வழங்கியவர்: வனமாலி கோபால் தாஸ்
அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரப்பூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கி பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த இதழில்: பன்னிரண்டாம் அத்தியாயம்
நைமிஷாரண்ய வனத்தில் கூடியிருந்த முனிவர்கள் சூத கோஸ்வாமியிடம் பரீக்ஷித் மஹாராஜரின் பிறப்பைப் பற்றி வினவினர். அதற்கு விளக்கமளிக்கும் வேளையில், துரோணரின் மகனால் விடப்பட்ட பிரம்மாஸ்திரம், அவன் அர்ஜுனனால் தண்டிக்கப்படுதல், குந்திதேவியின் பிரார்த்தனைகள், பீஷ்மரின் பிரார்த்தனைகள், பகவானின் துவாரகை பயணம் போன்ற விஷயங்களும் விவாதிக்கப்பட்டன. அவற்றைக் கேட்பதில் ஆழ்ந்திருந்த முனிவர்கள் தற்போது தங்களின் முக்கிய தலைப்பிற்கு வந்தனர். இவ்வாறாக, அஸ்வத்தாமனால் விடப்பட்ட பிரம்மாஸ்திரத்தைப் பற்றிய விஷயம் இந்த அத்தியாயத்தில் மீண்டும் விவரிக்கப்படுகிறது.
யுதிஷ்டிரரின் பக்திபூர்வமான ஆட்சி
சௌனக ரிஷி வினவினார்: “மதிநுட்பம் வாய்ந்தவரும் மிகச்சிறந்த பக்தருமான பரீக்ஷித் மஹாராஜன் எவ்வாறு பிறந்தார்? சுகதேவ கோஸ்வாமியிடம் தெய்வீக அறிவைப் பெற்ற அந்த மஹாத்மாவின் மரணம் எவ்வாறு சம்பவித்தது? மரணத்திற்குப் பின் அவர் எந்த கதியை அடைந்தார்? நாங்கள் இவற்றை அறிய மிக ஆவலாக இருக்கிறோம். தயவுசெய்து விளக்குங்கள்.”
பரீக்ஷித் மன்னரைப் பற்றிய சௌனக ரிஷியின் கேள்விகளுக்கு ஸ்ரீ சூத கோஸ்வாமி யுதிஷ்டிர மன்னரின் ஆட்சி உட்பட பல விவரங்களுடன் விடையளிக்கத் தொடங்கினார். யுதிஷ்டிர மஹாராஜர் தனது ஆட்சிக் காலத்தில் ஒவ்வொருவருக்கும் தாராளமாக தானம் வழங்கினார். அனைவருக்கும் தந்தையைப் போல செயல்பட்ட அவருக்கு சொந்த நோக்கங்கள் எதுவும் இருக்கவில்லை. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களுக்கு இடைவிடாது தொண்டு செய்ததால், எல்லா வகையான புலனுகர்விலிருந்தும் விடுபட்டிருந்தார்.
இவரது சொத்துக்கள், யாகங்கள், மனைவி, சகோதரர்கள், பரந்த நிலம், சிறந்த ஆட்சி என அனைத்து புகழும் ஸ்வர்க லோகங்களுக்கும் பரவியது. ஸ்வர்க லோகவாசிகளையும் வசீகரிக்கும் அளவிற்கு செல்வத்துடன் திகழ்ந்தபோதிலும், பகவத் தொண்டில் ஆழ்ந்திருந்த காரணத்தால், அவர் அதில் மட்டுமே திருப்தியுடையவராக விளங்கினார்.
குழந்தை பரீக்ஷித்தை கிருஷ்ணர் காப்பாற்றுதல்
மாவீரரான பரீக்ஷித் தனது தாயான உத்தரையின் கர்ப்பத்தில் இருந்தபொழுது, (அஸ்வத்தாமனால் விடப்பட்ட) பிரம்மாஸ்திரத்தின் தகிக்கும் வெப்பத்தினால் பெரும் துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டார். அப்போது பரம புருஷ பகவான் தன்னை நோக்கி வருவதை அவரால் காண முடிந்தது. இயற்கையிலேயே சிறந்த வீரர் என்பதால், ஆதரவற்ற அந்த நிலையிலும் அவரால் அந்த கொடிய வெப்பத்தை சகித்துக் கொள்ள முடிந்தது.
அவரை நோக்கி வந்த பகவான், கட்டைவிரலின் அளவிற்கு மட்டுமே இருந்தபோதிலும் திவ்யமானவராக இருந்தார்; அவர் மிகவும் அழகான, கறுமையான, அழிவற்ற உடலமைப்பைப் பெற்றிருந்தார். மின்னலைப் போன்றதொரு மஞ்சள் நிற ஆடையையும், பிரகாசமான தங்கக் கிரீடத்தையும் அணிந்திருந்த கோலத்தில் அவர் குழந்தைக்குக் காட்சியளித்தார். நான்கு கரங்கள், உருக்கிய தங்கத்தாலான மின்னும் காதணிகள், கோபத்தால் இரத்தம்போல் சிவந்த கண்கள் என்று மிகுந்த அழகுடன் விளங்கிய பகவான், இங்குமங்குமாக சுற்றித்திரிந்தபொழுது அவரது கதாயுதம் எரிநட்சத்திரத்தைப்போல் இடைவிடாமல் அவரைச் சுற்றிச் சுற்றி வந்தது.
இவ்வாறாக, சூரியன் பனித்துளியை ஆவியாக மாற்றுவதைப் போல பிரம்மாஸ்திரத்தின் வெப்பக் கதிர்களை பகவானும் மறையச் செய்தார். அவரைப் பார்த்த குழந்தை, “இது யாராக இருக்கக்கூடும்?” என எண்ணியது. அச்சமயத்தில், எல்லோருடைய இதயத்திலும் பரமாத்மாவாக வீற்றிருப்பவரும் காலவெளியின் எல்லைக்கு உட்படாதவருமான பரம புருஷ பகவான் குழந்தையின் பார்வையிலிருந்து உடனடியாக மறைந்தார்.
கிருஷ்ணரை மையமாக வைத்து மன்னர் யுதிஷ்டிரர் அஸ்வமேத யாகம் செய்தல்.
பரீக்ஷித் மஹாராஜரின் பிறப்பு
அதன்பிறகு, கிரக அமைப்புகள் சிறப்பாக அமையப்பெற்ற ஒரு நன்நாளில் பரீக்ஷித் பிறந்தார். உடனடியாக, மாமன்னர் யுதிஷ்டிரர் கற்றறிந்த பிராமண புரோகிதர்களை அழைத்து வேத மந்திரங்களை ஓதி சடங்குகளை நிறைவேற்றினார். தகுதி வாய்ந்த வாரிசைப் பெற்றதில் மிகவும் திருப்தியடைந்த யுதிஷ்டிரர், பிராமணர்களுக்கு தங்கம், நிலம், கிராமங்கள், யானைகள், குதிரைகள், மற்றும் நல்ல உணவு தானியங்களை பரிசாக அளித்தார். பிராமணர்களும் அவரது உதார குணத்தினால் திருப்தியுற்றனர். யுதிஷ்டிரரின் பேரனான பரீக்ஷித் மிகச்சிறந்த தகுதிகளுடன் ஒப்பற்றதொரு வாரிசாக இருப்பார் என பிராமணர்கள் அறிவித்தனர்.
பரீக்ஷித் மஹாராஜரின் போற்றத்தக்க எதிர்காலம்
பிராமணர்களின் அறிவிப்பைத் தொடர்ந்து, யுதிஷ்டிரர் வினவினார்: “மஹாத்மாக்களே, இக்குழந்தை எதிர்காலத்தில் எப்படி இருப்பார்? குரு வம்ச முன்னோர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, புனிதமான மன்னராக, பக்தி, சாதனை, மற்றும் புகழுடன் இருப்பாரா?”
குழந்தையின் எதிர்காலத்தைக் கணித்த பிராமணர்கள், அவரைப் பற்றி பின்வருமாறு எடுத்துரைத்தனர்: “இக்ஷ்வாகு மன்னரைப் போன்று குடிமக்களை பராமரிப்பார்; தசரதரின் மைந்தரான ஸ்ரீ இராமரைப் போல பிராமணக் கொள்கைகளைப் பின்பற்றி வாக்குறுதிகளைக் காப்பாற்றுவார்; சிபி சக்கரவர்த்தியைப் போல கொடை வள்ளலாக இருப்பார்; துஷ்யந்தனின் புதல்வரான பரத மன்னரைப் போல பரம்பரையின் பெயரையும் புகழையும் நிலைநாட்டுவார்; அர்ஜுனனைப் போல மாபெரும் வில்லாளியாக இருப்பார்; நெருப்பைப் போல தடுக்க முடியாமலும், சமுத்திரத்தைப் போல மிஞ்ச முடியாமலும், சிங்கத்தைப் போன்ற பலசாலியாகவும், இமயமலைகளைப் போன்று புகலிடம் கொடுப்பவராகவும் இருப்பார்.
“பூமியைப் போல பொறுமையாகவும், தாய் தந்தையரைப் போல சகிப்புத்தன்மையுடனும், யுதிஷ்டிரர் அல்லது பிரம்மாவைப் போல சமத்துவ மனநிலையுடனும் திகழ்வார். சிவபெருமானைப் போன்ற உதார குணம் கொண்டிருப்பார். லக்ஷ்மிதேவிக்கே புகலிடம் வழங்கும் பரம புருஷரான நாராயணரைப் போல அனைவருக்கும் புகலிடமாக இருப்பார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அடிச்சுவடுகளை எப்போதும் பின்பற்றுபவர் என்பதால் கிட்டதட்ட அவருக்கு நிகரானவராக இருப்பார்.
“பெருந்தன்மையில் நந்திதேவரைப் போலவும், சமய அனுஷ்டானத்தில் யயாதி மன்னரைப் போலவும், பொறுமையில் பலி மஹாராஜரைப் போலவும், உண்மையான பக்தியில் பிரஹலாதரைப் போலவும் திகழ்வார். ராஜரிஷியாக திகழ்ந்து, உலகத்திற்கு தொல்லை தருபவர்களை தண்டித்து அமைதியையும் தர்மத்தையும் காப்பாற்றுவார். மேலும், இவர் தன் மரணத்தைப் பற்றிய முன்னறிவிப்பினைப் பெற்று, உடனடியாக பௌதிகப் பற்றிலிருந்து விடுபட்டு பரம புருஷ பகவானிடம் சரணாகதி அடைவார். சுகதேவ கோஸ்வாமியிடமிருந்து ஸ்ரீமத் பாகவதத்தைக் கேட்டு பயமற்ற இராஜ்ஜியத்தில் பிரவேசிப்பார்.”
இவ்வாறாக, குழந்தையின் எதிர்காலத்தைப் பற்றி பிராமணர்களிடம் கேட்டறிந்த யுதிஷ்டிரர் அவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கி கௌரவித்தார். இக்குழந்தை தனது பிறப்பிற்கு முன்பு தரிசித்த நபரைத் தேடும் முயற்சியில், எல்லா மனிதர்களையும் பரிட்சை (சோதித்து) செய்து பார்ப்பார் என்பதால், அவர் பரீக்ஷித் என்று பெயர் பெற்றார். இவ்வாறாக, பரீக்ஷித் இடைவிடாமல் பகவானை மனதில் சிந்தித்தபடி, பாட்டனார்களின் முழு கண்காணிப்பின்கீழ் செழிப்புடன் வளர்ந்தார்.
யுதிஷ்டிரரின் அஸ்வமேத யாகம்
பீஷ்மரின் உபதேசத்தின்படி யுதிஷ்டிரர் அஸ்வமேத யாகத்தை நடத்த விரும்பினார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அறிவுரைப்படி, வடதிசையில் மருத்த மஹாராஜரால் விட்டு செல்லப்பட்டிருந்த தங்கக் குவியல்களிலிருந்து, மூன்று அஸ்வமேத யாகங்களுக்குத் தேவையான செல்வத்தை அவர் தனது சகோதரர்களின் மூலமாகத் திரட்டினார். யாகங்களால் திருப்தியடைந்த பகவான், பாண்டவர்களுடன் சிறிது காலம் தங்கிவிட்டு, பின்னர் துவாரகைக்கு விடைபெற்று சென்றார்.