வழங்கியவர்: அம்ருதேஷ மாதவ தாஸ்
ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபிக்கும்படி பணிக்கும்போது, மக்கள் சிலர் சொல்கின்றனர்: “நான் ஏற்கனவே மனதில் ஜபிக்கின்றேன்.” “நான் பகவானையும் திருநாமத்தையும் எல்லா இடத்திலும் நினைத்துக் கொண்டுள்ளேன்.” “தனியாக ஜப மாலையில் ஜபம் செய்ய தேவையே இல்லை.” “திருநாமங்களை ஏன் எண்ண வேண்டும்? நான் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை.” “நான் மனதிலேயே ஜபம் செய்வதால், கைகளையும் விரல்களையும் பயன்படுத்தத் தேவையில்லை.”
இதுபோல் நிறையபேர் சொல்லக் கேள்விப்பட்டுள்ளோம். இதைப் பற்றிய சிறு ஆராய்ச்சி.
நாமத்தை எண்ணும் சைதன்யர்
பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தமது கரங்களில் எண்ணியபடி திருநாமத்தை உச்சரிப்பது வழக்கம் என்பதை ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தில் (மத்திய லீலை 7.37) காண்கிறோம். தோமார துஇ ஹஸ்த பத்த நாம-கணனே, “உங்களுடைய இரண்டு கரங்களும் எப்போதும் திருநாமத்தை உச்சரிப்பதிலும் அதன் எண்ணிக்கையைக் கணக்கிடுவதிலும் ஈடுபட்டிருக்கின்றன,” என்று நித்யானந்த பிரபு அங்கே ஸ்ரீ சைதன்யரிடம் கூறுகிறார்.
மேற்கூறிய ஸ்லோகத்திற்கான ஸ்ரீல பிரபுபாதரின் பொருளுரை மிகவும் அறிவுறுத்துவதாக உள்ளது:
“சைதன்ய மஹாபிரபு திருநாமங்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் தினமும் ஜபம் செய்து கொண்டிருந்தார் என்பது இந்த ஸ்லோகத்திலிருந்து தெளிவாகிறது. கோஸ்வாமிகளும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவது வழக்கம், ஹரிதாஸ தாகூரும் இதே கொள்கையைப் பின்பற்றினார். ஸ்ரீல ரூப கோஸ்வாமி, ஸ்ரீல ஸநாதன கோஸ்வாமி, ஸ்ரீல ரகுநாத பட்ட கோஸ்வாமி, ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி, ஸ்ரீல கோபால பட்ட கோஸ்வாமி, ஸ்ரீல ரகுநாத தாஸ கோஸ்வாமி ஆகிய கோஸ்வாமி
களைப் பொறுத்தவரையில் அவர்களுடைய நாம ஜபத்தினை ஸ்ரீநிவாஸ ஆச்சாரியர் உறுதி செய்கிறார், ஸங்க்யா-பூர்வக-நாம-கான-நதிபி:. (ஷட்-கோஸ்வாம்யஷ்டகம் 6). மற்ற கடமைகளுடன் இணைந்து பகவானின் திருநாமங்களை தினமும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஜபம் செய்வதென்னும் வழிமுறையினை ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அறிமுகப்படுத்தினார், இஃது இந்த ஸ்லோகத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சைதன்ய மஹாபிரபு நாமத்தின் எண்ணிக்கையை தனது விரல்களைக் கொண்டு கணக்கிடுவது வழக்கம். ஒரு கையில் ஜபம் செய்தபடி, மற்றொரு கையில் சுற்றுகளை எண்ணிக் கொண்டிருந்தார். இது ஸ்ரீ சைதன்ய சந்த்ராம்ருதம், ஸ்ரீல ரூப கோஸ்வாமியின் ஸ்தவ-மாலா ஆகிய நூல்களிலும் உறுதிப்படுத்தப்
பட்டுள்ளது.
“எனவே, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் வழியில் வரும் பக்தர்கள் தினமும் குறைந்த பட்சம் 16 சுற்றுக்களை ஜபிக்க வேண்டும். இந்த எண்ணிக்கையினை அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதர் பரிந்துரைக்கின்றார். ஹரிதாஸ தாகூர் தினமும் 3 இலட்சம் திருநாமங்களை ஜபித்தார். 16 சுற்றுக்கள் என்பது சுமார் 28 ஆயிரம் நாமங்கள் ஆகும். ஹரிதாஸ் தாகூர் அல்லது இதர கோஸ்வாமிகளை நகல் செய்வதற்கான அவசியம் ஏதும் இல்லை, ஆனால் தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் திருநாமத்தை ஜபிப்பது ஒவ்வொரு பக்தருக்கும் அவசியமானதாகும்.”
ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் மற்றோர் இடத்திலும் (அந்திய லீலை 9.57) ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு திருநாமத்தை எண்ணியபடி ஜபிப்பார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது:
ஸங்க்யா லாகி துஇ–ஹாதே அங்குலீதே லேகா
ஸஹஸ்ராதி பூர்ண ஹைலே, அங்கே காடே ரேகா
“அவர் தம்முடைய இரு கரங்களின் விரல்களைக் கொண்டு எண்ணியபடி ஜபித்துக் கொண்டிருந்தார். ஓராயிரம் முறை ஜபித்த பின்னர், அவர் தம்முடைய உடலில் குறியிட்டுக் கொள்வார்.”
ஸ்ரீல ஸார்வபௌம பட்டாசாரியர் தமது ஷசி-ஸுதாஷ்டகத்தில் பின்வருமாறு கூறுகிறார்:
ஹரி–பக்தி–பரம் ஹரி–நாம–தரம்
கர–ஜப்ய–கரம் ஹரி–நாம–பரம்
நயனே ஸததம் ப்ரணயாஷ்ரு–தரம்
ப்ரணமாமி ஷசீ–ஸுத–கௌர–வரம்
“பகவானின் பக்தித் தொண்டில் எப்போதும் மூழ்கியிருப்பவரும், பகவான் ஹரியின் திருநாமத்தை தமது கைவிரல்களால் எண்ணியபடி எப்போதும் ஜபித்துக் கொண்டிருப்பவரும், திருநாமத்தினால் அடிமையாகி கண்களில் எப்போதும் கண்ணீர் பெருகி தோற்றமளிப்பவருமான அன்னை ஸச்சியின் அழகிய புதல்வரான கௌராங்கருக்கு என் பணிவான வணக்கங்களை அர்ப்பணிக்கின்றேன்.”
கோஸ்வாமிகளும் நாமங்களை எண்ணியபடி ஜபித்தனர் என்பதை ஏற்கனவே கண்டோம்.
பெரியாழ்வாரின் பரிந்துரை
திருநாமத்தை எண்ணியபடி ஜபிக்கும் பழக்கம் நமது கௌடீய ஸம்பிரதாயத்தில் பிரதானமாக உள்ளது. அதே சமயத்தில், நமது ஸம்பிரதாயத்தில் மட்டுமின்றி ஸ்ரீ வைஷ்ணவ ஸம்பிரதாயத்திலும் இப்பழக்கம் ஆதியிலேயே காணப்பட்டது என்பதை நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் ஒரு பகுதியான பெரியாழ்வார் திருமொழி 4.4 மூலமாக அறிகிறோம்.
வண்ண நல்மணியும் மரகதமும் அழுத்தி நிழலெழும்
திண்ணை சூழ் திருக்கோட்டியூர்த் திருமாலவன் திருநாமங்கள்
எண்ணக் கண்ட விரல்களால் இறைப் பொழுதும் எண்ணகிலாது போய்
உண்ணக் கண்ட தம் ஊத்தை வாய்க்குக் கவளமுந்துகின்றார்களே
“பல வண்ணங்களுடன் கூடிய நல்மணிகளும், மரகதக் கற்களும் பதியப்பட்ட பெரும் மாளிகைகள் சூழ்ந்த திருக்கோட்டியூரில் உறையும் எம்பெருமானான திருமாலின் திருநாமங்களை எண்ணி ஜபம் செய்வதற்குத்தான் இந்த விரல்கள் இருக்கின்றன என்பதை உணராதவர்கள், அவ்வாறு செய்யாமல் விரல்களை வைத்து வெறுமனே உணவினை மட்டும் அள்ளி வாய்க்கு ஊட்டுகிறார்களே! ஐயகோ!”
பகவானுடைய நாமத்தைச் சொல்லாத ஊத்தை வாய்க்கு சோறு கொடுப்பதற்கு மட்டும் விரல்களைப் பயன்படுத்துதல் தவறு என்பதையும், விரல்களை நாம எண்ணிக்கைக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் இதைக் காட்டிலும் தெளிவாகக் கூற வேண்டுமா?
முடிவுரை
நம்முடைய குறைமதியைக் கொண்டு காரணம் சொல்லாமல், ஆச்சாரியர்கள் காட்டிய வழியைப் பின்பற்றுவதே சாலச் சிறந்ததாகும்.
எனவே, நாம் எல்லாரும் ஸ்ரீல பிரபுபாதர் நமக்கு அறிவுறுத்தியுள்ளபடி, தினமும் குறைந்தபட்சம் 16 சுற்றுக்கள் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜப மாலையில் ஜபிக்க வேண்டும். இதுவே பகவானுடைய பக்தித் தொண்டின் அடிப்படையாகும். மேலும், பகவான் கிருஷ்ணரின் பக்த அவதாரமாகிய ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை திருப்திப்படுத்த வேண்டுமெனில், இவ்வகையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சுற்றுக்களை ஜபித்தல் இன்றியமையாததாகும்.
நமது புண்ணிய பூமியாம் தமிழ்நாட்டில் தோன்றிய பெரியாழ்வார் தமது திருமொழியில் வழங்கியுள்ள பக்தித் தொண்டிற்கான நுட்பமான வைஷ்ணவ கொள்கைகளை நமது ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதர் எளிமையான முறையில் அளித்திருக்கிறார் என்பதை நாம் இங்கே தெளிவாகக் காணலாம்.
ஆகவே, நம் கரங்களையும் விரல்களையும் பகவானின் பக்தித் தொண்டில் ஈடுபடுத்தி, குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபித்து, ஆன்மீக வாழ்வில் முன்னேறுவோமாக.