கிருஷ்ண உணர்வில் உறுதியைப் பயிலுதல்

Must read

ஸ்தாபக ஆச்சாரியரின் உரை | கிருஷ்ண உணர்வு: ஈடு இணையற்ற வரம் புத்தகத்திலிருந்து

வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

ஒருவன் பௌதிகச் செல்வத்தின் இறுதி நிலையை அடைந்தவுடன் துறவிற்கான மனோநிலை அவனுக்கு இயற்கையாகவே வந்துவிடுகிறது. பௌதிக உலகில் இரண்டு விதமான மனோநிலைகள் உள்ளன. ஒன்று போகா (புலனுகர்வு), மற்றொன்று த்யாக (பௌதிக உலகைத் துறத்தல்). சரியான வழிகாட்டுதலின்றி, துறவை எவ்வாறு மேற்கொள்வது என்பதை ஒருவனால் அறிய முடியாது. முதலில் ஒருவன் இன்பம் துய்க்க விரும்புகிறான். அதில் அவனுக்கு வெறுப்பு ஏற்படும்பொழுது அதனைத் துறக்கிறான். மீண்டும், துறவில் வெறுப்பு ஏற்படும்பொழுது, சுவர் கடிகாரத்தின் ஊசல் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்திற்கு ஆடிக் கொண்டுள்ளதைப் போல, அவன் மீண்டும் இன்பத்தை அனுபவிக்கச் செல்கிறான். இவ்வாறாக, இன்பத்தை அனுபவிக்கும் நிலை, துறவு நிலை ஆகிய இரண்டிற்குமிடையே நாம் எல்லாரும் ஆடிக் கொண்டிருக்கிறோம்.

திருட்டுத்தனமும் பைத்தியக்காரத்தனமும்

பலன்களை விரும்பி செயலாற்றும் கர்மிகள் இவ்வுலகை அனுபவிக்கவும் இதன் பழங்களைச் சுவைக்கவும் விரும்புகின்றனர். அவ்வாறு பௌதிக இன்பத்தில் ஈடுபடுவதற்காக, அவர்கள் இரவு, பகல் முழுவதும் இடையறாது இங்குமங்கும் பயணிக்கின்றனர். மறுபுறம், இன்னொரு தரப்பினர்—பெரும்பாலும் அதிருப்தியில் வாழும் இளைஞர்கள்—இதுபோன்ற எந்த இன்பத்திலும் பங்கெடுக்க விரும்புவதில்லை. இவ்வாறாக, இந்த உலகமானது போகத்தில் ஈடுபடுவோர், தியாகத்தில் ஈடுபடுவோர் என இரு பிரிவினரைக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்த இரு வழிகளில் எதைப் பின்பற்றினாலும், நாம் மகிழ்ச்சியடைய மாட்டோம்; ஏனெனில், நம்முடைய உண்மையான நிலை அனுபவிப்பதும் அல்ல, துறப்பதும் அல்ல. அனைத்தும் கிருஷ்ணருக்கு சொந்தமானவை என்பதாலும் நம்முடையது என்று ஒன்றும் கிடையாது என்பதாலும், நம்மிடம் உள்ள அனைத்தும் உண்மையில் கிருஷ்ணருடைய சொத்துக்களே (ஈஷாவாஸ்யம் இதம் ஸர்வம்). மரம், செடி, கொடி, நீர், நிலம் இவற்றையெல்லாம் நாம் உருவாக்கவில்லை; அதனால், நாம் அவற்றிற்கு உரிமை கொண்டாட முடியாது. நம்முடையது என்று உண்மையில் எதுவுமே இல்லாத நிலையில், நாம் எதனைத் துறக்க முடியும்? இந்த உலகிற்கு வரும்பொழுது நாம் ஒன்றுமில்லாமல் வந்தோம், இங்கிருந்து செல்லும்போதும் ஒன்றுமில்லாமல்தான் செல்வோம். இடைப்பட்ட காலத்தில், “இஃது எனது நாடு, இஃது எனது வீடு, இவள் என்னுடைய மனைவி, இவர்கள் என்னுடைய குழந்தைகள், இஃது எனது வங்கி இருப்பு,” என்று பலவற்றிற்கு பொய்யாக உரிமை கொண்டாடுகிறோம். அத்தகு உரிமைகள் பொய்யானவை; ஏனெனில், இந்த உலகிற்கு வரும்பொழுது நாம் வெறுங்கையோடு வந்தோம், இங்கிருந்து செல்லும்போதும் வெறுங்கையோடுதான் திரும்பிச் செல்வோம். அப்படியெனில், போக, த்யாக என்பனவற்றின் பொருள் என்ன? வாஸ்தவமாக பார்த்தால், இவற்றிற்கு பொருளே இல்லை. போக என்பது திருட்டுத்தனம்; த்யாக என்பது நமக்கு ஒருபோதும் சொந்தமில்லாத ஒன்றைத் துறத்தல், இது பைத்தியக்காரத்தனம்.

