்களோ இவற்றைக் கேட்க விரும்புவதில்லை, ஏமாற்றப்படவே விரும்புகின்றனர். ஏமாற்றும் சாதுக்கள் கண்டறியப்படும்போது, அதற்குக் காரணமாக இருந்த மக்கள் கோபப்படுவது சரியாகுமா? ஆரம்பத்திலிருந்தே அவர்கள் ஏமாற்றுக்காரர்கள்தான், தற்போது கோபத்தை வெளிப்படுத்தும் மக்கள், அந்த பெயரளவு சாதுக்களின் ஏமாற்றுத் தொழிலுக்கு முன்பு உடந்தையாக செயல்பட்டனர். சாதுக்களை தற்போது திட்டித் தீர்ப்பவர்களும் ஏமாற்றுப் பேர்வழிகளே; இல்லையெனில், அந்த ஏமாற்றுக்கார சாதுக்களுக்கு அவர்கள் ஏன் ஆதரவு கொடுத்தனர்?

இஸ்கான் பக்தர்களின் நிலை

மறுபக்கத்தில் பார்த்தால், இவ்வெல்லா ஏமாற்றுக்காரர்களுக்கும் எதிராக இஸ்கான் பக்தர்கள் பிரச்சாரம் செய்யும்போது, மக்கள் கேட்பதற்கு விரும்புவதில்லை. “இந்த (ஏமாற்றுக்கார) சாதுக்களின் குறைகளை நீங்கள் ஏன் சுட்டிக் காட்டுகின்றீர்கள்?” என்று  அவர்கள் இஸ்கான் பக்தர்களிடம் கடிந்து கொள்வதும் வழக்கம். அதுமட்டுமின்றி, ஏமாற்றுக்காரர்களின் முகத்திரை வெளிப்படும்போது, “இஸ்கான் பக்தர்களின் கூற்றுகள் சரியே” என்று பாராட்டுவதற்கு பதிலாக, தற்போது கிழித்தெறியப்பட்டுள்ள போலி சாதுக்களின் இனத்துடன் இஸ்கான் பக்தர்களையும் இணைத்து குற்றம் சாட்டுவது என்பது மக்களின் இரட்டிப்பு முட்டாள்தனத்தைக் காட்டுகின்றது. சாதுக்களின் மீதான மக்களின் ஒட்டுமொத்த அபிப்பிராயமும் மாற்றமடைந்துள்ளது. உண்மையில், சாது என்றால் என்ன என்பதை அவர்கள் அறியார்கள்.

சாதுக்கள் ஆசிர்வாத கருவிகளா?

சாது எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஒவ்வொருவரும் தங்களுக்கென்று சொந்தக் கருத்துகளை உருவாக்குகின்றனர்: நன்றாகப் பழகுபவர், புன்சிரிப்புடன் திகழ்பவர், ஆசி வழங்குபவர், நல்லவர்களாக வாழச் சொல்பவர், தான் நல்லவனே என்று உங்களை நினைக்கச் செய்பவர்–இதுவே சாதுவின் அடையாளமாக அவர்கள் நினைக்கின்றனர். அத்தகு எண்ணத்திற்குத் தகுந்தாற்போல வாழ்ந்து, அவர்களை ஏமாற்றும் சாதுக்கள் ஏராளம். அதுதான் ஆன்மீகம் என்று அவர்கள் நினைக்கின்றனர்.

உண்மையான சாதுவோ, ஜடவுலக வாழ்க்கை நல்லதல்ல என்றும், வெறுமனே நன்றாகப் பழகி, மக்களிடம் சிரித்தால் மட்டும் போதாது என்றும்   உங்களிடம் கூறுவார்; புகையிலை, மதுபானம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று யாரேனும் ஒருவர் உங்களுக்கு நல்ல உபதேசம் வழங்கினாலும், அந்த நல்ல உபதேசமே ஆன்மீகமாகி விடாது என்பதை உண்மையான சாதுக்கள் எடுத்துரைப்பர். எல்லா பௌதிக ஆசைகளையும் துறந்து கிருஷ்ணரிடம் முழுமையாக சரணடைவதே உண்மையான ஆன்மீக வாழ்க்கை. ஆனால் இதனைக் கேட்பதற்கு மக்கள் விரும்புவதில்லை, சாதுக்களிடமிருந்து என்ன கேட்கப்பட வேண்டு மோ அவற்றைக் கேட்பதற்கான பழக்கம் அவர்களிடம் இல்லை. தங்களுக்கு இன்பமளிக்கும் விஷயங்களைக் கேட்பதில் மட்டுமே அவர்கள் ஆர்வமுடை யவர்களாக உள்ளனர். ஆனால், பகவத் கீதையை உள்ளது உள்ளபடி, எந்தக் கலப்படமும் இன்றி, குருவிடமிருந்து கேட்பதுவே ஒரு சீடனின் தலையாய கடமையாகும்.

அத்தகு கடமையை மக்கள் ஒருபோதும் நிறைவேற்றாத காரணத் தினால், ஏமாற்றுபவர்களை சாதுக்களாக எண்ணி முட்டாள்தனத்தினால் மயக்கப்படுகின்றனர். அம்மாக்கள், பாபாக்கள், பாபுக்கள், ஸ்ரீ-ஸ்ரீகள் என இவர்கள் அனைவருமே அயோக் கியர்கள், ஏமாற்றுபவர்கள், அபத்த மானவர்கள், முட்டாள்கள். இதனைப் புரிந்துகொள்வதற்கு சிறப்பான புத்தி ஏதும் அவசியமில்லை. இருப்பினும், இதனைப் புரிந்துகொள்ள விரும்பாத மக்கள், இவற்றைப் பற்றி கேட்பதற்குக்கூட விரும்புவதில்லை. உண்மையான சாதுக்களிடமிருந்து என்றுமே கேட்டதில்லை என்பதால், இஸ்கான் சாதுக்களையும் ஒருவகையான ஆசிர்வாத கருவிகளாக நினைக்கும் இவர்களால், இஸ்கான் பக்தர்களிடமிருந்து வரும் கடுமையான சொற்களைக் கேட்க முடிவதில்லை. அவ்வாறு இருப்பினும், இஸ்கான் பக்தர்கள் ஒருபோதும் ஆசிர்வாதக் கருவிகளாக மாறிவிடக் கூடாது; கேட்பதற்கான ஆர்வம் மக்களிடம் இல்லை என்றாலும், உண்மையை எப்போதும் பேசிக் கொண்டே இருக்க வேண்டும்.

 

சாது என்பவர் இதுபோன்ற ஆசிர்வாதக் கருவியாக இருக்க வேண்டும் என்று மக்கள் நினைப்பது அவர்களின் முட்டாள்தனமாகும்.

பகுத்தறிவாளர்களின் நிலை

ஒரு விதத்தில் பார்த்தால், புத்தியை உபயோகித்து விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று முன்னுரைக்கும் பெயரளவிலான பகுத்தறிவாளர்கள் சிறந்தவர்களே. ஆனால், ஆன்மீகத்தை முறைப்படி அறிந்துகொள்வதில் தங்களது புத்தியை உபயோகிக்காத காரணத்தினால், அந்த பகுத்தறிவாளர்களும் உண்மையான புத்திசாலிகள் அல்ல. ’ஏமாற்றும் சாதுக்கள் இலட்சக்கணக்கில் இருந்தாலும் (அது துரதிர்ஷ்டமானது என்றபோதிலும்), எல்லா சாதுக்களுமே ஏமாற்றுபவர்கள் அல்ல’—இதைப் புரிந்துகொள்வதற்கான பகுத்தறிவு, சாதுக்களைப் புறக்கணிக்கும் பெயரளவு பகுத்தறிவாளர்களிடம் இல்லை. தங்களைப் பகுத்தறிவாளராகக் காட்டிக்கொள்ளும் மனிதர்கள், பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் உண்மையானவை என்பதையும், இன்றைக்கும் பொருந்தக்கூடியவை என்பதையும் உணர வேண்டும். இந்த ஜடவுலகம் துன்பமயமான இடம், இங்குள்ள அனைத்துமே தற்காலிகமானவை போன்ற பகவத் கீதையின் உபதேசங்களை அவர்கள் ஏன் உணர மறுக்கின்றனர்?

உண்மை கசக்கும்

பகவத் கீதையின் உபதேசங்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். “ஏமாற்றுபவர்களையும் ஏமாறுபவர்களையும் கொண்ட உலகத்தில் நாம் வாழ்கிறோம்” என்பது போன்ற உண்மைகளை நாம் பேசினால், அதைக் கேட்க விரும்பாத மக்கள், எங்களின் மீது கோபமடைவது துரதிர்ஷ்டமான சூழ்நிலையாகும். ஸச் போலே தோ மரே லடி, ஜுத் ஜகாதே மோஹாய் என்னும் இந்தி பழமொழியின்படி, உண்மையைப் பேசினால் மக்கள் குச்சியினால் அடிப்பர், பொய் பேசினால் அனைவரும் மயக்கப்பட்டு நன்றாக இருந்தது என்பர். வெளித்தோற்றத்தினால் மயங்கிவிடாதீர்கள். காட்டில் வசிக்கும் குரங்கையும் அங்குள்ள ஒரு சாதுவையும் பார்த்தால் ஒன்றுபோலவே தோன்றும். இருவருமே பழத்தைத் தின்று வாழ்கின்றனர்; இருவருமே நிர்வாணமாகத் திரிகின்றனர்; இருவருக்குமே வீடோ சொத்துக்களோ கிடையாது. இருப்பினும், குரங்கு எப்போதுமே குரங்குதான், சேட்டை செய்வதும் பெண் குரங்குகளுடன் இன்பமடைவதுமே குரங்கின் பணியாகும். ஆனால் உண்மையான சாதுவோ ஆன்மீக முன்னேற்றத்தில் கவனம் செலுத்துகிறார்.

சாதுவா? குரங்கா?

குரங்கு போன்ற சாதுவையும் உண்மையான சாதுவையும் வேறுபடுத்திப் பார்க்கும் அறிவுத்திறன் மக்களிடம் அவசியம் இருக்க வேண்டும். உலகிலுள்ள பெரும்பாலான சாதுக்கள் அங்குமிங்கும் திரியும் குரங்குகளைப் போன்றவர்களே, அந்தக் குரங்குகளைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் சீடர்களும் குரங்குகளே. காலப்போக்கில், அந்த குரு தாங்கள் எதிர்பார்த்தபடி இல்லை என்பதையும் குரங்கினைப் போன்று உள்ளார் என்பதையும் அந்த சீடர்கள் அறியவரும்போது, மிகவும் சஞ்சலமடைகின்றனர். உண்மையில் வெறுமனே புலனின்பத்தை விரும்பும் அவரது சீடர்களும் குரங்குகள்தான். எனவே, நீங்கள் குரங்காக இருந்தால், உங்களது பெயரளவு குருவும் குரங்காக இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட வேண்டாம். நீங்கள் மனிதராக இருக்க விரும்பினாலும் சரி, அதனைத் தாண்டி ஆன்மீக வாழ்வில் உண்மையான முன்னேற்றம் பெற விரும்பினாலும் சரி, அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவை அணுகுவதில் நீங்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.

தத் விக்ஞானார்தம் ஸ குரும் ஏவாபிகச்சேத் (முண்டக உபநிஷத் 1.2.12), அதாவது, ஆன்மீக விஞ்ஞானத்தைப் புரிந்துகொள்வதில் ஒருவன் உண்மையிலேயே ஆர்வமுடையவனாக இருந்தால், அவன் உண்மையான குருவை அணுக வேண்டும். ஆனால் மக்களோ ஆர்வமுடையவர்களாக இல்லை; அவர்கள் ஏமாற விரும்புகின்றனர். இதனால்தான், கிருஷ்ணர் ஏமாற்றுக்காரர்களை அனுப்புகிறார். உங்களுக்கு யார் கிடைக்க வேண்டுமோ அவர்தான் கிடைப்பார். உங்களது ஆன்மீக வாழ்வில் நீங்கள் ஆர்வமுடையவராக இருந்தால், உண்மையான அறிவை வழங்கக்கூடியவரிடம் வாருங்கள். அந்த உண்மையான குரு, ஸ்ரீ-ஸ்ரீ போன்ற அயோக்கியர்களையும் முட்டாள்களையும் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்.

 

யார் உண்மையான சாது?

யாரொருவன் பகவத் கீதையை உள்ளது உள்ளபடி பின்பற்றுகின்றானோ, ஜடத்திற்கும் ஆன்மீகத்திற்கும் இடையிலான வேறுபாட்டை அறிந்துள்ளானோ, பௌதிக புலனுகர்ச்சியில் ஆர்வமின்றி இருக்கின்றானோ, கிருஷ்ணருக்கு சேவை செய்வதைத் தவிர வேறு எந்த சுய விருப்பமும் இல்லாமல் மற்றவர்களுக்கு நன்மையளிப்பதற்காக இவ்வுலகில் வாழ்கின்றானோ, கிருஷ்ணரே பரம பூரண உண்மை என்பதை எல்லா சாஸ்திரங்களிலிருந்தும் புரிந்துகொண்டுள்ளானோ, அவனே சாது. வேறு யாரையும் சாதுவாக நாம் கூறிவிட முடியாது.

வாசோ வேகம் மனஸ: க்ரோத-வேகம்

ஜிஹ்வா-வேகம் உதரோபஸ்த-வேகம்

ஏதான் வேகான் யோ விஷஹேத தீர:

ஸர்வாம் அபீமாம் ப்ருதிவீம் ஸ ஷிஷ்யாத்

 “பேச்சின் தூண்டுதல், மனதின் தூண்டுதல், கோபத்தின் தூண்டுதல், நாக்கு, வயிறு, மற்றும் பாலுறுப்பின் தூண்டுதலை கட்டுப்படுத்தக்கூடிய நிதான புத்தியுடையோர் உலகமெங்கும் சீடர்களை ஏற்கும் தகுதியுடையவர்கள்.” (உபதேசாமிருதம், ஸ்லோகம் 1) இந்த ஸ்லோகத்தையும் இதற்கு ஸ்ரீல பிரபுபாதர் அருளியுள்ள பொருளுரையையும் மக்கள் படிக்க வேண்டியது அவசியம். (இப்புத்தகம் இஸ்கான் கோவில்களில் கிடைக்கும்)

போலிகள் மீண்டும் வலம் வருவர்

இன்னொரு கருத்து என்னவெனில், முகத்திரை கிழிக்கப்பட்டு அவப்பெயர் பெற்ற ஏமாற்றுக்காரர்கள், சில வருடங் களுக்குப் (அல்லது மாதங்களுக்குப்) பின், தங்களது தொழிலில் வழக்கம்போல செயல்படத் தொடங்கி விடுகின்றனர். உதாரணமாக, தனது சீடர்கள் தன்னை “பகவான்” என்று அழைப்பதை அனுமதித்துள்ள தென்னிந்தியாவைச் சார்ந்த சாது ஒருவர், சிறுவர்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார் என்றும், அவரது தந்திரங்களும் அதிசயங்களும் ஏமாற்று வித்தைகளே என்றும் பல வருடங்களுக்கு முன்பு பத்திரிகைகளாலும் தொலைக்காட்சிகளாலும் கிழித்தெறியப்பட்டார். ஆனால், மிகவும் மோசமான கீழ்நிலை மனிதன் என்று தெரியப் படுத்தப்பட்ட பின்பும், அறிவாளிகளைப் போலத் தோன்றும் உயர் கல்வி கற்ற நபர்கள் உட்பட, பொதுமக்கள் பலரும் அவரை கடவுளாக தொடர்ந்து நம்பிக் கொண்டுதான் உள்ளனர். இதுபோன்று எத்தனையோ பேர் உள்ளனர். பிரபஞ்சம் எவ்வாறு எல்லையற்றதோ அதுபோல மக்களின் முட்டாள்தனமும் எல்லையற்றது என்று ஐன்ஸ்டின் கூறியுள்ளார். அசலாம் ஷ்ரத்தாம், நம்பிக்கை வைக்கக்கூடாதவற்றின் மீது நம்பிக்கை வைத்தல், என்று பகவத் கீதையில் (7.21) கிருஷ்ணர் கூறுவதை இது நிரூபிக்கின்றது. அஸத்யரே ஸத்ய கரி மனி, உண்மையல்லாதவற்றை மக்கள் உண்மையாக ஏற்றுள்ளனர்.

இறுதியாக சில வரிகள்

தமஸி மா ஜ்யோதிர் கம, “இருளை விட்டு வெளிச்சத்திற்கு வாருங்கள்.” (பிருஹத் ஆரண்யக உபநிஷத் 1.3.28) உத்திஷ்ட ஜாக்ரத ப்ராப்ய வரான் நிபோதத, எழுந்து கொள்ளுங்கள், விழித்துக் கொள்ளுங்கள், மனித வாழ்வின் நற்பலனை அடையுங்கள்”–இவையே எமது வேண்டுகோள். எத்தனை பேர் இதற்குத் தயாராக உள்ளீர்கள்?

உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள்; இல்லையெனில் ஏமாற்றப்படுவீர்கள். உண்மை வேண்டுமா? ஏமாற்றம் வேண்டுமா? நீங்களே முடிவு செய்யுங்கள்.

பின்குறிப்பு: உண்மையான குருவைப் பற்றியும் போலி குருவைப் பற்றியும் மேலும் அறிந்துகொள்ள, ஸ்ரீல பிரபுபாரதரின் தன்னையறியும் விஞ்ஞானம்” என்னும் புத்தகத்தைப் படிக்கவும்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives