வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

பாரம்பரியத்தைப் பாதுகாத்தல்:

பாரம்பரிய பண்பாடுகள் பலவும் மறைந்து வரும் தற்போதைய தருணத்தில் அதில் ஒன்றினைக் காக்க இளைஞர்கள் ஒன்றுகூடி போராடியது நிச்சயம் விசேஷமான ஒன்று.

டிராக்டர்கள் ஒழிப்பு:

நாட்டு மாடுகளைப் பாதுகாப்பதற்கு ஜல்லிக்கட்டு உதவும். அதே சமயத்தில் ஜல்லிக்கட்டு மட்டுமே நாட்டு மாடுகளைக் காப்பாற்றி விடும் என்று நினைத்து விட வேண்டாம். நாட்டு மாடுகளின் முக்கிய விரோதி, டிராக்டர். நாட்டு மாடுகளை ஆதரிப்பவர்கள் டிராக்டர்களின்றி விவசாயம் செய்ய முன்வர வேண்டும். காளைகளுக்கு வேலை இல்லாவிடில், படிப்படியாக அவை அழிந்து விடும் வாய்ப்புள்ளது. கடந்த சில வருடங்களாகவே ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டுள்ளது, ஆனால் பல வருடங்களாக நாட்டு மாடுகள் மடிந்து வருகின்றன. அதற்கான அடிப்படை காரணம், டிராக்டரை உபயோகித்தல். இதை உணர்ந்து மாடுகளை நிலத்தில் உழுவதற்கு இறக்கினால், நாட்டு மாடுகள் காக்கப்படும். (ஜெர்ஸி மாடுகள் உழவிற்கு உதவாதவை என்பது குறிப்பிடத்தக்கது)

பசு வதைத் தடைச் சட்டம்:

ஒரு சில நாட்டு மாடுகளைப் பாதுகாக்க போராடுவோர், தினமும் பல்லாயிரம் நாட்டு மாடுகள் கசாப்புக் கூடங்களில் கொல்லப்படுவதையும் தடுப்பதற்கு முன்வர வேண்டும். தாய் பால் குடிக்காமல் வளர்ந்தவர்கள் உள்ளனர், ஆனால் பசுவின் பாலைக் குடிக்காமல் வளர்ந்தவர்கள் இல்லை,” என்ற எதார்த்த வீர வசனங்கள் பேசப்பட்டு வருகின்றன. உண்மையே. பசு நமது தாயைப் போன்றவள். அவள் பால் கொடுப்பதை நிறுத்தி விட்டாள் என்பதற்காக, அவளை கசாப்புக் கூடத்திற்கு அனுப்பி கழுத்தை வெட்டுதல் தகுமோ? மனிதச் செயலா, காட்டுமிராண்டித்தனமா? சிந்திப்பீர்! பசு வதையை தடுப்பீர்!

தமிழர்களின் பண்பாடு மட்டுமா:

ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பண்பாடு என்று பரப்பப்படுகிறது. இன்றைய சூழ்நிலையில் அஃது உண்மையைப் போல தோன்றினாலும், உண்மையில் இப்பயிற்சி பாரதம் முழுவதும் இருந்து வந்துள்ளது என்பதை கவனிக்க வேண்டும். கடந்த பகவத் தரிசன இதழில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எவ்வாறு ஒரே சமயத்தில் ஏழு காளைகளை அடக்கி ஸத்யா (அல்லது நப்பின்னை) என்ற இளவரசியைத் திருமணம் செய்தார் என்பதை விவரித்திருந்தோம். ஸத்யா கிருஷ்ணரின் உறவுக்கார பெண்மணி என்பதால், நிச்சயம் அவளது நாடு தமிழகமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. காளைகளை அடக்கி மணமுடித்தல் என்ற பழக்கம் பாரதம் முழுவதும் இருந்து வந்துள்ளது. சமீப காலத்தில் அது படிப்படியாகக் குறைந்து பாண்டிய நாட்டுடன் தொடர்புடைய பழக்கமாக மாறி விட்டது என்பதை கவனிக்க வேண்டும்.

தோல் பொருட்கள்:

நாட்டு மாடுகளைப் பாதுகாக்க ஆர்வம் கொண்டிருப்பவர்கள், தோலினால் செய்யப்பட்ட பொருட்களை வாங்குவதையும் உபயோகிப்பதையும் நிறுத்துவதற்கு முன்வர வேண்டும்.

மத விழாக்களில் மாடு வெட்டுதல்:

மாடுகள் துன்புறுத்தப்படுதல் நிச்சயம் தடுக்கப்பட வேண்டும். பிற மத விழாக்களில் பொதுவிடங்களில் மாடுகள் வெட்டப்பட்டு உண்ணப்படுகின்றன. இதைத் தடுப்பதற்கும் மக்கள் முன்வர வேண்டும். மாட்டை உண்பவன் மனிதனல்ல என்பது ஆழமாக உணர்த்தப்பட வேண்டும்.