வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: நான்காம் ஸ்கந்தம், அத்தியாயம் 30

சென்ற இதழ்களில் மன்னர் பிராசீனபர்ஹிஷத்திற்கு நாரத முனிவர் உபதேசித்ததை விரிவாகக் கண்டோம். மன்னரின் மகன்களான பிரசேதர்களின் செயல்களை இவ்விதழில் காணலாம்.

விஷ்ணு பகவான் தோன்றுதல்

பிரசேதர்கள் சிவபெருமானின் உபதேசத்தின்படி கடல் நீரினுள் பகவான் விஷ்ணுவை நோக்கி கடுந்தவம் புரிந்தனர். அவர்களிடம் திருப்தியடைந்த பகவான் விஷ்ணு தமது இனிமையான ரூபத்துடன் அவர்களுக்கு காட்சியளித்தார்.

பகவான் ஆயுதங்களை ஏந்திய எட்டு கரங்களுடன் மஞ்சள் பட்டாடை உடுத்தி, கெளஸ்துப மாலை மற்றும் கண்ணைப் பறிக்கும் கிரீடம் அணிந்து, தேவர்களாலும் முனிவர்களாலும் போற்றி துதிக்கப்பட்டவராக கருடன் மீது தோன்றினார். கருட தேவர் தம் இறக்கைகளை அசைத்தபடி வேத மந்திரங்களால் பகவானின் புகழ் பாடினார்.

பகவானின் ஆசி

பிரசேதர்களை கருணையுடன் நோக்கிய பகவான் கூறினார், “சிவபெருமானால் இயற்றப்பட்ட பிரார்த்தனையின் மூலம் நீங்கள் நட்புறவோடு பக்தித் தொண்டில் ஈடுபட்டதால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுக்கு அனைத்து மங்கலங்களும் உண்டாகட்டும்! உங்களை நினைவுகூர்வோரும் அனைத்து ஜீவராசிகளிடமும் நட்புறவோடு விளங்குவர். தந்தையின் கட்டளையை மிக்க மகிழ்ச்சியோடு ஏற்று செயல்படுத்திய உங்களை இப்பிரபஞ்சமே போற்றிப் புகழும்.

உங்களுக்கு, பிரம்மதேவருக்கு சமமான ஒரு செல்வன் பிறப்பான். அவனது சந்ததியினர் உலக முழுவதும் நிரம்ப காணப்படுவர். கண்டு மகரிஷிக்கும் தேவலோக மங்கை பிரம்மலோசாவிற்கும் பிறந்த மகள் காட்டில் விடப்பட்டாள். அவளுக்கு சந்திரன் தன் சுட்டு விரலால் அமிர்தத்தை ஊட்டினார். அப்பெண்ணை நீங்கள் மணந்து கொண்டு உங்கள் தந்தையின் கட்டளைக்கேற்ப மக்கள் தொகையைப் பெருக்குவீராக!

நீங்களும் அப்பெண்ணும் ஒரே கொள்கையை உடையவர்கள். ஆதலினால், எல்லாவிதத்திலும் சம நிலையில் இருக்கிறீர்கள். எனது அருளால் இளமையும் வலிமையும் குன்றாதவர்களாக பத்து இலட்சம் தேவ வருடங்கள், பலவிதமான இகலோக, மற்றும் ஸ்வர்க லோக இன்பங்களை அனுபவித்து மகிழுங்கள். அதன்பிறகு எனது பக்தித் தொண்டினால் பெளதிக களங்கங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டு முக்தி பெற்று என்னை அடைவீர்கள்.

பக்தித் தொண்டு செய்யும் ஒருவர் முழுமுதற் கடவுள் ஒருவரே என்பதை நன்கறிந்து செயல்களின் பலன்களை அவருக்கே அர்ப்பணித்து, அவரது பணியில் தன் வாழ்வைக் கழிக்கிறார். இதனால் இல்லற வாழ்வில் இருந்த போதிலும் கர்ம விளைவுகள் அவரை பாதிப்பதில்லை. பக்தர்கள் பரமாத்மாவின் கருணையால் அனைத்து செயல்களிலும் புதுமையும் புத்துணர்ச்சியும் பெறுகின்றனர். அவர்கள் அநாவசியமாக துக்கமோ மகிழ்ச்சியோ அடையாமல் பிரம்மானந்த நிலையில் நிலை பெற்றுள்ளனர். எனக்கு பிரியமான பக்தர்களே! உங்களுக்கு வேண்டும் வரத்தை கேட்பீராக!”

பிரசேதர்கள் பகவான் விஷ்ணுவை தரிசித்து பிரார்த்தனை செய்தல்

பிரசேதர்களின் பிரார்த்தனை

இவ்வாறாக, பகவானின் கருணைமிக்க தரிசனத்தையும் ஆசியையும் பெற்ற பிரசேதர்கள் அவரை வழிபடத் துவங்கினார். “அனைத்து துன்பங்களையும் நீக்குகின்ற போற்றுதற்குரிய பகவானே! உமது புனித நாமங்களும் உன்னத குண நலன்களும் எல்லா மங்கலங்களும் உடையவை. ஜட புலன்களால் உணரவியலாதவரான முழுமுதற் கடவுளாகிய உங்களுக்கு எமது வந்தனங்களை மீண்டும்மீண்டும் சமர்ப்பிக்கிறோம்!

மனம் தங்களின் மீது நிலைத்திருக்கும்போது இருமை நிறைந்த இவ்வுலகம் பெருமையற்றதாக தோன்றுகிறது. அன்பின் வடிவே! பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான் என்ற உமது வடிவங்கள் இந்த ஜடவுலகைப் படைப்பதற்கும், காப்பதற்கும் மற்றும் அழிப்பதற்கும் எடுக்கப்பட்ட உமது குண அவதாரங்களாகும்.

தாங்கள் இந்த ஜட உலகத்தால் பாதிக்கப்படாதவர். பக்தர்களின் துயரங்களைத் துடைப்பவராகிய தாங்களே வஸுதேவரைத் தந்தையாக ஏற்ற கிருஷ்ணர் என அறியப்படுகிறீர். உயிர்களுக்கு ஆதாரமாகிய ஆதி தாமரை தங்கள் நாபியிலிருந்து தோன்றியது. தாமரை மலர் மாலையைச் சூடியுள்ள தங்கள் திருவடிகள் தாமரை மலர்களை ஒத்துள்ளன. தங்கள் திருவிழிகள் தாமரை இதழ்களை போன்று சிவந்துள்ளன.

தங்களின் ஆடை ஆபரணங்கள் பெளதிக வஸ்துகள் அல்ல. அவையும் ஆன்மீக மயமானவையே. அனைவரின் இதயங்களிலும் வீற்றிருக்கும் நீரே கண்கண்ட தெய்வம். அர்ச்சா ரூப வடிவில் அனைத்து பக்தர்களுக்கும் கருணை காட்டுகிறீர்கள். தாங்கள் பக்தர்களைப் பற்றி நினைக்கும் போதே அவர்களது விருப்பங்கள் நிறைவேறுகின்றன.”

பிரசேதர்களின் விருப்பம்

பிரசேதர்கள் தொடர்ந்தனர்: “பிரபஞ்சத்தின் நாயகரே! எங்களது பக்தித் தொண்டினால் தாங்கள் திருப்தியடையுமாறு வேண்டுகிறோம். இதுவே எங்களுக்கு நீங்கள் தரும் வரமாகும். உங்கள் திருப்தியே எங்களது குறிக்கோள். அதைத் தவிர எங்களுக்கு வேண்டியது எதுவுமில்லை. எல்லையற்ற வளங்களை உடைய தாங்கள் அனந்தர் என அறியப்படுகிறீர். உங்களை சரணடைந்து உங்கள் திருவடித் தாமரைகளின் பாதுகாப்பில் இருப்போருக்கு முக்திகூட துச்சமாகவே ஆகின்றது. எமது மாசு நிறைந்த உணர்வால் மீண்டும்மீண்டும் பிறவியெடுக்க நேர்ந்தாலும் உமது லீலைகளைப் பற்றி பேசி மகிழும் பக்தர்களின் சங்கத்திலேயே எப்போதும் இருக்க வேண்டுமென்ற விருப்பத்தை வேண்டுகிறோம். எந்தவோர் உயிர்வாழிக்கும் தங்கள் பக்தர்களின் சங்கமே பெறுவதற்கரிய மிகவுயர்ந்த வரமாகும்.

பக்தர்கள் மூலம் உமது உன்னத பெருமைகளைக் கேட்கும்பொழுது உயிர்வாழிகளின் இதயத்தில் உலகியல் நாட்டம் மறக்கப்படுகிறது. காழ்ப்புணர்ச்சி, கவலை மற்றும் அச்சம் வெளிப்படுவதில்லை. பெளதிக மாசுகளற்ற தூய பக்தர்கள் உமது நாமங்களை இசையுடன் பாடுவர். அவர்கள் உமது புகழ்பாடி உலகம் முழுதும் சஞ்சரிக்கும்போது, புனித ஸ்தலங்கள்கூட மேலும் தூய்மை பெற்று புனிதத் தன்மையை அதிகரித்துக்கொள்கின்றன. உமக்கு பிரியமான சிவபெருமானின் கண நேரத் தொடர்பால் உம்மை தரிசித்து சரணடைய முடிந்தது.

பகவானே, நாங்கள் ஆன்மீக குருவை முறையாக ஏற்றுக் கொண்டது. அவரது வழி காட்டுதலில் வேதக் கல்வியை கற்றது, எங்கள் சகோதரர்களிடத்தும் பிறரிடத்தும் ஒரு போதும் காழ்ப்புணர்ச்சி கொள்ளாமல் நட்புறவு பாராட்டியது, நீருக்குள் விரதம் பூண்டு தவம் செய்தது போன்ற ஆன்மீகச் செல்வங்கள் அனைத்தையும் தங்கள் திருப்திக்காகவே அர்ப்பணிக்கிறோம். தங்கள் கருணையால் நாங்கள் செய்யும் பக்தித் தொண்டால் தாங்கள் திருப்தியடைவது ஒன்றைத் தவிர வேறெந்த வரத்தையும் வேண்டோம். அனைவருக்கும் சமமான பகவானே! வாஸுதேவரே! நாங்கள் மீண்டும் மீண்டும் உங்களுக்கு எங்கள் மரியாதை கலந்த வணக்கங்களை சமர்ப்பிக்கிறோம். மகாஜனங்கள் தங்கள் தகுதிக்கேற்ப உம்மை வழிபடுகின்றனர். இழிவு நிலையில் உள்ள நாங்கள் எங்கள் சக்திக்கேற்ப உங்களை வழிபடுகிறோம்.”

பிரசேதர்களின் சினத்தினால் உருவான நெருப்பு பூமியிலிருந்த மரங்களை எரித்து சாம்பலாக்கியது.

தக்ஷனின் மறுபிறவி

பிரசேதர்களின் வழிபாட்டை ஏற்றுக்கொண்ட பகவான் அவர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்று ஆசீர்வதித்து தம் இருப்பிடம் திரும்பினார். அதன்பிறகு கடல் நீரிலிருந்து வெளிவந்த பிரசேதர்கள் பூமியின் நிலப்பரப்பு முழுவதும் மரங்களால் மறைந்திருந்ததை கண்டு சினம் கொண்டு தங்கள் வாயிலிருந்து நெருப்பையும் புயல் காற்றையும் வெளிப்படுத்தினர். பூமியிலிருந்த அனைத்து மரங்களும் எரிந்து சாம்பலாவதைக் கண்ட பிரம்மதேவர் உடனே அவ்விடத்திற்கு விரைந்து பிரசேதர்களை சமாதானப்படுத்தினார். அச்சத்தால் பீடிக்கப்பட்டிருந்த எஞ்சியிருந்த மரங்கள், பிரம்மதேவரின் ஆலோசனைப்படி தங்களால் வளர்க்கப்பட்ட கண்டு மகரிஷியின் மகளான மாரீஷாவை அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தனர்.

முன்பு ஒருமுறை பிரஜாபதி தக்ஷன், தன் மருமகனான சிவபெருமானை அவமதித்ததால் அவரது தொண்டரான வீரபத்திரனால் கொல்லப்பட்டார். பின் பிரம்மதேவரின் ஆலோசனையின் பேரில் சிவபெருமானின் கருணையால் ஆட்டின் தலை பொருத்தப்பட்டு உயிர்ப்பிக்கப்பட்டார். தன் தவறை உணர்ந்த தக்ஷன் சிவபெருமானை முறைப்படி வழிப்பட்டார். அதனால், பிரம்மாவின் புத்திரனான தக்ஷன் இப்பிறவியில் பிரசேதர்களுக்கும் மாரீஷாவிற்கும் மகனாகப் பிறந்து. சிவபெருமானின் கருணையால் எல்லா செல்வங்களையும் மீண்டும் பெற்றார்.

சாக்ஷுஷ மன்வந்தரத்தில் மீண்டும் பிரஜாபதி நிலையை அடைந்து பிரம்மதேவருக்கு உதவியாக உயிர்களைப் படைப்பதில் ஈடுபட்டு மற்ற பிரஜாபதிகளையும் அதில் ஈடுபடுத்தினார்

பிரசேதர்களை சமாதானப்படுத்திய பிரம்மதேவர் மாரீஷாவை அவர்களுக்கு மணமுடித்தல்