கர்தமருக்கும் தேவஹூதிக்கும் நடந்த திருமணம்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார்.”வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரபூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்குத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: மூன்றாம் காண்டம், இருபத்திரெண்டாம் அத்தியாயம்

சென்ற இதழில், பகவானின் பரம ஏற்பாட்டின்படி, மனு கர்தம முனிவரைச் சந்தித்து உரையாடியதைப் பார்த்தோம். இந்த இதழில் மனுவின் புதல்வியான தேவஹூதிக்கும் கர்தமருக்கும் திருமணம் நடைபெறுவதை அறியலாம்.

மனு கர்தமரை கௌரவித்தல்

கர்தம முனிவரிடம் மனு பின்வருமாறு பேசலானார், “வேதத்தின் உருவமாகிய பிரம்மதேவர் வேத அறிவை பரப்புவதற்காக தம் முகத்திலிருந்து பிராமணர்களாகிய தங்களைப் படைத்தார், பொதுவாக பிராமணர்கள் தவம், புத்திசாலித்தனம், புலனின்பத்தில் பற்றின்மை, மற்றும் யோக சித்திகள் நிறைந்தவர்கள். பிராமணர்களின் பாதுகாப்பிற்காக, தம் கரங்களிலிருந்து சத்திரியர்களான எங்களைப் படைத்தார். இப்பொழுது உங்களைச் சந்தித்தால் எனது கடமைகளைப் பற்றி சந்தேகமின்றி தெளிவாக நான் புரிந்து கொண்டேன். உங்களைக் காண முடிந்தது எனது நல்லதிர்ஷ்டம். உங்களின் பாததூளி என் தலையில் படுவது என் பெரும்பாக்கியமாகும். உங்களின் நேரடி அறிவுரையை பெறமுடிந்தமைக்காக பகவானுக்கு நன்றி செலுத்துகிறேன்.”

தேவஹூதியை ஒப்படைத்தல்

மனு தொடர்ந்தார், “சிறந்த முனிவரே, எனது தாழ்மையான வேண்டுகோளைக் கேளுங்கள். எனது மகளின் மீதுள்ள பாசத்தால் எனது மனம் பரிதவிக்கிறது. பிரியவிரதனுக்கும் உத்தானபாதனுக்கும் என் மகள் சகோதரியாவாள். அவள் வயது, நடத்தை, நல்ல குணங்கள் ஆகியவற்றில் தனக்கு பொருந்திய கணவனைத் தேடிக் கொண்டிருக்கிறாள். நாரத முனிவரிடமிருந்து உங்களின் உயர்ந்த நடத்தை, கல்வி, அழகிய தோற்றம், இளமை மற்றும் பிற குணங்களைப் பற்றி கேள்விப்பட்ட மாத்திரத்தில் அவளது சிந்தனை தங்களை நாடலாயிற்று. நான் மனப்பூர்வமாக அவளைத் தங்களிடம் ஒப்படைக்கிறேன். தயைகூர்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள்.

“எல்லாவிதத்திலும் தங்களது மனைவியாவதற்கு தகுதியான அவள் உங்கள் குடும்பக் கடமைகளை சிறப்பாக நிறைவேற்றுவாள். புலனின்ப ஆசை உடையவர்களாயினும் புலனின்ப ஆசை அற்றவர்களாயினும் தானாக வரும் காணிக்கையை மறுப்பது பாராட்டத்தக்கதல்ல. தானான வருவதை மறுத்துவிட்டு பின் கஞ்சனிடம் கேட்பவர்கள் தம்மதிப்பை இழக்கிறார்கள். நீங்கள் நிலையான பிரம்மசரிய விரதம் ஏற்காமல் திருமணம் செய்யத் தயாராக இருப்பதை நான் கேள்வியுற்றேன். எனவே, இவளை உங்கள் துணைவியாக ஏற்றுக்கொள்வீராக.”

கர்தமர் தேவஹூதியை ஏற்றல்

மனுவின் வேண்டுகோளைக் கேட்ட கர்தமர் பதிலளித்தார், “எனக்கு நிச்சயம் மணம்புரியும் விருப்பம் உள்ளது. உங்கள் மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவள் யாருக்கும் வாக்களிக்கவில்லை, வேத நூல்களில் விதக்கப்பட்ட நியதிகளின்படி திருமண விருப்பம் நிறைவேறட்டும். சிறந்த கந்தர்வராகிய விஸ்வாவஸு தங்கள் புதல்வியின் பேரழகினால் கவரப்பட்டு மோகத்தால் மயங்கி தன் விமானத்திலிருந்து தவறி கீழே விழுந்தான், பெண்மைக்கு அணிகலனாக விளங்கும் இவள் என் கரம்பற்ற விரும்பி தானாக வந்திருக்கிறாள். இந்த கற்புள்ள பெண்ணை நியதியோடு ஏற்றுக்கொள்கிறேன். ஆயினும், இவள் என் குழந்தைகளைப் பெற்றெடுத்தவுடன், பக்திமயமான துறவு நெறியை ஏற்க நான் விரும்புகிறேன். அப்பாதை பொறாமையற்றதும் மிகச் சீரியதுமாகும்.”

தன் ஆன்மீக முன்னேற்றத்தால் “விஷ்ணுவே பரமபுருஷ பகவான், அவரே தனது வணக்கத்திற்குரிய தெய்வம்” என்பதை நன்கு அறிந்திருந்த கர்தம முனிவர், விஷ்ணுவின் விருப்பங்களை தனது கடமைகளாகக் கொண்டார். அவர், வைஷ்ணவ தர்மத்தைப் பரப்பும் ஒரே ஒரு மகனை மட்டுமே பெற விரும்பினார்.

திருமணம்

இதன் பின்னர் கர்தம முனிவர் அமைதியாக பகவான் விஷ்ணுவை தியானிக்கத் துவங்கினார். அப்போது மௌனமான புன்முறுவல் பூத்த அவரது முகம், தேவஹூதியின் உள்ளத்தை கொள்ளை கொண்டது. மகள் தேவஹூதியின் விருப்பத்தைப் புரிந்து கொண்ட பின் இராணி ஸதரூபாவின் பூரண சம்மதத்துடன் எல்லா வகையிலும் நற்குணவானான கர்தம முனிவருக்கு மனு தன் மகளை திருமணம் செய்து வைத்தார்.

இராணி ஸதரூபா, மணமகளுக்கு நகைகள், ஆடைகள் மற்றும் வீட்டுக்குத் தேவையான பொருட்களையும் மிகவும் விலையுயர்ந்த பரிசுகளையும் அன்புடன் கொடுத்தாள்.
மகளைப் பிரிகிறோம் எனும் துக்கத்தில் ஸ்வாயம்புவ மனுவின் மனம் மிகவும் வாடியது. எனவே, தன் இரு கரங்களாலும் தன் அன்பு மகளை அணைத்துக் கொண்டார். மகளின் பிரிவைத் தாங்கவியலாத அவரது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து மகளின் தலையை நனைத்தது.

பின், கர்தம முனிவரிடம் அனுமதி பெற்று, தனது தேரில் ஏறி தன் தலைநகருக்குச் சென்றார். செல்லும் வழியில் முனிவர்கள் மற்றும் ரிஷிகளின் அழகிய ஆசிரமக் குடில்கள் நிறைந்த புனிதமான சரஸ்வதி நதியினை தரிசித்தபடி சென்றார்.

மனுவின் வாழ்க்கை நெறி

மனுவின் தலைநகரம் பர்ஹிஷ்மதி என அழைக்கப் பட்டது. பகவான் விஷ்ணு, வராஹ அவதாரமாக வந்தபொழுது, தன் உடலை குலுக்கிய சமயத்தில், அவரது முடி இந்த நகரத்தில் விழுந்தது. அது வேள்விக்குப் பயன்படும் தர்ப்பை மற்றும் கச புல்லாக வளர்ந்து நகரத்தைப் பசுமையாக வைத்திருந்தது. இந்த புற்களால் ஆன ஆசனத்தில் அமர்ந்து மனு பரம புருஷ பகவானை வணங்கி நிலவுலகை ஆட்சி செய்யும் ஆசியைப் பெற்றார்.

தம் பயணத்தை இனிதே முடித்துக் கொண்டு திரும்பிய மனு தனது தலைநகருக்கு வருவதை அறிந்த குடிமக்கள் மிக்க ஆவலுடன் மங்கள வாத்திய இசையுடன் போற்றிப்பாடி அவருக்கு அன்பான வரவேற்பை வழங்கினர். மன்னர் ஸ்வாயம்புவ மனு சாஸ்திர விதிகளுக்கு ஏற்றவாறு தம் மனைவியுடனும் குடும்பத்துடனும் வாழ்வில் மகிழ்ச்சியுடன் இருந்தார். அவரின் சிறந்த செயல்களை விண்ணுலகப் பாடகர்கள்கூட புகழ்ந்து பாடினர். அவர் பகவானின் திவ்ய லீலைகளை பற்றி அன்றாடம் மிக்க ஆர்வத்துடன் கேட்பது வழக்கம்.

ஸ்ரீமத் பாகவத சுருக்கம்

அவர் ஜடவுலக இன்பத்தில் பற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில், அவர் எப்போதும் கிருஷ்ண உணர்வு சூழலிலேயே ஜடவுலக இன்பங்களை அனுபவித்தார். இவ்வாறாக, பகவானின் திவ்ய லீலைகளை கேட்பதிலும் பாடுவதிலும் ஆழ்ந்து நினைப்பதிலும் எழுதுவதிலும் எப்போதும் அவர் ஈடுபட்டிருந்தார். இதனால் அவரது நீண்ட வாழ்வு முழுவதும் (ஒரு மன்வந்தரம்) முறையாகப் பயன்படுத்தப்பட்டது. (ஒரு மன்வந்தரம் என்பது நான்கு யுகங்களின் 71 சுழற்சியாகும். அதாவது 43,20,000*71 ஆண்டுகள் ஆகும்.

அவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தூய பக்தித் தொண்டில் முழுமையாக ஈடுபட்டிருந்ததால் மூவிதத் துன்பங்களிலிருந்தும் முக்குணங்களின் பாதிப்பிலிருந்தும் விடுபட்டு உன்னத வாழ்வு வாழ்ந்தார். அவர் பொதுவாக மனிதர்கள் ஆற்றவேண்டிய கடமைகள் மற்றும் வர்ணாஷ்ரம கடமைகள் பற்றி விளக்கமாகக் கற்பித்தார். அது ’மனு சம்ஹிதை என அறியப்படுகிறது.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives