இராமகேலி

வழங்கியவர்: விருந்தாவனி தேவி தாஸி

மேற்கு வங்காளத்தின் வடக்கு பகுதியில் உள்ள இராமகேலியை தரிசிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் விருப்பம் சமீபத்தில் நிறைவேறியது. இந்த ஊர் ஒரு காலத்தில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் நேரடி சீடர்களாகவும் அவரது ஹரே கிருஷ்ண இயக்கத்தின் தலைவர்களாகவும் இருந்த ரூப கோஸ்வாமி மற்றும் ஸநாதன கோஸ்வாமியின் இல்லமாக இருந்தது.

இராமகேலி என்று அழைக்கப்படும் இந்த சிறிய கிராமத்தின் புழுதிகள் நிறைந்த சாலைகளில், கார்களைக் காட்டிலும் பசுக்களும் ஆடுகளும் அதிகமாக காணப்படுகின்றன, இங்கு அதிகமான கடைகள் ஏதும் இல்லை, நீர் அருந்துவதற்கு கை பம்புகள் மட்டுமே உள்ளன. நூற்றுக்கணக்கான வருடங்களில் குறுகிய அளவு மட்டுமே இங்கு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

நான் நண்பர்களுடன் இணைந்து அமலேந்திரநாத் மைத்ரர் என்பவரின் இல்லத்தில் தங்கினேன், அவர் இராமகேலிக்கு அருகிலுள்ள மால்டாவின் பிரபலமான வழக்கறிஞராவார். மால்டாவிலிருந்து சுமார் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள இராமகேலியை தரிசிப்பதற்கான எங்களது யாத்திரைக்கு அவர் கார் ஏற்படுத்திக் கொடுத்தார்.

ரூப ஸநாதனரால் நிறுவப்பட்டு, அதன் பின்னர் அவர்களுடைய தம்பி மகனான ஜீவ கோஸ்வாமியினால்  நிர்வகிக்கப்பட்ட ராதா மதனமோஹனரின் கோயிலுடைய வாயிலை நாங்கள் அடைந்தோம். ஜீவ கோஸ்வாமி தன்னுடைய பெரியப்பாக்களுடன் இணைவதற்காக விருந்தாவனத்திற்குச் சென்ற பின்னர், இந்த பகுதியானது காலராவினால் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. ஜீவ கோஸ்வாமியின் சீடப் பரம்பரையில் வந்த ஜிதேந்திரநாத் மைத்ர என்பவரின் காலம் வரை இங்கிருந்த விக்ரஹங்கள் மூடப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. அவரே சுமார் முந்நூறு வருடங்களுக்கு பின்னர் வழிபாட்டினை இங்கே மீண்டும் தொடக்கியுள்ளார்.

1930இல் அமலேந்திரநாத் மைத்ரரின் தந்தையான உபேந்திரநாத் மைத்ரர் இராமகேலிக்கு வந்தார், அப்போது மிகவும் ஏழைகளாக இருந்த உள்ளூர் மக்கள் இக்கோயிலை புதுப்பிக்கும்படி அவரிடம் வேண்டிக் கொண்டனர். அவரும் தனது இல்லத்திற்கு சென்று இதுகுறித்து யோசிப்பதாக அவர்களிடம் கூறினார். அந்த இரவில் ராதா மதனமோஹனர் அவரது கனவில் தோன்றி, தங்களுக்காக ஒரு புதிய கோயிலை எழுப்பும்படி அவரை கேட்டுக் கொண்டனர். எவ்வித தயக்கமும் இன்றி உபேந்திரநாத் மைத்ரர் எல்லாவித கட்டுமான பொருட்களுக்கும் ஏற்பாடு செய்தார், சில மாதங்களில் புதிய கோயில் நிறுவப்பட்டது.

தலைமை பூஜாரியான பூர்ணசந்திர பணிக்கிரஹி, ஸ்ரீ ராதா மதனமோஹனரின் கோயிலுக்கு வருபவர்களை வரவேற்கின்றார்.

1930இல் ராதா மதனமோஹனருக்காக எழுப்பப்பட்ட கோயில்.

ரூப ஸநாதனரால் வழிபடப்பட்ட ஸ்ரீ ராதா மதனமோஹன விக்ரஹம்.

அமைச்சர்கள் கோஸ்வாமிகளாகுதல்

அழகிய ராதா மதனமோஹன விக்ரஹங்களை நாங்கள் தரிசித்தபடி அமர்ந்திருக்கையில், கோயிலின் முக்கிய பூஜாரியான பூர்ணசந்திர பணிகிரஹி அவர்கள் எங்களிடம் ரூப ஸநாதனரின் பின்வரும் வரலாற்றினை எடுத்துரைத்தார்:

சுமார் ஐநூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதியானது இஸ்லாமிய ஆளுநரான நவாப் ஹுசைன் ஷா என்பவரின் கண்காணிப்பின் கீழ் இருந்தது, அவர் அப்போது வங்காளம், ஒடிசா, பீகார் ஆகிய பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அச்சமயத்தில் ரூபரும் ஸநாதனரும் (அமர், சந்தோஷ் என்ற பெயர்களில் அவர்கள் அப்போது அறியப்பட்டிருந்தனர்) இராமகேலியில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் பிராமண சமுதாயத்தில் பெரிதளவில் மதிக்கப்பட்டிருந்தனர். அவர்களது அசாதாரணமான புத்தியை கவனித்த நவாப் அச்சகோதரர்களை தனது அரசாங்கத்தில் பணிபுரியும்படி பலவந்தப்படுத்தினார், ரூபரை தனது பொருளாளராகவும் ஸநாதனரை தனது பிரதம மந்திரியாகவும் நியமித்தார். அவர்களது நிபுணத்துவத்தின் கீழ் அரசு நிர்வாகம் சிறப்பாக நிகழ்ந்தது, அதனைப் பாராட்டிய நவாப் அவர்களுக்கு எண்ணிலடங்காத சொத்துகளை வழங்கினார்.

கிருஷ்ணரின் மாபெரும் பக்தர்களாக இருந்த ரூபரும் ஸநாதனரும் தங்களுடைய செல்வம் மற்றும் பதவியைப் பற்றி சற்றும் பொருட்படுத்தவில்லை, மாறாக, அச்சூழ்நிலையிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பதில் ஆவலுடன் இருந்தனர். அவர்கள் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவிற்கு பல்வேறு கடிதங்களை எழுதி அவரிடம் தங்களது வாழ்வை அர்ப்பணிப்பதற்காக அவரது உதவியை நாடினர்.

நவாப்பின் கட்டளையின் பேரில் ஸநாதன கோஸ்வாமி ஒன்றரை வருடங்களைக் கழித்த சிறைச்சாலை.

1514இல் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு விருந்தாவனத்திற்கு செல்வதாக காரணம் கூறி, தன்னுடைய நித்திய சகாக்களான ரூபரையும் ஸநாதனரையும் சந்திப்பதற்காக இராமகேலியை வந்தடைந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்களால் சூழப்பட்டிருந்த மஹாபிரபு, இரு சகோதரர்களுக்கும் இராமகேலியிலேயே தீக்ஷை வழங்கினார், அவர்களை அரசாங்க பதவியிலிருந்து கிருஷ்ணர் வெகுவிரைவில் விடுவிப்பார் என்று கூறினார்.

ரூபரும் ஸநாதனரும் நவாப்பின் இல்லத்தில் வாழ்ந்து வந்தனர், ஆனால் சைதன்ய மஹாபிரபுவை சந்தித்த பிறகு அவர்கள் ராதா மதனமோஹன விக்ரஹத்தினை வழிபடத் தொடங்கினர், விக்ரஹங்களுக்கு அருகிலேயே வசிக்கத் தொடங்கினர். நவாப்பிற்காக வேலை செய்வதை அவர்களால் மேலும் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. ரூபர் தன்னுடைய செல்வத்தினை தனது குடும்பத்திற்கும் பிராமண சமுதாயத்திற்கும் வழங்கி விட்டு விருந்தாவனத்திற்கான தனது பயணத்தினை மேற்கொண்டார்.

பிரதம மந்திரியாக இருந்த காரணத்தினால் ஸநாதனர் மேலும் சிறிது காலம் தங்க வேண்டியிருந்தது, ஆனால் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், வேலை செய்ய இயலாது என்றும், அவர் நவாப்பிடம் கூறினார். அவர் மீது சந்தேகம் கொண்ட நவாப் வைத்தியரை அனுப்பி வைத்து விஷயத்தை கண்டறியும்படி கூறினார். வைத்தியர் ஸநாதனரின் இல்லத்திற்கு வந்தபோது, ஸநாதனர் தனது இல்லத்தினை பக்தியின் ஆஸ்ரமமாக மாற்றி, அங்கே சாஸ்திர வகுப்புகளை நிகழ்த்திக் கொண்டிருப்பதைக் கண்டார். நவாப் அதனால் மிகவும் கோபம் கொண்டார். ரூபர் ஏற்கனவே தன்னைவிட்டு சென்று விட்டார் என்பதால், ஸநாதனரை தனக்காக நிச்சயம் பணியாற்ற வேண்டும் என்று கட்டளையிட்டார். ஸநாதனர் தனது பணியை ராஜினாமா செய்ய விரும்புவதாக கூறியபோது, நவாப் அவரை சிறைப்படுத்தினார்.

அச்சமயத்தில், பக்தர்களின் சேவைக்காக உள்ளூர் வியாபாரி ஒருவரிடம் பத்தாயிரம் தங்க நாணயங்கள் கொடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ரூப கோஸ்வாமி ஒரு கடிதத்தின் மூலமாக ஸநாதனரிடம் தெரிவித்தார். அந்த நாணயங்களில் ஏழாயிரம் நாணயங்களைக் கொண்டு ஸநாதனர் சிறைக் காவலருக்கு லஞ்சம் அளித்து அவரிடமிருந்து தப்பினார். அதன்பின்னர், அவர் சைதன்ய மஹாபிரபுவுடன் இணைந்து கொண்டார். ஜீவ கோஸ்வாமியும் தனது தாயின் மரணத்திற்கு பின்னர் ரூப ஸநாதனருடன் இணைந்து கொண்டார்.

நித்யானந்த பிரபு அமர்ந்த இடத்தில் அமைந்துள்ள நினைவகம்.

முக்கிய கோயிலில் வழிபடப்படும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, நித்யானந்த பிரபு, மற்றும் ஸ்ரீ அத்வைத பிரபு

இக்கோயிலானது சைதன்ய மஹாபிரபு ரூப ஸநாதனருக்கு தீக்ஷை கொடுத்த மரத்திற்கு அருகில் எழுப்பப்பட்டுள்ளது.

ஆன்மீக இயக்கத்தில் இருந்த ரூபரும் ஸநாதனரும் புனிதமான விருந்தாவனத்தில் உள்ள ராதா குண்டம் மற்றும் சியாம குண்டத்தின் மாதிரிகளை இங்கு எழுப்பினர்.

குப்த விருந்தாவனம்

பூஜாரி தனது விளக்கவுரையினை முடித்த பின்னர், எங்களுக்கு விக்ரஹங்களுக்கு அளிக்கப்பட்ட மஹாபிரசாதம் வாழை இலைகளில் வழங்கப்பட்டது. அந்த மதிய உணவினை எடுத்துக் கொண்டபின் நாங்கள் கோயிலுக்கு அருகிலுள்ள ராதா குண்டத்தையும், சியாம குண்டத்தையும் காணச் சென்றோம். ரூப கோஸ்வாமியும் ஸநாதன கோஸ்வாமியும் விருந்தாவனத்திலுள்ள ராதா குண்டம் மற்றும் சியாம குண்டத்தின் மாதிரிகளாக இந்த குளங்களை எழுப்பி உள்ளனர், அதன் மூலமாக அவர்கள் தங்களது செல்வத்தினை உபயோகித்து விருந்தாவனத்தின் பிரிவிலிருந்து தங்களது மனதினை சாந்தப்படுத்தினர். இந்த ஏரியை சுற்றியுள்ள பகுதியானது குப்த (மறைக்கப்பட்ட”) விருந்தாவனம் என்று அறியப்படுகிறது. நான் இங்குள்ள புனிதமான மண்ணை கொஞ்சம் எடுத்து என்னுடன் வைத்துக் கொண்டேன்.

அதன்பின்னர் அங்குள்ள முக்கியமான பூஜாரி எங்களை நித்யானந்த பிரபு அமர்ந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார், இங்கே இரண்டு மரங்கள் உள்ளன. இங்குள்ள பெரிய மரமானது அறுநூறு வருடங்கள் பழமையானதாக கருதப்படுகிறது, இதற்கு அடுத்துள்ள சிறிய கோயிலில் சைதன்ய மஹாபிரபுவின் பாத சின்னங்கள் உள்ளன. ரூப கோஸ்வாமி, ஸநாதன கோஸ்வாமி, மற்றும் அவர்களது சகோதரரான அணுத்தமருக்கு சைதன்ய மஹாபிரபு ஒரு மரத்தடியில் தீக்ஷை வழங்கியதாகக் கூறப்படுகிறது; அந்த மரத்திலிருந்து தோன்றிய கிளை மரம் இங்குள்ள இரண்டாவது மரமாகும். இதற்கு அருகில் ஸ்ரீ ஜீவ கோஸ்வாமியினால் வழிபடப்பட்ட சைதன்ய மஹா பிரபுவின் அழகிய விக்ரஹமும் உள்ளது.

இராமகேலியைச் சுற்றி

இவ்விடங்களை எல்லாம் எங்களுக்குச் சுற்றிக் காண்பித்ததற்காக பூஜாரிக்கு நன்றி தெரிவித்த பின்னர், நாங்கள் கிராமத்திலுள்ள இதர இடங்களைப் பார்ப்பதற்காக மீண்டும் காரில் சென்றோம். இராமகேலி மிகவும் அழகான கிராமமாக உள்ளது, அழகிய தெளிவான ஏரிகளாலும் பசுமையான காய்கறி தோட்டங்களாலும் கூரை வீடுகளாலும் இது நிறைந்துள்ளது. இப்பகுதியானது பட்டு நூல் மற்றும் சுவை மிகுந்த மாம்பழங்களுக்காக தொன்றுதொட்டு பெயர் பெற்றுள்ளது. பசுமையான இடங்களுக்கு மேலே தென்னை மரங்களும் பனை மரங்களும் கம்பீரமாக நின்று கொண்டுள்ளன.

நாங்கள் நவாப் ஹுசைன் ஷாவின் எஞ்சியுள்ள அரசாங்க கட்டிடத்தின் வழியாக பயணம் செய்தோம். இதன் அருகில் உள்ள மாபெரும் நிலப்பரப்பில் அவருடைய குதிரைகளும் யானைகளும் புற்களை மேய்ந்ததாக கூறப்படுகிறது.

சாலையில் இருந்து சிறிது தூரம் பயணம் மேற்கொண்ட பின்னர், நாங்கள் ஸநாதன கோஸ்வாமி சிறைபடுத்தப்பட்டிருந்த சிறைச்சாலையை அடைந்தோம். அங்கு மேய்ந்து கொண்டிருந்த பசுக்களை கடந்து நாங்கள் அந்த கட்டிடத்தினுள் நுழைந்தோம். அதன் உட்பகுதியானது விருந்தாவனத்திலுள்ள ராதா கோவிந்தரின் கோயிலை எனக்கு நினைவுபடுத்தியது. அந்த மாபெரும் கட்டிடத்தின் மேற்கூரையானது செங்கல்களைக் கொண்டு வளைவான வடிவில் எந்தவோர் ஆதாரமும் இன்றி அற்புதமாக கட்டப்பட்டுள்ளது. இதன் அமைப்பினைக் கண்டு நவீன கால கட்டிடக் கலைஞர்கள் குழம்புகின்றனர். ஸநாதனரின் சிறைச்சாலையிலிருந்து வெளியேறியபோது, அவர் எவ்வாறு இங்கே பதினேழு மாதங்கள் பத்தொன்பது நாள்களைக் கழித்திருப்பார் என்பதை எண்ணிப் பார்த்தேன்.

இராமகேலி என்னும் பெயரை இந்த ஊர் பெற்றதற்கு பகவான் இராமரின் வருகை காரணமாகிறது. இராமசந்திரரின் பத்தினியான சீதா தேவியின் ஏரியை வந்தடைந்தோம், இங்கே அவள் தனது தாயிற்கு பிண்டம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு அருகில் உள்ள மரமானது ஐயாயிரம் வருடங்கள் பழமையானதாகக் கூறப்படுகிறது. வருடத்தில் ஒருமுறை பீகாரிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து பிண்டம் கொடுக்கின்றனர். பாலபிக்ஷா என்று அறியப்படும் மரத்தினை வழிபடுகின்றனர். இது நிச்சயமாக நான் பார்த்த மரங்களிலேயே மிகப்பெரியதாகத் தோன்றுகிறது, இதன் மாபெரும் கிளைகள் பூமிவரை இறங்கியுள்ளன.

நாங்கள் மால்டாவிற்கு திரும்பும் வழியில், சைதன்ய மஹாபிரபுவினால் தீண்டப்பட்ட இந்த கிராமத்தை விஜயம் செய்வதற்கு நான் பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்த்தேன். இங்கிருந்து அவர் மூன்று மாபெரும் ஆன்மீக நபர்களான ரூப கோஸ்வாமி, ஸநாதன கோஸ்வாமி மற்றும் ஜீவ கோஸ்வாமியினைப் பெற்றார். அவர்கள் அமைத்த அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டுதான் தற்போதைய கிருஷ்ண பக்தி இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தினால் நன்மை அடைந்துள்ள நாம் அனைவரும் அவர்களுக்கு நித்தியமாக நன்றிக் கடன்பட்டுள்ளோம்.

இடது: பல்வேறு யாத்ரிகர்கள் இந்த பழமையான ஆலமரத்தின் கீழ் முன்னோர்களுக்கு பிண்டம் கொடுப்பதற்காக இராமகேலிக்கு வருடந்தோறும் வருகின்றனர்.

வலது: தனது பெரியப்பாக்களான ரூப ஸநாதனரை பின்பற்றி, விருந்தாவனத்திற்குச் செல்வதற்கு முன்னர், ஜீவ கோஸ்வாமி சைதன்ய மஹாபிரபுவின் இந்த விக்ரஹத்தினை இராமகேலியில் வழிபட்டார்.

About the Author:

Admin of the Bhagavad Darisanam site!

Leave A Comment