நாசிக்

Must read

வழங்கியவர்: அத்புத ஹரி தாஸ்

வால்மீகி இராமாயணத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி, பகவான் இராமசந்திரரின் காலக்கட்டத்தில் நாசிக் பகுதியானது மிகவும் அமைதியாகவும் அற்புதமான வனத்தைக் கொண்டதாகவும் இருந்தது, இங்கு வசித்தவர்களின் அனைத்து தேவைகளையும் அந்த வனம் முற்றிலுமாக பூர்த்தி செய்தது. பகவான் இராமர் அயோத்தியாவிலிருந்து வெளியேறி வனவாசத்தில் இருந்தபோது சீதையுடனும் லக்ஷ்மணருடனும் இங்கே வசித்தார். இன்று நாசிக் நகரமானது பல்வேறு யாத்திரிகர்களுடனும் பல்வேறு கோயில்களுடனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக திகழ்கிறது.

 

நாசிக் என்னும் பெயரானது நாஸிக என்னும் சமஸ்கிருத வார்த்தையிலிருந்து வந்தது, நாஸிக என்றால் “மூக்கு” என்று பொருள். இங்குதான் லக்ஷ்மணர் இராவணனின் தங்கையான சூர்பனகையின் மூக்கை அறுத்தார்.

பகவான் இராமர் இங்கு வருவதற்கு முன்பாக பகவான் கபிலர் தவங்களை நிறைவேற்றிய தபோவனம் என்று அழைக்கப்படும் இடம். இங்கே சீதை, இராமர் மற்றும் லக்ஷ்மணரின் சிலைகள் பார்வையாக வைக்கப்பட்டுள்ளன.

நான் நாசிக்கில் தங்கியிருந்த முதல் நாளன்று, என்னுடைய வழிகாட்டியான யோகேஷ், நாசிக்கிலிருந்து 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திரம்பகேஷ்வரர் கோயிலுக்குச் செல்லலாம் என்று அறிவுறுத்தினார். அக்கோயிலானது சிவபெருமானிற்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். த்ரீ என்றால் “மூன்று” என்றும் அம்பக என்றால் “கண்கள்” என்றும் ஈஷ்வரர் என்றால் “கட்டுப்படுத்துபவர்” என்றும் பொருள்படுகிறது. இந்த அற்புதமான கோயிலானது கருப்பு நிற கற்களினால் மிகவும் அழகாக செதுக்கப்பட்டுள்ளது, இது சிவபெருமானின் பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகும். சிவபெருமான் கௌதம முனியின் தவத்தினால் திருப்தியுற்று இங்கு தோன்றினார். (படிக்க: திரம்பகேஷ்வரர் தோன்றிய வரலாறு) இங்குள்ள ஜோதிர் லிங்கத்தின் மிகவும் விசேஷமானத் தன்மை என்னவெனில், இந்த லிங்கம் மூன்று முகங்களைக் கொண்டுள்ளது: பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவபெருமான்.

 

சிவபெருமானின் லிங்கத்தை தரிசித்த பின்னர், நாங்கள் சுமார் ஒரு கி.மீ தூரம் நடந்து சென்று கௌதம முனிவரால் ஏற்படுத்தப்பட்ட குஷாவர்த்த குளத்தினை அடைந்தோம். இந்த குளமானது குஷ என்று அழைக்கப்படும் தர்பைப் புல்லினால் சூழப்பட்டிருந்ததால், குஷாவர்த்த என்று பெயரிடப்பட்டது. இன்று இக்குளமானது தூண்களால் நிரம்பிய சில கோயில்களால் சூழப்பட்டுள்ளது. இக்குளமானது கோதாவரி நதியின் ஆதிமூலமாக திகழும் பிரம்மகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. பிரம்மகிரி மலையின்மீது, கங்கா தேவியின் கோயில், கௌதம முனிவர் தவம் செய்த குகை, இராம லக்ஷ்மணரின் குண்டம் ஆகியவற்றை யாத்திரிகர்கள் தரிசிக்கின்றனர். பகவான் இராமர் தன்னுடைய தந்தை தசரதரின் மறைவின் காரணமாக, இந்த இராம லக்ஷ்மண குண்டத்தில் சடங்குகள் செய்ததாக நம்பப்படுகிறது.

கலா இராமரின் கோயிலில் வழிபடக்கூடிய இராம-லக்ஷ்மண சீதையின் விக்ரஹங்கள்

மறுநாள் நாங்கள் நாசிக்கில் உள்ள புனிதமான இராம குண்டத்தில் நீராடினோம், இங்குள்ள மக்கள் பகவான் இராமர் செய்ததுபோல தங்களது மூதாதையர் களுக்கு பிண்டங்களை வழங்குகின்றனர். இராம குண்டத்திற்குப் பின்னால் கோதாவரி நதிக்கென்று ஒரு சிறிய கோயில் உள்ளது. இக்கோயில் நாசிக்கில் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் மாபெரும் திருவிழாவான கும்பமேளாவின்போது மட்டுமே திறக்கப்படுகிறது.

 

இராம குண்டத்தில் நீராடிய பின்னர் நாங்கள் தபோவனத்திற்குச் சென்றோம். தபோவனம் என்றால் தவங்களின் வனம் என்று பொருள், இராம குண்டத்திலிருந்து ஆறு கிலோ மீட்டர் தெற்கில் கோதாவரி நதியும் கபில நதியும் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. கபில நதி கோதாவரி நதியை சங்கமிக்கும் இடமானது கபில தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது, இங்கு பகவான் கபிலர் பல்வேறு தவங்களை செய்துள்ளார். ஒரு பெரிய அரச மரத்தின் அடியில் பகவான் லக்ஷ்மணரின் விக்ரஹமும் அவருக்கென்று ஒரு சிறிய கோயிலும் கட்டப்பட்டுள்ளது. அதற்கு அருகில் லக்ஷ்மணர் சூர்பனகையின் மூக்கை அறுத்ததை நினைவூட்டக்கூடிய ஒரு சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளது. சூர்பனகையின் மூக்கை லக்ஷ்மணர் அறுத்தது இவ்விடத்தில்தான் நடைபெற்றது என்று உள்ளுர் மக்கள் நம்புகின்றனர்.

 

நாசிக்கில் இருக்கக்கூடிய ஆர்வத்தைத் தூண்டும் கோயில்களாவன: சுந்தர நாராயணர் கோயில், கபாலீஷ்வரர் கோயில், நாரோ சங்கரர் கோவில், காலா இராமர் கோயில்–இக்கோயில்கள் அனைத்தும் பதினெட்டாம் நூற்றாண்டில் கருப்பு கற்களால் கட்டப்பட்டவை. இவையனைத்தும் கோதாவரி நதிக்கு அருகில் உள்ள பஞ்சவடி பகுதியில் அமைந்துள்ளன. பஞ்சவடி பகுதியில்தான் பகவான் இராமர், லக்ஷ்மணர் மற்றும் சீதையுடன் வாழ்ந்தனர். பஞ்சவடி என்றால் “ஐந்து ஆலமரங்களின் இடம்” என்று பொருள், இன்றும்கூட இங்கு ஐந்து ஆலமரங்கள் இருப்பதைக் காணலாம். இந்த மரங்களுக்கு அருகில் மரத்தினால் செய்யப்பட்ட ஒரு வீடு உள்ளது, அங்கு சீதா-குஃபா என்று அழைக்கப்படும் ஒரு சிறிய குகை உள்ளது, அந்த குகையினுள் இராம லக்ஷ்மண சீதையின் விக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். அசுரர்களின் படையானது பகவான் இராமரைத் தாக்கியபோது, சீதை இந்த குகையினுள் தஞ்சமடைந்ததாக நம்பப்படுகிறது. இராவணன் சீதையை பஞ்சவடியிலிருந்து கடத்திச் சென்ற நிகழ்ச்சியும் பகவான் இராமர் மானின் வடிவில் வந்த மாரீசனை கொன்ற நிகழ்ச்சியும் இந்த குகையைச் சுற்றித்தான் நிகழ்ந்தன.

சூர்பனகையின் மூக்கினை லக்ஷ்மணர் வெட்டிய காட்சியானது இங்கு புடைப்புச் சிற்பமாக வைக்கப்பட்டுள்ளது.

நாசிக்கில் பல நாள்களை கழித்த நானும் யோகேஷும் இங்குள்ள புனித ஸ்தலங்களுக்கு விஜயம் செய்து மாபெரும் உற்சாகத்தைப் பெற்றோம். ஆனால் அதே சமயத்தில் இங்கு வரக்கூடிய யாத்திரிகர்கள் பெரும்பாலும் ஏதேனும் பௌதிக நன்மையை நாடி சடங்குகளைச் செய்வதில்தான் ஆர்வம் காட்டுகிறார்களே தவிர, பகவான் இராமரின் செயல்களைப் பற்றி அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டவில்லை, இதைக் கண்டு நாங்கள் அதிருப்தியடைந்தோம். இவ்விடத்தின் உண்மையான ஆன்மீக முக்கியத்துவத்தைப் பற்றிய எங்களுடைய கேள்விகளுக்கு இங்கு வசிக்கக்கூடிய சாதுக்களால்கூட பதிலளிக்க முடியவில்லை. நாசிக் போன்ற புனித இடத்தில்கூட நமக்கும் பகவானுக்கும் இடையிலுள்ள உறவைப் பற்றிய ஆன்மீக அறிவானது கலி யுகத்தின் தாக்கத்தினால் அழிந்துவிட்டதுபோல் காணப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, நாம் ஶஸ்ரீல பிரபுபாதர் மற்றும் அவருடைய நம்பிக்கையான சீடர்களின் மூல மாக பூர்வீக ஆன்மீக குருமார்களின் உபதேசங்களைக் கேட்டு ஆன்மீக வழிகாட்டுதலைப் பெற முடிகிறது.

இடது: நாசிக்கிலிருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திரம்பகேஷ்வரர் கோயில்.

வலது: யாத்திரிகர்கள் நாசிக்கில் அமைந்துள்ள புனிதமான கோதாவரி நதியில் நீராடுகின்றனர்.

இங்குள்ள இந்த மூன்று குழியில்தான் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் சீதை கடத்தப்பட்டதற்கு சாட்சியாக அமைந்தனர்.

கௌதம முனிவரால் உருவாக்கப்பட்ட குஷாவர்த்த குளம்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives