இறப்பு ஓய்வது எப்போது?

Must read

சிறப்புக் கட்டுரை
வழங்கியவர்: அம்ருதேஷ
பிறப்பு, பிணி, மூப்பு, இறப்பு ஆகியவை ஓய்வது எப்போது? மக்கள் அனைவரும் தற்போது மிகவும் கொடிய நோய்களின் தாக்கத்தில் இருக்கிறோம். முழு உலகமும் கொடிய நோய்களின் மூலமாக அதிக அளவில் மரணங்களை எதிர்கொண்டிருக்கிறது. கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வு, உறவு, செல்வம் முதலானவற்றை இழப்பதையும் காண்கிறோம். மருத்துவர்களும் அரசாங்கமும் பல்வேறு வகையான திட்டங்களைத் தீட்டிக் கொண்டே இருக்கின்றனர்.
ஆனால் புதுப்புது வகையான எண்ணற்ற ஆபத்தான நோய்கள் நம்மைத் தாக்கிக் கொண்டே இருக்கின்றன. இவை தவிர எண்ணற்ற பொருளாதார சிக்கல்கள், போர், தனி மனித குற்றங்கள் என அனைத்தும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் நம்மில் பல பேரிடம் தோன்றும் வினாக்கள்: (1) இந்த உலக வாழ்க்கையின் அடிப்படையே துன்பமயமானதா? ஏன்? (2) நிரந்தர அழிவற்ற இன்பத்திற்கான வழிமுறை யாது?
சாஸ்திர விளக்கங்களை வைத்து ஆய்வு செய்வோமாக.
பகவத் கீதையின் கூற்று 
பகவத் கீதையில் (8.15–16) பரம புருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இதுகுறித்து தெளிவாகக் கூறியுள்ளார். அதன்படி, இந்த ஜடவுலகின் மிகவுயர்ந்த லோகத்திலிருந்து மிகவும் தாழ்ந்த லோகம் வரையுள்ள எல்லா இடங்களும் பிறப்பும் இறப்பும் மாறிமாறி வரக்கூடிய துன்பம் நிறைந்த இடங்களே. அதே சமயத்தில் யாரெல்லாம் பக்தி யோகிகளாக உள்ளார்களோ அவர்கள் மரணத்திற்குப் பின்னர் கிருஷ்ணரை அடைகின்றனர் என்றும், முற்றிலும் துன்பம் நிறைந்த இந்த தற்காலிக உலகத்திற்குத் திரும்பி வருவதே இல்லை என்பதையும் கீதையிலிருந்து அறிகிறோம். பகவத் கீதை 8.15 ஸ்லோகத்திற்கான பொருளுரையில் ஸ்ரீல பிரபுபாதர் பின்வருமாறு எழுதியுள்ளார்:
“இந்த தற்காலிக ஜடவுலகம், பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் என்னும் துன்பங்களால் நிறைந்துள்ளது. எனவே, மிகவுயர்ந்த பக்குவ நிலையை அடைந்து, கோலோக விருந்தாவனம் எனப்படும் கிருஷ்ண லோகத்தை அடைபவன், இயற்கையாகவே இங்கு திரும்பி வர விரும்புவதில்லை.”
மேலும், பகவத் கீதையின் மற்றோர் இடத்தில் (13.9), ஜன்ம–ம்ருத்யு–ஜரா-வ்யாதி து:க-தோஷானு தர்ஷனம், “பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகியவற்றின் துன்பத்தினை கவனிப்பதே அறிவு,” என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு ஸ்ரீல பிரபுபாதர் பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்:
“பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகியவற்றை ஏற்பதன் துன்பத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். பிறப்பைப் பற்றிய விளக்கங்கள் பல்வேறு வேத இலக்கியங்களில் உள்ளன. ஸ்ரீமத் பாகவதத்தில், பிறக்காதவரின் உலகம், தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தையின் வாழ்வு, அதன் துன்பங்கள் முதலியவை மிக அற்புதமாக விவரிக்கப்பட்டுள்ளன. பிறப்பு துன்பமயமானது என்பதை மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். தாயின் கருவினுள் இருந்தபோது நாம் எவ்வளவு துன்பத்தை அனுபவித்தோம் என்பதை மறப்பதன் காரணத்தினால்தான், பிறப்பு இறப்பின் சுழற்சியிலிருந்து மீள்வதற்கான வழியை நாம் தேடாமல் உள்ளோம். அதுபோல, இறப்பின் சமயத்திலும் பல்வேறு விதமான துன்பங்கள் உள்ளன. இவையும் சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்விஷயங்கள் விவாதிக்கப்பட வேண்டியவை. முதுமை, நோய் ஆகியவற்றைப் பொறுத்தவரையில், ஒவ்வொருவருக்கும் அவற்றில் சொந்த அனுபவம் உண்டு. நோயை யாரும் விரும்புவதில்லை. முதுமையையும் யாரும் விரும்புவதில்லை. ஆனால், இவற்றைத் தவிர்ப்பது சாத்தியமல்ல. பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகியவற்றின் துன்பங்களைக் கருத்தில் கொண்டு, ஜட வாழ்வின் மீது வெறுப்புக் கண்ணோட்டம் உடையவர்களாக நாம் மாறாத வரை, ஆன்மீக வாழ்வில் முன்னேற்றமடைவதற்கான ஊக்கம் நமக்குக் கிடைக்காது.”
ஸ்ரீமத் பாகவதத்தின் கூற்று 
பகவத் கீதையைப் போலவே ஸ்ரீமத் பாகவதமும் (5.14.27) இந்த பௌதிக உலகினைத் துன்பம் நிறைந்த இடமாகவே கூறுகிறது. மன்னர் ரஹுகணருக்கு ஜட பரதர் பின்வருமாறு அறிவுறுத்துகிறார்: “இப்பௌதிக வாழ்வில் ஏராளமான தொல்லைகள் இருக்கின்றன. இவற்றைக் கடப்பது அரிதாகும். இவற்றிற்கும் மேல், சுகம், துக்கம், பற்று, துவேஷம், பயம், போலி கௌரவம், காழ்ப்புணர்ச்சி, அவமானம், பசி, தாகம், துன்பம், நோய், பிறப்பு, முதுமை, இறப்பு என பல இன்னல்கள் வருகின்றன. இவையனைத்தும் ஒன்று சேர்ந்து பௌதிக பந்தப்பட்ட ஆத்மாவிற்கு துன்பத்தைத் தவிர வேறெதையும் அளிப்பதில்லை.”
சைதன்ய சரிதாம்ருதத்தின் கூற்று இதே கருத்தினை ஸநாதன கோஸ்வாமிக்கு பகவான் சைதன்ய மஹாபிரபு உபதேசித்துள்ளார். ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம், மத்திய லீலை 22.15ன் பொருளுரையில் பிரபுபாதர் எழுதுகிறார்:
“பகிரங்க சக்தியினால் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், ஜடவுலகினுள் இருக்கும் கட்டுண்ட ஆத்மா இரு வகையான பௌதிக உடல்களைப் பெறுகிறான்: ஸ்தூல உடல், மற்றும் மனம், புத்தி, அஹங்காரத்தினால் ஆன சூட்சும உடல். ஸ்தூல மற்றும் சூட்சும உடல்களினால், அவன் மூவகைத் துன்பங்களுக்கு (ஆத்யாத்மிக, ஆதிபௌதிக, ஆதிதைவிக) உட்படுத்தப்படுகிறான்; மனதாலும் உடலாலும் எழும் துனபங்கள், இதர உயிர்வாழிகளால் எழும் துன்பங்கள், மேலுலகங்களிலிருந்து தேவர்களால் இழைக்கப்படும் இயற்கையின் சீற்றங்கள் ஆகியவற்றிற்கு உட்பட்டவனாகிறான். மூவகைத் துன்பங்களுக்கு உட்பட்டிருக்கும் கட்டுண்ட ஆத்மா மாயையினால் தடையின்றி உதைக்கப்படுகிறான்.”
இவற்றிற்கெல்லாம் தீர்வு என்ன?
ஸ்ரீமத் பாகவதத்தின் பரிந்துரை
ஸ்ரீமத் பாகவதத்தில் (1.8.35) குந்தி மஹாராணி தமது பிரார்த்தனையின் மூலமாக இவற்றிற்கான தீர்வினை எடுத்துரைக்கிறாள்:
பவே ’ஸ்மின் க்லிஸ்யமானானாம்
 அவித்யா–காம–கர்மபி:
ஸ்ரவணம்–ஸ்மரணார்ஹாணி
 கரிஷ்யன் இதி கேசன
“பௌதிகத் துன்பங்களினால் துன்புறும் பந்தப்பட்ட ஆத்மாக்கள் கேட்டல், நினைவிற்கொள்ளுதல் மற்றும் வழிபடுதல் முதலான பக்தித் தொண்டு முறைகளைப் பின்பற்றி முக்தியடைய வேண்டும் என்பதற்காக, அம்முறைகளைப் புதுப்பிப்பதற்காகவே நீங்கள் தோன்றினீர்கள் என்று சிலர் கூறுகின்றனர்.”
இதுகுறித்து ஸ்ரீல பிரபுபாதர் தமது விளக்கவுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
“பகவான் துன்புறும் ஜீவராசிகள் எதிர்பார்ப்பதைவிட அவர்களிடம் அதிக கருணை கொண்டுள்ளார். எனவே, அவர் தமது அசாதாரணமான கருணையினால் அவர்களுக்கு மத்தியில் தோன்றி, கேட்டல், பாடுதல், நினைவிற்கொள்ளுதல், பாத சேவை செய்தல், வழிபடுதல், பிரார்த்தனை செய்தல், சேவகனாக இருத்தல், சரணடைதல் ஆகிய பக்தித் தொண்டின் கொள்கைகளைப் புதுப்பிக்கிறார். மேலே குறிப்பிட்ட கொள்கைகள் அனைத்தையும் அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றினால்கூட, அஃது ஒரு பந்தப்பட்ட ஆத்மா அறியாமையின் சிக்கலிலிருந்து விடுபடுவதற்கு உதவும். இவ்வாறாக, பகிரங்க சக்தியினால் மாயைக்கு உட்பட்டுள்ள ஜீவன் எல்லா பௌதிகத் துன்பங்களிலிருந்தும் விடுதலை அடைகிறான். இக்குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த கருணையானது பகவான் சைதன்ய மஹாபிரபுவின் உருவில் ஜீவராசிகளுக்கு வழங்கப்படுகிறது.”
“ஸ்ரீ கிருஷ்ணருடைய திருவடி பெருமைகளையும் திருநாமங்களையும் இடைவிடாமல் உச்சரித்து மனதால் நினைக்க வேண்டும். அப்போது, அந்த பகவான் தமது பக்தர்களுக்கு வயோதிகம், பிறப்பு, இறப்பு, பிணி ஆகியவற்றை வீழுமாறு செய்கிறார்.”
நம்மாழ்வாரின் பரிந்துரை 
நம்மாழ்வார் தமது திருவாய்மொழியில் (3.3.9) பின்வருமாறு பரிந்துரைக்கிறார்:
ஓயும் மூப்புப் பிறப்பு இறப்பு; பிணி
வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து
ஆயன் நாள் மலராம் அடித்தாமரை
வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே
“திருவேங்கட மலையில் நித்திய வாசம் செய்கின்ற ஆயனுடைய அன்றலர்ந்த தாமரை மலரை ஒத்த திருவடியை வாயினுள்ளும் மனதினுள்ளும் வைக்க வேண்டும்; அதாவது, அவரது திருவடி பெருமைகளையும் திருநாமங்களையும் இடைவிடாமல் உச்சரித்து மனதால் நினைக்க வேண்டும். அப்போது, அந்த பகவான் தமது பக்தர்களுக்கு வயோதிகம், பிறப்பு, இறப்பு, பிணி ஆகியவற்றை வீழுமாறு செய்கிறார்.”
மேலும், மற்றொரு பாசுரத்திலும் (திருவாய்மொழி 10.5.5) நம்மாழ்வார் இறப்பை நிறுத்துவதற்கான வழிமுறையை பரிந்துரைக்கிறார்:
நாடீர், நாள்தோறும்
வாடா மலர் கொண்டு;
பாடீர், அவன் நாமம்;
வீடே பெறலாமே.
“பரம புருஷ பகவானை தினந்தோறும் வாடா மலர்கள் கொண்டு வழிபட்டு, பகவானுடைய திருநாமங்களை உச்சரிப்பதன் மூலமாக, ஒருவர் பகவானுடைய சொந்த வசிப்பிடத்தை—அதாவது மூப்பு, பிறப்பு, இறப்பு, பிணி ஆகியவை இல்லாத—உன்னத லோகத்தை அடைவது உறுதி.”
இந்த கலி யுகத்தில் பகவானுடைய திருநாம உச்சாடனமானது தகுதியற்ற நபருக்கும்கூட மேற்குறிப்பிட்ட நற்பேற்றினை அளிக்கவல்லதாகும். ரஜோ, தமோ குணங்களினால் நம் மனம் களங்கப்பட்டிருக்கும் இந்த கலி யுகத்தில், பகவானை இடைவிடாது நினைத்தல் கடினமானதாகத் தோன்றலாம். இருப்பினும், இதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில், இந்த கலி யுகத்தில் பகவான் தமது பெரும் கருணையின் காரணமாக திருநாமத்தின் வடிவிலும், பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் முதலான சாஸ்திரங்களின் வடிவிலும் தம்மை வெளிப்படுத்தியிருக்கிறார்; எனவே, திருநாமத்தை உச்சரித்து, பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் முதலியவற்றில் தஞ்சமடைந்தால், அவரது தாமரைத் திருவடிகளில் அடைக்கலம் பெறுவது உறுதி.
முடிவுரை 
இந்த உலகம் துன்பங்கள் நிறைந்த தற்காலிகமான இடம், து:காலயம் அஷாஷ்வதம். இந்த உலகம் மட்டுமல்ல, இந்த பௌதிக இருப்பிலுள்ள பதினான்கு லோகங்களிலும் இந்த நிலைதான் என்பதை நாம் சாஸ்திரங்களின் வாயிலாக உணர வேண்டும். ஸ்ரீல பிரபுபாதர் நமக்கு வழங்கியுள்ள பக்தித் தொண்டின் மூலமாக மாயையின் பலமான கட்டுப்பாட்டிலிருந்து வெளிவர தொடர்ந்து நாம் முயல வேண்டும்.
நம் புனித பூமியாம் தமிழ்நாட்டில் தோன்றியவரான திருக்குருகூர் சடகோபனான நம்மாழ்வார், நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் திருவாய்மொழியில் பகவான் கிருஷ்ணரின் திருநாமங்களை உச்சரிக்கும் வழிமுறையை பரிந்துரைக்கிறார். ஸ்ரீல பிரபுபாதர் நமக்கு ஹரே கிருஷ்ண மந்திரத்தின் வடிவில் பகவானுடைய திருநாமங்களை தந்திருக்கிறார். இவற்றைப் பயன்படுத்திக் கொண்டு, இந்த ஜடவுலகத்தின் தன்மைகளான பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகியவற்றிலிருந்து விடுபட வேண்டும். ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே எனும் மஹா மந்திரத்திடமும், பகவத் கீதை, பாகவதம் முதலான சாஸ்திரங்களிடமும் தஞ்சமடைந்து, ஆன்மீக குருவினுடைய கருணையினால் பகவானுடைய கருணையைப் பெறுவோமாக.
[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives