இராவணன் தமிழனா?

Must read

வழங்கியவர்: ஸந்தான கிருஷ்ண தாஸ்

உலகம் படைக்கப்பட்ட காலத்திலிருந்தே மாறுபட்ட கருத்துகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக் கின்றன. அவ்வகையில் தமிழர்களின் உணர்வைத் தூண்டி அவர்களை ஆன்மீகத்தின் எதிர் பாதையில் பயணிக்கச் செய்யும் பல்வேறு முயற்சிகளை இன்றைய நாத்திகர்கள் தினமும் தொடர்கின்றனர். அம்முயற்சிகளுள் ஒன்றாக, இராவணன் ஒரு தமிழன்” என்று கூறி, அவனது செயல்களுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர் என்பது நாம் யாவரும் அறிந்த ஒன்றே.

இராக்ஷசர்கள் யார்?

இராவணன் உண்மையிலேயே தமிழனா இல்லையா என்பதை ஆராய்வதற்கு முன்பாக, இராவணனின் வம்சத்தைப் பற்றி சற்று ஆராய்வோம்.

இராக்ஷச வம்சத்தைச் சார்ந்த சுகேஷனன் என்பவனுக்கு மால்யவான், சுமாலி, மாலி என்று மூன்று இராக்ஷச மகன்கள் இருந்தனர். அவர்கள் மூவரும் கடுந்தவம் புரிந்து பிரம்மதேவரிடமிருந்து வரங்களைப் பெற்று அனைத்து தேவர்களையும் துன்புறுத்தி வந்தனர். அச்சமயத்தில் தேவ லோகத்தைப் போன்றே தங்களுக்கும் ஓர் இடம் வேண்டும் என்று அவர்கள் நினைத்தனர்; தேவ சிற்பியான விஸ்வகர்மாவினால் இந்திரனுக்காக அமைக்கப்பட்டிருந்த இலங்கையை விஸ்வகர்மாவை அச்சுறுத்தி தங்களது வசப்படுத்தினர்.

பிறகு, தேவர்களுடன் ஏற்பட்ட ஒரு போரில் இராக்ஷசர்கள் தோற்கடிக்கப்பட்டனர், மாலி மடிந்தான், அவனது சகோதரர்களான சுமாலியும் மால்யவானும் தங்களது இருப்பிடமான பாதாள லோகத்திற்கே மீண்டும் இடம் பெயர்ந்தனர்.

 

இராவணனின் பிறப்பு

அதன் பிறகு, யக்ஷ வம்சத்தைச் சார்ந்த விஷ்ரவானின் கட்டளையின்படி அவரது மகனான குபேரன் இலங்கையை தமது இருப்பிடமாக மாற்றிக் கொண்டார். அவரது செழிப்பைக் கண்டு பொறாமையுற்ற சுமாலி, தனது மகள் கைகசியை விஷ்ரவானிடம் அனுப்பி குபேரனுக்கு இணையான குழந்தைகளைப் பெறும்படி தூண்டினான்.

அவளும் அவ்வாறே விஷ்ரவானை அணுகினாள். இருப்பினும், அவள் அமங்கலமான நேரத்தில் அணுகியதால், அவளுக்கு இராக்ஷசர்களே மகன்களாகப் பிறப்பர் என்று விஷ்ரவான் எடுத்துரைத்தார். கைகசியோ தன் மீது கருணை காட்ட வேண்டும் என்று மன்றாடியதால், அவளது இளைய மகன் பிரசித்தி பெற்ற பக்திமானாக புகழப்படுவான் என்று வரமளித்தார்.

காலப்போக்கில், பத்து தலைகள், இருபது கைகள், பரந்த வாய், நீண்ட பற்களைக் கொண்ட பயங்கரமான ஒரு மகனை கைகசி பெற்றெடுத்தாள். அப்போது எரி நட்சத்திரங்கள் விழுந்தன, பூமி நடுங்கியது, கடுங்காற்று வீசியது, உயிர்வாழிகளின் உள்ளத்தில் இவை பயத்தை உண்டாக்கின. விஷ்ரவான் பத்து தலைகளுடைய அக்குழந்தைக்கு தசக்ரீவன் என்று பெயரளித்தார். கைகசி குறுகிய இடைவெளியில், கும்பகர்ணனையும் சூர்பனகை என்ற கோரமுகப் பெண்ணையும் பெற்றாள். இறுதியாக, விபீஷணர் என்ற பெருமகன் பிறந்தபோது, தேவர்கள் பரிபூரண மகிழ்ச்சியுற்று ஸ்வர்கத்திலிருந்து பூமாரி பொழிந்தனர்.

இராவணன் எவ்வாறு தமிழனாக முடியும்?

இராவணனின் பரம்பரை இவ்வாறு இருக்க, அவன் எவ்வாறு தமிழனாக இருந்திருக்க முடியும்? இராவணன் தமிழன் என்னும் குதர்க்க வாதத்தை ஏற்றால், அவனது தந்தை விஷ்ரவான், தந்தையின் தந்தையான புலஸ்தியர், அவரது தந்தையான பிரம்மா முதலியோரும் தமிழர்தானே. அப்படியிருக்க, இவர்களை அனுதினமும் வசைபாடும் பிராமணர்கள் ஆரிய அந்நியர்களானது எவ்வாறோ? யாம் அறியோம்!

இராவணன் இலங்கையை ஆட்சி செய்தான் என்றுதான் சாஸ்திரங்கள் கூறுகின்றனவே தவிர, அவன் இலங்கையில் பிறந்தவன் அல்லன். புதுடில்லிக்கு அருகிலுள்ள நொய்டா நகரத்திற்கு அருகிலுள்ள பிஸ்ரக் என்னும் ஊரில் இராவணன் பிறந்ததாக சிலர் கூறுகின்றனர். அங்கே இராவணனுக்கு கோயில்கூட வைத்துள்ளனர். இராவணன் இலங்கையில் பிறந்ததாக எந்தவொரு சான்றும் இல்லை.

மேலும், வைகுண்ட லோகத்தின் வாயிற் காவலர்களான ஜெயனும் விஜயனும் தாம் பெற்ற சாபத்தினால், முதல் பிறவியில் ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு என்றும், இரண்டாவது பிறவியில் இராவணன், கும்பகர்ணன் என்றும், மூன்றாவது பிறவியில் சிசுபாலன், தண்டவக்ரன் என்றும் இப்பூவுலகில் பிறந்தனர். அதாவது, இராவணன் தனது முற்பிறவியிலும், மறுபிறவியிலும்கூட தமிழனாக இருக்கவில்லை.

எனவே, பிறந்த இடம், மூதாதையர்கள், முற்பிறவி என எப்படிப் பார்த்தாலும், அவன் தமிழன் அல்லன்.

இராவணன் தமிழில் பேசினானா?

இராவணன் பிராமண தந்தைக்கும் இராக்ஷச தாய்க்கும் பிறந்தவன். பிற்காலத்தில் இலங்கையில் வசித்ததால், அவன் தமிழ் பேசியிருக்க வேண்டும், அதனால் அவன் தமிழன் என்று சிலர் கருத்துரைக்கின்றனர். ஆனால் அது வெறும் அவர்களது கற்பனையாக இருக்க முடியுமே தவிர, ஒருபோதும் உண்மையாகாது.

அறம் என்பது அறவே இல்லாத இராவணனும் அவனது குடும்பத்தினரும் தமிழில் பேசியதாக வால்மீகி இராமாயணம், கம்ப இராமாயணம் முதலிய எந்த நூலிலும் எந்தக் குறிப்பும் இல்லை. உண்மையைச் சொன்னால், இராவணன் சமஸ்கிருத வேத சாஸ்திரங்களில் நிபுணனாக, அதிலும் குறிப்பாக, ஸாம வேத பண்டிதனாக இருந்தான். அவன் பேசிய மொழியும் சமஸ்கிருதமாகவே இருக்க வேண்டும் என்பதை இவை நிரூபிக்கின்றன. சமஸ்கிருத வேதங்களைப் பயின்றவன் என்பதால் அவனை பிராமணன் என்றும் கூறிவிட முடியாது. ஏனெனில், அவனது சுபாவங்கள் அனைத்தும் இராக்ஷசத் தன்மையுடன் இருந்தன.

தமிழ் பண்பாட்டிற்கு எதிரானவன்

ஒருவேளை இராவணன் தமிழ் பண்பாட்டின்படி வாழ்ந்தவனா? நிச்சயம் இல்லை. தமிழர்களின் நீதி இலக்கியமான இனியவை நாற்பதில் (பாடல் 16.1), பிறன் மனை பின்னோக்காப் பீடினி(து)ஆற்ற என்னும் வரி காணப்படுகிறது. மேலும், வள்ளுவர் கூறுகிறார் (குறள் 141):

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து

அறம்பொருள் கண்டார்கண் இல்.

இவ்வுலகில் அறத்தையும் பொருளையும் ஆராய்ந்து கற்ற நபர்களிடம், மற்றவரின் உரிமையான மனைவியின் மீது ஆசைப்படும் அறியாமை என்பது இருப்பதில்லை.”

தமிழர்களின் அறம், பிறரது மனைவியை நோக்காமல் இருப்பது என்பது இவற்றிலிருந்து தெளிவாகிறது. இவ்வாறிருக்க, இராக்ஷச இராவணனை தமிழன்” என்று கூறி, நம்மை நாமே ஏன் தாழ்த்திக்கொள்ள வேண்டும்? நவீன காலத்தில் தங்களைத் தமிழர்கள் என்று கூறிக் கொண்டு, மேற்கூறிய தமிழ் பண்பாட்டிற்கு முற்றிலும் விரோதமான செயல்களில் ஈடுபடுகின்றனர். ஒருவேளை தங்களது இராக்ஷச தன்மை இராவணனிடமும்

இருப்பதால், இவர்கள் இராவணனையும் தமிழனாகக் கருதுகின்றனரோ? ஆனால், இராவணனை தமிழன் என்று கூறுவதை விடுத்து, இந்த போலித் தமிழர்கள் தங்களை இராக்ஷசன் என்று கூறிக்கொள்ளல் நன்று.

 

இராவணன் அறம் சார்ந்தவனா?

பிராமண குலத்தில் பிறந்து வேதங்களை நயம்பட கற்றதால் மட்டுமே ஒருவன் பிராமணன் ஆகிவிட முடியாது என்பதற்கு, பெண் பித்தனாகத் திரிந்த இந்த இராவணனே உதாரணம். அவன் கணக்கில்லா மனைவியர்களிடம் குடிபோதையுடன் சிற்றின்பத்தில் திளைத்திருந்தான்; அப்போதும் காமம் தீராது, ஸ்வர்க லோகம் முதல் பாதாளம் வரையுள்ள பிறன் மனைவியரை அபகரித்தான்; மேலும், தனது தாயின் சகோதரியான மாயா, தனது சகோதரன் குபேரனின் மருமகள் ரம்பா என எவரையும் இராவணன் விட்டுவைக்கவில்லை.

இராவணன் சிவ பக்தனா?

வெளிப்புறமாகப் பார்த்தால், இராவணன் ஒரு சிவ பக்தனாகத் தோன்றலாம், ஆனால் அவன் உண்மையான பக்தியை வெளிப்படுத்தவில்லை என்பதை அவனது வரலாற்றைப் படிப்பவர்கள் அறியலாம்.

ஒருமுறை சிவனின் இருப்பிடத்தை கடக்க முயன்ற இராவணன் நந்தி தேவரால் இடைமறிக்கப்பட்டான். மிகுந்த கோபமடைந்த இராவணன், யார் இந்த சங்கரன்?” என்று அதிகாரத் தோரணையில் கேட்டவாறே வானர முகத்துடன் நின்றிருந்த நந்தியைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான். கோபமடைந்த நந்தி, வருங்காலத்தில்  வானரங்களே உனது இனத்தை அழிக்கும்” என்று சாபம் விடுத்தார்.

இராவணனோ, நீ எனது விமானத்தைத் தடுத்ததால், உனது தலைவன் சிவபெருமானைக் கொன்று பழி தீர்ப்பேன்,” என கூறி, தனது கைகளால் கைலாய மலையை உயர்த்தத் தொடங்கினான். விபரீதம் அறிந்த மஹாதேவன் தமது கால் கட்டை விரலால் மலையை அழுத்தினார். இராவணனின் கை மலையின் இடுக்கில் மாட்டிக்கொள்ள அதனால் ஏற்பட்ட பெரும் வலியினால் மூவுலகங்களும் நடுங்கும் வண்ணம் இராவணன் கதறினான். ஓராண்டிற்குப் பிறகு சிவபெருமான் அவனை விடுவித்தார். எனினும் அவன் சிவனுக்கும் அவரது உடைமைகளுக்கும், அவரது பக்தர்களுக்கும் அபராதம் இழைத்தவனே.

பிறர் மனைவியின் மீதான மோகத்தினால் கொல்லப்பட்ட இராவணனை தமிழர்கள் மேன்மையுடன் கருதுவது நலமா?

அகத்தியரின் சாபம்

தமிழெனு மளப்பருஞ் சலதி தந்தவன்

உமிழ்கனல் விழிவழி யொழுக வுங்கரித்து

அழிவன செய்தலா லரக்க ராகியே

இழிகென வுரைத்தன னசனி யெஞ்சவே.

தமிழ் எனும் அளப்பரிய கடலை தந்தவர் (அகத்தியர்) விழி வழியே நெருப்பொழுக பேரொலி எழுப்பி, அழிவிற்குரிய தீய செயல்களைச் செய்வதால், நீங்கள் அரக்கராகி இழிக,” என்று சாப வார்த்தை கூறினார். (கம்ப இராமாயணம், பால காண்டம் 375)

தொல்காப்பியருக்கு முன்பாக பொதிகை மலையில் வாழ்ந்து, தமிழ் இலக்கணம் அருளியவர் அகத்தியர். அவர் இராவணனின் தங்கை தாடகையின் குமாரர்களை சபித்தார் என்பதையும், இராவணனைக் கொல்ல இராமருக்கு ஆயுதம் வழங்கினார் என்பதையும் நாம் காண்கிறோம். அவரை தமிழ் இன துரோகி என்று கூறிவிட முடியுமா?

 

தமிழனாக இருந்தால்

ஒரு வாதத்திற்காக, இராவணன் தமிழனாகவே இருந்தான் என்று வைத்துக் கொண்டால்கூட, உண்மையில் தமிழன், கன்னடன், தெலுங்கன், மலையாளி முதலிய எல்லாவித அடையாளங்களும் வெற்று அடையாளங்களே. நாம் ஆன்மீக ஆத்மா, உடலின் எல்லா அடையாளங்களிலிருந்தும் விடுபட்டவர்கள். இதை அறிவதே முக்கிய ஞானம். நாம் அந்தத் தளத்திலிருந்து உலகை அணுகி, தர்ம அதர்மங்களை கவனிக்க வேண்டும். தர்மம் யாரிடம் இருந்தாலும் அதனை அங்கீகரித்து போற்ற வேண்டும், அதர்மம் யாரிடம் இருந்தாலும் அதனை எதிர்த்து போரிட வேண்டும்.

அதன்படி, பிறர் மேன்மையைக் கண்டு பொறாமை, பிறர் மனைவியின் மீதான மோகம் முதலிய பல்வேறு அதர்மச் செயல்களில் ஈடுபட்ட இராவணன் நிச்சயம் அழிக்கப்பட வேண்டியவன். அவனை அழித்து உலகை உய்வித்து தர்மத்தை நிலைநாட்டிய பகவான் ஸ்ரீ இராமர் போற்றப்பட வேண்டியவர், வணங்கப்பட வேண்டியவர்.

நீதி, நேர்மை, நாணயம் முதலியவை அனைத்தையும் புறக்கணித்து விட்டு, தமிழன் என்று கூறிக் கொண்டு தங்களது அநீதிகளையும் அநியாயங்களையும் வளர்த்து மக்களை அதில் தூண்டி குளிர்காய நினைக்கும் போலி தமிழர்கள் இராவணனை தங்களது

மூதாதையராகக் கூறிக்கொள்ளட்டும். ஏனெனில், முன்னரே கூறியதுபோல இவர்கள் அனைவருமே அரக்கர்கள்தானே. ஆனால் உண்மையை உணரும் ஆவல் கொண்டுள்ள பக்தர்கள் இராமாயணத்தை உண்மையான பக்தர்களிடமிருந்து கேட்டு, பகவானின் மீது அன்பையும் பக்தியையும் வளர்த்துக்கொள்ளுதல் சாலச் சிறந்தது.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives