வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்
அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.
தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த இதழில்: ஐந்தாம் ஸ்கந்தம், அத்தியாயம் 19–20
சென்ற இதழில் ஜம்புத்வீபத்தில் உள்ள பல்வேறு வர்ஷங்களில் நடக்கும் பல்வேறு வழிபாடுகளைப் பற்றிக் கண்டோம். அதன் தொடர்ச்சியையும் பிரபஞ்சத்தின் கட்டமைப்பைப் பற்றியும் இவ்விதழில் காணலாம்.
ஸ்ரீ சீதா-ராம வழிபாடு
கிம்புருஷ வர்ஷத்தில், பகவான் இராமரின் பரம பக்தரான ஹனுமான் அங்கு வாழும் மக்களுடன் இணைந்து பகவான் ஸ்ரீ இராமசந்திரரை பின்வருமாறு துதிக்கிறார்:
“மன்னருக்கெல்லாம் மன்னரான ஸ்ரீ இராமசந்திர மூர்த்தியே! நற்குணங்களின் உரைகல்லாக, மனம், மற்றும் புலன்களை அடக்கி உதாரண புருஷராக தாங்கள் விளங்குகின்றீர்! தூய உணர்வால் மட்டுமே உங்களது உன்னத சச்சிதானந்தமான வடிவத்தை உணர முடியும். நீங்கள் முழுமுதற் கடவுள் என்றாலும் ஒரு மனிதனாக வாழ்ந்து, அசுரன் இராவணனைக் கொன்று பெண்ணை மையமாகக் கொண்ட பெளதிக வாழ்க்கையே எல்லா துன்பங்களுக்கும் காரணம் என்பதை உபதேசித்திருக்கின்றீர்! ஒரு பக்தர் செய்யும் சிறு தொண்டையும் நீங்கள் மனமுவந்து ஏற்று அருள்பாலிக்கிறீர். இத்தகைய கருணாமூர்த்தியான தங்களுக்கு மீண்டும்மீண்டும் எனது வந்தனங்களை சமர்ப்பிக்கின்றேன்.”
நர-நாராயண வழிபாடு
நாராயணரைப் பின்வருமாறு துதிக்கிறார்: “பரமஹம்சர்களுக்கும் ஆத்மாராமர்களுக்கு தலைவராக இருப்பவரும், புலன்களை முழுமையாகக் கட்டுப்படுத்தியவரும், பொய் அஹங்காரத்திலிருந்து பூரணமாக விடுபட்டவரும், யோக சித்திகளின் தலைவருமான நர-நாராயண ரிஷிக்கு எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன். லோகாயதவாதிகள் மனைவி, மக்கள், செல்வம் போன்ற பெளதிக உடைமைகள் மீது மிகுந்த பற்றுடையவர்களாக உள்ளனர். பக்தித் தொண்டால் மட்டுமே இப்பற்றைத் துறக்க முடியும். ஆகவே, பக்தி யோகத்தைப் பயில்வதற்கு எமக்கும் எல்லா மக்களுக்கும் அருள்புரிவீராக!”
பாரத வர்ஷத்திலுள்ள புனித மலைகளும் புனித நதிகளும்
பாரத வர்ஷத்தில் ஏராளமான மலைகளும் நதிகளும் உள்ளன. மலயம், மங்களபிரஸ்தம், திரிகூடம், ஸ்ரீசைலம், திருவேங்கடம், விந்தியம், சித்திரகூடம், கோவர்த்தனம் என பல்லாயிரம் மலைகள் இருக்கின்றன. அவற்றிலிருந்து உற்பத்தியாகும் நதங்களும் (ஆண் ஆறுகளும்) நதிகளும் (பெண் ஆறுகளும்) கணக்கற்றவை. இவற்றில் சந்திரவஸா, தாமிரபரணி, வைகை, காவேரி, பயஸ்வினீ, துங்கபத்ரா, கிருஷ்ணா, பீமரதி, கோதாவரி, நர்மதை, சிந்து, யமுனை, சரஸ்வதி, சரயூ முதலியவை மிக முக்கியமானவை. இத்தகு புனித நதிகளை நினைப்பதாலும் அவற்றின் பெயர்களை மந்திரம்போல் உச்சரிப்பதாலும் அவற்றின் நீரைத் தொடுவதாலும் அவற்றில் நீராடுவதாலும், மக்கள் தூய்மையடைகின்றனர்.
பாரத வர்ஷத்தில் பிறப்பவர்கள் சிலர் ஸத்வ குணத்தில் மேன்மக்களாகவும் சிலர் ரஜோ குணத்தில் சாதாரண மனிதர்களாகவும் சிலர் தமோ குணத்தில் கீழானவர்களாகவும் உள்ளனர். எனினும், ஆன்மீக குருவால் தீட்சையளிக்கப்பட்டு பக்தித் தொண்டில் முழுமையாக ஈடுபடுவர்களின் வாழ்க்கை நிச்சயம் நிறைவு பெறுகிறது. பற்பல பிறவிகளில் புண்ணியச் செயல்கள் செய்பவர், “வாஸுதேவரே உன்னதமானவர், அவருக்குச் செய்யும் பக்தித் தொண்டே விடுதலைக்கான உண்மையான வழி” என்பதை உணர்கின்றனர்.
பாரத வர்ஷத்தில் மனிதப் பிறவி
பாரத வர்ஷத்தில் மனிதப் பிறவி அடைவதன் உயர்வை உணர்ந்துள்ள தேவர்கள் பின்வருமாறு கூறுகின்றனர்: “பாரத வர்ஷத்தில் பிறந்துள்ள மனிதர்கள் எத்தனை பாக்கியசாலிகள்! பக்தித் தொண்டில் ஈடுபட்டு வாழ்வை வெற்றிகரமானதாக ஆக்கிக்கொள்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் இங்கே அருளப்பட்டுள்ளனவே! ஆதலால். தேவர்களாகிய நாங்களும் பாரத வர்ஷத்தில் மனிதராகப் பிறக்க ஆசைப்படுகிறோம்.”
நீண்ட ஆயுள், அழகிய தேகம், மேலான புலனின்பம் முதலிய வசதிகளைப் பெற்று மேலுலகங்களில் வாழ்வதைவிட பாரத வர்ஷத்தில் சில காலம் வாழ்ந்து, பகவானுக்குத் தூய்மையான பக்தித் தொண்டு செய்து மீண்டும் ஜடவுலகில் பிறப்பதற்கான அவசியம் இல்லாத வைகுண்ட லோகங்களை அடைவதே சாலச் சிறந்தது. பாரத வர்ஷத்தில் பிறந்தும், பக்தித் தொண்டு செய்யாதவர்கள் மாயை என்னும் வேடனின் வலையில் சிக்கிக் கொண்டுள்ளனர் என்பது உறுதி.
சுற்றியுள்ள தீவுகள்
சகர மன்னரின் மைந்தர்கள் தங்களது தொலைந்த குதிரையைத் தேடும்பொழுது பூமியைத் தோண்டினர். இதனால் அருகருகே எட்டுத் தீவுகள் தோன்றின: ஸ்வர்ண பிரஸ்தம், சந்திரசுக்கிலம், ஆவர்த்தனம், ரமணகம், மந்தரஹரிணம், பாஞ்சஜன்யம், சிம்ஹலம் மற்றும் இலங்கை. அதனைத் தொடர்ந்து, ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி ப்லக்ஷம் முதலிய ஆறு தீவுகளையும் அவற்றின் உட்பிரிவுகளான வர்ஷங்கள், அவற்றின் இலட்சணம், அளவு முதலியவற்றை வர்ணித்தார்.
ப்லக்ஷ தீவு
சுமேரு மலை ஜம்புத்வீபத்தினால் சூழப்பட்டிருக்கிறது, ஜம்புத்வீபமோ உப்பு நீர்க்கடலினால் சூழப்பட்டுள்ளது. ஓர் அகழியானது தோட்டங்களால் சூழப்பட்டுள்ளதுபோல ஜம்புத்வீபத்தை சுற்றியிருக்கும் இந்த உப்புக்கடல் ப்லக்ஷம் என்ற தீவினால் சூழப்பட்டுள்ளது. ஜம்புத்வீபத்தில் உள்ள பெரிய நாவல்மரத்தைப் போல் இங்கும் பெரிய தங்கமயமான ப்லக்ஷம் என்கிற மரம் உள்ளது. அதனால், இந்தத் தீவிற்கு ப்லக்ஷம் என்று பெயர். இந்தத் தீவின் மன்னன் பிரியவிரத மஹாராஜரின் மகனான இத்மஜிஹ்வன். இவர் இந்த தீவினை ஏழு வர்ஷங்களாகப் பிரித்து தமது ஏழு மகன்களிடம் ஒப்படைத்தார். அதன் பின்னர், அவர் பக்தித் தொண்டில் முழுமையாக ஈடுபட்டு பகவானின் திருவடிகளை அடைந்தார்.
சிவம், யவஸம், ஸுபத்ரம், சாந்தம், க்ஷேமம், அமிர்தம், அபயம் என்பன இந்த ஏழு தீவுகளின் பெயர்களாகும். ப்லக்ஷ தீவில் ஹம்ஸர்கள், பதங்கர்கள், ஊர்த்வாயனர்கள், சத்யாங்கர்கள் என்று நான்கு மக்கட் பிரிவுகள் உள்ளனர். இவர்கள் சூரியதேவரை பின்வருமாறு துதிக்கின்றனர், “ஆதி புருஷரும் எங்கும் நிறைந்தவருமான பகவான் விஷ்ணுவே முழுமுதற் கடவுளாவார். அவரே வேதமும் தர்மமும் பரமாத்மாவும் அனைத்திற்கும் ஆதாரமும் ஆவார். அவரது பிரதிபிம்பமாக விளங்கும் சூரியதேவனே, உங்களை நாங்கள் சரணடைகிறோம்.”
இந்த ப்லக்ஷ தீவானது தனக்கு சமமான பரப்பளவைக் கொண்ட கரும்புச் சாற்றின் சமுத்திரத்தால் சூழப்பட்டுள்ளது. அதனைத் தாண்டி, அதைவிட இருமடங்கு பரப்பளவுள்ள சால்மலி தீவு உள்ளது.
சால்மலி தீவு
சால்மலி தீவின் அகலம் 32 இலட்சம் மைல்கள். இது மதுவின் சுவையுடைய சுராசாகர நீரால் சூழப்பட்டுள்ளது. அங்கு சால்மலி என்ற மரம் உள்ளது. இப்பெரிய மரத்தில் பறவைகளின் அரசனும் விஷ்ணுவின் வாகனமுமான கருடதேவன், பகவான் விஷ்ணுவை வேத மந்திரங்களால் வழிபடுகிறார்.
பிரியவிரதரின் மகனான யக்ஞபாஹு என்பவர் இந்தத் தீவின் அதிபராவார். இங்குள்ள மக்கள் சந்திர தேவனான சோமனைப் பின்வருமாறு பிரார்த்திக்கின்றனர்: “மாதத்தை வளர்பிறை என்றும் தேய்பிறை என்றும் பிரிக்கும் சந்திரதேவன், தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் உணவு தானியங்களை வழங்குகிறார், அவரை பிரார்த்தித்து வணங்குவோமாக!”
குச தீவு
மதுக்கடலுக்கு வெளியே குச தீவு உள்ளது. இது 64 இலட்சம் மைல்கள் அகலமுடையது, அதற்கு இணையான அகலமுடைய நெய் கடலால் இது சூழப்பட்டுள்ளது. இங்கு பகவானின் விருப்பப்படி தேவர்களால் படைக்கப்பட்ட ஏராளமான தர்ப்பைப் புற்கள் மெல்லிய சுடரொளியை எல்லாத் திசைகளிலும் பரப்புகின்றன. இத்தீவின் அதிபர் பிரியவிரத மன்னரின் மகனான ஹிரண்யரேதஸ் ஆவார். இங்குள்ள மக்கள் முழுமுதற் கடவுளை அக்னிதேவனின் வடிவில் வழிபடுகின்றனர்: “முழுமுதற் கடவுளான ஹரியின் அங்கமான நீங்கள் வேள்விகளில் நாங்கள் அர்ப்பணிக்கும் பொருட்களை முழுமுதற் கடவுளிடம் எடுத்துச் செல்வீராக. ஏனெனில், பகவானே வேள்விகளை அனுபவிப்பவர் ஆவார்.”
கிரெளஞ்ச தீவு
நெய்க்கடலுக்கு வெளியே கிரெளஞ்ச தீவு உள்ளது. இது 128 லட்சம் மைல்கள் அகலமுடையது. இதே அகலமுடைய பாற்கடலால் இத்தீவு சூழப்பட்டுள்ளது. இங்கு கிரெளஞ்சம் என்றொரு மலை உள்ளது. இத்தீவின் அதிபர் பிரியவிரத மன்னரின் மைந்தரான கிருதப்ரஷ்டன் ஆவார். இங்குள்ள மக்கள் வருணதேவனின் வடிவில் பகவானை வழிபடுகின்றனர்: “பூர், புவர், ஸ்வர்க ஆகிய மூன்று லோகங்களை தூய்மை செய்பவரும் அனைவரது பாவங்களையும் நீக்குபவருமான தாங்கள் முழுமுதற் கடவுளால் சக்தியளிக்கப்படுகிறீர்கள். எங்களைத் தொடர்ந்து தூய்மைப்படுத்தும்படி உம்மை பிரார்த்திக்கிறோம்.”
சாக தீவு
பாற்கடலுக்கு வெளியே சாக என்ற தீவு உள்ளது. இது 256 லட்சம் மைல்கள் அகலமுடையது, அதே அகலமுடைய தயிர்க்கடலால் சூழப்பட்டுள்ளது. இங்கு சாக மரம் என்ற நறுமணமுள்ள மரம் உள்ளது. இத்தீவின் அதிபர் பிரயவிரத மன்னரின் மகன் மேதாதிதி ஆவார். இங்குள்ள மக்கள் பகவானை வாயு வடிவில் வழிபடுகின்றனர்: “பிராணன் முதலிய பல்வேறு காற்றுகளை இயக்குவதன் மூலம் உயிர்வாழிகளைக் காப்பவரே! பிரபஞ்சத் தோற்றத்தைக் கட்டுப்படுத்துபவரே! எங்களை எல்லாவித ஆபத்துகளிலிருந்தும் காப்பீராக!”
புஷ்கர தீவு
தயிர்க்கடலுக்கு வெளியே புஷ்கர தீவு உள்ளது. இது 512 லட்சம் மைல்கள் அகலமுடையது, அதே அகலமுடைய நல்ல நீர் கடலால் சூழப்பட்டுள்ளது. இத்தீவில் தங்க இதழ்களைக் கொண்ட மின்னும் தாமரை மலர் ஒன்றுள்ளது. இம்மலர் சக்தி வாய்ந்த உயிர்வாழியான பிரம்மதேவரின் இருப்பிடமாக விளங்குகிறது. இத்தீவின் அதிபர் பிரயவிரத மன்னரின் மகனான வீதிஹோத்ரன் ஆவார். இங்குள்ள மக்கள் பிரம்மதேவரைப் பின்வருமாறு பிரார்த்தித்து வழிபடுகின்றனர்: “ஒரு வகையில் தாங்கள் பகவானிலிருந்து வேறுபாடில்லாதவர் என்றபோதிலும், பகவானின் நித்திய தொண்டனாகவே விளங்குகிறீர். வேத ஞானத்தின் வடிவமாக திகழும் பிரம்மதேவருக்கு எங்கள் மரியாதைக்குரிய வணக்கங்கள்.”
லோகாலோக பர்வதம்
இந்த நன்னீர்க் கடலைச் சுற்றிலும் லோகாலோக பர்வதம் உள்ளது. இது சூரிய ஒளிபடும் இடத்தையும் ஒளிபடாத இடத்தையும் பிரித்துக் காட்டுவதற்காக பூமண்டலத்தின் நாற்புறமும் அமைந்துள்ளது. அதாவது உயிர்வாழிகள் வாழும் நிலப்பகுதியையும் உயிர்வாழிகள் வாழாத நிலப்பகுதிகளையும் இஃது இரண்டாகப் பிரிக்கிறது. இம்மலை துருவ லோகத்தைவிடவும் உயரமானது. எனவே, இஃது ஒளிக்கோளங்களான சூரிய, சந்திரன்களின் கதிர்களைத் தடை செய்கின்றது. எனவே, ஒளிக்கதிர்கள் இம்மலையைத் தாண்டிச் செல்வதில்லை.
இம்மலையின் மேல் அனைத்து ஐஸ்வர்யங்களை கொண்டவரும் ஆன்மீக வானத்தின் தலைவருமான பகவான் நாராயணர் தமது நித்திய துணைவர்களுடன் எழுந்தருளி அனைவருக்கும் நன்மை செய்கிறார். லோகாலோக பர்வதத்திற்கு வெளியே அலோக வர்ஷம் என்ற ஒரு நிலப்பகுதி உள்ளது. அதற்கு மேல் பெளதிக உலகிலிருந்து விடுதலை பெற விரும்புவோரின் இருப்பிடம் உள்ளது. அந்தணரின் மைந்தர்களை மீட்டுக் கொண்டு வருவதற்காக பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனை அழைத்துக் கொண்டு இதன் வழியாகத்தான் சென்றார். சுமேரு மலைக்கும் லோகாலோக மலைக்கும் இடையேயுள்ள தூரம் 100 கோடி மைல்களாகும்.
சூரிய கிரகம்
பூர்லோகம், புவர்லோகம் ஆகிய இரண்டிற்கும் இடையே அந்தரீக்ஷம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இதன் மத்தியில் சூரியன் அமைந்துள்ளது. பிரபஞ்ச மூடிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள தூரம் இருநூறு கோடி மைல்கள். சூரியனுக்கு வைராஜன், மார்தாண்டம், ஹிரண்யகர்பம் என இதர பெயர்களும் உள்ளன. சூரியன் இருப்பதாலேயே திசைகள், வானம், மேலுலகம், பூவுலகம், பாதாள லோகம், பெளதிக இன்பத்திற்கான இடங்கள், விடுதலைக்கான இடங்கள், நரக லோகம் என அனைத்தையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அனைத்து உயிர்களும் அவரது ஒளியைச் சார்ந்தே இருக்கின்றன. சூரியன் இருப்பதாலேயே அனைத்து உயிர்வாழிகளாலும் பார்க்க முடிகிறது. எனவே அவர் த்ருக் ஈஸ்வர, அதாவது பார்வைக்கான கடவுள் என்று அழைக்கப்படுகிறார்.
குறிப்பு: நாம் இங்கே கண்ட த்வீபங்கள் ஒவ்வொன்றிலும் உள்ள நிலப்பிரிவுகள் அவற்றை ஆட்சி செய்பவர்கள் பற்பல மலைகள், பற்பல நதிகள் என அனைத்தும் மிக விளக்கமாக ஸ்ரீமத் பாகவதத்தில் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்று ஸ்ரீமத் பாகவத்திலுள்ள பற்பல நுணுக்கங்களை மனித அறிவுக் கொண்டு புரிந்துகொள்வது கடினம். அதிகாரபூர்வமான ஆச்சாரியர்கள் காட்டியுள்ள வழியில் அவற்றை அப்படியே ஏற்று அளவிட முடியாத பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தூய பக்தித் தொண்டில் ஈடுபட்டு, பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து வெளியேறி வைகுண்ட லோகத்தை அடைய நாம் பாடுபடுவோமாக.