முறையாகப் பயன்படுத்துதல்

இது தொடர்பாக, கிருஷ்ணர் நமக்கு பின்வருமாறு வழிகாட்டுகிறார்: ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ. (பகவத் கீதை 18.66) போகத்தையும் தியாகத்தையும் அடிப்படையாகக் கொண்டு நாம் பல்வேறு சமயங்களை [தர்மங்களை] உருவாக்கியுள்ளபோதிலும், அவை அனைத்தையும் கைவிட்டு கிருஷ்ணரிடம் சரணடையுமாறு நாம் அறிவுறுத்தப்படுகிறோம். அனுபவிப்பதும் துறப்பதும் நமது சக்திக்கு உட்பட்டதல்ல. துறவைப் பற்றி பகவத் கீதையில் பரிந்துரைக்கப்படும்போது, நம்முடையது என்று நாம் தவறாக உரிமை கொண்டாடுபவற்றைத் துறக்க வேண்டும் என்பதையே அது குறிப்பிடுகிறது. பணத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறியாத குழந்தை, தனது தந்தையிடமிருந்து 100 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு அதனைத் தன்னுடன் வைத்துக்கொள்ள முயலலாம். தந்தையானவர் குழந்தையிடம் வேண்டலாம், “அன்பு மகனே, அதை என்னிடம் கொடுத்து விடு.” அந்தப் பணம் தந்தைக்குச் சொந்தமானது என்பதையோ அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையோ அறியாததால் அதனை தந்தையிடம் திருப்பித் தருவதே சிறந்தது என்பதையோ அக்குழந்தை அறிவதில்லை. அதுபோலவே, “உனது செயல்களை எனக்காகத் துறந்து விடு. உனது செல்வத்தையும் உடைமைகளையும் எனக்காகத் துறந்துவிடு,” என்று கிருஷ்ணர் கூறுகிறார். கிருஷ்ணர் ஒரு யாசகர் கிடையாது; அனைத்தும் அவருக்குச் சொந்தமானவை, அவர் நம்மை ஒரு குழந்தையைப் போல நடத்துகிறார்.

அவரது வேண்டுகோளை ஏற்று அனைத்தையும் அவருக்கு அர்ப்பணிப்பதே தியாகம் (துறவு) எனப்படுகிறது, கிருஷ்ண உணர்வை அடைவதற்கான வழிகளில் இதுவும் ஒன்றாகும். பூரண உண்மையை உணர்வதற்கு தவம், பிரம்மசரியம், அமைதி, தானம், ஆகியவை அவசியமாகின்றன. கிருஷ்ண உணர்வு பூரண உண்மையைப் பற்றியதாகும், சார்புடைய உண்மையைப் பற்றியதல்ல. ஸ்ரீமத் பாகவதத்தில் ஸ்ரீல வியாஸதேவர் பரம்பொருளான பூரண உண்மைக்கு தமது வந்தனங்களை அர்ப்பணிக்கின்றார் (ஸத்யம் பரம் தீமஹி). அவர் தமது மரியாதையை அனைவரிலும் உயர்ந்த பூரண உண்மைக்கு அர்ப்பணிக்கின்றார், குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்த சார்புடைய உண்மைக்கு அல்ல. பூரண உண்மையை உணர்வதற்குத் தேவையான குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டியது பிராமணர்களின் கடமையாகும்.

தன்னை வசியம் செய்ய வந்த வேசியை பக்தையாக மாற்றிவிட்டு, அவ்விடத்திலிருந்து ஹரிதாஸ தாகூர் புறப்பட்டுச் செல்லுதல்

பிராமணர் யார்?

பிராமணர் எனப்படுவோர் தூய்மை, வாய்மை, எளிமை, மனக் கட்டுப்பாடு, புலன் கட்டுப்பாடு, வேதங்களின் (குறிப்பாக பகவத் கீதையின்) மீதான நம்பிக்கை ஆகியவற்றைப் பயின்று தங்களை தகுதியுடையவர்களாக்கிக் கொள்ள வேண்டும். “நானே முழுமுதற் கடவுள்” என்று கிருஷ்ணர் கூறும்போது, நாம் அவரை நம்பிக்கையுடன் ஏற்க வேண்டும், முட்டாள்தனமாக அல்ல, முழு அறிவுடன் ஏற்க வேண்டும்; மேலும், அவ்வாறு ஏற்றிருப்பதை அன்றாட வாழ்வின் நடைமுறையில் செயல்படுத்த வேண்டும். பிராமணன் ஒருவன் பிறப்பினால் உருவாக்கப்படுவதில்லை; மாறாக, கல்வி, பயிற்சி மற்றும் அறிவினால் உருவாக்கப்படுகிறான். இது பிறப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல, குணத்தை அடிப்படையாகக் கொண்டது. கிருஷ்ணர் இதனை பகவத் கீதையில் சுட்டிக்காட்டுகிறார்:

சாதுர்-வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்

குண-கர்ம-விபாகஷ:

தஸ்ய கர்தாரம் அபி மாம்

வித்யகர்தாரம் அவ்யயம்

“மூன்றுவித இயற்கை குணங்களுக்கும் அவற்றின் செயல்களுக்கும் ஏற்ப, மனித சமூகத்தின் நால்வகைப் பிரிவுகள் என்னால் ஏற்படுத்தப்பட்டன. இம்முறையைப் படைத்தவன் நானேயாயினும் மாற்றமற்ற என்னைச் செயல்களுக்கு அப்பாற்

பட்டவனாக அறிந்துகொள்.” (பகவத் கீதை 4.13)

ஒருவனிடம் பிராமணனுக்குரிய குணங்கள் இருந்தால் மட்டும் போதாது, அவன் பிராமணனுக்குரிய தொழிலிலும் ஈடுபட வேண்டும்; ஏனெனில், ஒருவனது குணங்கள் அவனது தொழிலின் மூலமாக தீர்மானிக்கப்படுகின்றன. தகுதியுடைய பொறியாளராக இருப்பவன் அதற்குரிய வேலையைச் செய்யாமல் வீட்டிலேயே அமர்ந்திருந்தால், என்ன பயன்? அதுபோலவே, ஒருவன் பிராமணனுக்குரிய தொழிலில் ஈடுபடாத பட்சத்தில், “நான் ஒரு பிராமணன்,” என்று வெறுமனே கூறிக்கொள்வதில் எந்த மதிப்பும் இல்லை. ஆகவே, பர-பிரம்மன் என்றும், பரம்பொருள் என்றும், அறியப்படக்கூடிய கிருஷ்ணரின் தொண்டில் முழுமையாக ஈடுபடுவதன் மூலமாக, ஒருவன் பிராமணனுக்குரிய தொழிலில் ஈடுபட வேண்டும்.

தவத்திற்கான அவசியம்

பூரண உண்மைக்கு எவ்வாறு சேவை செய்ய முடியும்? யமேன நியமேன , யோகப் பயிற்சி அல்லது பரமனுடன் இணைதல் என்பது, நெறிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டதாகும். கட்டுப்பாடு இல்லாவிடில் நெறிமுறைகளை செயல்படுத்த இயலாது; ஆகவே, ஒருவன் சிந்திக்கக்கூடியவனாகவும் தன்னைத் தூய்மைப்
படுத்திக்கொள்பவனாகவும் இருக்க வேண்டும். தேர்வில் தேர்ச்சி பெற விரும்புபவன் பள்ளிக்குச் செல்ல வேண்டும்; பள்ளியின் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், கஷ்டப்பட்டு படிக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் அவன் படிப்படியாக வெற்றி அடைகிறான். அவ்வாறின்றி, நாள் முழுவதும் தெருவில் விளையாடுபவனால் தேர்வில் எவ்வாறு வெற்றி பெற இயலும்? ஆகவே, சுகதேவ கோஸ்வாமியினால் விவரிக்கப்படும் வழிமுறையில் தவம் முதன்மை பெறுகிறது. நாம் கட்டுப்பாடின்றி வாழ விரும்புவதன் காரணத்தினால், தவமும் பிரம்மசரியமும் கடினமாகத் தோன்றினாலும்கூட, நம்முடைய செயல்கள் நெறிப்படுத்தப்பட்ட மாத்திரத்தில், கடினமாகத் தோன்றியவை அனைத்தும் நடைமுறையில் காணும்போது கடினமற்றவையாகி விடுகின்றன.

பகவானை தரிசித்த மாத்திரத்தில், பௌதிக ஆசையுடன் அவரை நோக்கி தவம் புரிந்ததை எண்ணி துருவன் வருந்தினார்.

தீரனாக வாழும் சிவபெருமான்

இருவகையான மனிதர்கள் உள்ளனர்—மன உறுதியுள்ளவர் (தீர), மன உறுதியற்றவர் (அதீர). கோபத்தைத் தூண்டும் சூழ்நிலையில் அல்லது மனதை சஞ்சலப்படுத்தும் சூழ்நிலையில்கூட தனது நிலையில் ஸ்திரமாக இருப்பவன் தீர என்று அழைக்கப்படுகிறான். தீர என்பதற்கான உதாரணத்தை சிறந்த சமஸ்கிருத புலவரான காளிதாஸர் தமது குமாரஸம்பவ எனும் நூலில் எடுத்துரைத்துள்ளார். அங்கு அவர் சிவபெருமானை உதாரணமாக வழங்கியுள்ளார். ஒருமுறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்ற போரில் தேவர்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்தனர். அப்போது சிவபெருமானின் விந்துவிலிருந்து பிறக்கும் படைத்தளபதியால் மட்டுமே அசுரர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்ற இயலும் என்பதை தேவர்கள் உணர்ந்தனர். சிவபெருமானோ அத்தருணத்தில் தியானத்தில் இருந்தமையால், அவரது விந்துவினைப் பெறுவது மிகவும் கடினமானதாக இருந்தது. எனவே, அவர்கள் இளம் பெண்ணாக இருந்த பார்வதியை சிவபெருமானிடம் அனுப்பி வைத்தனர், பார்வதியும் சிவபெருமானிடம் சென்று அவருடைய பாலுறுப்புகளை வணங்கினாள். இந்த இளம்பெண் சிவபெருமானுக்கு முன்பாக அமர்ந்து அவரது பாலுறுப்புகளைத் தொட்டபொழுதிலும், சிவபெருமான் தியானத்தில் நிலையாக இருந்தார். காளிதாஸர் கூறுகிறார், “தீரன் என்பதற்கு இவரே உதாரணம். இளம் பெண் தன்னுடைய பாலுறுப்பைத் தீண்டியபோதும், இவர் சஞ்சலமடையவில்லை.”

வேசியைத் திருத்திய ஹரிதாஸர்

அதுபோலவே, ஒருவன் ஹரிதாஸ தாகூருக்கு இடையூறு ஏற்படுத்துவதற்காக இளம் வேசி ஒருத்தியை அவரது வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான். உடலுறவிற்கான அவளது அழைப்பினைக் கேட்ட ஹரிதாஸ தாகூர் கூறினார், “உன்னுடைய கோரிக்கை சிறப்பாக உள்ளது. நான் எனது நாம ஜபத்தை நிறைவு செய்யும் வரை இங்கேயே அமர்ந்திரு. அதன் பின்னர், நாம் இன்புறலாம்.” பொழுது புலர்ந்தபோது வேசி பொறுமையை இழந்தாள், ஆனால் ஹரிதாஸ தாகூர் கூறினார், “என்னை மன்னிக்கவும். எனது ஜபத்தை நிறைவு செய்ய முடியவில்லை. இன்றிரவு மீண்டும் வா.” இவ்வாறு வேசி மூன்று இரவுகள் வந்தாள், மூன்றாவது இரவில் அவள் அவரது திருவடியில் விழுந்து, தன்னுடைய செயலுக்காக வருந்தி ஹரிதாஸரிடம் மன்னிப்பை வேண்டினாள், “இச்செயலில் ஈடுபடும்படி உங்களது எதிரி ஒருவனால் நான் தூண்டப்பட்டேன், தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள்.” அப்போது ஹரிதாஸ தாகூர் பதிலளித்தார், “அவை அனைத்தையும் நான் அறிவேன். ஆயினும், உன்னை எப்படியாவது பக்தையாக மாற்றி விட வேண்டும் என்பதற்காகவே மூன்று நாள் நீ இங்கே வருவதற்கு அனுமதித்தேன். இப்பொழுதே ஜப மாலையை எடுத்துக் கொண்டு தொடர்ந்து திருநாமத்தை ஜபிப்பாயாக. நான் இங்கிருந்து புறப்படுகிறேன்.” தன்னுடைய உடல் (தேஹ), சொற்கள் (வாச), புத்தி ஆகியவற்றைக் கட்டுப்படுத்திய தீரனுக்கு இவர் மற்றோர் உதாரணமாக உள்ளார். தர்மத்தின் கோட்பாடுகளை உண்மையாக அறிந்தவனும் தீரனாக இருப்பவனுமான ஒருவனால் தனது உடல், வாக்கு, புத்தி ஆகியவற்றைக் கட்டுப்படுத்த முடியும்.

பாவங்களை முழுமையாக அழித்தல்

நினைவிற்கெட்டாத காலம் தொட்டு நாம் தொடர்ந்து பாவங்களைச் செய்து வருகிறோம், இதை எப்போது தொடங்கினோம் என்பதை நாம் அறியோம். ஆயினும், இந்த வாழ்க்கை நாம் இதுவரை செய்த எல்லாவித தவறுகளையும் திருத்திக் கொள்வதற்கானதாகும். நிலத்தில் வளர்ந்துள்ள தேவையற்ற புற்கள், களைகள் முதலியவற்றிற்கு நெருப்பு வைத்தால், அவை அனைத்தும் எரிக்கப்பட்டு விடும். அதுபோலவே, விரதங்களாலும் தவத்தினாலும் ஒருவன் எல்லா பாவச் செயல்களையும் கரைத்து, தன்னைத் தூய்மைபடுத்திக்கொள்ளலாம். ஆனால் சுகதேவ கோஸ்வாமி இதற்கு வேறொரு வழியைக் கூறுகிறார்: கேசித் கேவலயா பக்த்யா வாஸுதேவபராயணா:/ அகம் துன்வந்தி கார்த்ஸ்ன்யேன நீஹாரம் இவ பாஸ்கர:. பொதுவாக, பிரம்மசரியம், சமத்துவம், தானம் முதலியவற்றை ஒருவன் கடைப்பிடித்தால், அவனை மக்கள் மிகவும் புண்ணியமான மனிதன் என்று கூறுவர். ஆனால், அவை ஏதுமின்றி, எளிமையான முறையில் கிருஷ்ண பக்தனாவதன் மூலமாக, ஒருவனால் தனது முந்தைய பாவச் செயல்களின் விளைவுகளை எளிதாக அழிக்க முடியும். சூரியன் உதயமானதும் பனி விலகி விடுகிறது, கிருஷ்ணரோ ஆயிரமாயிரம் சூரியன்களின் பிரகாசத்தோடு தோன்றுகிறார்.

மிகுந்த அதிர்ஷ்டசாலிகள் மட்டுமே இந்த வழிமுறையினை ஏற்கின்றனர். எனவே, சைதன்ய மஹாபிரபு கூறினார், ப்ரஹ்மாண்ட ப்ரமிதே கோன பாக்யவான் ஜீவ/ குருக்ருஷ்ணப்ரஸாதே பாய பக்திலதாபீஜ, “பல வகையான உயிரினங்களில் இப்பிரபஞ்சம் முழுவதும் சுற்றித்திரிந்த பின்னர், கிருஷ்ணரின் கருணையாலும் ஆன்மீக குருவின் கருணையாலும், அதிர்ஷ்டசாலியான ஒருவன், இறுதியில் பக்தித் தொண்டிற்கான விதையைப் பெறுகிறான்.” கிருஷ்ண உணர்வு அதிர்ஷ்டசாலிகளுக்கே உரியதாகும்; ஏனெனில், இந்த ஒரு வழிமுறையை ஏற்றுக்கொள்வதன் மூலமாக, ஒருவன் தவம், துறவு, பிரம்மசரியம் முதலிய எல்லா கடமைகளையும் எளிதாகக் கடக்கலாம். சுகதேவ கோஸ்வாமி அறிவிக்கிறார்: கேசித் கேவலயா பக்த்யா, “மிகமிக அதிர்ஷ்டம் வாய்ந்த ஒருவனே தூய பக்தித் தொண்டை ஏற்கிறான்.” கேவலபக்தி என்பது தூய களங்கமற்ற பக்தித் தொண்டைக் குறிக்கிறது, இதில் கிருஷ்ணரை திருப்திப்படுத்துவதைத் தவிர இதர ஆசைகள் ஏதும் கிடையாது. தன்னுடைய வருமானத்தை பெருக்குவதற்காக ஒருவன் பக்தித் தொண்டை மேற்கொள்ளக் கூடாது. மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக நாம் பணத்தை விரும்புகிறோம்; ஆனால் கிருஷ்ண பக்தியை ஏற்றுக் கொண்டால், நாம் இயல்பாகவே மிகவும் மகிழ்ச்சியடைவோம், அந்த மகிழ்ச்சியில் பணத்தைக்கூட புறக்கணிப்போம். பணம் தானாகவே வரும், இன்பமும் வரும். இவற்றிற்காக நாம் தனியே முயல தேவையில்லை.

பௌதிக இலாபம் வேண்டாம்

துருவ மஹாராஜர் வருந்தினார், “பௌதிக இலாபத்தை பெறும் நோக்கத்தோடு, பக்தித் தொண்டில் ஈடுபட்ட நான் எவ்வளவு பெரிய முட்டாள்!” பொதுவாக, பௌதிக இலாபத்தை விரும்புபவன் தன்னுடைய முதலாளியிடம் செல்வான், அல்லது செல்வந்தனிடமோ தேவர்களிடமோ செல்வான்; ஆனால், பக்தனிடம் ஒருவேளை பௌதிக ஆசைகள் இருந்தால்கூட, அவன் கிருஷ்ணரைத் தவிர வேறு எங்கும் செல்வதில்லை. பௌதிக நன்மையை வேண்டி ஒருவன் கிருஷ்ணரிடம் சென்றால்கூட, துருவ மஹாராஜரைப் போல அந்த பௌதிக ஆசையை அவன் மறக்கும் நாள் வந்தே தீரும். “மாபெரும் செல்வந்தரை திருப்திப்படுத்தியவன் அவரிடம் கொஞ்சம் அரிசி தருமாறு யாசிப்பதைப் போல, நான் கிருஷ்ணரிடம் சென்று பௌதிகமானவற்றை வேண்டினேன்,” என்று கூறி துருவ மஹாராஜர் வருந்துகிறார். செல்வந்தர் ஒருவர் வேண்டியதைக் கொடுப்பதற்கு ஒப்புக் கொண்டால், அவரிடம் கொஞ்சம் அரிசி கேட்பது புத்திசாலித்தனமா? கிருஷ்ணரிடம் பௌதிக நன்மையை வேண்டுவது இதைப் போன்றதே. கிருஷ்ணரிடம் சென்று பௌதிக இன்பத்தை வேண்டுவதற்கு எந்த அவசியமும் இல்லை; ஏனெனில், பௌதிக இன்பம் அவனது காலில் விழுந்து மன்றாடும், “தயவுசெய்து என்னை ஏற்றுக்கொள், தயவுசெய்து என்னை ஏற்றுக்கொள்.”

கிருஷ்ண உணர்வைப் பயிற்சி செய்பவர்களுக்கு மனைவி, குழந்தைகள், இன்பம், வீடு முதலிய பௌதிகச் செல்வங்கள் எதுவும் தேவையில்லை. ஏனெனில், கிருஷ்ணரின் கருணையால் அவையனைத்தும் தானாகவே அடையப்படுகின்றன. இத்தகு பௌதிகப் பொருட்களை கிருஷ்ணரிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை. இதற்கு மாறாக, “தயவுசெய்து என்னை உமது சேவையில் ஈடுபடுத்துங்கள்,” என்று பிரார்த்திக்க வேண்டும். கிருஷ்ணரின் தொண்டில் ஒருவன் ஈடுபட்டால், அவனுக்குத் தேவையானவற்றை அளித்து அவனிடம் இருப்பவற்றைக் காப்பேன் என்று அவரே பகவத் கீதையில் உறுதி கூறுகிறார்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives